வாவ் ஐந்தறிவு – 36

392

-ராஜேஷ் குமார்

விலங்குகளின் விந்தை உலகம்!

மலைக்கவைக்கும் மலைப்பாம்பு

பாம்பு வகைகளிலேயே ‘சீனியர் சிட்டிசன்’ இந்த மலைப் பாம்புகள் மட்டுமே. நாம் வாழும் பூமி உருண்டையில், 130 மில்லியன் ஆண்டுகளாக வளர்ந்து திரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு வகைகளில் முதன்முதலாகத் தோன்றியது மலைப்பாம்புகள்தான் என்று பிராணியியல் வல்லுனர்களும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும் உறுதிபடச் சொல்லியுள்ளார்கள். அதன் பரிணாமம்தான் மற்ற பாம்புகள்.

பொதுவாக மலைப்பாம்புகளில் பலவகை காணப்பட்டாலும் நாட்டுக்கு நாடு அவை வித்தியாசப்படுகின்றன. இந்திய மலைப்பாம்புகள் பைதான் மொலுரஸ் (PYTHON MOLURUS) என்று அழைக்கப்படுகின்றன. இதை தமிழில் கருப்பு வால் மலைப்பாம்பு என்று கிராமப் பகுதியில் உள்ளவர்கள் குறிப்பிடுவார்கள். மலைப்பாம்பானது மஞ்சள் அல்லது கறுப்புடன் கூடிய பழுப்பு நிறம் கொண்டது. வழுவழுப்பான செதில்களையும், ஒளிரும் தன்மை கொண்ட ஒழுங்கற்ற பட்டை வடிவங்களையும் பார்க்கும் போதே நமக்குள் ஓர் அச்ச உணர்வு தோன்றுவதைத் தவிர்க்கமுடியாது.

வாழ்விடம்

மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், அசாம் காட்டுப் பகுதிகளிலும் இவை பரவலாகக் காணப்படுகின்றன. மலைப்பாம்புகள் தனது வாழ்விடங்களை விதவிதமாக அமைத்துக் கொள்கின்றன. பொதுவாக நீர் நிலைகளை ஒட்டியுள்ள புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், பெரிய பெரிய பாறைகளுக்கு இடையே இருக்கும் குகை போன்ற அமைப்புகளில் மறைந்திருந்து வாழும் தன்மை கொண்டவை. பசி உணர்வு ஏற்பட்டு உணவு தேவை என்னும் நிலை வரும்போதுதான் மலைப்பாம்புகள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வருகின்றன. இவை மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்டவை. மற்ற பாம்புகளைப்போல் எதிரிகளைப் பார்த்துவிட்டால் சரசரவென்று ஓடி ஒளியாமல் நிதானமாகவே ஊர்ந்து செல்லும். ஆனால் இதனுடைய வேட்டைத் திறன் அதிரடியானது.
நாக்கை வெளியே நீட்டி நீட்டி, காற்றை சுவாசித்து மோப்பம் பிடித்தபடி, தனக்குப் பிடித்தமான இரை எந்த திசையில், எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை துல்லியமாகத் தெரிந்து கொண்டு, அந்த திசையை நோக்கி மெதுவாய் ஊர்ந்து செல்லும்.

ஊர்ந்து செல்வதில் வித்தியாசம்

எல்லா பாம்புகளுமே ஊர்ந்து செல்பவை என்றாலும், மலைப்பாம்புகளுக்கும் மற்ற பாம்புகளுக்கும் ஊர்கின்ற தன்மையில் ஒரு பெரிய வேறுபாடு இருப்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. அதாவது மற்ற பாம்புகள் ஊர்ந்து செல்லும்போது, அதன் உடம்பை வளைத்து நெளித்துக்கொண்டு வேகவேகமாய்ச் சென்று, தான் பிடிக்க வேண்டிய இரையை நெருங்கும்.

ஆனால், மலைப்பாம்புகள் வாயை அகலத் திறந்துகொண்டு, இரையை நோக்கி முன்னேறும்போது தன் விலா எலும்புகளின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் ஒன்றுபடுத்தி, உடம்பை சிறிது கூட நெளிக்காமல் ஒரே நேர்கோட்டில் செல்கின்ற ரயிலை போல் பயணிக்கும். இரையை நெருங்கியதும் முதலில், தன்னுடைய வால் பகுதியை விருட்டென்று ஒரு சாட்டையைப்போல் வீசி, ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி, இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். இரை தப்பிக்க முயன்றால் தனது பிடியை இறுக்க ஆரம்பிக்கும்.

இரை பலம்மிக்க பிராணியாக இருந்தால் மலைப்பாம்பு தன் உடலை மேலும் இரண்டு சுற்றுகள் அதிகரித்து, மேலும் வீரியத்துடன் இறுக்கும். பிராணியின் விலா எலும்புகள் உடைந்து, சுவாச உறுப்புகள் சேதமடையும் போது, அது மெல்ல மெல்ல உயிரிழக்கும். இறந்துபோன இரையின் உடலை ஒரு தடவை நாக்கால் முகர்ந்து, இனி இரை தன்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்துகொண்டு படிப்படியாய் விழுங்க ஆரம்பிக்கும். முன் ஜாக்கிரதையாக இரையின் தலையைத்தான் முதலில் விழுங்கும். அதன் பிறகு தன்னுடைய உமிழ்நீர் சுரப்பிகளுக்கு வேலை கொடுத்து, அளவற்றுச் சுரக்கும் உமிழ்நீரின் உதவியோடு, சிறிது சிறிதாய் இரையை ஸ்லோமோஷனில் உள்ளே தள்ளும்.

ஒரு இரையை விழுங்க எவ்வளவு நேரம் ஆகும் என்பது அந்த இரையின் எடையைப் பொறுத்தது. மான் போன்ற பிராணிகளையும் முதலை போன்ற பலம் நிறைந்தவற்றையும் மலைப்பாம்பு விழுங்கிவிட்டால், அது அதே இடத்தில் சில மணிநேரங்களுக்கு அசையாமல் படுத்துக்கிடக்கும். வலுக்கட்டாயமாக நகர முயன்றால், விழுங்கிய மானின் கொம்புகள் அல்லது முதலையின் பல், நகம் போன்ற கடினமான, கூர்மையான பகுதிகள் பாம்பின் உடலைக் கிழித்துவிடக்கூடும்.

மற்ற பிராணிகளைப் போல் மலைப்பாம்புகள் தினசரி சாப்பிட்டு, அன்றே அதை ஜீரணம் செய்வது இல்லை. விழுங்கப்பட்ட இரையானது எலி, கோழி, வாத்து போன்ற சிறிய பிராணிகளாக இருந்தால் அவற்றை முழுவதுமாய் ஜீரணித்து முடிக்க ஒரு வாரம் எடுத்துக்கொள்கிறது. செந்நாய், பன்றி, முள்ளம்பன்றி போன்றவை இரண்டு வாரத்திலும் ஆடு, மான், மாடு, புலி போன்றவை மூன்று வாரத்திலும் ஜீரணமாகும். வயிற்றுக்குள் ஜீரணமாகாத உணவு இருக்கும்போது, மலைப்பாம்பின் அருகே அதற்குப் பிடித்தமான இரையே போனாலும், அதை அது கண்டுகொள்ளாது.

மோல்டிங் எனப்படும் தோலுரித்தல்

பாம்புகளின் முக்கியமான பணிகளில் ஒன்று மோல்டிங் (Moulting) எனப்படும் தோலுரித்தல் ஆகும். இதை நாம் தமிழில் பாம்புசட்டை என்று அழைக்கிறோம். இந்த தோலுரித்தல் நிகழ்வு வருடத்திற்கு 5 அல்லது 6 முறை நடக்கின்றது. தன்னுடைய உடம்பை போர்த்தியிருக்கும் பளபளப்பான உறை போன்ற தோலை, நாம் நம் சட்டையைத் தலைகீழாய்க் கழற்றுவது போல், சுலபமாய்க் கழற்றுகின்றன. முதலில் தன் மூக்குப் பகுதியில் தோன்றும் உறை நெகிழ்வை ஏதேனும் ஒரு சொரசொரப்பான பொருளில் சிக்க வைத்துவிட்டு பிறகு, முழு உறையினின்றும் தன்னுடைய உடம்பை உருவி எடுத்துக் கொள்கிறது. தோலுரிப்பு செய்து கொண்ட பாம்புகள் புதிய தோலோடு பளபளப்பாய் காணப்படும். இந்தத் தோலின் பளபளப்பு சுமார் இரண்டரை மாதங்களுக்கு நீடித்து பிறகு நிறம் மங்கும்.

மலைப்பாம்பின் உடலமைப்பு

8 அடி முதல் 10 அடி நீளம் கொண்டவை மலைப்பாம்புகள். மலைப்பாம்பின் கட்டமைப்பு சற்றே வித்தியாசமானது. உருளை வடிவமான உடம்பின் இரண்டு பகுதிகளும் குறுகிப்போய் இருந்தாலும் உடலின் மத்தியில் உள்ள பகுதி அதிக விட்டத்தோடு காணப்படும். இந்தப் பகுதியில்தான் இரையானது வெகுநேரம் வைக்கப்பட்டு ஜீரணம் செய்யப்படுகிறது. இதனுடைய தலை தட்டையாகவும், நீண்ட மூக்குப் பகுதியோடும், சிறிய கண்களோடும் காணப்படும்.

மலைப்பாம்புகள் நீரில் நன்றாக நீந்தக் கூடியவை. வெயில் காலங்களில் காட்டாற்றின் கரையோரத்தில் நீருக்குள் அமிழ்ந்து, மூக்கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். குட்டி முதலைகளைப் பார்த்துவிட்டால் நீருக்கு அடியில் நீந்திக் கொண்டு போய், அதிரடியாய்த் தாக்கி இரையாக்கிக்கொள்ளும். நிலத்தில் இருக்கும் போது உயரமான மரங்களில் ஏறி, வலுவான கிளையோடு தன்னுடைய வால் பகுதியை இணைத்துக்கொண்டு தொங்கியபடி தூங்குவது வழக்கம்.

ஸ்குவாமேட்டா

உலகத்தில் எத்தனையோ வகை மலைப்பாம்புகள் இருந்தாலும் ஸ்குவாமேட்டா (SQUAMATA) அமைப்பைச் சேர்ந்த இந்திய வகை பாம்பு 19 அடி நீளத்துக்கு மிகாமல் இருக்கும். ஆஸ்திரேலியாவில் 20 அடியும், தென் அமெரிக்காவின் அனகோண்டா (ANACONDA) 25 அடிக்குக் குறையாமலும் இருக்கின்றன. ஆனால் இந்த பாம்புகளை எல்லாம் ஓரம் கட்டுற மாதிரி ரெடிகுலேட்டட் பைத்தான் (RETICULATED PYTHON) எனப்படும் மலைப்பாம்புதான் இப்போதுள்ள மலைப்பாம்புகளில் மிகவும் பெரியது.

இந்தப் பாம்பின் நீளம் 35 அடி. இதன் எடை 150 முதல் 160 கிலோ வரை இருக்கும். இந்த பாம்பின் வயிற்றுப்பகுதியை குறுக்காக வெட்டிப்பார்த்தால், அதனுடைய குறுக்குவெட்டுத் தோற்றம் 3.5 அடி முதல் 4 அடி வரை இருக்கும். இந்த வகை பாம்புகள் நம் நாட்டில் வெகு அரிதாகவே தென்படுகின்றன. நிக்கோபர் தீவுகளில் இவை பெருமளவில் காணப்படுகின்றன.

மலைப்பாம்புகளின் இனச்சேர்க்கை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டுமே நிகழ்கின்றன. இந்த சீசனில் மட்டுமே பெண் மலைப்பாம்புகளுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால், அவை ஆண் மலைப்பாம்புகளைத் தேடி நாக்கால் மோப்பம் பிடித்துக்கொண்டே அலையும். பொதுவாக ஆண் மலைப்பாம்புகள் வயிற்றில் இரை இல்லாத போது மட்டுமே இனச்சேர்க்கைக்கு உடன்படும்.

கருவுற்ற அடுத்த மூன்று மாதங்களில் பெண் மலைப்பாம்புகள் முட்டையிடும் எண்ணிக்கை ஒரே தடவையில் நூற்றுக்கும் மேற்பட்டவையாக இருக்கும். பெண் பாம்புகள் அதன் உடலை ஸ்பிரிங் போல சுருக்கி, அதற்கிடையில் முட்டைகளை வைத்து இதமான வெப்பத்தைக் கொடுத்து அடைகாக்கும். முட்டையில் இருந்து வெளிப்படும் குட்டியின் நீளம் 18 அங்குலம் முதல் 24 அங்குலம் வரை இருக்கும். குட்டிகள் வேகமாக வளரும் இயல்பு கொண்டது.

அனகோண்டா மலைப்பாம்பு

மலைப்பாம்பு வகைகளில் சூப்பர் ஸ்டாராக இருப்பது அனகோண்டா பாம்புகள் மட்டுமே. இது தென்அமெரிக்காவின் அடர்த்தியான வனங்களில், ஆழமான நீர்நிலைப் பகுதிகளில் வாழ்கின்றன. 1992 வரை இந்த அனகோண்டா பாம்பைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அதன் பின்பே பாம்பு ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதே அனகோண்டாவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று பச்சை நிற அனகோண்டா. மற்றொன்று மஞ்சள் நிற அனகோண்டா. இந்த வகை பாம்புகள் 30 அடி நீளம் கொண்டவை. அமேசான் ஆறுகளில் இவை பெருமளவில் காணப்படுகின்றன.

உணவாகும் மலைப்பாம்புகள்

சீனர்களின் அசைவ உணவுப்பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது பாம்பு வகைகள்தான். அதிலும் மலைப்பாம்புகளின் உடலில் சதை மிகுந்து காணப்படுவதால் அதையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர். சீனாவின் கிழக்கு பகுதியில் செஜியாங் என்ற மாகாணத்தின் கடைக்கோடியில் சிசிகியாவ் என்ற பெயரில் ஒரு கிராமம் உள்ளது. ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில் ஏராளமான பாம்புப் பண்ணைகள் உள்ளன. அந்த பாம்புப் பண்ணைகளில் 30 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பாம்புகள் வளர்க்கப்பட்டு நாள்தோறும் இறைச்சி சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. நம் ஊரிலுள்ள நாமக்கல் பிராய்லர் கோழி பண்ணைபோல் அங்கே பாம்புப் பண்ணைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த கிராமத்தில் வீட்டுக்கு வீடு பாம்பு வளர்ப்பு என்பது ஒரு குடிசைத் தொழிலாகவே மாறிப்போயிருக்கிறது. இந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் அடித்தளம் போட்டவர் யாங் ஹாங்சாங். 1970-ஆம் ஆண்டு வாக்கில் முதன்முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்திய இவர், பிற்காலத்தில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார். இவரை உள்ளூர் மக்கள் ‘ஸ்நேக் கிங்’ என்று அழைக்கிறார்கள்.

இந்தப் பாம்பு பண்ணையில் மலைப் பாம்புகள் இறைச்சிக்காகவும், கருநாகம், ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற விஷம் மிகுந்த பாம்புகள் மருத்துவப் பயன்பாட்டுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. பாம்புகளின் விஷத்தில் இருந்து விலை உயர்ந்த மருந்துகள் தயாரிக்கப்படுவதால் பாம்பின் விஷம் இங்கே மதிப்பு வாய்ந்த ஒரு பொருளாக மாறிவிட்டது. பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாம்பின் உடல் ஊறிய ஒயின் போன்ற மதுவகைகளும் நல்ல விலைக்கு விற்கப்படுவது என்பது ஒரு ஹைலைட் செய்தி.

(வாவ் வளரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here