குறைந்த விலையில் வென்டிலேட்டர்

411

-சந்தரபுத்தன்

செயற்கை சுவாசக் கருவிகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்து சாதனை

கொரோனா வைரஸ் பரவல் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான அடிப்படை மருந்துகளும், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவிகளும் பல நாடுகளில் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. அதன் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலும் அதன் தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்தான் ஓர் இனிய செய்தி.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான கிருதிலேப்ஸ் டெக்னாலஜிஸ் (www.kritilabs.com) குறைந்த விலையில் வென்டிலேட்டர்களைத் தயாரித்துள்ளது. அதற்கு கிருதி டிஜிட்டல் வென்டிலேட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்திசெய்வதற்கு வென்டிலேட்டர்களை பெருநிறுவனங்கள் உருவாக்குவதன் பின்னணியில் இந்த வளர்ச்சியைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

இந்த வென்டிலேட்டர், மின்சார வசதி இல்லாத நேரங்களில்கூட பவர் பேங்க்குடன் செயல்படும். அதாவது கிருதிலாப்ஸ் டெக்னாலஜிஸ் மைக்ரோபிராசஸரில் இயங்கும் வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளது. மருத்துவரின் பரிந்துரைப்படி ஆக்சிஜன் அளவை மாற்றமுடியும். கிருதி டிஜிட்டல் வென்டிலேட்டர் நோயாளியின் முக்கிய புள்ளிவிவரங்களையும் சேகரித்து, தொலைதூர இடத்திற்குக்கூட சர்வர் வழியாக மருத்துவர்கள் கண்காணிக்க அனுப்பிவைக்கும்.

இந்திய அளவில் மாருதி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற பெருநிறுவனங்களும் எதிர்காலத்தில் உருவாகப்போகும் வென்டிலேட்டர்களுக்கான தேவையை நிறைவேற்ற உற்பத்தியைத் தொடங்கும் திட்டங்களை வைத்துள்ளன. பெரும்பாலும் பாரம்பரியமான வென்டிலேட்டர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. விலையும் அதிகமாக இருக்கின்றன என்று கூறுகிறார் கிருதிலேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் எல்என். ராஜாராம், “எங்களுடைய வென்டிலேட்டர் மைக்ரோபிராசஸரில் இயங்குவதால் நோயாளின் தேவைக்கேற்ப சுவாச அளவு, பிரெட்த் அண்ட் ரேட் ஆகியவற்றை துல்லியமாகக் கட்டுப்படுத்தமுடியும். இவை எல்லாவற்றையும் ஒரு மொபைல் ஆப்ஸ் மூலமாகவே செய்யமுடியும்” என்று நம்பிக்கை தருகிறார்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களைக் கொண்டு புதிய வென்டிலேட்டரின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகியவை சென்னையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த நிறுவனம் மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப உற்பத்தியைத் தொடங்கும் திட்டத்தை வைத்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமான நிலையில், இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச் (ஐசிஎம்ஆர்) அமைப்பு, வென்டிலேட்டர் கருவிகளை சோதனை செய்து சான்றிதழ் அளிப்பதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. மருத்துவமனை மற்றும் மருத்துவர்களே அதனை மதிப்பீடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிருதிலேப்ஸ் உருவாக்கியுள்ள வென்டிலேட்டர் நுரையீரல் செயலிழப்பின்போது சுவாச உதவியை வழங்கும் ‘அம்புபேக்’ மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் ஒட்டும் தன்மையுள்ள மஞ்சள் நிற திரவத்தை மருத்துவர்கள் கவனித்து கட்டுப்படுத்துகின்றனர் இதுபோன்ற கடுமையான சுவாசப் பிரச்சினைகளின்போது அந்த நோயாளியின் எடை, சுவாச அளவுக்கேற்ப ஆக்சிஜனை நுரையீரலில் செலுத்தவேண்டியிருக்கும்.

மனிதர்களின் மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு ஆக்சிஜன் சென்று, நுரையீரல் நலமடையும் வரை இது அவசியமாகிறது. இந்த நோய்க்குறி இதயத்தையும் பாதிப்பதால், அது மிகவும் ஆபத்தான நிலையாகக் கருதப்படுகிறது. இந்த தீவிர நிலையில்தான் வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றன. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு சமூக தனித்திருத்தல் என்பது ஒரு முக்கியமான விஷயமாக இருப்பதால், கிருதி டிஜிட்டல் வென்டிலேட்டரின் ரிமோட் இயக்கம் மற்றும் சர்வர் மூலம் தகவல்களை அனுப்புவது அனைத்துமே நோயாளிகளுடன் மனிதர்களின் தொடர்பை குறைக்கிறது.

அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகள்கூட வென்டிலேட்டர் பற்றாக் குறையைச் சந்தித்துவருகின்றன. தற்போது 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியாவும் அதே பிரச்சினையை எதிர்கொள்கிறது. இங்கும் ஒருவேளை கொரோனா வைரஸ் பரவல் அதிகமானால், ஆக்சிஜன் சிலிண்டர்கள், தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் மற்றும் சானிடைசர்கள் ஆகியவற்றுடன் அதிக அளவில் வென்டிலேட்டர்களும் தேவைப்படும். இதுபோன்ற நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக, குறுகிய நாட்களில் அதிக வென்டிலேட்டர்களைத் தயாரிக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் டிஆர்டிஓ போன்ற அரசு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

விரிவான செய்திகளுக்கு: https://thefederal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here