நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர் – 23

204

-சேவியர்

தேங்க்ஸ் மீட்டிங் அவசியம்

எந்த ஒரு புராஜக்டையும் துவங்குவதும், நடத்துவதும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானதுதான் ஒரு புராஜக்டை நேர்த்தியாக முடிப்பதும். இந்த வேலை புராஜக்ட் மேனேஜரின் தலை மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது.

புராஜக்டின் முடிவுப் பணிகள் கொஞ்சம் சிக்கலானது. காரணம் ஒரு புராஜக்டில் பணியாற்றுபவர்கள் எல்லோருமே, புராஜக்ட் முடிந்ததும், ‘அப்பாடா.. என் வேலை முடிஞ்சுது. ஆளை விடு’ என கிளம்பிவிடுவதுதான்.

அடுத்த புராஜக்டை நோக்கியோ, தற்காலிக ஓய்வை நோக்கியோ அவர்கள் சென்று விடுவார்கள். அதனால் ஒரு நேர்த்தியான முடிவு புராஜக்ட்களுக்கு பல வேளைகளில் இல்லாமல் போய்விடுவதுண்டு.

ஒரு புராஜக்ட் முடியும்போதுதான், அதில் நாம் சந்தித்த பிரச்சினைகள் என்ன? அந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டோம்? எப்படியெல்லாம் அந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம் போன்ற பல விஷயங்கள் அலசப்படும். அந்த செய்திகளெல்லாம் அடுத்த புராஜக்டின் வெற்றிக்கு மிகவும் பக்கபலமாக இருக்கக் கூடிய விஷயங்கள். எனவே இவற்றைக் கவனமாய்ப் பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல ஒரு புராஜக்டின் வெற்றிக்கு உழைத்தவர்கள், ஒரு புராஜக்டை தூக்கி நிறுத்திய சில ஸ்டார் மனிதர்கள், ஒரு புராஜக்டை மிக உயர்ந்த நிலைக்குக் கூட்டிக்கொண்டு போன சில அற்புத ஐடியாக்கள் இவற்றையெல்லாம் பதிவு செய்துவைப்பது ரொம்ப முக்கியம். சும்மா தனிநபர் துதி பாடல் அல்ல, இது ஒரு புராஜக்டில் கற்றுக் கொண்ட பாடத்தை அடுத்தடுத்து வருகின்ற புராஜக்ட்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நிலை.
இந்தக் கட்டத்தில் புராஜக்ட் மேனேஜர் செய்யவேண்டிய ஒரு முக்கியமான வேலை, ‘எல்லா விஷயங்களும் முடிந்து விட்டனவா?’ என்பதை ஊர்ஜிதப்படுத்துவதுதான். திட்டமிட்டிருந்தது ஒரு சின்ன விஷயமாக இருந்தால்கூட அதுவும் முடிந்திருக்க வேண்டும். ஒரு செக் லிஸ்ட் வைத்துக்கொண்டு அனைத்தையும் சரிபார்த்து கொடியசைக்க வேண்டியது புராஜக்ட் மேனேஜரின் பொறுப்பு.

கல்யாண வீட்டில் எல்லாம் தடபுடலாக இருந்தாலும், சாப்பாட்டில் சொதப்பிவிட்டால் ‘என்னய்யா கல்யாணம்’ எனும் ஒரு அலுப்பு மக்கள் மனதில் வரும். அதுபோல, புராஜக்டை எவ்வளவு சூப்பராக முடித்தாலும், அதை பளிச் என எல்லார் மனதிலும் வாசனையோடு நிற்க வைப்பது இந்த கிளைமாக்ஸ் பார்ட்தான். அதனால் தான் இதை கவனமாய்ச் செதுக்க வேண்டியிருக்கிறது.

புராஜக்ட் மேனேஜர் செய்கின்ற தவறுகளில் ஒன்று, ‘புராஜக்ட் முடிவில் என்னென்ன செய்ய வேண்டும்’ என்பதைக் குறித்த தெளிவான ஒரு திட்டம் உருவாக்காமல் இருப்பது. ‘வேலை முடிஞ்சா போதும், அதுக்கப்புறம் அதைப்பற்றி எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு’ என ஒரு புராஜக்ட் மேனேஜர் நினைத்தால் அவரது வேலைக்கான அங்கீகாரம் அவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். எனவே ‘குளோசிங் ஸ்டேஜில்’ என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வைக்க வேண்டும்.

சில வேளைகளில் புராஜக்ட் முடியும் தருவாயில் இருக்கும்போது சில முக்கிய நபர்கள் அந்த புராஜக்டை விட்டு விட்டு வேறு புராஜக்டுக்குத் தாவிவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலை வரும்போது புராஜக்ட் குளோசிங் சரியாக அமையாமல் போய்விடும். அத்தகைய சூழலை முன்கூட்டியே அனுமானித்து அதன் அடிப்படையில் திட்டம் தீட்ட வேண்டும். அவர்கள் புராஜக்டை விட்டுக் கிளம்பும் முன்பே அவர்களுடைய புராஜக்ட் அனுபவங்களைக் கேட்டு வாங்கி வைத்துக்கொள்வது சிறப்பானது.

அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுல்ல, இனி அதைப்பற்றி பேசி என்ன பிரயோசனம், அடுத்த வேலையைப் பார்ப்போம், எனும் மனநிலை பல ஊழியர்களிடம் இருக்கும். காரணம் அவர்களுடைய நோக்கம் எல்லாம் எதிர்காலப் பயணம் சார்ந்ததாக இருக்குமே தவிர கடந்த கால அனுபவங்களை புரட்டுவதாக இருக்காது. இத்தகைய சூழலை நாசூக்காகக் கையாள வேண்டியது புராஜக்ட் மேனேஜரின் கடமை. ஊழியர்கள் இதனால் ஏதோ ஒரு விதத்தில் பயனடைவது போன்ற ஒரு சூழலை உருவாக்குவது ஆரோக்கியமானது.

மிக முக்கியமாக என்னென்ன விஷயங்கள்

இந்த புராஜக்ட் குளோசிங் கட்டத்தில் ஒரு புராஜக்ட் மேனேஜர் கவனிக்கவேண்டும்.

1. முடிக்கவேண்டிய எல்லா பணிகளும் முடித்தாகிவிட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். பணிகள் என்று சொல்லும் போது வெறும், புராஜக்ட் வேலைகள் மட்டுமல்லாமல் அது சார்ந்த பிற இணைப்புப் பணிகளும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

2. புராஜக்டின் அத்தனை பாகங்களும் சரிவர முடிந்தாகிவிட்டதா என்பதைப் பார்க்கவேண்டும். குறிப்பாக புராஜக்டின் தொடக்கத்தில் என்னென்ன செய்ய வேண்டும் எனும் பட்டியலை ‘தேவைகளின் பட்டியல்’ / ரிக்கொயர்மென்ட் டாக்குமென்டில் எழுதியிருப்போம். அது முழுவதும் முடிந்ததா என்பதை ஊர்ஜிதப்படுத்தவேண்டும்.

3. புராஜக்ட்டுக்குத் தேவையான அப்ரூவல்ஸ் எல்லாம் கிடைத்ததா என்பதைப் பார்க்கவேண்டும். புராஜக்ட் சந்தைப்படுத்துவதற்கு முன் பல குழுக்களுடைய அனுமதி வாங்கவேண்டியிருக்கும், அதை தொடக்கத்திலேயே பதிவு செய்து வைத்து சரிவர கவனிக்க வேண்டும்.

4. புராஜக்ட்டின் பெர்ஃபாமன்ஸ் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதற்காக பெஞ்ச்மார்க் எனப்படும் ஒரு வரையறை வைத்திருப்பார்கள். வானகத்துக்கு கிரேஷ் டெஸ்ட் வைப்பது போல. அந்த பென்ச்மார்க் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு புராஜக்டின் பெர்ஃபாமன்ஸை சோதித்து அறிய வேண்டும்.

5. இந்த புராஜக்டுக்காக ஏற்பாடு செய்திருந்தவற்றில் எதையெல்லாம் நிறுத்த வேண்டுமோ, எந்த கான்ட்ராக்டையெல்லாம் மாற்ற வேண்டுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும்.

6. புராஜக்ட்டுக்குத் தேவையான அத்தனை டாக்குமென்ட்களையும் உருவாக்க வேண்டும். பல குழுக்கள் உருவாக்குகின்ற கோப்புகளை பத்திரப்படுத்தி சரியானமுறையில் அதை பயன் பாட்டுக்கு வைக்க வேண்டும்.

7. புராஜக்டில் இருக்கின்ற உறுப்பினர்களில் யாரையெல்லாம் ரிலீஸ் செய்ய முடியுமோ, அவர்களையெல்லாம் புதிய புராஜக்ட்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

புராஜக்டின் கடைசி கட்டத்தில் புராஜக்ட் மேனேஜர் ஒரு உற்சாகம் ஊட்டும் நபராக எல்லோரிடமும் பழகவேண்டும். அந்த புராஜக்ட் வெற்றிகரமாக முடிந்ததன் மகிழ்ச்சியையும், அதன் மூலம் கிடைக்கின்ற பயன்களுக்கும் காரணமானவர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ரேட்டிங், போனஸ் போன்றவை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

எல்லா உறுப்பினர்களையும் ஒருசேர அழைத்து ஒரு நன்றி மீட்டிங் போடலாம். புராஜக்ட் மேனேஜர் பல வேளைகளில் கடினமான முடிவுகளை எடுப்பவராகவும், ஒரு போலீஸ்காரராகவும் பலருக்கும் தோன்றும். அதன் காரணமாக தனிப்பட்ட மனக்கசப்புகளும் உருவாகியிருக்க வாய்ப்பு உண்டு. புராஜக்ட் குளோசிங் காலகட்டத்தில் அத்தகைய மனக்கசப்புகளையும் விலக்கி விட வேண்டும். அதற்கு இத்தகைய மீட்டிங் வழி வகை செய்யும்.
ஒரு புராஜக்டில் பணி செய்த அத்தனை நபர்களிடமும் புராஜக்டைக் குறித்த ஒரு அனுபவத்தைக் கேட்டு வாங்க வேண்டும். புராஜக்டின் பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமல்லாமல், அதில் நடந்த நெகட்டிவ் விஷயங்களும் அடுத்தடுத்த புராஜக்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. குறிப்பாக ஸ்கோப் கிரீப் எனப்படும் என்னென்ன எதிர்பார்ப்புகள் புராஜக்டின் இடையே நுழைந்தன, என்னென்ன புதிய விஷயங்கள் செய்ய வேண்டியிருந்தது, அந்த மாற்றங்கள் கொண்டு வந்த செலவு எவ்வளவு, கால விரயம் எவ்வளவு போன்றவையெல்லாம் நல்ல பாடங்கள்.

புராஜக்ட் ஃபைனல் ரிப்போர்ட் ரொம்ப முக்கியமானது. மிக முக்கிய தகவல்களுடன் கூடிய ஒரு சுருக்கமான மின்னஞ்சல் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட வேண்டியதும் மிக முக்கியமானது. அதில் உயர்மட்ட பாசிடிட்வ் விஷயங்களும், இதனால் நிறுவனத்திற்கு ஏற்படப் போகும் பயன்களும், சாதித்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருப்பது சிறப்பானது.

ஒரு புராஜக்ட் சந்தைப்படுத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பின்னர் அது எப்படி சந்தையில் செயல்படுகிறது என்பதைக் குறித்த ஒரு அலசல் மீட்டிங் நடத்தப்படுவது பெரும்பாலான நிறுவனங்களின் வழக்கம்.

அப்படி ஒரு வழக்கம் இருந்தால் அதுவும் புராஜக்ட் மேனேஜரின் பணிகளில் ஒன்றாக அமையும். அதுவும் ஒரு புராஜக்டின் வெற்றிகரமான முடித்தல் என்பதைச் சேரும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

– திட்டமிடுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here