“அயல்மொழிகள் கற்றவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது”

346

-சுந்தரபுத்தன்

சமீபகாலங்களாக மாணவர்களிடம் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் சேர்ந்து பயின்று பல்துறை வேலைவாய்ப்புகளை எளிதில் பெறமுடியும் என்ற நம்பிக்கையும், அதற்காக திறக்கப்பட்டுள்ள புதிய கதவுகளும் காரணம். கலை அறிவியல் படிப்புகளில் மொழி, இலக்கியம் சார்ந்த படிப்புகளுக்கு மிகுந்த எதிர்காலம் இருப்பதாக தொழில்துறையினர் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கல்வியாளரும் மொழி தொடர்பான கல்வித்துறையில் பணியாற்றிவரும் எழுத்தாளருமான பாரதிபாலன் அளித்த பேட்டி.

இன்றைய சூழலில் மொழிப் பாடங்களுக்கு வரவேற்பும் வேலைவாய்ப்பும் எப்படி உள்ளது?

மொழிப் பாடங்கள் கற்றவர்களுக்குக் கல்வி நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்பு என்ற நிலை முற்றிலும் மாறிவிட்டது. அடிப்படை தொழிற்கல்வி பெற்றிருப்பினும் தொடர்புக்கான மொழி அறிவும் பெற்றிருக்கவேண்டும் என தொழில்துறை நிறுவனங்கள் விருப்புகின்றன, எனவே ஆங்கிலம் தவிர, பிற உலக மொழிகளில் அறிவும் திறனும் சிறப்புத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது மொழித் தொடர்பாளர்களாகப் பணிபுரியவும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும், இன்று ஊடகங்களின் வளர்ச்சி உலகளவில் அதிகரித்துள்ளது. மின்னணு ஊடகங்களின் எண்ணிக்கையும் செல்வாக்கும் பெருகியுள்ளது. எனவே சுவையாகவும் வெவ்வேறு கோணங்களிலும் முற்றிலும் மாறுபட்டு செய்திகளை வழங்கவேண்டும் என்பதில் ஊடகங்கள் தனிக்கவனம் செலுத்துகின்றன. அதன் காரணமாகவும் மொழியறிவு மிகவும் அவசியமாகிறது.

மொழி, இலக்கியம் படிப்பவர்களுக்கு என்ன மாதிரியான துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறமுடியும்?
கல்வி மற்றும் உயராய்வு நிறுவனங்களில் ஆசிரியர் பணிகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக பள்ளிகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், மொழிப் பயிற்சி மையங்கள், மென்பொருள் உருவாக்கத்தில் மொழிப் பயன்பாடு, தொழில் சார் நிறுவனங்களில் அறிக்கைகள், விளக்கங்கள், குறிப்புகள் எழுதும் வகையிலான பணியிடங்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தொழில் பரிவர்த்தனை களுக்கான மீடியேட்டர்கள், ஆலோசகர்கள், காப்பி எடிட்டர்கள், தொண்டு நிறுவனங்களில் பணிகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் என வேலைவாய்ப்புகளுக்கான புதிய களங்கள் விரிவடைந்துள்ளன. இது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

இதுகுறித்து சற்று விரிவாகச் சொல்லமுடியுமா? ஆங்கிலம் தவிர, வேறு எந்த வெளிநாட்டு மொழிகளைக் கற்றால் என்ன மாதிரியான வேலைவாய்ப்பினைப் பெறமுடியும்?

இந்தியாவில் சீன மொழியான மாண்டரின், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பான் மொழிகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த நாடுகளில் குடியேறுவதற்கும் இந்த மொழிகளைக் கற்றிருந்தால் நல்ல வாய்ப்புள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழக நிலைகளிலும் மாணவர்கள் அதிகம் பிரெஞ்சு மொழியை ஒரு மொழிப்பாடமாக தேர்வு செய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பிரெஞ்சு மொழியில் 50 சதவீத சொற்கள் அப்படியே ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான மாணவர்கள் பிரான்ஸ், கனடா நாடுகளில் படிக்க விரும்புகிறார்கள். இதற்கு பிரெஞ்சு மொழி மிகவும் உதவியாக உள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில் பணி வாய்ப்பைத் தேடுபவர்களுக்கும் ஆசிரியர் பணியை விரும்புகிறவர்களுக்கும் பிரெஞ்சு மொழி ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

பிரெஞ்சு மொழிக்குப் பிறகு இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான மொழி ஜெர்மன். இணைய பயன்பாட்டில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவும் உள்ளது. இது பிரெஞ்சு மொழியைவிட எளிதானது, ஜெர்மன் மொழி கற்றவர்களுக்கு அதிக அளவிலான அதிக ஊதியத்துடன் வேலை கிடைக்கிறது. பொறியியல், ஆட்டோமொபைல், மேலாண்மை, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளில் உலக அளவில் வேலைவாய்ப்புக்கு ஜெர்மன் பயன்படுகிறது.

உலகில் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது ஸ்பானிஷ். ஸ்பெயின், மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் பேசப்படுகிறது. சிறந்த பணிகளைப் பெறுவதற்குத் தகுந்த வெளிநாட்டு மொழிகளில் சிறப்பிடம் பெறுகிறது ஸ்பானிஷ். இந்தியர்கள் மிக எளிதாக கற்றுக்கொள்ள முடியும். பிபிஓ, கேபிஓ மற்றும் கால்சென்டர்களில் மிக அதிகளவில் பணிகள் கிடைக்கின்றன.

இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகள் தற்போது மேம்பட்டிருப்பதால், ஜப்பான் மொழி அறிந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகியுள்ளது. இந்தியாவில் செயல்படும் ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பெரும்பாலான ஜப்பானியர்கள் வேறு மொழியைப் பேசத் தயங்குகிறார்கள் என்பதால், இந்த நிறுவனங்கள் நம்பகமான ஜப்பானிய மொழி பெயர்ப்பாளர்களைத் தேடுகின்றன.

உலகில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் சீன மொழி பேசுகிறார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் வாய்ப்புகளைப் பெற விரும்பினால் மாண்டரின் மொழி கற்றுக் கொள்வது மிக அவசியம். அதேபோல கொரிய மொழி தெரிந்தவர்களின் தேவையும் உருவாகியுள்ளது. எல்ஜி, சாம்சங், ஹூண்டாய் போன்ற கொரிய நிறுவனங்கள் அனைத்து தொழில்துறைகளிலும் கால்பதித்துவருகின்றன. எனவே கொரிய மொழியை கற்பவர்கள் எளிதாக வேலைவாய்ப்பைப் பெறும் காலம்.

அரபு மொழி புதிய வாய்ப்புகளுக்கான கதவைத் திறந்துவிடும் மொழியாகவும் இருக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு சுற்றுலா போன்ற துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரபு மொழி கற்றிருப்பது ஒரு சாவியாக பயன்படும். ஐநாவின் ஆறு அலுவல் மொழிகளில் ஒன்றாக ரஷ்யன் இணையத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

தொழில்முனைவோராக நினைப்பவர்களும், சுற்றுலாத்துறையில் ஈடுபட விரும்புபவர்களும் கற்பது அவசியம்.
போர்த்துகீசியம் பிரேசில் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி. இந்தியாவில் கற்கும் முதல் 10 முக்கிய வெளிநாட்டு மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. அலெகிஸ், ஐபிஎம், அமேசான், அக்ஸென்ச்சர் போன்ற நிறுவனங்கள் போர்த்துகீசியத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களைத் தேடுகின்றன. இந்தியாவில் போர்த்துகீசிய மொழி நிபுணர்களுக்கான தேவை மெல்ல அதிகரித்துவருகிறது.

தமிழ் மொழியைக் கற்றவர்களுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன?

தமிழகத்தைத் தாண்டியும் அதற்கான வாய்ப்புகளும் தேவைகளும் நிறைய உள்ளன. இன்று ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் தமிழர்கள் பரந்து விரிந்துள்ளார்கள். இந்த நாடுகளில் தொடக்கநிலையில் தமிழ் கற்பிப்பதற்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இதுமட்டுமல்ல, பிபிசி உட்பட உலகத்தில் உள்ள முன்னணி ஊடக நிறுவனங்கள் தமிழில் செய்திகளை வழங்க விரும்புகின்றன. எனவே அதற்கான தேவை அதிகமாகவே உள்ளது.

பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தெற்காசியப் பிரிவில் தமிழை தொடக்க நிலையிலிருந்து உயர் ஆய்வுகள் வரை கற்பிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. கிழக்காசியா, தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, நோர்டிக் நாடுகள், ஓசியானா நாடுகளில் தமிழ் மொழியின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்ப் பள்ளிகளின் தேவையும் ஊடகங்களின் தேவையும் அதிகரித்துள்ளதால், அங்கு தமிழ் படித்தவர்களுக்கான வேலைகள் உருவாகியுள்ளன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது தமிழ் கற்பிக்கப்பட்டுவருகிறதா?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை தமிழ் இருக்கை தொடங்குவதற்கு முன்னரே, அங்கு தெற்காசிய பிரிவில் அடிப்படை நிலையில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ் இருக்கையின் மூலம் உயர் ஆய்வுகள் மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வமாக வழிவகை செய்யப் பட்டுள்ளது. நவீன இலக்கியப் பிரதிகளை முன்வைத்து மொழியை கற்பிக்கக்கூடிய உத்தி அங்கு பின்பற்றப்படுகிறது. இலக்கியத்தையும் மொழியையும் கற்பிப்பதற்கு தனித்தனி அணுகுமுறைகளைக் கையாளுகிறார்கள்.

ஒன்றுக்கும் அதிகமான மொழிகளைக் கற்பதால் வேலைவாய்ப்பைத் தவிர்த்து, வேறென்ன நன்மைகள் உள்ளன?
பொதுவாக ஆழமான மொழி அறிவு கொண்டவர்களிடம் ஆளுமைத்திறன் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்பெயின் பாம்ப்யூ ஃபாப்ரா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றவர்கள், சூழலை மிக திறம்பட மேலாண்மை செய்கிறார்கள் என்றும் மேலாண்மைத் திறன் கொண்டவர்களாக திகழ்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சிகாகோ பல்கலைக்கழக ஆய்வின்படி, பன்மொழி கற்றவர்கள் முடிவெடுப்பதில் தனித்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here