அழுகை

70

-சு. வீரமணி

இந்த ஊரடங்கு காலத்தில் இரண்டு தேவைகள்தான் மிக அத்தியாவசியம் ஆகியிருக்கிறது. ஒன்று உணவு, மற்றொன்று மருத்துவம். அரசுகள் மருத்துவத்தில் காட்டும் சிறப்பான அக்கறையை, உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால்தான் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று ஒருபக்கம் கண்ணீரில் மிதக்கின்றனர் விவசாயிகள், இன்னொருபக்கமோ கிடுகிடுவென உயர்ந்துபோன காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களின் விலையைக் கண்டு விழிபிதுங்கி நிற்கின்றனர் பொதுமக்கள்.

விளைபொருட்களின் தேக்கம் ஒருபுறம், மக்களின் தேவை மறுபுறம் – இரண்டுக்கும் இடையே என்னதான் நடக்கிறது?

அரசு முறையாகத் திட்டமிடவில்லை!

விவசாய சங்க செயற்பாட் டாளர் சுந்தர.விமல்நாதனிடம் பேசினோம். “அரசு கொரோனோ தடுப்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், அது மிக அவசியம்தான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், பொதுமக்களுக்கு சரியான விலையில் பொருட்கள் போகிறதா, விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலைக்கு விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கவில்லை. ஏனென்றால், இந்த ஆண்டு 30 கோடி மெட்ரிக் டன் வேளாண் விளைப்பொருட்கள் உற்பத்தி செய்துகொடுத்துள்ளோம். ஆனால், நம் நாட்டின் உணவுத் தேவையே 6 மெட்ரிக் டன் தான் என்று இந்திய உணவுக்கழகமே சொல்லியுள்ளது. அதன்படி வரும் ஆறுமாதத்துக்குத் தேவை யான உணவு நம்மிடம் கைவசம் உள்ளது. அப்படியிருந்தும் இப்போது எப்படி திடீரென்று விலை உயர்ந்தது? அதற்கு காரணம் பதுக்கல்காரர் கள்தான்.

மலர்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பல இலட்சம் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஆனால், இவர்களிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்யாத காரணத்தால் இடைத்தரகர்கள் மிக, மிக குறைவான விலைக்கு இந்த விளைபொருட்களை வாங்கி அதனை கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்கின்றனர். சந்தைகளில் மட்டுமே அரசு காய்கறிகளை, பழங்களை கொள்முதல் செய்கிறது. ஆனால், விவசாயிகளால் விளைப்பொருட்களை நேரடியாக சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் அளவுக்கு வாகன வசதி, பொருளாதாரம் போன்ற வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். அரசு இப்போது எல்லா ஊர்களிலும் காய்கறி தொகுப்பு, பழங்கள் தொகுப்பு பைகள் வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் காய்கறிகளை அவர்கள் இடைத்தரகர்களிடம் இருந்துதான் வாங்குகிறார்கள். அரசு நினைத்தால் நேரடியாகவே விவசாயிகளிடம் சென்று விளைபொருட்களை நியாயமான விலைக்கு வாங்கி மக்களுக்கும் குறைவான விலைக்கு காய்கறி, பழங்களை கொடுக்கலாம். ஆனால், அதுபற்றிய திட்டமிடுதலே இல்லாமல் அரசு இருக்கிறது.

அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் போன்ற பொருட்கள் இப்போது திடீரென்று கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், மொத்த வியாபாரிகள் இந்த பொருட்களை பதுக்கி வைத்து விலையை ஏற்றியுள்ளனர். ஏனென்றால், ஏற்கனவே இந்த விளைபொருட்கள் விளைந்துவிட்டது. அதனை குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொரோனோவுக்கு முன்பே வாங்கிவிட்டனர். இப்போது பலசரக்கு போக்குவரத்துக்கும் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை. அப்படி இருக்கையில் இப்போது எப்படி திடீரென்று விலை உயர்ந்தது? அரசு இனிமேலாவது இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், பொதுமக்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார் கவலையுடன்.

விலை உயர்வுக்கு காரணம் நடைமுறை சிக்கல்கள்தான்!

இந்த சிக்கல்கள் பற்றி நம்முடன் பேசிய வணிகர் சங்க பிரதிநிதி ரவி, “வணிகர்கள் விலையை உயர்த்தி விற்றுக் கொண்டுள்ளனர் என்று சொல்வது தவறான தகவல். ஏனென்றால், எங்களுக்கு இப்போது பல மளிகைப் பொருட்கள் வருவதில் சிக்கல் உள்ளது, அதுபோல கொரோனோவுக்கு முன்பு கொடுத்த விலையைவிட அதிக விலைக்குத்தான் இப்போது எங்கள் கைகளுக்கே பொருட்கள் வருகிறது. எனவே, அதனை ஒட்டியே விலையை நிர்ணயிக்கும் சூழலில் உள்ளோம். அதுபோல சரக்கு போக்குவரத்திலிருந்த சிக்கல்கள் காரணமாகவும் விலைவாசி உயர்ந்தது. இப்போது அவையெல்லாம் ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளது. எனவே, இப்போது விலைவாசி கொஞ்சம் கொஞ்சமாக் குறையத் தொடங்கியுள்ளது.

காய்கறிகள், பழங்கள் அனைத்தையும் நாங்கள் மொத்த வியாபாரிகளிடம் வாங்கித்தான் விற்பனை செய்கிறோம். அதனால், அவர்கள் எங்களுக்குக் கொடுக்கும் விலையை அனுசரித்தே பொருட்கள் விற்கிறோம். எப்படி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் இந்த கொரோனோ காலத்திலும் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அதேபோலவே நாங்களும் இந்த நாட்களில் உழைத்துக் கொண்டுள்ளோம். இதனையும் மக்கள் நினைத்து பார்க்கவேண்டும்” என்கிறார்.

விளைபொருட்கள் எல்லாம் தேங்கி நிற்கிறது!

சீக்கிரம் அழுகக்கூடிய பொருட்கள் என்றால் அது காய்கறி, பழங்கள்தான். எனவே, அந்த பொருட்களை உரிய நேரத்தில் விற்பனை செய்யவேண்டியது அவசியம். இதனால், விவசாயிகள் அந்த நேரத்தில் என்ன விலை கிடைக்கிறதோ அதற்கு விற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுபற்றி பேசும் பாபநாசத்தை சேர்ந்த விவசாயி வினோத், “நாங்கள் வெற்றிலை, மிளகாய், கத்திரி, வாழை போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளோம்.

இப்போது எங்களால் வெற்றிலையை விற்பனையே செய்ய முடியவில்லை. இதனால், கொடிக்காலிலே வெற்றிலை அழுகிக்கொண்டிருக்கிறது. அதுபோல 200 ரூபாய்க்கு விற்ற வாழைத்தார்கள் இப்போது வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உணவகங்கள் இல்லை என்பதால் வாழை இலைகள் காற்றில் கிழிந்து வீணாகிவிடும் சூழலில் உள்ளது. மிளகாய் விலையும் இப்போது கிலோ பத்து ரூபாய்தான். அதுபோல கத்திரிக்கும் சுத்தமாக விலையே இல்லை. ஆனால், தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்க்கும்போது கத்திரி 30 ரூபாய், வாழைப்பழம் சீப்பு 30 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுவதை பார்க்கிறோம். ஒரு பக்கம் எங்கள் உற்பத்தி செலவுக்குக்கூட கட்டுப்படியே இல்லாத விலைக்கு எங்கள் விளைப்பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் மக்களும் அதிக விலைகொடுத்து பொருட்களை வாங்கும் சூழலில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அரசு இந்த சிக்கல்களை தீர்க்க முறையாக திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார்.
எல்லா விலையும் ஏறிப்போச்சு!

களத்தில் நாம் நேரடியாக பார்த்தவரைக்கும்போது காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது என்பதே உண்மை. இதுபற்றி பேசும் கார்த்திக், “மளிகைக் கடைகளில் மிளகாய், புளி, சீனி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்ற பொருட்கள் முன்பு இருந்ததை விட கிலோவுக்கு 20 முதல் ஐம்பது ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடைக்காரர்களிடம் ஏனென்று கேட்டால் எங்களுக்கு வரும் பொருட்களின் விலையே உயர்ந்துவிட்டது அதனால், வேறுவழியில்லாமல் உயர்த்தி விற்கிறோம் என்கிறார்கள். இதேபோலத்தான் காய்கறிகள், பழங்கள் விலையும் அதிகரித்துள்ளது.

ஒருபக்கம் விவசாயிகள் போதிய விலையில்லாமல் காய்கறிகளை, பழங்களை, பசும்பாலை ஆற்றில், வாய்க்கால்களில், சாலைகளில் கொட்டும் பரிதாபத்தை பார்க்கிறோம். ஆனால், நாங்கள் வாங்கும்போது எந்த காய்கறியின் விலையும் குறைவாக இல்லை. அரசுதான் இந்த சிக்கலை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சரியான விலையில் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார்
ஒருங்கிணைப்புதான் மிக அவசியம்!

இந்த சிக்கலுக்கான எளிமையான தீர்வை முன்வைக்கிறார் வேளாண் செயற்பாட்டாளர் திருச்செல்வம். “இப்போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இருவரிடமும் குமுறல்களை கேட்கமுடிகிறது. இதனை தீர்க்க அரசு உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்கலாம். இப்போதைய கொரோனோ காலத்தில் அதிக அளவிலான பணியாளர்களை பயன்படுத்தி தகவல்களை திரட்டுவது ஆபத்து என்பதால், மொபைல் ஆப்கள் மூலமாகவே முழு தகவல்களையும் திரட்டலாம்.

இதற்கு ஏற்கனவே உள்ள அரசு பணியாளர்களே போதும். இந்த செயலி மூலமாக ஒவ்வொரு கிராமத்திலும் எதுபோன்ற விளைபொருட்கள் பயிரிடப்பட்டுள்ளது. அது அறுவடைக்கு வரும் காலம் என்ன என்பது போன்ற தகவல்களை அரசால் திரட்ட முடியும். இவ்வாறு எளிதாக விவசாய தகவல்களை திரட்டினால், எந்த பகுதிகளில் எந்த பொருள் தேவையோ அந்த பகுதிக்கு அவ்விளைப் பொருட்களை அனுப்பி வைக்கலாம். இதன் மூலமாக விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கும். அதுபோல நுகர்வோருக்கும் நியாயமான விலை கிடைக்கும். இந்த தகவல்களை திரட்டினால் எந்த விளைபொருட்கள் சந்தையின் தேவையை விட குறைவாக பயிரிடப்பட்டுள்ளதோ, அதனை விவசாயிகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அந்த பயிர்களை கூடுதலாக பயிரிட செய்யலாம்.

தமிழகம் முழுவதும் 12,500 பஞ்சாயத்துகள் உள்ளது, இந்த பஞ்சாயத்துகளில் உள்ள விவசாய விளைபொருட்களின் விபரங்களை திரட்டினாலே நாம் எளிதாக விவசாயிகள், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இந்த நெருக்கடி சூழலிலாவது அரசு இந்த முயற்சியை எடுக்கவேண்டும்” என்கிறார்.
மலர் சாகுபடி மொத்தமும் அழிஞ்சு போச்சு!

இந்த சூழலில் காய்கறி, பழங்கள் போன்றவை குறைந்த விலைக்காவது விற்றுவருகிறது. ஆனால், மொத்தமாக அழிவை சந்தித்துள்ளது என்றால் அது மலர் சாகுபடிதான். இதுபற்றி பேசும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன், “திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, ரோஜா, செண்டிப்பூ போன்ற மலர்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. இந்த பயிர்கள் அனைத்தும் ஆண்டுப் பயிர்கள் என்பதால் இந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரைதான் அறுவடை சீசன். ஆனால், இந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த ஊரடங்கு சூழலால் கோயில்கள், சுபநிகழ்ச்சிகள், திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு கொடுக்க வேண்டிய பூக்கள் எதற்குமே தேவையில்லாமல் போய்விட்டது. இதனால், வயலில் பூக்களை பறிக்காமலேயே செடிகள் வீணாகிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் இதனால் நட்டம் ஏற்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மலர் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி நிற்கிறது.

அதுபோல வாழை பயிரிட்ட விவசாயிகளும் இப்போது 5 ஆயிரம் டன் அளவுக்கு வாழைக்காய் அறுவடை செய்து வைத்துள்ளோம். அதனை எப்படி விற்பனை செய்வது என்றே தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறோம். அரசு இப்போது இதனை எங்களிடம் ஓரளவு நியாயமான விலைக்காவது மொத்தமாக கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கினால் பல இலட்சம் குடும்பங்களைக் காப்பாற்ற முடியும்” என்கிறார் வேதனையுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here