மைதானத்தில் விளையாடும் கொரோனா

141

-எல்லுச்சாமி கார்த்திக்

உலகையே வீடுகளுக்குள் முடக்கிப் போட்டுள்ளது கொரோனா. இப்பொழுது வெளியாகியிருக்க வேண்டிய பல முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது வெளிவரலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சினிமா ரசிகர்களைப் போலவே தீவிர விளையாட்டு ரசிகர்களுக்கு அவர்களின் ஃபேவரைட் போட்டிகள் நடக்காததால் சோர்ந்து போயுள்ளனர். கொரோனா தொற்றால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டும் உள்ள சர்வதேச விளையாட்டு போட்டிகள் இனி எப்போது நடைபெறும்?

கால்பந்து

ஐரோப்பா கண்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பை தொடர் உலகளவில் கால்பந்து ரசிகர்களிடையே பிரசித்தமானது. யூரோ தொடர் போட்டி இந்த ஆண்டு நடைபெற வேண்டும். இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் ஐரோப்பாவில் தீவிரமாக உள்ளதால் யூரோ தொடரை ஓராண்டு காலம் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு. ஜூன் 2021இல் இந்த தொடரை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ் மற்றும் இத்தாலி, ஜெர்மன், ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுகல், நெதர்லாந்து என ஃபுட்பால் உலகின் தலைசிறந்த அணிகள் அனைத்துமே ஐரோப்பா கண்டத்தில்தான் அடங்கியுள்ளன. இதில் பெரும்பாலான நாடுகளில் வைரஸ் தீவிரமாக உள்ளதால் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் உடல் நலனை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ கோப்பை போலவே அமெரிக்க கண்டத்தில் மிகவும் பிரபலமான கோபா அமெரிக்க தொடரும் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு. இந்த தொடரில் பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே மாதிரியான அணிகளும் விளையாட இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டி உட்பட உலக அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஃபுட்பால் தொடர்கள் அனைத்தும் தற்காலிமாக கைவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஐ-லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசனும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்

உலகின் மெகா விளையாட்டு தொடரான 32வது ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் ஆரம்பமாக இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலினால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உலகப் போர்கள் காரணமாக 1916, 1940, 1944 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும்தான் இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவில்லை. அது தவிர்த்து இருபத்தெட்டு முறை ஒலிம்பிக் தொடர்கள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டுள்ளன.

போட்டியில் பங்குபெறும் வீரர்கள், பங்குபெறும் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளின் அழுத்தம் காரணமாக ஜப்பான் – டோக்கியோவில் நடக்க திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைப்பதாக ஜப்பான் பிரதமர் ஷிண்ஷோ அபேவும், சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளன.

வரும் நவம்பர் 30 வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தடகள விளையாட்டுகளுக்கான தகுதி சுற்று போட்டிகளும் முடக்கப்பட்டுள்ளது. “இதன் மூலம் கொரோனா தொற்று தவிர்க்கப்படுவதுடன் ஊக்கமருந்து விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அசல் திறமை படைத்த வீரர்களை அடையாளம் காணவும் உதவும்” என்கிறார் மூத்த தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ்.

கிரிக்கெட்

இந்தியாவில் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட விளையாட்டில் முதலிடத்தில் உள்ளது கிரிக்கெட். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முழுவதுமாக கைவிடப்படுகிறதா அல்லது வேறொரு தேதியில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்பதை சொல்லாமலேயே மவுனமாக இருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால், பார்வையாளர்களே இல்லாமல் ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான யோசனைகள் வாரியத்தின் கைவசம் இருப்பதாக சொல்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். ஐபிஎல் தொடரில் வணிக லாபம் அதிகம் இருப்பதால்தான் இந்த தொடரை கொரோனா நேரத்திலும் நடத்த காரணமாக இருக்கலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள டி20 உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டென்னிஸ்

கொரோனாவினால் உலகம் முழுவதும் நடக்க இருந்த சுமார் 900 டென்னிஸ் டோர்னமெண்ட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு. அதிலும் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதல்முறையாக நடப்பாண்டுக்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படாமலே கைவிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தொழில்முறை சார்ந்த டென்னிஸ் தொடர்களையும் ஜூன் 7 வரை நடத்த வேண்டாமெனவும் தெரிவித்துள்ளது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு.

இதே போல கொரோனா தொற்று அபாயத்தினால் பார்முலா 1 போட்டிகள், குத்துச்சண்டை, மாரத்தான் போட்டிகள், தடகள போட்டிகள், பாரா ஒலிம்பிக் தொடரையும் தள்ளிவைக்க சம்மந்தப்பட்ட அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.

வீரர்களின் உடற்தகுதி?

ஒவ்வொரு விளையாட்டுக்கும் அந்த விளையாட்டின் தன்மையை பொறுத்து வீரர்களின் உடற்தகுதி மாறுபடும். இருந்தாலும் நடைப் பயிற்சி, ஓட்டம், உடற்பயிற்சி என பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் அவர்களது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்காக அன்றாட பயிற்சிகளில் கவனம் செலுத்துவர். தற்போது ஊரடங்கு காரணத்தினால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகி வரும் வீரர்கள் உட்பட அனைத்துவிதமான விளையாட்டுகளிலும் விளையாடி வரும் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் அவர்களது உடற்தகுதியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

‘வீரர்கள் வீடுகளில் பயிற்சிகளை செய்தாலும் விளையாட்டு களத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த ஃபிட்னெஸை பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்’ என்கிறார் ஃபிட்னெஸ் மருத்துவர் வம்ஸி கிரண்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here