இப்போ நாங்க இப்படி!

183

– பூ.சர்பனா

ஊரடங்கில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள்?

கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களில் நிலை சீராகிவிடும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என நம்பிக்கையுடன் இருந்தவர்களை, மேலும் 18 நாட்கள் வீடுகளுக்குள் முடக்கியுள்ளது கொரோனா. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் இந்த ஊரடங்கு நாட்களில் என்ன செய்கிறார்கள்?

திட்டமிட்டு வேலை செய்கிறேன்!
எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

எவ்வளவு நேரம் படிக்கலாம்? எவ்வளவு மணி நேரம் எழுதலாம்? என்று முதலில் ஒரு நாளை சரியாக திட்டமிட்டுக்கொள்கிறேன். முன்னரே திட்டமிடுவதால் ஊரடங்கில் நேரம் போவது தெரியவில்லை. தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பது, வாட்ஸப் பார்ப்பது இல்லை. ஷேக்ஸ்பியரை மறுவாசிப்பு செய்கிறேன். குறுந்தொகை பாடல்களில் தினம் பத்து வாசிக்கிறேன். இப்போது டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவலை வாசிக்க எடுத்து வைத்துள்ளேன்.

இதனையெல்லாம் முடித்துவிட்டு மனதிற்கு பிடித்தமான பீத்தோவன், மொஸார்ட் இசை கேட்பது, டாக்குமெண்டரி படங்கள் பார்ப்பது, தனியாக இருக்கும் உள்ளூர் வெளிநாட்டு நண்பர்களுடன் போனில் உரையாடுவது என்றிருக்கிறேன். அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதை வழக்கமான பணியாகக் கொண்டிருக்கிறேன். அதோடு, வீட்டில் எல்லோரும் சேர்ந்து படிக்கிறோம்; கூடி விவாதிக்கிறோம்.

எப்போதும் போல பிஸியாகத்தான் இருக்கிறேன்!
வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் துணைத்தலைவர்

ஊரடங்கு அறிவித்ததிலிருந்து நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். கோவையில் ‘பிரதமர் மோடி கிச்சன்’ ஆரம்பித்து தன்னார்வ தொண்டர்களை ஒருங்கிணைத்து தினமும் 700 பேருக்குமேல் உணவுப் பொட்டலங்கள் அளிக்கிறேன். அதோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கட்சியினரை ஒருங்கிணைத்து தினமும் 70 ஆயிரம் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் மளிகைப் பொருட்களையும் வழங்குகிறோம். எப்போதும்போல இந்த ஊரடங்கிலும் இப்படி பிஸியாகத்தான் இருக்கிறேன்.

என் பெரிய மகன் ஆதர்ஷ் பொறியியல் இறுதியாண்டு படித்துக்கொண்டே பெங்களூரில் ஒரு நிறுவனத்தின் இண்டெர்ன்ஷிப் பண்ணுகிறார். அதற்காக, வீட்டிலிருந்தே பணிபுரிகிறார். சின்ன மகன் கைலாஷ் ப்ளஸ் டூ முடித்துவிட்டு, இப்போது சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது, ஒன்றாக உணவு அருந்துவது மகிழ்ச்சியளிக்கிறது. குடும்பத்தோடு கர்ணன், ராஜராஜ சோழன் சரித்திர படங்கள் பார்த்தேன்.

மாடி தோட்டத்தில் கீரை, காய்கறிகள் பயிரிடுகிறேன். மாடியிலேயே வாக்கிங் செல்கிறேன். இதுதான் அன்றாடப் பணிகளாக உள்ளது.

உதவி கோரி வருகிறோம்!
கஸ்தூரி, நடிகை

உலகம் முழுவதும் ஊரடங்கில் இருந்தாலும், சினிமா ஷூட்டிங் இல்லையென்றாலும் எனக்கு ஓய்வு கிடையாது. காரணம் நான் ஒரு பெண்; தினம் வேலை செய்யும் இல்லத்தரசி. ஷூட்டிங் போகும்போது சமைக்கத் தேவையில்லை. அங்கேயே உணவு கொடுத்து விடுவார்கள். இப்போது சமையல் வேலையே முழுவதும் இருக்கிறது. எனக்கு வீட்டில் பணியாட்கள் கிடையாது. நான்தான் வீட்டு வேலைகளைச் செய்வேன். தொலைக்காட்சி எல்லாம் இல்லை. பிள்ளைகள் உருப்படவேண்டும் என்று நினைக்கின்ற தாய் நான். எனவே, பொறுப்புகள் நிறைய இருக்கிறது.

சராசரி இல்லத்தரசிகளுக்கு என்னைவிட இன்னும் அதிகம் இருக்கும். குழந்தைகள் யாரும் பள்ளிக்கு செல்லவில்லை; கணவர் அலுவலகம் செல்லவில்லை. அவர்களை நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள வேண்டும். எங்கள் குடியிருப்பில் இல்லத்தரசிகள் குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் திணறிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். இப்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா தூங்க முடிகிறது. அவ்வளவு மட்டும்தான் அவர்களுக்கு ஆசுவாசம்.

எங்கள் அப்பார்ட்மெண்டில் தூய்மைப்படுத்துவது, காவல் காப்பது, செடிகளை பராமரிப்பது என்று நிறைய பணிப்பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கும் அவரது கணவர்களுக்கும் இப்போது வருமானமே இல்லை. நாங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று ஆலோசித்துள்ளோம்.

எனது அறக்கட்டளை மூலம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும், கேன்சர் பாதித்த 60 குழந்தைகளை பார்த்து வருகிறேன். இப்போது, கொரோனாவால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே குறைந்துவிட்டார்கள். இதனால், எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். என் அறக்கட்டளையிலுள்ள குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்றவுணர்வில் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்.
ஷூட்டிங் ஒருநாள் நின்றாலே லைட்மேன், டெக்னிஷியன்ஸ் போன்ற தினக்கூலி தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். இப்போது தொடர்ந்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ‘நாங்கள் வைரஸ் வந்து செத்தாலும் பரவாயில்லை. எங்கக் குழந்தைங்க பட்டினியோட சாகக்கூடாது’ என்று அழுகிறார்கள். என்ன செய்வதென்று தமிழ் சினிமா கையை பிசைந்துக்கொண்டு நிற்கிறது. அவர்களுக்கு உதவ எல்லோரிடமும் நிதியுதவி கோரி வருகிறோம்.

விவசாயம் செய்கிறேன்!
வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்

எங்கள் கட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாய் செலவில் தமிழகம் முழுக்க ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து வருவதோடு எனது விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளையும் பார்த்து வருகிறேன். எனவே எனக்கு ஊரடங்கு ஓய்வு இல்லை.

என்னுடைய நிலத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும், நெல்லி, கொய்யா, சப்போட்டா, கரும்பு, முந்திரி, தென்னை மரங்கள் போன்றவற்றையும் பயிரிட்டு வருகிறேன். மதிய நேரத்தில் எலுமிச்சைப் பழம் பறித்து குடும்பத்தோடு ஜூஸ் போட்டுக் குடிப்பேன்.

வாட்ஸப்பில் குழுக்கள் ஏற்படுத்தி கட்சித் தொண்டர்களுடன் உரையாடுகிறேன். லெனின், பிடல் காஸ்ட்ரோ போன்ற பல்வேறு வரலாற்றுத் தலைவர்களின் பேச்சு தொகுப்புகளைக் கேட்கிறேன். பேரரசுகளின் வீடியோ தொகுப்புகளையும் பார்க்கிறேன்.

விழிப்புணர்வூட்டி வருகிறோம்!
ரவி ஐ.பி.எஸ்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.
மருத்துவர்களை போலவே எங்களுக்கும் இப்போது ஓயாத பணிகள் உள்ளன. அலுவலகம், வீடு என்று சுழன்று கொண்டிருக்கிறோம்.

எங்கள் வீட்டில் ஆண் – பெண் இருவருமே சமம். அதில் உறுதியானவர்கள் நாங்கள். ஓய்வு நேரங்களில் எப்போதுமே மனைவிக்கு சமைத்துக் கொடுப்பேன். இந்த ஊரடங்கிலும் அந்தப் பணி தொடர்கிறது.
இந்த ஊரடங்கில் பல பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கணவர்களால் அடி, உதைக்கு ஆளாவது என்றிருக்கிறார்கள். குடும்ப வன்முறை அதிகமாகியிருக்கிறது. இது தொடர்பான வழக்குகள் அதிகம் வருகிறது. அதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் கொடுத்து வருகிறோம். தமிழகத்தின் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களையும், அவர்கள் எல்லைக்குட்பட்ட வீடுகளுக்குச் சென்று பெண்கள் நலத்தை விசாரிக்கச் சொல்கிறோம். அதற்கான இலவச நம்பரையும் அறிவித்திருக்கிறோம்.

தினமும் அதிலிருந்து 25 போன் கால்களுக்கு மேல் புகார்களாக வந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஆலோசனையும் கொடுக்கிறோம்.

இந்த சமயத்தில் காவலர்கள் தங்கள் உடம்பை பேணிக் காப்பதும் அவசியம். காவலர்கள் உடற் பயிற்சி செய்வது கடினம் என்பதால், யோகா செய்யவும் அறிவுறுத்துகிறோம்.

வேலைகள் நிறைய இருக்கிறது!
விவேக், பாடலாசிரியர்

குடும்ப உறுப்பினர்களிடமும் தெரிந்தவர்களிடமும் ஏன் தனிமைப்பட்டு இருக்கவேண்டும்? அதன் அவசியம் என்று வலியுறுத்தி சொல்லி வருகிறேன். வீட்டைச் சுற்றி பணிபுரிபவர்களுக்கு சுகாதார பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இது எங்கும் செல்வதற்கான நேரம் இல்லை. வாட்ஸப் வதந்திகளை குறிப்பாக நம்பக்கூடாது. அப்படி நம்பி பலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் விழிப்புணர்வூட்ட வேண்டும். வேலைகள் நிறைய இருக்கிறது.

புத்தகங்கள் வாசிக்கிறேன்!
தம்பி ராமையா, நடிகர்

எப்போதுமே படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் ஓய்வெடுப்பதில்லை. எழுதிக்கொண்டே இருப்பேன் அல்லது புத்தகங்கள் வாசிப்பேன். இப்போதும் அப்படித்தான்.

வருமுன் காத்தல் முக்கியம். அதனால், வீட்டிலேயே தினம் உடற்பயிற்சிகள் செய்கிறேன். அதோடு, எனது கிராமத்தினருக்கும் நண்பர்களுக்கும் கொரோனா குறித்து விழிப்புணர்வூட்டுகிறேன். எங்கள் கிராமத்தில் உள்ளவர்களிடம், “தம்பி ராமையா காமெடி பண்றவன். ஆனால், அவனே சீரியஸாக வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று சொல்லும்போது யோசிக்கவேண்டும்” என்று சொல்கிறேன். எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ராராபுரம். எங்கள் ஊரில் 100 குடும்பங்கள்தான் உள்ளன. அமைதியான ஊர்.

கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்!
ஸ்ரீ, சின்னதிரை நடிகர்

இப்போது ஜிம் இல்லை. அதனால், வீட்டிலிருந்தபடியே ஒர்க் அவுட்ஸ் செய்கிறேன். படம் அதிகம் பார்ப்பதில்லை; பார்ப்பதற்கான மனநிலை இப்போது இல்லை.

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. என் குடும்பத்துக்காக மட்டுமல்லாமல் எல்லோருக்காகவும் கடவுளிடம் தினம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

நானாவது பரவாயில்லை, எனது அப்பா எப்போதும் பிஸியாகவே இருப்பவர். ஆனாலும், ஒத்துழைப்புக் கொடுக்கிறார். ஏனென்றால், பெரியவர்களுக்குத்தான் அதிகம் பரவுகிறது.

இவ்வளவு பெரிய விடுமுறை கிடைத்ததில்லை!
ரச்சிதா, சின்னத்திரை நடிகை

தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலுமே நடித்துக் கொண்டிருப்பதால் மாதத்தின் எல்லா நாளும் எனக்கு ஷூட்டிங்தான். விடுமுறை என்பதே பெரிய விஷயம். இப்போது ஆச்சரியமாக நீண்ட விடுமுறை கிடைத்துள்ளது. அதனால், இந்த ஊரடங்கை குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பாக கருதுகிறேன்.

சிறு வயது நண்பர்களை எல்லாம் தேடிப்பிடித்து எல்லோரிடமும் வீடியோ காலில் பேசுகிறேன். முன்பும் அதற்கு விரும்புவேன் என்றாலும் அதற்கு இப்போதுதான் நேரம் கிடைத்துள்ளது. குழந்தைகள் விளையாடும் நம்பர் கேம் விளையாடுகிறோம்.தினம் உடற்பயிற்சி செய்வது, சமைத்து சாப்பிடுவது, குடும்பத்தினருடன் அரட்டை, நியூஸ் பார்த்து கொரோனா கொரோனா என்று கத்திவிட்டு தூங்குவது என்று நாட்கள் போய்க்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here