அரசுப் பள்ளியில் ஆன்லைன் கல்வி சாத்தியமா?

18

-சுந்தரபுத்தன்

ஆசிரியர்கள் அலசல்

உலகம் முழுவதும் பள்ளிகளும் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஆன்லைன் வழியாக கற்பித்தல் பணிகள் தொடங்கிவிட்டன. நவீன தொழில்நுட்ப வசதிகளால் நகரங்கள், பெருநகரங்களில் ஆன்லைன் கல்வி எளிதாகியிருக்கிறது. ஒருபக்கம் ஆன்லைன் கல்வி வளர்கிறது என்று பெருமையாகப் பேசினாலும், மறுபுறம் சாதாரண போன் வசதிகூட இல்லாத கோடிக்கணக்கான மாணவர்களின் நிலையை நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. போக்குவரத்தும் இணைய வசதிகளுமற்ற ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி சாத்தியமா? என்று கேள்வி எழுகிறது. இதுபற்றி பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் பேசினோம்.

உமா,
அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர், சென்னை

கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே ஆன்லைன் கல்வி முயற்சிகள் பள்ளிக் கல்வித்துறையில் தொடங்கப்பட்டன. இன்பர்மேஷன் டெக்னாலஜி ஷெல் ஒன்று செயல்பட்டது. கணினிவழிக் கல்வியின் அடிப்படைப் பயிற்சிகளை தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு வழங்கினோம். 1500 ஆசிரியர்கள் கணினிப் பயிற்சி பெற்றனர். அடுத்தகட்டமாக மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து பயிற்சிகள் அளித்துவந்தோம். ஆர்வமும் வரவேற்பும் ஆசிரியர்களிடம் அதிகமாக இருந்தது. சொந்தமாக லேப்டாப், செல்போன்கள் வாங்கி மாணவர்களுக்குக் கற்பித்தார்கள்.

மிகப்பெரிய மாற்றங்கள் நடந்தது உண்மைதான். ஆனால், அந்தப் பயிற்சிகள் நூறு சதவீதம் வெற்றிபெறவில்லை. பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் லேப்கள், வெர்ச்சுவல் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. ஆன்லைன் கல்வி என்ற தொலைதூர வெளிச்சத்தை அடைவதற்கு அடிப்படையாக கணினிவழி கற்றல் உள்ளது. அதற்கான முயற்சிகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டே இருந்தாலும் முழுமையாக அதை அடையமுடியவில்லை.

நம்மிடம் செல்போன், கம்ப்யூட்டர்கள் இருந்தாலும்கூட நெட்வொர்க் வசதி அடிப்படைத் தேவையாக உள்ளது. உதாரணத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் செல்போன் சிக்னலே கிடைக்காது. அங்கே ஆன்லைன் கல்வியை நாம் சாத்தியப்படுத்தும் நாளில், தமிழகம் முழுவதும் அது வளர்ந்திருக்கலாம். இந்திய அளவில் ஆன்லைன் கல்வி என்பது ஒரு மாயைதான். இதனால் தாய்மொழி வழிக் கல்வி காணாமல்போகும் அபாயம் இருக்கிறது. பெரும்பாலும் அது ஆங்கில வழியாகத்தான் நடத்தப்படும். எதிர் காலத்தில் இதுவொரு வணிகமாக மாறும்.

ஒரு கல்விச் சேவையாக அதனைப் பார்க்கமுடியாது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச்செயலாளர், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரையில் அரசுக்கு முழு பொறுப்புள்ளது. பொதுப்பள்ளிகள் பற்றி விவாதிப்பதற்குக்கூட யாரும் தயாராகயில்லை. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் 25 ஏழை மாணவர்களை அரசே சேர்த்திருக்கிறது. வீட்டில் அவர்களுக்கு ஆன்லைன் வசதி இருக்குமா? வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அவர்கள் வருகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்கேஜி சேர்ந்தவர்கள் இன்று எட்டாம் வகுப்பு படிப்பார்கள்.

வீடுகளில், அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்களின் குழந்தைகளிடம் என்ன வசதிகள் இருக்கும். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீடற்றவர்கள், குடியமர்த்தப்பட்டவர்களின் குழந்தைகள் பற்றி நாம் யோசிக்கவில்லை. ஆன்லைன் கல்வி என்பது உயர்கல்வியில் சாத்தியமாகியுள்ளது. ஆனால் பள்ளிக்கல்வியில் நேரடி வகுப்புகளுக்கு இணையானதாக ஆன்லைன் வகுப்புகள் இருக்கமுடியாது. பேரிடர் காலத்தில் வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் பொதுப்பள்ளி முறைமையும் அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் இருக்கின்றன என்ற நிலை வரும்போதுதான் அனைத்து மாணவர்களுக்குமான கற்றல் வாய்ப்புகள் சரிசமமாக இருக்கும். அதுவரையில் கற்றல் முறையில் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்க முடியாது.

தி. பரமேஸ்வரி
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், வேலூர்

அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி சாத்தியமாவதற்கு சில அடிப்படை வசதிகள் மிகத் தேவை. பெரும்பாலான அரசுப் பள்ளிகள் கிராமங்களில்தான் உள்ளன. எங்கள் பள்ளியில் போன் பேசுவதற்குக்கூட சிக்னல் கிடைக்காது. இப்போதுதான் சில பள்ளிகளுடன் பேசுவதற்காக ஒரு நெட்வொர்க் ஏற்படுத்தியுள்ளார்கள். கம்ப்யூட்டர் பயன்பாடு பற்றிய புரிதலே தற்போதுதான் வந்திருக்கிறது. ஆன் லைன் கல்வி பற்றிய வழிகாட்டுதல் ஆசிரியர்களுக்குத் தேவையாக இருக்கிறது.

என் மாணவர்களுக்கு பாசிட்டிவ் வழிகளில் எப்படி செல்போனைப் பயன்படுத்தலாம் என்று சொல்லிவருகிறேன். ஒரு தகவல் தேவை என்றால், கூகுளில் தேடலாம் என்ற ஐடியா அவர்களுக்கு வந்திருக்கிறது. பல மாணவர்களுடைய குடும்பத்தில் ஆண்ட்ராய்டு போன்கள் கிடையாது. ஏழைக் குழந்தைகளே அதிகமாக அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இன்னமும் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய்க்காக காத்திருப்பவர்களே அதிகம்.
எதிர்காலத்தில் பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டால், காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறைகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை ஆன்லைனில் நடத்த முடியும். ஒவ்வொரு மாணவருக்குமே ஆன்லைன் பற்றிய விளக்கம் தேவைப்படுகிறது. பொருளாதார நிலை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக கல்வி வழங்குவதிலும் பிரதான காரணமாக இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

விஜயலட்சுமி
அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர், திருவண்ணாமலை

ஊரடங்கு நேரத்தில், வெளியில் சென்று இணைய மையங்களைப் பயன்படுத்தி கற்கும் வாய்ப்பும் கிடையாது. எனவே ஆன்லைன் மூலம் கற்பித்தல் என்பது 50 சதவீதம் மட்டுமே சாத்தியமானது. என்னைப் பொறுத்தவரை என் வகுப்பு மாணவர்களுக்காக தனித்தனியே வாட்ஸ் ஆப் குழுக்கள் வைத்துள்ளேன். பள்ளியில், வகுப்பில் நடந்த சிறப்பான நிகழ்வுகளை மாணவர்களின் குடும்பத்தினர் பார்க்க வசதியாக அதில் அனுப்பி விடுவேன். பெரிய அளவு வீடியோக்களை பள்ளிக்கென வைத்திருக்கும் யூ டியூப் சானலில் பதிவேற்றம் செய்து, அதன் லிங்க்கை வாட்ஸ் ஆப்பில் பகிர்கிறேன்.

தற்போது மாணவர்களை அலைபேசியில் அழைத்து அன்றைக்குப் படிக்கவேண்டிய பாடங்களைக் கூறிவிட்டு, அவற்றில் ஆன்லைன் மூலம் தேர்வு வைக்கிறேன். நான் Google forms, Hot Potatoes, Proprofs ஆகிய மென்பொருள்களைப் பயன்படுத்தி ஆன்லைன் தேர்வுகளை நடத்துகிறேன். அலைபேசியின் மூலமாக எழுதும் மாணவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் கிடைக்கின்றன. மேலும் மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி தேர்வு வைக்கிறேன். அதற்குரிய விடைகளை அனுப்பி திருத்தச் செய்து மீள்தேர்வும் வைக்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கல்வி மாவட்ட சார்பில் ஆங்கில பாடத்துக்கு ஒரு மதிப்பெண் வினா வங்கி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அவற்றையும் என் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்மில் என் வீடியோக்கள், ஆடியோக்கள், வினாத் தொகுப்புகள் ஆன்லைன் தேர்வுகளை பதிவேற்றம் செய்துவருகிறேன். அதனை கூர்ந்தாய்வுக் குழுவினரின் மதிப்பீட்டுக்குப் பின் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாலமுருகன்
அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர், சென்னை

செல்போன் வழியாகவே பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களில் வழிகாட்டி வருகிறார்கள். தமிழ்ப் பாடங்களையே கூட ஆடியோவில் பேசி மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவருகிறார்கள். சிலர் டெக்ஸ்ட் மெசேஜ் வழியாக அனுப்புகிறார்கள்.

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைக்கப் பட்டுள்ளதால், அரசு கல்வி டிவியில் தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படுகின்றன.

வழக்கமாக கல்வி டிவியில் ஒளிபரப்பான பாடங்கள் பொதிகை, பாலிமர், சஹாரா டிவிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நேரத்தில் அவர்கள் பாடங்களை ஒளிபரப்பி வருகிறார்கள். பொதிகையில் கல்வி நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக சில ஆசிரியர்கள் மொபைல் ஆப் வழியாக பாடங்களை நடத்துகிறார்கள்.

கமலவல்லி
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர், வேதாரண்யம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் எல்லாம் நெட்வொர்க் கிடைக்கும்போதுதான் ஆன்லைன் கல்வி என்பதைப் பற்றி நாம் பேசமுடியும்.

இன்றைய நிலையில், ஆசிரியர்கள் க்யூஆர் கோட், வாட்ஸ்ஆப், பேஸ்புக் என்ற அளவில்தான் தொழில்நுட்ப பயன்பாட்டைப் பெற்றுள்ளார்கள். கிராமங்களில் ஆன்லைன் கல்விக்கு வாய்ப்பில்லை.

ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி இருந்தால், மூன்றுக்குமே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன. வேறுபட்ட குடும்பச் சூழல்களில் வேறுபட்ட பள்ளிகளில் படிக்கிற பிள்ளைகள் ஒருவிதமான தேர்வுகளைத்தான் எதிர்கொள்கிறார்கள். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் கம்ப்யூட்டர் பயிற்சிகளைக்கூட தற்போது நிறுத்தி விட்டார்கள். அரசே பள்ளிகளுக்கு இடையே பாரபட்சம் காட்டும்போது, ஆன்லைன் கல்வியை நடைமுறைப்படுத்த பள்ளிகளில் பல அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

சந்திரா
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தூத்துக்குடி விளாத்திக்குளம்

அருகில் ரெட்டியப்பட்டி என்ற ஊரில் உள்ளது எங்கள் பள்ளி. ஓராசிரியர் பள்ளி. ரொம்பவும் சிரமம். ஒருநாள் விடுப்பு எடுத்தாலும், பலரிடம் பேசி வேறொரு ஆசிரியரை அனுப்பச் சொல்லவேண்டும். 5 வகுப்புகளுக்கும் நான்தான் பாடம் எடுக்கவேண்டும். எந்த வசதியும் கிடையாது. போக்குவரத்து வசதியே இல்லாத ஊர். யாருமே வரமாட்டார்கள். இப்போதுதான் ஒரு ஆசிரியர் டெபுடேஷனில் வந்துள்ளார்.

கம்ப்யூட்டர்கூட கிடையாது. பயோமெட்ரிக் சிஸ்டத்துக்காக லேப்டாப் கொடுத்தார்கள். சொந்த செலவில்தான் நெட் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். என் இணைய வசதியை லேப்டாப்பில் இணைத்தால் இருக்கிற பேலன்ஸ் எல்லாம் காலியாகிவிடும். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் இருந்தால்தான், குழந்தைகளை சிறந்த மாணவர்களாக உருவாக்க முடியும். 23 பாடங்களை ஒரே ஆசிரியர் எப்படி நடத்தமுடியும்.

ஒரு வகுப்புக்கு 90 நிமிடம் வகுப்பு எடுத்தால் பாடங்களைப் புரியவைக்க முடியும். இருபது பிள்ளைகள்தானே ஒரு ஆசிரியர் போதாதா என்று கல்வியாளர்கள் எளிதாகக் கேட்கிறார்கள். குழந்தைகள் பொம்மைகள் கிடையாது. குறைந்தபட்சம் 3 ஆசிரியர்களாவது தொடக்கப்பள்ளிகளுக்கு வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண கல்வியே எட்டாக்கனிதான். கம்ப்யூட்டர்வழி கல்வியே இன்னும் எங்களுக்கு வந்தே சேரவில்லை. ஆன்லைன் வழி கல்வியைப் பற்றி நாங்கள் யோசிக்கவே முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here