கொரோனா வைரஸை விரட்டியடிக்க ஆண்டிவைரஸ் சாஃப்ட்வேர்!

296

-சிரிப்பானந்தா

இன்று உலகளவில் உச்சரிக்கப்படும் ஒரே பெயர் கொரோனா. இதுபற்றிய உண்மைச் செய்திகளுடன் பல வதந்திகளும் பரவி வருகின்றன. பயமுறுத்தல்கள்கூட. உலக அளவில் நிகழ்ந்துவரும் பாதிப்புகளும் மரணங்களும் நம்மை இன்னும் பயத்தில் ஆழ்த்துகின்றன. ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு என்பதெல்லாம் நாம் நம் வாழ்க்கையில் கேள்விப்பட்டதில்லை. இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? அனைவருமே குழம்பி நிற்கிறோம். நம் உடலையும், மனதையும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.

சோஷியல் மீடியாக்கள் அதிகம் புழங்கிவரும் காலகட்டத்தில் அவை நமக்கு ஏற்படுத்தும் மனஅழுத்தம் மிக அதிகம். அதனால் மனதிற்கு துன்பம் தரும் எந்த விஷயத்தையும் பார்க்காமல், கண்டுகொள்ளாமல் செல்வது அவசியமாகிறது. நம் கருத்துக்கு மாற்றுக்கருத்து உடையவர்களின் பக்கங்களுக்குச் செல்லாமலும், நெகட்டிவ் சிந்தனைகள் உள்ள பதிவுகளைப் படிக்காமலும், செய்திகளைக் கேட்காமலும் இருப்பது நமக்கு மிகவும் நல்லது.

இந்த லாக்டவுன் காலத்தை எப்படி செலவழிப்பது? உடல்ரீதியாக நம்மைத் தயார் படுத்திக்கொள்ளலாம். செய்ய நினைத்து காலம் கருதி இயலாமல்போன உடற்பயிற்சிகளை யோகாசனங்களை, தியானத்தை, விளையாட்டுகளைத் தொடரலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சமைத்துச் சாப்பிடலாம்.

நேரத்திற்குச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இது உடலுக்கு.

மனதிற்கு? நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். நல்ல இசையைக் கற்கலாம். கேட்கலாம். வீட்டினருடன் பேசி மகிழலாம். உறவினர்கள் நட்புகளுக்கு ஃபோன் செய்து அவர்களுடைய நலத்தைக் கேட்டு அறியலாம். தியானம் செய்யலாம். உங்களுக்குத் தெரியுமா? நோய் எதிர்ப்புச் சக்திக்கும் மனதிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கோபமுறும், துக்கமுறும், சோகமுறும் மனது நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கிறது. மகிழ்ச்சி அடையும் மனதோ நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாகப் பெறுகிறது. படபடப்பும் பயமுமே நோய்களுக்குக் காரணமாகும்.

மனதை இலகுவாக வைத்துக்கொள்ள நிறைய பயிற்சிகள் உள்ளன. இப்போது ஆன்லைனிலேயே இதெல்லாம் கிடைத்து விடுகிறது. எனக்குத் தெரிந்து பல நிறுவனங்கள் பலவிதமான பயிற்சிகளை ஆன்லைனிலேயே கொடுத்து வருகிறார்கள். சிரிப்பு யோக பயிற்சிகளை நானும் ஆன்லைனிலேயே கொடுத்து வருகிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி நமக்குப் பிடித்த, தேவையான நல்ல விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. கொஞ்சம் முயன்றால், அதுபற்றி நிறைய தகவல்கள்
உங்களுக்குக் கிடைத்துவிடும்.

கடந்த தமிழ்ப் புத்தாண்டிற்கு எங்கள் குடும்பத்தினர் அத்தனை பேரும் வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து அவரவர்களுக்கு பிடித்த தெரிந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டோம். சிலர் பாடினார்கள். சிலர் பட்டிமன்றம் அமைத்தார்கள், சிலர் சமையல் குறிப்பு கொடுத்தார்கள். பலர் மருத்துவக் குறிப்புகள்கூட கொடுத்தார்கள். அதிலேயே பல போட்டிகள் வைத்து பரிசு கொடுக்கப்பட்டது.

வைரஸ் தொற்றுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் மிகவும் நல்லது. உங்களுக்குத் தெரிந்த ஜோக்குகளை பகிர்ந்துகொள்ளலாம்.

படித்தவற்றை தொகுத்து வழங்கலாம். வாய் விட்டுச் சிரிக்க சிரிக்க நோய்விட்டுப் போகும் என்பது நாம் அறிந்தது தானே?

உணவே மருந்து என்பார்கள். பலரும் பல்வேறு உணவு வகைகளை வீட்டில் உள்ளவர்களோடு அளவலாவி அறிந்துகொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகளை சுவையோடு ரசித்து சமைத்துச் சாப்பிட்டால் நோய்த்தொற்றும் வராது. வந்த நோயும் ஓடிவிடும். உங்கள் வீட்டில் வயதான நபர்கள் இருந்தால் அல்லது உறவினர்களில் வயதானவர்கள் யாரேனும் வேறு இடங்களில் இருந்தாலும், அவர்களிடம் பாட்டிவைத்தியம் பெற்று அவற்றை நீங்கள் சோதனை செய்துபார்க்கலாம்.

வீட்டிற்குள்ளேயே விளையாட நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன. கேரம், செஸ், பரமபதம், தாயக்கட்டை, கல்லாங்காய், பல்லாங்குழி, அந்தாக்ஷரி, போன்ற விளையாட்டுகள் மன மகிழ்ச்சியைக் கூட்டுவது மட்டுமல்லாது, நமது உறவுகளையும் பலப்படுத்தும். நம் வீட்டுக் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை அறிய வைக்கவும் ஒரு வாய்ப்பு. நடுவீட்டில் மண்ணைக் கொட்டி கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் விளையாட்டு விளையாடி, அதை வீடியோவில் பகிர்ந்துள்ளார் உறவினர் ஒருவர்.

அருகிலுள்ள ஃபிளாட் ஒன்றில் சிறப்பான போட்டி ஒன்றை வைத்துள்ளார்கள். வெண்டை விதைகளையும் மண் தொட்டியையும் கொடுத்து யார் வீட்டில் முதல்முதலில் பத்து வெண்டைக்காய் மகசூல் ஆகிறதோ, அவர்களுக்குப் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்கள். என் அண்ணன் தம்மிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே கணிதத்தில் போட்டி வைத்து பரிசும் வழங்கிவருகிறார்.

பலவீனங்களை பலமாக மாற்றிக்கொள்பவனே மனிதன். இடுக்கண் வருங்கால் நகுக என்கிறது குறள். இந்த லாக்டவுன் காலத்தை நம் அறிவை, மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை, அமைதியை உணரும் காலமாக மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. மகிழ்ச்சியாக குதித்து ஆடியதால் சனி பகவான் அநுமனைப் பிடிக்கமுடியாமல் ஏமாந்து போனதாகவும், கடவுளாகிய தம் பிதாவோடும் குடும்பத்தினரோடும் சாத்தானின் பல சூழ்ச்சிகளை முறியடித்து ஈடன் கார்டனில் கிறிஸ்து மகிழ்ச்சியோடு வாழ்ந்ததையும் கதைகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

தேவையற்ற விஷயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வராதிருப்போம். உடலையும் மனதையும் சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்போம். ஊரடங்கை சிறை வாழ்க்கையாக மாற்றிக்கொள்வதும் சொர்க்கமாக்கிக் கொள்வதும் நம் கைகளில்தான் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here