எதிர்காலம் நிறைந்த ஆக்சுவேரியல் சயின்ஸ்!

228

-சுந்தரபுத்தன்

நீங்கள் எண்களுடன் விளையாடுவதையும், தரவுகளை (டேட்டா) பகுப்பாய்வு செய்வதையும் புள்ளிவிவரங்களை விளக்குவதையும் விரும்புபவராகவும், அதையே லட்சியமாகக் கொண்டவராகவும் இருந்தால், உங்களுக்கு ஆக்சுவேரியல் சயின்ஸ் துறை சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். அது வெற்றிகரமான தொழிலாகவும் சிறந்த ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் அமையும். இன்றைய நிலையில் ஆக்சுவேரியல் சயின்ஸ் என்பது அதிகம் சம்பாதிக்கும் துறைகளில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது.

காப்பீடு, நிதி மற்றும் பிற தொழில்களில் உள்ள பிரச்சினைகளை மதிப்பிடுவதற்கு கணித மற்றும் புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்தும் துறையே ஆக்சுவேரியல் சயின்ஸ். பகுப்பாய்வு, கணக்கீடு, தர்க்கம் மற்றும் தரவுகள் பற்றியதாக ஆக்சுவேரியல் சயின்ஸ் உள்ளது. காப்பீட்டுக் கொள்கைகளை வடிவமைப்பதில் இருந்து வணிகச் சிக்கல்களைத் தீர்ப்பது வரை அத்துறை நிபுணர்களுக்கு வரவேற்பு அதிகம்.

பல்வேறு துறைகளில் முக்கியமாக காப்பீடு, வணிகம் மற்றும் நிதித்துறையில் தென்படும் சிக்கல்களை அறிவியல்பூர்வமாக மதிப்பிடுவதற்கு ஆக்சுவேரியல் சயின்ஸ் படிப்பு உங்களைத் தயார்ப்படுத்துகிறது எந்தவொரு நிறுவனத்திற்கும் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ரிஸ்க் அசெஸ்மெண்ட் ஆகியவற்றின் முக்கியமான அங்கமாக ஆக்சுவேரியல் நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள்.

பலதரப்பட்ட புள்ளி விவரம், கணித மற்றும் கணக்கீட்டு முறைகளைப் பயன் படுத்தி அவர்கள் மதிப்பீடுகளை வழங்குகின்றனர். பொது காப்பீட்டு வணிகத்தில் கொள்கைகளை வடிவமைத்தல் மற்றும் விலை நிர்ணயம் செய்தல், நிதியைக் கண்காணித்தல், பொருந்தக் கூடிய இடங்களில் நியாயமான போனஸ் விகிதத்தைப் பரிந்துரைத்தல், காப்பீட்டு அபாயங்கள், லாப இழப்புகள், சட்ட சாத்தியங்களை அலசுதல் போன்றவை ஆக்சுவேரியல் சயின்ஸ் நிபுணர்களின் பணிகளாகவும் பொறுப்புகளாகவும் உள்ளன. இத்துறையில் பயிற்சி பெற்றவர்களாக, நிதித்துறைச் சிக்கல்களின் விளைவுகளை ஆராயும் தொழில் வல்லுநர்களாகவும் அவர்கள் திகழ்கிறார்கள்.

என்ன செய்கிறார்கள்?

உங்களிடம் கார் இருந்தால், வாகன காப்பீடும் இருக்கும். உங்கள் வயது என்ன? வாகனத்தை வாங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? ஒவ்வொரு ஆண்டு உயரும்போதும் வாகனத்தின் மதிப்பு குறைகிறது? பெட்ரோல் விலை உயர்ந்து வருவது வாகனத்தின் பயன்பாட்டை எவ்வாறு பாதிக்கிறது? திருடர்களிடம் எந்த அளவுக்கு அறிமுகமாகியுள்ளது. பழுதுபார்க்கும் செலவு போன்ற அனைத்து காரணிகளையும் அலசி ஆராய்பவராக ஆக்சுவேரியல் நிபுணர் இருக்கிறார்.

வணிக ரீதியான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பலவகைப்பட்ட டேட்டாக்களை அவர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள். நிச்சயமற்ற மற்றும் விரும்பத்தகாத எதிர்கால நிகழ்வுகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள
சிறந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு ஆக்சுவேரியல் சயின்ஸ் படித்தவர்கள் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளனர். எந்தத் துறையில் ரிஸ்க் இருந்தாலும், அங்கே ஆக்சுவேரியல் சயின்ஸ் தேவைப்படும்.

அதாவது வங்கித்துறை, காப்பீடு, ஹெல்த்கேர் மற்றும் நிதி தொடர்பில்லாத துறைகளிலும் அவசியமானது.

ஒரு சிக்கலைப் புரிந்துகொள்ள டேட்டாவை ஆராயும் அவர்களுடைய திறன் காப்பீட்டுத் துறையில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இன்சூரன்ஸ் கொள்கைகளுக்குப் பின்னால், ஆக்சுவேரியல் நிபுணர்கள்தான் உள்ளனர். புள்ளிவிவரங்கள், உண்மை நிலவரம் மற்றும் நடப்புகளைப் பற்றி அலசி பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வகுப்பதற்கு உதவுகிறார்கள்.

பொறுப்புகள்

நிதிக்கொள்கைளை வடிவமைத்தல் மற்றும் நிறுவனத்தில் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்று கண்காணித்தல், இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான வட்டியை நிர்ணயித்தல், காப்பீட்டில் நஷ்டங்களைக் குறைத்தல், பல தரப்பினரிடமும் ஏற்படும் இதயக்கோளாறு, புற்றுநோய் போன்ற பல நோய்களைக் கணித்தும், சிக்கல்களை ஆராய்ந்தும் பாலிசிகளை வடிவமைத்தல், நிதித்துறை சார்ந்த திட்டமிடலில் பிரச்சினைகளை மதிப்பிடுதல் போன்ற பொறுப்புகளை ஆக்சுவேரியல் நிபுணத்துவம் வாய்ந்த பட்டதாரிகள் கவனிக்கிறார்கள்.

லை­ஃப் இன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், ரீஇன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஓய்வூதிய நிதி, ஆலோசனை, முதலீடுகள், அரசுத்துறைகள், கல்வி நிலையங்கள், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் போன்ற துறைகளில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. தயாரிப்பு விலை நிர்ணயம், நிதி வடிவமைப்பு, மதிப்பீடுகள், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ஆய்வுகள், சமூக பாதுகாப்புத் திட்டங்களை வடிவமைத்தல், வசூலிக்கப்பட வேண்டிய பிரீமியம் தொடர்பான ஆலோசனைகள் என ஒவ்வொரு துறைகளிலும் அவர்களுடைய பணிகள் மாறுபட்டவை.

தேர்வும் படிப்பும்

ஆக்சுவேரியல் துறையில் பணியாற்றுவதற்கு எப்படி தயாராக வேண்டும்? என்ற கேள்வி எழலாம். தி இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்சுவேரிஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான சில விதிமுறைகளை வகுத்துள்ளது. நீங்கள் ஆக்சுவேரியல் துறையில் நுழைய விரும்பினால், அவர்களால் நடத்தப்படும் ACET (ஆக்சுவேரியல் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்) தேர்வை எழுதவேண்டும்.

பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் மற்றும் கணிதம் அல்லது இயற்பியல், வேதியியல் கணிதம் படித்திருக்கவேண்டும். இது டேட்டா, எண்கள், புள்ளியியல் தொடர்பான துறையாக இருப்பதால் கணிதம் அவசியம். ஆக்சுவேரியல் துறையில் வளர்வதற்கு கணிதமும் புள்ளியியலும் முக்கியமான பாடங்களாக கருதப்படுகின்றன. வணிகவியல் மற்றும் கணிதம் அல்லது அறிவியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவுகள் விரும்பத்தக்கவை.

கணிதம், புள்ளியியல் அல்லது பிகாம் அல்லது ஆக்சுவேரியல் சயின்ஸ் அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகளில முதுநிலை படித்தவர்கள் ஏசிஇடி தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டதாரிகள், சிஏ, சிஎஸ், சிடபிள்யூஏ, எம்பிஏ, எம்சிஏ படித்தவர்களும் ஆக்சுவேரியல் படிப்பில் சேரலாம். ஏசிஇடி தேர்வை எழுத விரும்புவோர் முதலில் ஆக்சுவேரிஸ் இன்ஸ்டிட்யூட்டில் உறுப்பினராகச் சேரவேண்டும். ஆக்சுவேரியல் துறையில் பணியாற்ற தேர்வில் தேர்ச்சி அவசியம். பிளஸ் டூ அல்லது இளநிலை, முதுநிலை படித்தவர்களும் எழுதலாம்.

பிஎஸ்சி, எம்எஸ்சி ஆக்சுவேரியல் சயின்ஸ் முடித்தவர்கள் நேரடியாக அந்த துறையில் பணியாற்றலாம்.
ஆக்சுவேரியல் சயின்ஸ் ஒரு புரொபஷனல் படிப்பு என்பதால், பலகட்டத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும்.

செய்முறைத் தேர்வுகளும் உண்டு. இதற்கு கல்லூரிக்கோ அல்லது வகுப்புகளுக்கோ செல்ல வேண்டியதில்லை. தேர்வு மட்டும் போதும். இரண்டு நிலைகளில் தேர்வானவர்கள் அசோசியேட் என கருதப்படுவார்ள். நான்கு நிலைகளில் தேர்வானவர்கள் ஃபெல்லோ என கருதப்படுவார்கள். பின்னர் உயர்படிப்பு மற்றும் ஆய்வுப்படிப்புகளில் ஈடுபடலாம்.

சில சர்வதேச ஆச்சுவேரியல் சயின்ஸ் அமைப்புகளுடன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்சுவரிஸ் ஆப் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அமைப்புகளில் மூன்று பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், இந்த தேர்வை எழுதவேண்டிய தேவையில்லை.

யுகேவில் உள்ள தி இன்ஸ்டிட்யூட் ஆப் பேகல்டி ஆப் ஆக்சுவரிஸ், கேஷ்வாலிட்டி சொசைட்டி மற்றும் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்சுவரிஸ் ஆப் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அமைப்புகளைப் பரிந்துரை செய்கிறார்கள்.

சிறந்த எதிர்காலம்

நீங்கள் ஆக்சுவேரியல் சயின்ஸ் துறையில் நுழைய விரும்பினால், அது பின்பற்றுவதற்கு எளிதான பாதையல்ல. சில முக்கிய திறன்கள் உங்களுக்கு தேவையாக இருக்கும். எண்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் டேட்டாக்களில் பரிச்சயம் உள்ளவர்களிடம் மிகவும் பிரபலமான ஒரு படிப்பாக ஆக்சுவேரியல் சயின்ஸ் இருக்கிறது. உங்களிடம் சிறந்த திறன்களும் நம்பிக்கையும் இருந்தால் அது சிறந்த எதிர் காலத்தை உருவாக்கும்.

நீங்கள் பல துறைகளில் குறிப்பாக தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றலாம். காப்பீட்டுத் துறையில் அதாவது ஹெல்த் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ், பணியாளர் ஓய்வு மற்றும் ஓய்வூதிய நலன்கள், ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற பிரிவுகளில் பணியாற்ற முடியும்.

இன்சூரன்ஸ் அல்லது ஆக்சுவேரியல் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் எம்பிஏ படித்திருந்தால், காப்பீட்டுத் துறையில் ஏற்படும் சிக்கல்களைக் களையும் திட்டங்களில் சிறப்பாகப் பணியாற்ற முடியும். மேலும் லைஃப் இன்சூரன்ஸ், வரிவிதிப்பு, பணியாளர் நலன்கள், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், முதலீட்டுத் துறைகளில் ஆலோசகராகும் வாய்ப்பிருக்கிறது.

யாருமே அழுத்தமான எண்ணமும் விருப்பமும் இல்லாமல் ஆக்சுவேரியல் சயின்ஸ் பக்கம் செல்வதில்லை. உங்களுக்கு அந்த துறை பொருத்தமானதாக இருக்குமா என்று சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலும், விடா முயற்சியும் குறிக்கோளும் வேண்டும். ஆக்சுவேரியல் தேர்வுகள் என்பவை நீண்ட மற்றும் கடினமான செயல்முறையாக இருக்கும். எனவே நம்பிக்கையுடன் படிப்பைத் தொடர்ந்தால் சாதிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here