-சுந்தரபுத்தன்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் பற்றிய அறிமுகம்
திருநெல்வேலி அபிசேகப்பட்டியில் செயல்படும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் இளநிலை, முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிடும். தொலைநிலைக்கல்வி வழியாக வழங்கப்படும் படிப்புகள் பற்றிப் பார்க்கலாம்.
கல்வித்தகுதி
இளங்கலைப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம், இஸ்லாமிக் படிப்பு, இளநிலை அறிவியலில் கணிதம், இயற்பியல், வேதியியல் உளவியல், யோகா மற்றும் மனவளக்கலை, புள்ளியியல், பி.காம், பிபிஏ, பிலிட் தமிழ் படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கணினிப் பயன்பாட்டியல் பிசிஏ, லேட்டரல் என்ட்ரி பிசிஏ, எம்சிஏ, லேட்டரல் என்ட்ரி எம்சிஏ, முதுநிலை டிப்ளமோ கணினிப் பயன்பாட்டியல் மற்றும் நூலக அறிவியலில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ஜெனரல், மார்க்கெட்டிங், புரொடக்ஷன், நிதி, மனிதவளம், சிஸ்டம் ஆகிய பிரிவுகளில் இரண்டு ஆண்டு எம்பிஏ படிப்புகளும் தொலைநிலைக் கல்வி வழியாக படிக்கலாம்.
தமிழ், வரலாறு, பொருளாதாரம், குற்றவியல் மற்றும் காவல் அறிவியல் சமூகவியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், இஸ்லாமிக் படிப்பு, வணிகவியல் பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்புகளும், கணிதம், இயற்பியல், வேதியியல், உளவியல், யோகா மற்றும் மனவளக்கலை பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை
பிஏ, பிஎஸ்சி, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான தகுதிகள் தனித்தனியாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துப் படிப்புகளுக்கும் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம், நுழைவுத்தேர்வு கட்டணம் உண்டு. பதிவாளர், எம்.எஸ். யுனிவர்சிட்டி என்ற முகவரிக்கு கட்டணத்தை திருநெல்வேலியில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு ஏதாவது ஒரு படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு உண்டு.
கோவிந்தபேரி, சேரன்மகாதேவி, புளியங்குடி திசையன்விளை, பணகுடி, கடையநல்லூர், சங்கரன்கோயில், சாத்தான்குளம், நாகலாபுரம், நாகம்பட்டி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையங்களிலும், அபிசேகப்பட்டி பல்கலைக்கழக வளாகம் மற்றும் நாகர்கோயில் கல்வி மையத்திலும் நேரடி சேர்க்கை நடைபெறும்.
விவரங்களுக்கு: www.msuniv.ac.in