முனைவர் எம். முகமது அப்துல்காதர்
ஒவ்வொரு மாணவரும் பிளஸ் டூ வகுப்புக்குப் பிறகு எடுக்கும் உயர்கல்வி தொடர்பான முடிவுகள்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.
அப்படிப்பட்ட கல்வி பொருளாதாரத்தால் தடைபடலாமா?
இந்த நிலையில், மாணவர்களின உயர்கல்விக்கு உரமாக உள்ள மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சில கல்வி உதவித் தொகைகள் பற்றிய விவரம்…
மத்திய அரசின் கல்வி உதவித்தொகைத் திட்டங்கள்
கல்லூரி மாணவர்களுக்கு
சென்ட்ரல் செக்டார் ஸ்கீம் ஆப் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க பிளஸ் டூ வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் எட்டு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பிறகு உயர்கல்வி பயிலும்போது ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால், தொடர்ந்து 10 ஆயிரம் ரூபாய் பெறலாம்.
சிறுபான்மை மாணவர்களுக்கு
இஸ்லாமியர், கிறிஸ்துவர், ஜெயின் மற்றும் பார்சி சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மைப் பிரிவு மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். உயர்கல்வி பயிலும்போது செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த திட்டத்தில் தொடர்ந்து உதவித்தொகை பெறலாம். மாணவர்கள் முதலில் விண்ணப்பித்து விட்டு பிறகு கல்லூரி மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணம் முழுவதும் மத்திய அரசின் சார்பாக திருப்பியளிக்கப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1600 வரையும், மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 750 வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும்போது மாற்றுத்திறனாளி சான்றிதழ், பெற்றோர் வருமானச் சான்றிதழ், கல்லூரியில் கல்விக்கட்டணம் செலுத்தியதற்கான சான்றிதழ், பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். மாற்றுத் திறனாளி மாணவரின் குறைபாடு 40 சதவீதத்திற்கு மேல் இருக்கவேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் இருக்கவேண்டும்.
அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) சார்பாக பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு சாக்சம் திட்டத்தின் மூலமாக ரூ. 30 ஆயிரம் கல்விக்கட்டணம் செலுத்தப்படுகிறது. அத்துடன் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
விவரங்களுக்கு: www.aicte-india.org
ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு
ராணுவ வீரர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கேந்திரிய சைனிக் போர்டு வழியாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரமும் மாணவிகளுக்கு 2250 ரூபாயும் அவர்கள் படிக்கும் காலம் வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.ksb.gov.in
பிரகதி இலவச பெண் கல்வித் திட்டம்
அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் சார்பாக பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவிகளுக்கு பிரகதி என்ற திட்டத்தின் மூலமாக ரூ. 30 ஆயிரம் உதவித்தொகை வழங்கப் படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் எட்டு லட்சத்துக்குள் இருக்கவேண்டும்.
விவரங்களுக்கு: www.aicte-india.org
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் முழுவதுமாக வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். இத்திட்டம் மூலமாக அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: www.scholarships.gov.in
மாநில அரசின் கல்வி உதவித்தொகைத் திட்டங்கள்
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை. சாதி பாகுபாடின்றியும், குடும்ப வருமானத்தைக் கருத்தில் கொள்ளாமலும் முதல் தலைமுறை மாணவர்களின் கல்லூரிப் படிப்பை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான உறுதிமொழிப் படிவத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் பயின்றால், ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். முதல் தலைமுறை பட்டதாரிக்கான கட்டணத்தை அவர்கள் படிக்கும் கல்லூரியிலே அரசு செலுத்திவிடும். ஒற்றைச் சாளர முறையில் அரசு, அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களும் கல்விக் கட்டணச் சலுகையைப் பெறலாம்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உதவித்தொகை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மைப் பிரிவினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாநில அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.8100 வரையும் மற்ற மாணவ மாணவிகளுக்கு ரூ. 4650 வரையும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்குள் இருக்கவேண்டும்.
ஆதி திராவிடர் நலத்துறை உதவித்தொகை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கும் மாநில அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.13750 வரையும் மற்றவர்களுக்கு ரூ.6600 வரையும் அளிக்கப்படுகிறது.
உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை தமிழக அரசின் வேளாண்மைத் துறை சார்பாக சிறு, குறு விவசாயிகளின் பிள்ளைகள் உயர்கல்வி பயில உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்கள் சிறு, குறு விவசாயிக்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் 17 தொழிலாளர் நலவாரியங்களில் பணிபுரிபவர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அதற்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அந்தந்த நலவாரிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயர்கல்வி பயிலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரூ. 13 ஆயிரம் வரை உதவித்தொகையாக அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
விவரங்களுக்கு: www.sdat.tn.gov.in