சலூன்களே… உஷார்! மக்களே… ஜாக்கிரதை!

19

-ஷானு

சலூன் கடைகளில் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?

ஊரடங்கு தளர்த்தப்பட்டு எல்லோரும் அவரவர் பணிகளுக்கு திரும்பலாம் என்கிற இயல்பு நிலை வரும் நாளில் அனைவரும் பணியிடங்களுக்கு செல்லும் முன் முதலில் போய் நிற்கும் இடம் சலூன் கடைகளாகத்தான் இருக்கும். ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்து முடி திருத்தம் செய்யாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளனர். ஆனால், ஊரடங்கு எப்போது முடியும் என்பது தெரியாத நிலையில் இதற்கு என்னதான் தீர்வு?

கொரோனா தொற்றுள்ளவரிடமிருந்து தும்மல், இருமல் மூலமாக வெளிவரும் எச்சில் மூலமாகவோ, அவர்கள் தொட்ட பொருட்களை தொட்டு, அப்படியே மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளில் வைப்பதன் மூலமாகவோ மற்றவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால்தான், சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவதுடன் தனிமைப்படவும் அறிவுறுத்தப்படுகிறது, உலக சுகாதார மையம்.

இந்நிலையில், அமெரிக்காவில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டும்கூட, அங்கு பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது கொரோனா. அமெரிக்காவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களில் 50 சதவிகிதம் இறப்புக்கு சலூன் கடைகளே பொறுப்பு என அந்நாட்டு சுகாதாரத்துறை தலைவர் ஜே ஆண்டனி தெரிவித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.

இதனால் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரை பலர் தங்கள் மனைவிகளையே முடி திருத்துவோர்களாக மாற்றியிருக்கிறார்கள்; சிலர் அலங்கோலமாக இருந்தாலும் பரவாயில்லை, ஆபத்து இல்லை என்று சுயமாகவே செய்துகொள்கிறார்கள். ஆனால், இப்படி எல்லோராலும் செய்ய முடியுமா? சாத்தியமில்லை. எனவே, சலூன் கடை எப்போது திறக்கும் என எதிர்பார்த்து காத்திருப்பவர்கள்தான் அதிகம்.

சரி, இந்த சூழ்நிலையில் நமது ஊர் சலூன் கடைக்காரர்கள் எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்கள்? அவர்களுடைய பிரச்சனை என்ன என்பது குறித்து திருச்சி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான தர்மலிங்கத்திடம் பேசினோம்.

“தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் முடிதிருத்தும் கடைகள் உள்ளன; அதில் 30 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த தடை உத்தரவால் எல்லா தொழில்களையும்போல இதிலும் எதுவும் செய்ய முடியாமல் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்களுடைய பாதிப்புகளை சொல்லி தமிழக முதலமைச்சருக்கும் 38 மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கும் பல்வேறு மனுக்கள் கொடுத்துள்ளோம்.

அதில் இந்த கடையடைப்பு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு மாதம் 10,000 ரூபாய் தரவேண்டும். வீடு, கடைகளுக்கான வாடகை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும், மின் கட்டணத்தை ரத்து செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம்.

ஊரடங்கு காலத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையிலே நாங்கள் கடையைத் திறந்தால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடையைப் பூட்டி சீல் வைத்து, கைது செய்து வழக்குத் தொடர்ந்துவிட்டார்கள். சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் போடப்பட்ட இந்த வழக்குகள் எங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. அதனால், இந்த வழக்குகளிலிருந்து எங்களை விடுதலை செய்து சீல் வைக்கப்பட்ட கடைகளையும் திறந்து தரவேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.

எங்களுக்கான நலவாரியத்தின் மூலம் ஒரு உறுப்பினருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டாலும் எங்களில் 15 சதவீதம் பேர்தான் வாரியத்தில் உறுப்பினராக உள்ளனர். மற்றவர்களுக்கு அந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் கிராம நிர்வாக அதிகாரி வழியாக கணக்கெடுப்பு நடத்தி உண்மையில் எத்தனை பேர் இந்த கடைகளை நடத்துகிறார்கள், இந்த தொழிலை சார்ந்து இருக்கிறார்கள் என்பதை அறிந்து, எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு எங்களுக்குக் கையுறை, மாஸ்க் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

இந்த கடையடைப்பு தளர்த்தப்படும் போது நாங்கள் எப்படி பாதுகாப்பான முறையில் எங்கள் தொழிலை செய்ய வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல் தரவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் போல நாங்களும் வாடிக்கையாளரின் உடம்பை தொட்டு சேவை செய்பவர்கள். எனவே, எங்களுக்கும் எங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாத வழிவகைகளை அரசு நெறிப்படுத்தித் தரவேண்டும்.

அப்போதுதான் எங்களுக்கும், எங்கள் சேவை கிடைக்காமல், அடையாளம் மாறிப்போய், ஏராளமான ரோமங்கள் வளர்ந்து, அதுவே நோய் பரவ காரணமாக மாறி சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கும் நன்மையாக அமையும்” என்றார்.

அகில இந்திய தோல் மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவரும் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனும் ஆன பாலசுப்ரமணியனிடம், சலூன்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டோம்.

“இந்த வைரஸ் தாக்குதல் குறைந்து மீண்டும் முடி திருத்தகம் திறக்கப்பட்டால்கூட, மற்ற எந்த தொழிலையும்விட முடி திருத்துபவர் – முகச் சவரம் செய்பவர், வாடிக்கையாளரை மிக மிக அபாயகரமான அளவில் நெருங்கித்தான் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. அப்படி நெருங்கி செய்யும்பொழுது எல்லோரையும் பாதுகாக்கும் விதத்தில் ஏப்ரன், மாஸ்க், தலைக்கவசம், கைகளுக்கு கிளவுஸ் அணிந்துகொள்ள வேண்டும்.

பத்து ரூபாய்க்கு மாஸ்க், 15 ரூபாய்க்கு கிளவுஸ் கிடைக்கிறது. கூடவே ஒரு வாடிக்கையாளர் உள்ளே வந்ததும் சானிடைசர் மூலம் அவரை சுத்தம் செய்ய வேண்டும். கைகள் முகத்திற்கு சோப்பு பயன்படுத்த சொல்லவேண்டும். ஒரு வாடிக்கையாளர் வந்துபோன பின் ஏப்ரன், மாஸ்க், தலைக்கவசம், கிளவுஸ் அனைத்தையும் டிஸ்போஸ் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் வந்தவுடன் அவரது உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கிறதா தும்மல், இருமல், மூச்சு, சுவாச பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை பார்த்து அவரை உள்ளே அனுமதிக்க வேண்டும்.

ஒருவரை கடைக்கு உள்ளே அனுமதிப்பது அல்லது உள்ளே வரக்கூடாது என்று சொல்வது என்கிற உரிமையை முடிதிருத்தும் கடை உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டும். பெரிய கடை உள்ளவர்கள் குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளியில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கலாம். அப்படி பெரிய கடை இல்லாதவர்கள் கடைக்கு வெளியே திறந்த வெளியில் மரத்தடியில் நாற்காலி வைத்து சவரம் செய்வது தனிமனித இடைவெளியைப் பராமரிக்கவும் நோய்த்தொற்றைத் தடுக்கவும் உதவும்.

முன்பெல்லாம் சலூனுக்கு வந்துவிட்டு வீட்டுக்குப் போனால்தான் குளிப்பார்கள். இப்போது சலூனுக்கு வரும் முன்னரும் தலை முதல் கால் வரை நன்கு குளித்துவிட்டு வர வேண்டும். சவரம் செய்துகொண்டு முடி திருத்திக் கொண்டு வீட்டுக்கு சென்ற பின்னரும் தலை முதல் கால் வரை நன்கு குளிக்க வேண்டும். உடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தித் துவைத்து காய வைக்க வேண்டும். கடைக்கு வரும் முன் குளிப்பது நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமலிருக்க… கடைக்கு வந்துவிட்டு போன பின் குளிப்பது மற்றவர்களிடமிருந்து நமக்கு தொற்று ஏற்படாமல் இருக்க…

கைகளுக்கு முகத்துக்கு சானிடைசர் பயன்படுத்தினால் ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு. அவர்கள் ஒடிகொலோன் பயன்படுத்தலாம். இப்படி ஒருவருக்கு சவரம் செய்து முடித்ததும் அல்லது முடி திருத்தி முடித்ததும் அந்த கத்தரி, சவரக்கத்தி, சீப்பு, உள்ளிட்டவற்றை ஹைப்போ குளோரைட் அல்லது ஒன்று முதல் இரண்டு சதவீதம் லைஸால் கலக்கப்பட்ட தண்ணீரில் ஊற வைத்துத்தான் அடுத்த வாடிக்கை யாளருக்கு பயன்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு செலவுகள் கொஞ்சம் கூடுதலாகத்தான் ஆகும். ஆனால், கொரோனா குறித்து பயம் இருந்தால், உயிர் மீது ஆசை இருந்தால் இந்த கூடுதல் செலவை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்படி செய்தால்தான் முடி திருத்தும் பணி 100 சதவிகிதம் பாதுகாப்பானதாக இருக்கும்.
இப்போது இளைஞர்கள் பெரும் பாலும் தாடி வைத்துக் கொள்வதை தங்களது ஃபேஷன், ஸ்டைலாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சினை இல்லை. பல்வேறு துறை களில் பணிபுரியக் கூடியவர்கள் தினமும் முகச்சவரம் செய்ய வேண்டும் என்கிற நிலையில் உள்ளவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி போல் மனைவி கையால் செய்துகொள்ளலாம். அதைவிட சொந்தமாக செல்ஃப் ஷேவிங் செய்ய கற்றுக்கொள்வது மிக மிக நன்று” என்றார் எச்சரிக்கும் குரலில்.

ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலர் வீட்டிலேயே சிகை அலங்காரம் செய்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பான அவர்கள் அனுபவப் பகிர்வு இங்கே…

விராத் கோலி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி – நடிகை அனுஷ்கா ஷர்மா இணையர் நிற்பது, நடப்பது, பறப்பது என எதை ட்வீட் செய்தாலும் லைக்ஸ் மழை பொழியும். தற்போது ஊரடங்கினால் மும்பையில் உள்ள தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் கூண்டு கிளிகளாக மாறியுள்ளனர். ‘ஊரடங்கு நாட்களுக்கிடையே’ என தனது கணவர் கோலிக்கு முடி திருத்தும் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் அனுஷ்கா ஷர்மா.
“இதுமாதிரியான விஷமத்தனமான பரீட்சைகள் எல்லாம் ஊரடங்கினால்தான் அரங்கேறியுள்ளது. சமையலறை கத்திரியை கொண்டு அழகாகவும் அற்புதமாகவும் முடியை கத்தரித்து விட்டுள்ளார் என் மனைவி” என அந்த வீடியோவில் சொல்கிறார் கேப்டன் கோலி.

சச்சின் டெண்டுல்கர், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்
‘கிரிக்கெட்டின் கடவுள்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சச்சின் தன் ட்விட்டர் பக்கத்தில் “கிரிக்கெட்டில் அப்பர் கட், ஸ்கொயர் கட் விளையாடிய பழகிய நான் முதல்முறையாக என தலைமுடியைக் கட் செய்து கொண்டுள்ளேன். இந்த அனுபவம் புதிதாக உள்ளது. நாம் அனைவரும் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதோடு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்திலிருந்து விலக்கிப் பார்க்கக் கூடாது” என அறிவுரையும் சொல்லியுள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய உணவுத் துறை அமைச்சர்
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் நடிகருமான சிராக் பாஸ்வான் தனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வானுக்கு தலை முடியையும் தாடியையும் திருத்தி விட்டுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள அவர், “இந்த ஊரடங்கு நாட்கள் மிக கடினமான நாட்களாகும். இருந்தாலும் பிரகாசமான எதிர்காலம் நமக்காகக் காத்துள்ளன என்பதை கவனத்தில் கொள்வோம். எனக்கே தெரியாமல் எனக்குள் புதைந்துள்ள கலைகளில் இதுவும் ஒன்று. கொரோனாவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றாகி வீட்டிலிருந்து போரிட்டு வெல்வோம்” என்று கூறியுள்ளார்.

மலாலா, பெண் உரிமை போராளி
பாகிஸ்தானை சேர்ந்த பெண் உரிமை போராளி மலாலாவை எல்லோருக்கும் நினைவிருக்கும். சிறு வயதிலிருந்தே தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தற்போது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அவர் ஊரடங்கினால் வீட்டிலேயே தனித்துள்ளார். “புதுவிதமான தோற்றத்திற்காக நானே என் முடியை ‘பிரிஞ்ச் கட்’ ஸ்டைலில் அழகாக திருத்திக் கொண்டுள்ளேன்” என சொல்லி படத்தையும் பகிர்ந்துள்ளார் மலாலா.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, நட்சத்திர கால்பந்து வீரர்
போர்ச்சுகல் காலந்தாட்ட அணியின் கேப்டனும், உலகளவில் நம்பர் 1 நட்சத்திர கால்பந்தாட்ட வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தைப் போலவே அவரது ஹார்ஸ்டைலும் உலகமகா பிரபலம். அவரது ஸ்டைலுக்காகவே பல ரசிகர்கள் மைதானத்தில் கூடுவதுண்டு. ஊரடங்கினால் தற்போது வீட்டிலேயே உள்ள ரொனால்டோவுக்கு முடியைத் திருத்தி விட்டுள்ளார் அவரது காதல் மனைவி ஜார்ஜினா. அதை அப்படியே படம் பிடித்து தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதோடு, “வீட்டிலேயே இருப்போம், ஸ்டைலாக இருப்போம்” என மெசேஜை தட்டிவிட்டுள்ளார் ரொனால்டோ.

– எல்லுச்சாமி கார்த்திக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here