முதற்கட்ட ஊரடங்கில் அடங்கியதா கொரோனா?

159

-ஜஸ்டின் துரை

முதற்கட்ட 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்து, இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சரி, முதற்கட்ட ஊரடங்கால் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளதா?

ஊரடங்குக்கு முன், கொரொனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 60ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 17ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. கடைசி ஒரு வாரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக 90 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள போதிலும் வாரத்துக்கு 100 சதவீதம் என்ற அளவில் கொரோனா உயர்ந்துகொண்டே வருவது எப்படி? கொரோனா தொற்று பரவல் எப்போதுதான் முடிவுக்கு வரும்? மருத்துவத் துறை நிபுணர்கள் பேசினோம்.

நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது!
சென்பாலன், மருத்துவர்

மார்ச் 24ம் தேதி வரை இந்தியாவில் 536 கொரொனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டிருந்தனர். உலக நாடுகளின் வரிசையில் பார்த்தால் அப்போது இந்தியாவை விடப் பல நாடுகள் அதிக நோயாளிகளைக் கொண்டிருந்தன. 536 என்பது ஒப்பீட்டளவில் குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும், இந்தியாவில் நோய் பரவக் கூடிய வாய்ப்புகளை நோக்கும் போது, நோயைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்பட்டது.

‘காண்டாக்ட் டிரேசிங்’ எனப்படும் தொற்று உடையவர்களின் தொடர்பாளர்களை தனிமைப்படுத்தி சோதிக்கும் முறை இந்தியா போன்ற தேசங்களில் பலனளிக்கவில்லை. இந்நிலையில்தான் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மார்ச் 24ல் தொடங்கப்பட்ட ஊரடங்கு இப்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

21 நாட்கள் முதற்கட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்தபோது மொத்தம் 11,487 கொரொனா தொற்றுகள் கண்டறியப்பட்டிருந்தன. இந்த ஊரடங்கின் விளைவை இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையேயும், பிறநாடுகளுடனும், ஒப்பிட்டுப்பார்த்தால் அதன் பயன்களை நம்மால் அறிய முடிகிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகவில்லை. ஊரடங்கின் போது, நோயாளிகள் இரட்டிப்பாகும் கால அளவும் மூன்று நாட்களிலிருந்து ஆறு நாட்களாக அதிகரித்து உள்ளது. நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது.

அதேபோல இந்தியாவிற்குள்ளும் ஊரடங்கை முழுமையாக செயல்படுத்திய கேரளாவில் நோயின் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அதேநேரம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதில் திணறிய மத்தியப்பிரதேசத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை ஊரடங்கு காலத்தில் 7இல் இருந்து 741 ஆக உயர்ந்தது.

இவற்றிலிருந்து நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென பெருமளவு உயர்வது ஊரடங்கால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நம்மால் அறிய முடிகிறது. ஒரு கொள்ளை நோயாகப் பரவுவதை ஊரடங்கு நடைமுறை தாமதப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில்தான் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவிலிருந்து கொரொனா கிருமியை, ஊரடங்கு நடைமுறை மட்டுமே வெளியேற்றிவிடாது. சில மாநிலங்களில் கட்டுக்குள் வந்தாலும் ஊரடங்கிற்குப் பின்னும் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் இந்த காலகட்டத்தில் இந்தியாவை விட மிகச்சிறப்பாக நோயைக் கட்டுப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அறிகுறி இல்லாத நோய்தொற்றைக் கண்டறிவதிலும் நாம் பின்தங்கியே உள்ளோம். நோய்க்கான சோதனைகள் செய்வதில் வளர்ந்த நாடுகளைவிட நாம் குறைவாக இருப்பதால், கண்டறியப்படாத நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இரண்டாம் கட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரும் தினமும் புதிதாக நோயாளிகள் கண்டறியப்படுவது இதை உறுதிப்படுத்துகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், ஊரடங்கை தளர்த்தினால் நோய் பெருமளவு பரவும் ஆபத்து இருக்கிறது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

முதல் கட்ட ஊரடங்கின் பலனாக கொரொனா பெரும் கொள்ளை நோயாக பரவுவதை நாம் சற்று தள்ளி வைத்துள்ளதைக் கூறலாம். அதேசமயம் நோய் பரவலை முற்றிலுமாகத் தடுக்க இயலாததை ஊரடங்கின் குறைபாடாகக் கொள்ளலாம்.

சமூகப் பரவலுக்கு இந்தியா வந்துவிட்டது!
அன்புச்செல்வன், மருத்துவ ஆராய்ச்சியாளர், இங்கிலாந்து ஹல் பல்கலைக்கழகம்

மேற்குலக நாடுகளைவிட, சற்று விரைவாகவே இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக 21 நாள்கள் நிறைவடைந்து இப்போது நீட்டிக்கவும் பட்டிருக்கிறது.

ஊரடங்கால் ஏற்பட்ட நன்மைகளாக, பெரிய மாநகரங்கள் முதல் பட்டிதொட்டி வரையுள்ள மக்களுக்கும் கொரோனா வைரஸ் பற்றிய எச்சரிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் வைரஸ் நமக்கெல்லாம் வராது என்று நினைத்துக் கொண்டிருந்த பலரும் ஊரடங்கின் மூலமும் அரசுகளின் தொடர் வலியுறுத்தல்கள் மூலமும் இது உயிர்க்கொல்லி நோய் என்றும் உணர்ந்திருக்கின்றனர். இவைதான் இன்றைய தேவையும்கூட.

இத்தாலியிலும் இங்கிலாந்திலும் கொரோனா பரவத்தொடங்கிய நாள்களில், ஊரடங்கு நடைமுறைப்படுத்தத் தாமதமானதால், போதிய எச்சரிக்கையுணர்வோ, சமூக விலகலோ பொதுமக்களால் பின்பற்றப்படவில்லை. இதன்விளைவாக அந்நாடுகள் இப்போது மிகப்பெரும் விலையை கொடுத்து வருகின்றன.

இன்றுவரை ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தாத அமெரிக்காவில் கொரோனா பரவல் வேகம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதை உலகறியும். சுமார் 130 கோடி மக்கள்தொகையுடைய இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் இன்றைய நிலையில் இது குறைவானதுதான்.

இந்திய அளவில் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் தொடக்க நிலையிலேயே கொரோனாவினால் பாதிக்கப்படுவர் என்று யூகிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால்தான், நோய்த்தொற்றும் பலி எண்ணிக்கையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கின்றன.

அதேநேரம், முதற்கட்ட ஊரடங்கில் 21 நாள்கள் கழிந்தபிறகும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக உயர்ந்துவருவது, கொரோனா பரவலில் மூன்றாம் நிலையான சமூகப்பரவலுக்கு இந்தியா வந்துவிட்டதை உணர்த்துகிறது. அதாவது, ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அதேவேளையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நோயின் தோற்றுவாய் எதுவென்று சரியாக அறுதியிடப்படவில்லை.

ஆரம்பக்கட்ட கொரோனா சோதனைகளை விரைவு சோதனைக் கருவிகளின் மூலம் நாடு முழுவதும் செய்து நோய்த் தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தாலொழிய சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது.

உலகெங்கிலும் சுமார் 25 வகையான தடுப்பு மருந்துகளை முன்னெடுத்து ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசிகள் தயாராகி விடுமென்று இங்கிலாந்து ஆக்ஸ்பார்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் குழுக்கள் உறுதியளித்திருப்பது சற்று ஆறுதலைத் தந்தாலும், நாமும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே இடைப்பட்ட காலத்தில் தொற்றிலிருந்து தப்பமுடியும்.

மூன்று மாதங்கள் தொடரும்!
ஃபரூக் அப்துல்லா, பொதுநல மருத்துவர்

இந்தியாவில் ‘லாக்டவுன்’ ஆரம்பித்த வாரங்களில் நோய் தொற்றாளர்கள் இரட்டிப்பாகும் காலம் 4 நாட்கள் என்ற நிலையிலிருந்தது. அதாவது ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டு வந்தது. தற்போதைய சூழலில் நோய் தொற்றாளர்கள் இரட்டிப்பு காலம் 6 நாட்களாக கூடியுள்ளது. நோய் தொற்றாளர்கள் இரட்டிப்பாகும் காலத்தை நீட்டிப்பது என்பது லாக்டவுன் செய்யும் நன்மையாகும். அதேபோல் தமிழகத்தின் நோய் தொற்று இரட்டிப்பு காலம் இந்திய சராசரியான ஆறு நாட்களுக்கும் மேல் இருப்பது ஆரோக்கியமானது.

பொதுவாக கொள்ளை நோயின் மூலம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க இரண்டு யுக்திகள் இருக்கின்றன. ஒன்று தொற்றுள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சையளிப்பது, மற்றொன்று பொது முடக்க நிலை. இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகையும் அடர்த்தியும் உள்நாட்டு மக்கள் நகர்வுகளையும் கொண்ட நாட்டில் ஒரு அச்சுறுத்தும் கொள்ளை நோய் பரவுமானால் இவ்விரண்டு யுக்திகளை மாறி மாறி செய்து கொண்டே செல்வதுதான் சரி.

இப்போது ஊரடங்கில் நாம் வீடுகளுக்குள் இருக்கும் போது வெளியே நோயைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடக்கிறது. எனவே, கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து நாம் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னெடுக்க வேண்டியிருக்கும், அதுவரை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மிக அவசியம். அனைவரையும் துணி மாஸ்க் அணியச்சொல்வது என்பது சிறந்த யுக்தி. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்று கடத்தப்படுவதை தடுக்கும்.

கொரோனா அனைவரையும் கொன்று குவிக்கும் நோய் அல்ல. எனவே, கொரோனாவைக் கண்டு பீதி கொள்ளத் தேவையில்லை. கொரோனாவின் மரணம் உண்டாக்கும் விகிதம் என்பது நூற்றுக்கு ஐந்து என்ற நிலையில் இருக்கிறது. அந்த ஐந்து பேரில் நால்வர் 60 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்கள், அதிலும் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய் போன்றவற்றை முறையாக கட்டுக்குள் வைக்காதவர்களுக்கே அதிக மரணம் நடக்கிறது. தமிழகத்தில் மரண உண்டாக்கும் விகிதம் ஒரு சதவிகிதம் என்ற நிலையில் இருக்கிறது.

தடுப்பூசி எப்போது வரும்?
அரவிந்த் ராஜ், மருத்துவர்

முதலில் வைரஸ்களின் தன்மை பற்றி பார்ப்போம்… மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றிய கண்ணுக்குத் தெரியாத உயிர்தான் வைரஸ். நாம எப்படி கற்காலத்திலிருந்து கூகுள் காலத்திற்கேற்றவாறு தகவமைத்துக்கொண்டு வளர்ந்தோமோ, அதேபோல் வைரஸும் பல்வேறு தகவமைப்பை மேற்கொண்டு வளர்ச்சி பெறுகிறது.

வைரஸின் மரபணுவில் டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. எதுவேண்டுமென்றாலும் இருக்கும். கொரோனா ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ். இது டி.என்.ஏ. கிருமிகளை விட கொஞ்சம் சவாலானது. டி.என்.ஏ. வைரஸ் தன்னுடைய உருவ அமைப்பு மற்றும் மரபணு செயல்பாட்டை பெரிதாக மாற்றிக்கொள்ளாது. ஆனால், ஆர்.என்.ஏ. வைரஸ் அப்படி இல்லை. அடிக்கடி தன்னுடைய மரபணு செயல்பாடு, உருவம், அதிலுள்ள புரதம் என்று எல்லாவற்றையும் கண்டபடி மாற்றிக்கொள்ளும். இதை மருத்துவத்தில் ‘Mutation’ (பிறழ்வு) என்று கூறுவோம். கிட்டத்தட்ட மாறுவேஷத்தில் சுற்றுகிற கதைதான்.

DNA Proofreading என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது, மரபணு செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் நிகழும் சூழல் ஏற்பட்டால் அது நிகழாத வண்ணம் ஒரே நிலையில் மாறாமல் இருப்பதுதான் Prooofreading. இந்த குணாதிசயம் பல டி.என்.ஏ. வைரஸ்களுக்கு உண்டு. ஆனால், அந்த குணம் ஆர்.என்.ஏ. வைரஸ்களுக்கு இல்லை. அதனால் தனக்குள் எந்த மாறுதல் நிகழ்ந்தாலும் அது கண்டுகொள்ளாமல் பிறழ்வாகி மாறிக்கொண்டே இருக்கும். ஆகவேதான், ஆர்.என்.ஏ. வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது சற்று சவாலான விஷயமாக உள்ளது.

ஒரு முறை வைரஸ் தாக்கினால் அது அடுத்த முறை தாக்கும் பொழுது அதே குணாதிசயங்கள் கொண்டிருக்கும் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அது பிறழ்வாகி மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு புதிய விதமாக தாக்கும்.

இனி, தடுப்பூசி பற்றி பார்ப்போம்… நோயை உண்டாக்கும் வைரஸ் நம் உடலை தாக்கும் முன்பாகவே, நாம் அதே வைரஸின் நோய் தாக்கும் திறனை நீக்கிவிட்டு, ஆய்வகங்களில் அவற்றை மேலும் சில மாறுதல்களுக்கு உட்படுத்தி பாதுகாப்பான ‘வலுவிழந்த வைரஸ்’ கிருமியை உடலில் செலுத்துவோம். இப்போது உடலில் செலுத்திய வலுவிழந்த வைரஸ் நோயை உண்டாக்காது. ஆனால், உடலில் ஏதோ ஒரு அந்நிய சக்தி வந்துவிட்டதே என்று நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அதை கண்டறிந்து அதற்கு எதிராக போரிட வெள்ளை அணுக்களை கட்டளையிடும். வைரஸுக்கு எதிராக போரிடும் எதிர்ப்பு சக்தியை நாம் பெற்றுவிடுவோம்.

ஒருமுறை வைரஸ் நமது உடலை தாக்கியதால் அந்த வைரஸ் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு ஞாபகத்தில் வைக்கப்படும். இதை ‘Cognition’ (அறியும் ஆற்றல்) என்று கூறுவோம். ஒருவேளை, சிறிது நாட்கள் கழித்து நோயை உண்டாக்கும் வைரஸ் தாக்கினால், நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி, ஞாபக சக்தி ஆகிய இரண்டையும் ஏற்கனவே பெற்றுவிட்டதால் வைரஸை எளிதில் கண்டறிந்து போரிட்டு வெற்றி பெறும். இதுதான் தடுப்பூசியின் வேலை.

தடுப்பூசி போட்ட சில வருடங்களில், அந்த குறிப்பிட்ட வைரஸுக்கு எதிராக உடலில் உருவான Cognition குறையும். நோய் எதிர்ப்பு திறன் மங்கும். இவை மீண்டும் வலுப்பெற ‘பூஸ்டர் டோஸ்’ என்று அழைக்கப்படும் கூடுதல் நோய்த் தடுப்பூசி போடப்படும்.

மேலும், பிறழ்வு காரணமாக வைரஸ் கிருமிகள் சில வருட இடைவெளிகளில் தன்னைத்தானே மாறுதல்களுக்கு உட்படுத்திக்கொண்டு மாறு வேடமணிந்து தாக்கும். உதாரணம் இன்ப்ளூயன்சா. மாறுபட்ட வைரஸின் கிருமித்தொற்றை எதிர்க்க சிறிது மாற்றம் செய்யப்பட்ட தடுப்பூசிகள் சீரான இடைவெளியில் தரப்படுகின்றன.

ஆர்.என்.ஏ. மரபணுக்களை கொண்ட இந்த கொரோனா வைரஸ் தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்த சிக்கல் இருப்பதால்தான் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் காலதாமதமாகியுள்ளது. எனினும், விரைவில் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக்கையான தகவல்கள் வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தாலும் பலருக்கு இந்த கிருமித் தொற்று தாக்கும். ஏனென்றால், இது வீரியம் மிகுந்த வைரஸ். எனவே, அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

மனித இனத்தை சுமார் 2700 ஆண்டுகளாக வதைத்து 300 மில்லியன் மக்களின் உயிரை பறித்த பெரியம்மை நோய்க்கு 1796-ல்தான் ‘எட்வர்ட் ஜென்னர்’ தடுப்பூசி கண்டுபிடித்து பெரியம்மையை உலகை விட்டே விரட்டினார்.

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறிய நாம் அத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதிருக்காது. அறிவியல் வேகமாக முன்னேறி வருகிறது. கண்டுபிடிப்புகளும் மிக வேகமாக நிகழும். இன்னும் சில மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும். அதற்கு முன்பே, ஒருவேளை கொரோனா வைரஸ் தன்னை மாறுதல்களுக்கு உட்படுத்திக்கொண்டு வீரியம் குறைந்த வைரஸாக பிறழ்வு அடைந்து தலைமறைவாகவும் வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here