கடமை கனிவு கருணை!

276

-பூ.சர்பனா

கொரோனா பேரிடரில் நெகிழவைக்கும் காவல்துறை அதிகாரிகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க மருத்துவ துறையினர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வருமுன் காக்க மக்களுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். அதிலும் சில நாயகர்கள் நாட்டையே திரும்பி செய்திருக்கிறார்கள். சரவணன் ஐ.பி.எஸ்., வருண்குமார் ஐ.பி.எஸ்., அரவிந்தன் ஐ.பி.எஸ். ஆகிய மூன்று அதிகாரிகள் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

விலங்குகளுக்கும் கரிசனம்!
சரவணன் ஐ.பி.எஸ்.

திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையராக இருப்பவர் சரவணன் ஐ.பி.எஸ். கொரோனா ஊரடங்குச் சூழலில் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களின் மூலம் கோரிக்கை வைக்கும் மக்களுக்கு தேடித் தேடிச்சென்று உதவி வருகிறார்.

குறிப்பாக, உணவு வேண்டும் என்று பசித்திருப்பவர்களுக்கு உணவுகளை ஏற்பாடு செய்வது, வெளியில் வரமுடியாமல் மருந்து வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு மாத்திரை மருந்துகளை வாங்கிக்கொடுப்பது, வீட்டிற்கு காய்கறிகள், மளிகைப்பொருட்களை அனுப்பிவைப்பது என பல்வேறு உதவிகளை செய்து பாராட்டுகளைக் குவித்துவருகிறார். ஊரடங்கு சூழலில் மக்கள் நடமாட்டத்தை தடுத்து கொரோனா வராமல் பாதுகாக்க ‘ஸ்மார்ட் காப்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.

மக்கள்நல செயல்பாடுகளுக்காக ‘காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக உங்களது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளது’ என்று சரவணன் ஐ.பி.எஸ்ஸை சமீபத்தில் பாராட்டியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உதவிகளை செய்துவருகிறார் சரவணன் ஐ.பி.எஸ். இதுகுறித்து, விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண் ராஜலட்சுமி நம்மிடம், “என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம்.

திருமணமாகி சென்னையில் வசிக்கிறேன். எங்கள் வீட்டுக்கு நான் ஒரே பெண். அப்பா – அம்மா ராஜபாளையத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு, பையன் இல்லாத குறையை எங்கள் செல்ல நாய் ஜூமிதான் தீர்த்துக்கிட்டிருக்கு. அவ்ளோ, பாசமா இருக்கும்.

இரண்டு வருடத்துக்கு முன்னாடி திடீரென்று தூங்கவே முடியாமல் கஷ்டப்பட்டது ஜூமி. பதறிப்போய், கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் காண்பித்தபோது அதுக்கு இதயம் மற்றும் கிட்னி பிரச்சனை இருக்கிறது என்றார்கள். அதிர்ச்சி ஆனோம். இதற்கு, தினமும் மாத்திரை மற்றும் டானிக் கொடுக்கவேண்டுமென்று டாக்டர்கள் சொன்னார்கள். திருநெல்வேலி கால்நடை மருத்துவமனையிலிருந்துதான் மாத்திரை மருந்துகள் வாங்கிக்கொண்டிருந்தோம். ஊரடங்கு உத்தரவால் மாத்திரை மருந்து கிடைக்காமல் போயிடுச்சு.

ஒருநாள், மாத்திரை சாப்பிடவில்லையென் றாலும் ஜூமி செல்லத்துக்கு மூச்சுத்திணறல் ஆரம்பிச்சுடும். திருநெல்வேலியில் இருக்கிற உறவினர்கள் மாத்திரை மருந்துகள் வாங்கினாலும் கூட ஊரடங்கு உத்தரவால் அனுப்ப முடியாது. இந்தச் சூழ்நிலையில்தான், சரவணன் ஐ.பி.எஸ். சாரோட டிவிட்டர் பக்கத்தில் போய், எங்களுடைய செல்ல நாய்க்கு திருநெல்வேலியிருந்து ராஜபாளையத்துக்கு மாத்திரை மருந்துகள் கொண்டுவர உதவி செய்யவேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.

‘இந்த நேரத்தில் மனிதர்களுக்கே உதவிகள் கிடைக்கமாட்டேங்குது. நாய்க்குக் கிடைக்குமா?’ன்னு உறவினர்கள் சொன்னார்கள். ஆனாலும், மனசுக்கு கேட்காமல் எங்களுடைய செல்லத்தை காப்பாற்றவேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். உடனடியாக, திருநெல்வேலிக்கு தன்னார்வலர்களை அனுப்பிவைத்த சரவணன் சார், என்னுடைய உறவினர்கள் வாங்கி வைத்திருந்த மாத்திரைகளைக் கொண்டுவந்து பெற்றோர்களிடம் கொடுத்து செல்ல நாயின் உயிரையே காப்பாற்றிவிட்டார்.

மாத்திரை மருந்து கிடைக்காமல் ஜுமிக்கு மட்டும் ஏதாவது ஒன்று ஆகியிருந்தால் நாங்கள் எல்லோருமே மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டிருப்போம். நாய்தானேன்னு இல்லாமல் அதுவும் ஒரு உயிரென்பதை மனசில் வெச்சுக்கிட்டு இந்த இக்கட்டான சூழலில் இப்படியொரு உதவி செய்த சரவணன் சாரை எங்கள் குடும்பத்தினர் யாருமே எப்போதுமே மறக்கமாட்டோம்” என்று தழுதழுத்தக் குரலில் சொல்கிறார்,.

சரவணன் ஐ.பி.எஸ்.ஸிடம் பேசினோம். “எங்கள் உத்தரவை மதித்து பொதுமக்கள் வீட்டுக்குள்ள முடங்கியிருக்கும்போது அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வது எங்களுடைய கடமையல்லவா?

அதனால்தான், எங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் தேடி தேடிப்போய் செஞ்சிக்கிட்டிருக்கோம். முதலமைச்சர் பாராட்டியது எங்கள் ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட காவல்துறையினரையும் ஊக்கமூட்டி இன்னும் மக்கள் பணி செய்ய உற்சாகமூட்டியிருக்கிறது” என்கிறார் பெருமிதத்துடன்.

அகதிகள் மீது அக்கறை!
வருண்குமார் ஐ.பி.எஸ்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றதிலிருந்தே சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருக்கிறார் வருண்குமார் ஐ.பி.எஸ். அதுவும், முன்மாதிரியாக தனது செல்ஃபோன் நம்பரை (94899 19722) பொதுவில் அறிவித்து யார் வேண்டுமானாலும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இதனை நினைவுகொண்டு கொரோனா ஊரடங்கு சூழலில் ராமநாதபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் சரோஜினி, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகளை கீமோ சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். உடனடியாக, காவல்துறை வாகனத்தையே அனுப்பி அவரது மகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கீமோ சிகிச்சை அளித்து மீண்டும் கொண்டுவந்து அகதிகள் முகாமில் விட்டுவிட்டு செல்ல வைத்திருக்கிறார் வருண்குமார் ஐ.பி.எஸ்.

ராமநாதபுரத்தில் தனது செல்ஃபோன் எண்ணுக்கு புகார்களாக வரும் மணல் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், குடும்பப் பிரச்சனைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்று அத்தனை புகார்களையும் உடனுக்குடன் சரிசெய்து, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் மனங்களில் மரியாதையை அள்ளி வருகிறார்.

அகதிகள் முகாமில் வசிக்கும் சரோஜினியிடம் நாம் பேசினோம். “குழந்தை கருவில் இருக்கும்போதே தனியாக பிரிந்து போய்விட்டார் எனது கணவர். மகள் விபிக்ஷாதான் என்னோட ஒரே நம்பிக்கை. நண்டு கம்பெனிக்கு வேலைக்குப் போயி எங்கம்மாவையும் மகள் விபிக்ஷாவையும் காப்பாற்றி வருகிறேன்.

கடந்த வருடம் திடீர் திடீரென்று விபிக்ஷாவுக்கு காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது. உடம்பில் தேமல் தேமலா வந்தது. ஆஸ்பத்திரியில் போயி சோதனை பண்ணினப்போ இரத்தத்தின் அளவு ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கிறது. இரத்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பிருக்கும். அதனால், அட்மிட் ஆகணுமுன்னு டாக்டர்கள் சொன்னார்கள். அதிலிருந்து, ஊரடங்குக்கு முன்னால் வரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்தான் இருந்தோம். மகள் ஓரளவுக்கு தேறி வந்ததும் லாக்டவுன் அறிவிப்புக்குமுன் முகாமிற்கு அழைத்து வந்துவிட்டேன்.

ஆனால், திடீரென்று போன வாரம் வலியில் துடிக்க ஆரம்பிச்சுட்டா. இந்த சூழலில்தான், வருண் குமார் சார் ஏற்கனவே நம்பர் அறிவித்திருப்பதை எனது தோழி எனக்கு சொன்னாள். உடனே, நம்பருக்கு தொடர்புகொண்டு பேசினோம். ’கவலைப்படாதீங்கம்மா, அழாதீங்கன்னு தெரியப்படுத்தினவர், உடனே போலீஸ் ஜீப்பையே அனுப்பி மதுரையில் கொண்டுபோய் ட்ரீட்மெண்ட் கொடுத்து மீண்டும் முகாமிற்கே கொண்டுவந்து விடுறவரைக்குமான உதவிகளை செய்தார். அதுமட்டுமல்ல, மறுநாள் ஃபோன் செய்து என் மகள் எப்படியிருக்கிறான்னும் நலம் விசாரித்தார்.” என்று கண்கலங்கினார்.

வருண்குமார் ஐ.பி.எஸ்.ஸிடம் நாம் பேசினோம், “உதவி செய்யுங்கன்னு கேட்கிற மக்களுக்கு உதவிகளை செய்கிறதுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். இது எங்களுடைய கடமை. கடமையை செய்றத பப்ளிசிட்டி பண்ணிக்க விரும்பலை. என்னுடைய நம்பரை உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள். யார் வேணும்னாலும் புகார் கொடுக்கட்டும், உதவிகள் கேட்கட்டும். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் அக்கறையுடன்.

விவசாயிக்கு மரியாதை!
அரவிந்தன் ஐ.பி.எஸ்.

தனது தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளைக் கொண்டுசென்ற விவசாயியை காவல்துறை பல மணிநேரம் காக்கவைத்துத் துன்புறுத்தியதால், அந்தக் காய்கறிகளை அதே இடத்தில் வீசிவிட்டு விரக்தியுடன் சென்றுவிட்டார் விவசாயி. அந்த, வீடியோ ஊடகங்களில் பரவியது. இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் அந்த விவசாயியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததுடன் இழப்பீடு வழங்கிய வீடியோ பாராட்டுகளைக் குவித்தது.

திருவள்ளூர் மாவட்டம் அகரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்திக்கிடம் பேசினோம். “என்னுடைய அப்பா மாற்றுத்திறனாளி. சென்னை ஆவடி அருகிலுள்ள திருநின்றவூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு காய்கறி கடை வைத்திருக்கிறார். எங்கள் தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு விளைந்ததை அப்பாவுடைய கடைக்கு கொண்டுபோய் கொடுத்துட்டு வருவேன். அன்று வழக்கம்போல போனேன். கூட்ரோடுகிட்ட போகும்போது போலீஸ்காரங்க வழிமறித்தார்கள்.

‘நம்மிடம் தப்பு இருந்தாதானே யோசிக்க வேண்டும். நியாயமா காய்கறிகளை ஏற்றிக்கொண்டுதானே போகிறோம். சொன்னோமென்றால் விட்டுடுவாங்க என்ற’ நம்பிக்கையில் டூவீலரை நிறுத்தினேன். அப்பாவுடைய கடைக்கு எடுத்துக்கிட்டு போறேன்னு சொன்னதை போலீஸ் நம்பலை. என் வண்டி சாவியை புடிங்கி வெச்சுக்கிட்டாங்க. காலையில் எட்டரை மணிக்குப்போன என்னை மதியம் 12 மணி ஆகியும் கெஞ்சியும் என்னை விடமாட்டேன்னு சொல்லிவிட்டார்கள். சீமந்தத்திற்கு கனகாம்பரம் பூ வேற கேட்டிருந்தார்கள். அதையும் கொண்டுபோய் சரியான நேரத்தில் சேர்க்கமுடியவில்லை.

திரும்பித் திரும்பி போயி சாவியைக் கேட்டதும் டென்ஷனான எஸ்.ஐ., ‘என்ன நீ ரொம்ப ஓவரா பண்ற. உன்னை அடித்தால் எவன் கேட்பானென்று சொல்லிக் கொண்டே இடுப்பிலேயே குத்தினார். தடுத்த என் கையிலையும் அடித்தார். இதனால், கோபத்தில் காய்கறிகளையெல்லாம் அங்கேயே கொட்டிட்டேன். அதுக்கப்புறம், விவசாயச் சங்கத் தலைவர்கிட்ட ஃபோன் பண்ணி சொன்னேன். அவர், அதிகாரிகளுக்கு ஃபோன் பண்ணி சொன்னார். உடனே, விடச் சொல்லிவிட்டார்கள். வீட்டுக்கு வந்துட்டேன்.

மீண்டும் போலீஸ் வந்து ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டுப்போயி, “உன்மேல் பைக் திருட்டு கேஸு போட்டா யாரு கேட்பா? உன்னால், எந்த வேலைக்கும் போகமுடியாது’’ன்னு மிரட்டினது மட்டுமில்லை, என்னை அடித்து அனுப்பிட்டாங்க.

இந்நிலையில்தான் மறுநாள் திடீரென்று நிறைய போலீஸ் வந்து வீட்டுக்கு முன் நின்றதும் பயந்துபோய்விட்டேன். அப்போது, நான்தான் எஸ்.பி. அரவிந்தனென்று சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டு வந்த அதிகாரி, ‘உங்களுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது. அவர்கள் செய்த தவற்றுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்’ன்னு பெருந்தன்மையோடு சொன்னவர், 50 கிலோ அரிசி, 10 கிலோ வெண்டைக்காய், 10 கிலோ கத்தரிக்காய்ன்னு கொண்டுவந்து கொடுத்தார். அதுமட்டுமல்ல, இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தார்.

நான், “நீங்க வந்து ஆறுதல் சொன்னதே பெரிய விஷயம். உங்களுடைய அன்புக்காகக் காய்கறிகளை வாங்குகிறேன். பணம் வேண்டாம் சார்’ ன்னு சொல்லிவிட்டேன். அதோடு, எனக்கு அப்துல்கலாம் புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்துவிட்டுப் போனார் எஸ்.பி. அரவிந்தன் சார்.” என்கிறார் நெகிழ்வுடன். அரவிந்த் ஐ.பி.எஸ்ஸை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பாராட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here