பூட்டை திறக்காதீர்கள் பூரண மதுவிலக்கு சாத்தியமா?

386

-சு. வீரமணி

பல்லாயிரம் பேர் பல நூறு போராட்டங்களை நடத்தியும், காந்தியவாதி சசிபெருமாள் உயிரை நீத்தும், தமிழகத்தில் மூடப்படாத மதுக்கடைகள், இப்போது கொரோனோ பெருந்தொற்று காரணமாக ஒருமாத காலமாக மூடப்பட்டிருக்கிறது. காவல்துறையின் ட்ரோன் பறப்பதால் கள்ளச்சந்தையிலும் வாய்ப்பில்லை என்று குடிமகன்களே சொல்கின்றனர். இதனையே வாய்ப்பாக பயன்படுத்தி இனி மதுக்கடைகளை திறக்காமல் பூரணமாக மூடவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது. அரசு என்ன செய்யப் போகிறது?

ஊரடங்கு தொடங்கிய முதல் சில நாட்களில் தமிழகம் முழுவதும் பல மதுக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டிகளை கட்டிடத்தை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்தது. அதனால், இப்போது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மதுக்கடைகளில் உள்ள மதுபாட்டில்களை கொண்டுவந்து குடோன்களில் பாதுகாத்து வைத்துள்ளனர். அதன்பின்னர் கள்ளச்சாராயம் காய்ச்ச முற்பட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மது கிடைக்காத காரணத்தால் வார்னிஷ், சேவிங் லோசன் போன்றவற்றை குடித்து இதுவரை 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த சில சிக்கல்களைத் தவிர்த்துவிட்டால் மது குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடப்போர், குடும்பத்தில் பிரச்சினை செய்வோர், வீதிகளில் சண்டைபோட்டு கொண்டிருப்போர் என எதுவுமின்றி அத்தனை இடங்களும் அமைதியாக காட்சியளிக்கிறது.

இது தொடருமா என்பதுதான் தமிழகம் முழுக்க தாய்மார்களின் எதிர்பார்ப்பு. ஆனால், ஒருநாளுக்கான 80 கோடி ரூபாய் வருமானம் இழப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா? நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

மதுவிலக்கு சாத்தியம்தான்!

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். அவருடன் பேசினோம். “அரசு மனது வைத்தால் மதுவிலக்கு சாத்தியம்தான். டாஸ்மாக் கடைகளை மூடி ஒரு மாதத்திற்கும் மேலாக ஆகிறது. இப்போது கடைகளை திறக்க சொல்லி ஏதேனும் புரட்சி வெடித்துவிட்டதா, இல்லை; மது இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டார்களா என்று பார்த்தால், இல்லையே. மிகச் சிலர் முட்டாள்தனமாக மாற்று மதுவை நாடி தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது சாதாரண நாட்களிலேயே நடக்கக்கூடியதுதான்.

மதுப் பழக்கத்தை உடனே நிறுத்தினால் மதுகுடிப்போருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் என்று தொன்றுதொட்டு அரசுகள் சொல்லி வந்தன. ஆனால், மதுக்கடைகள் இல்லாத கடந்த ஒருமாதத்தில் அதுபோல பெரிய பாதிப்பு ஏற்பட்டதுபோல தெரியவில்லை. மதுக்கடைகள் வேண்டுமா வேண்டாமா என்று ஒரு சர்வே இப்போது எடுத்தால் பெரும்பாலானோர் வேண்டாம் என்றே சொல்வார்கள்.

ஒருபக்கம் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு மறுபக்கம் விதவைகளையும் உருவாக்குவது அறமற்ற செயல். குடித்து உடல்நல பாதிப்பு ஏற்படுத்துவது ஒருபுறம் என்றால், குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தி மற்றவர்களின் உயிரையும் குடிகாரர்கள்தான் எடுக்கிறார்கள் அதுமட்டுமின்றி பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என்று எல்லா குற்றச்செயல்களுக்கும் அடிப்படை மதுவாகத்தான் உள்ளது.

மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு வருமானம் போய்விடும் என்கிறார்கள். வருமானம் வேண்டுமென்பதற்காக சூதாட்டம், காப்ரே போன்றவற்றை திறக்க முடியுமா? குட்கா, லாட்டரி விற்றாலும் அதிக வருமானம் கிடைக்கும்; இதையெல்லாம் அரசு ஏன் செய்வதில்லை என்றால் இது அறமற்றது என்பதற்காகத்தான். அப்படி பார்க்கையில் மதுக்கடைகளை நடத்துவதும் அறத்திற்கு எதிரானதுதான்.

அரசின் வருமானத்திற்கு வேறு ஆயிரம் வழிகள் உள்ளது. காமராசர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தபோது அரசிடம் நிதி இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். அப்போது துண்டேந்தி பிச்சையெடுத்தாவது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்றார். அதுபோல அரசு மனது வைத்தால் இதுவும் சாத்தியம்தான்.
மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். அரசும் காவல்துறையும் நினைத்தால் எளிதாக கள்ளச்சாராயத்தை ஒழிக்கலாம். ட்ரோன் மூலமாக எளிதாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டுபிடிக்கலாம்.சோதனைச் சாவடிகளை கடுமையாக்கினால் வெளிமாநிலத்தில் இருந்து வரும் மதுவும் குறையும்.

ஒரு மாதமாக குடிக்காமல் இருப்பவர்கள் இப்போது முற்றிலும் குடியை மறந்திருப்பார்கள். அவர்களுக்கு திரும்ப நாம் மதுவை ஞாபகப்படுத்த வேண்டுமா? எனவே, இனிமேல் மதுக்கடைகளை திறக்காமல் பூரணமாக மூடவேண்டும். மதுக்கடைகளை இந்த அரசு மூடுமேயானால் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த பெண்களின் வாக்கும் பூரணமாக இந்த அரசுக்கு கிடைக்கும்.

இதனையெல்லாம் வலியுறுத்திதான் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் உறுதியுடன்.

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை!

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியனிடம் பேசினோம். “2003ஆம் ஆண்டு ஆரம்பித்துக் கடந்த மாதம் 24ஆம் தேதிவரை தங்கு தடையின்றி மதுக்கடைகள் திறந்திருந்தது. தொடர்ந்து குடித்து, குடித்து சிறு மூளை பாதிப்படைந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். மதுவை உடனடியாக நிறுத்தியதால் இப்போதும் பல ஆயிரம் பேர் உடல்ரீதியாக, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொரோனோ காரணமாக இது வெளியில் தெரியவில்லை.

2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்றார்; அதுபோல ஒவ்வொரு பகுதியிலும் மதுபோதை மறுவாழ்வு மையம் ஏற்படுத்துவேன் என்றார்கள். ஆனால், இதுவரை அரசு சார்பில் ஒரு மையம்கூட திறக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், 17 வருடமாக தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தவர்களை திடீரென நிறுத்த சொன்னால் எப்படி நிறுத்த முடியும்?
தமிழகத்தில் பல்லாயிரம் மது அடிமைகள் இருக்கிறார்கள் என தெரிந்தும் அவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தாதது அரசின் குற்றம்தான். மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் இப்போது போதைக்கு அடிமையானோர் சேவிங் லோசன், சானிடைசர், தின்னர், வார்னிஸ் போன்றவற்றை குடித்து சாவதை தடுத்திருக்க முடியும்.

2006ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி மதுவையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டுவரவேண்டும் என்று சொன்னோம். ஆனால், இப்பட்டியலில் மதுபான வகைகளை கொண்டுவரக்கூடாது என்று மதுபான ஆலை முதலாளிகள்தான் தடை வாங்கினார்கள். அவ்வாறு கொண்டுவந்தால் தங்கள் இஷ்டத்துக்கு மதுவுக்கு விலை வைக்க முடியாது. தங்கள் இஷ்டத்துக்கு ஆல்ஹகால் அளவை கூட்டவோ, குறைக்கவோ முடியாது என்று பயந்தார்கள். இதனால்தான் மதுவின் தரத்தை ஆய்வு செய்ய எந்த அமைப்பும் இங்கு கிடையாது.

படிப்படியாக மதுக்கடைகளை மூடி கள் விற்பனையை அனுமதிக்கலாம். இப்போது விற்கப்படும் மது உடலை அழிக்கும் சக்தி கொண்டது, ஆனால், கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. கள் வகைகளில் தாய்ப்பாலில் உள்ள லோரிக் அமிலம் உள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. எனவே, அரசு உடனடியாக கள் வகைகளை இறக்க அனுமதி கொடுத்து, கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே விற்பனை செய்ய வேண்டும். இதனால் மதுகுடிப்போரின் உடல்நலமும் பாதிக்கப்படும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்” என்கிறார்.

மறுவாழ்வு மையங்களை திறக்க வேண்டும்!

மதுவால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றிபேசும் மருத்துவர் பாரதிசெல்வன், “நீண்ட நாட்கள், தொடர்ச்சியாக, அதிக அளவில் மது அருந்துபவர்களுடைய மூளையும் உடலும் மதுவுக்கு அடிமையாகிறது. திடீரென்று மதுகுடித்தலை நிறுத்தினால் 48 முதல் 72 மணி நேரத்திற்கு பிறகு ‘மதுவை நிறுத்துவதால் ஏற்படும் நோய்த் தொகுப்பு’ (ALCOHOL WITHDRAWAL SYNDROME) ஏற்படும். இதனால் கை நடுங்குதல், படபடப்பு, கடுமையாக வேர்த்துக்கொட்டுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு வாந்தி, புத்தி பேதலித்த நிலை, இருக்கும் இடத்தைவிட்டு வெளியே ஓடுதல், வன்முறை செயல்பாடுகள் போன்றவை ஏற்படும். இதுபோன்ற நோய் குடிக்கும் எல்லோருக்கும் ஏற்படாது; குடிக்கு அடிமையான தீவிர குடி நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படும்.

ஆனால், மதுக்கடைகள் மூடப்பட்ட இந்த ஒரு மாத காலத்தில் அதுபோல தீவிரமாக யாரும் பாதிக்கப்பட்டதைப்போல தெரியவில்லை. ஒருவேளை அதுபோல பாதிப்புகள் இருந்தாலும் கொரோனோ பதட்டத்தால் அவை செய்தியாகாமல் இருந்திருக்கலாம்.

இந்த ஒரு மாதமாக மதுக்கடைகள் மூடப்பட்டதை வாய்ப்பாக கருதி இதுபோன்ற தீவிர குடிநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சையை அரசே இலவசமாக கொடுக்க முன்வரவேண்டும். தமிழகம் முழுவதும் இதுபோல கணக்கெடுத்தால் சில ஆயிரம் பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்களுக்கு சிகிச்சையளிப்பது எளிதுதான்.

குடிநோயாளிகளால் அவர்களின் குடும்பம், குழந்தைகள் நடு வீதியில் நிற்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை குடிப்பவர்களின் வயது சராசரி 30 வயதுக்கு மேல்தான் இருக்கும். ஆனால், இப்போது 15 வயது பள்ளி, கல்லூரி மாணவர்கள்கூட மதுக்குடிக்கும் போக்கினை பார்க்கிறோம். இப்போது மதுக்குடித்து உடல்நலம் பாதித்து, விபத்துகளில் இறப்போர் பெரும்பாலோனோர் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் என்பது நெஞ்சை உலுக்கும் உண்மை. எனவே, இனி வருகின்ற இளைஞர்களை காப்பதற்காகவேனும் மதுக்கடைகளை முழுவதுமாக அரசு மூடவேண்டும்” என்கிறார்.

படிப்படியாகவே மதுவிலக்கை கொண்டுவரமுடியும்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் அழகு மருதுராஜிடம் பேசினோம். “மதுவிலக்கை நம் நாட்டில் ஒரு மாநிலம் மட்டுமே கடைபிடிப்பது சாத்தியமில்லாத விஷயம். கடலூர் மாவட்டத்தில் ஒரு சாலையின் ஒருபக்கம் தமிழகமும் மறுபக்கம் புதுச்சேரியும் உள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவந்தால் அங்கிருந்து எளிதாக மது தமிழகத்துக்கு வரும். அதுபோல கர்நாடகா, ஆந்திரா, கேரள எல்லைகளிலிருந்தும் மது எளிதாக தமிழகத்துக்கு வரும். ஆக மதுக்கடைகளை பூரணமாக மூடினால் அது கள்ளச்சாராயம், மதுக் கடத்தல், அது தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கும். எனவே, கடைகளை மூடுவதற்கு பதிலாக மக்கள் மனநிலையில் மாற்றம் கொண்டு வருவதே சிறந்த வழியாக இருக்கும்.

வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில்கூட மது இருக்கிறது. அங்கெல்லாம் வகை தொகையின்றி யாரும் மதுகுடிப்பதில்லை. அதுபோல இங்கும் மக்களிடம் மனநிலையில் மாற்றம் வரவேண்டும். அதை மனதில் கொண்டுதான் அம்மா 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று சொன்னார்கள். அதன் தொடர்ச்சியாகவே ஆயிரம் மதுக்கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டது. அதுபோல படிப்படியாக மதுக்கடைகளை மூடும் பணியை அரசு தொடர்ந்து செய்யும். பெரும்பான்மை மக்கள் மனநிலையில் மாற்றம் வந்து, குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும்போது பூரணமாக மதுக்கடைகளை மூட வாய்ப்புள்ளது.

குடி நோயாளிகள் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த இந்த கொரோனா ஊரடங்கையும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஒரு மாதத்தில் குடிக்காத காரணத்தால் குடும்பத்தில், தனிமனித உறவில், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அவர்களுக்கு விளக்கவேண்டும். மது எனக்கு தேவையில்லை என்று ஒருவர் முடிவெடுத்து சிகிச்சைக்கு முன்வந்தால் அவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க அரசு தயாராகவே உள்ளது அமைச்சரே கூறியுள்ளார்.

மனநிலை மாறி மது குடிப்போரே இல்லையென்றால், பிறகு மதுக்கடைகளுக்கு மட்டும் எப்படி தேவை இருக்கும்?” என்று கேள்வியெழுப்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here