ஊரடங்கிற்குப் பின் தேர்வுகள் : மாணவர்கள் எப்படித் தயாராகலாம்?

245

– சுந்தரபுத்தன்

ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் ஒரு பந்தயத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள். இனி எழுதப்போகும் தேர்வுகள்தான் அந்த பந்தயம். ஏனெனில், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறவில்லை. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் போன்ற தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு, ஜேஇஇ மெயின் தேர்வு, கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஆசிரியர் கல்வி, சட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நீண்ட இடைவெளியில் தேர்வுகளைச் சந்திக்கப்போகும் மாணவர்கள், ஒரு நெருக்கடியான மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தூரத்து வானத்தைப்போல தேர்வு நாட்கள் நீளும் நிலையில், பல நாட்களாக காத்திருக்க வேண்டிய எதார்த்த நிலை, மாணவர்களிடம் மனச்சுமையை அதிகரித்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனப் பேசப்படும் சூழலில், தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் என்ன செய்யவேண்டும், தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றி சில ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் பேசினோம்.

ஆயிஷா இரா. நடராசன், கல்வியாளர்

தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதலில் பாடங்களின் முக்கிய தலைப்புகளை மட்டும் திரும்பப் பார்க்கவேண்டும். அடுத்து டெஸ்ட். மூன்றாவதாக எழுதிய தேர்வுகளின் விடைத்தாள்களை அல்லது கேள்வித் தாள்களை ஒரு முறை பார்க்கவேண்டும். எப்படி பதில் அளித்திருந்தோம் என்பதை மீள்பார்வை செய்ய ஒரு வாய்ப்பாக அமையும்.

நீங்கள் கடுமையாக படிக்கவேண்டியதில்லை. தினமும் ஒரு டாபிக் மட்டும் எடுத்துக்கொண்டு படிக்கலாம். இன்றைக்கு ஒரு செய்யுள் படிக்கலாம். ஒரு கடினமான கேள்வியைப் படிக்கலாம்.

செல்ப் டெஸ்ட் ஈஸ் பெஸ்ட் டெஸ்ட் என்பார்கள். அதுதான் எதார்த்தமான உண்மை. நீங்களே எழுதிப் பார்க்கும் தேர்வுகள் நிறைய பலனளிக்கும்.

ஒரு பெட்டியில் பாடங்கள் தொடர்பான பல தலைப்புகள், பாடங்களை எழுதி சுருட்டிப் போட்டு, குலுக்கி எடுக்கலாம். அதில் என்ன சப்ஜெக்ட் வருகிறதோ, அதை அந்த கணத்தில் அல்லது பிடித்தமான நேரத்தில் படிக்கலாம்.

நீங்களே வீட்டில் எழுதிப்பார்க்கும் தேர்வுகளை, நீங்கள்தான் திருத்துவீர்கள். அப்போது என்ன தவறு செய்கிறோம், எதை எழுத மறந்து விடுகிறோம் என்பது தெரியவரும்.

உங்களுக்காக ஒரு கால அட்டவணையை உருவாக்கிக்கொண்டு படிக்கலாம். தேர்வு தேதி அறிவித்த பிறகு, படிப்பதில் முழுமையாக கவனம் செலுத்தி கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு முன்பான நாட்களில் ரொம்பவும் மெனக்கெடாமல் படிக்கலாம்.

கே. வெங்கடாசலபதி, அரசு பட்டதாரி ஆசிரியர், திருவாரூர்

ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளி மாணவர்களுக்காக வாட்ஸ் ஆப் குழுக்கள் வைத்துள்ளார்கள். பாடம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்ப்பதுடன் தேர்வுக்கான வழிகாட்டுதல்களையும் செய்துவருகிறார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு பொதிகை தொலைக்காட்சியில் நண்பகல் 11 முதல் 12 மணிவரையில் ஒளிபரப்பாகும் பத்தாம் வகுப்பு பாடங்கள் உதவியாக இருக்கின்றன.

ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் இருந்தால், அதில் 25 பேர் மட்டுமே வாட்ஸ் ஆப் குழுவில் சேரக்கூடிய அளவில் உள்ளார்கள். அனைவரிடமும் ஆண்ட்ராய்டு போன் இருப்பதில்லை.

செல்போன்களை சில மாணவர்கள் ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களாக உள்ளனர். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக ஒரு மாணவன் பள்ளியில் 9 மணி நேரம் செலவிடுகிறான்.

பள்ளிநேரத்தில் வீட்டில் இருக்கிறான். 9 மணி நேரம் காலியாக உள்ளது. வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாம் படிக்க முடியாது. குடும்பச் சூழல், மனநிலை பொறுத்து தினமும் குறிப்பிட்ட நேரத்தை பாடங்களுக்காக ஒதுக்கலாம். தனிப்பட்ட முறையிலும் மாணவர்கள் செல்போன் மூலம் ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற முடியும்.

பேராசிரியர் ஜெயலட்சுமி, டீன், கிரசண்ட் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர்

ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போது முடியும் என்பது தெரியவில்லை. மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் காலத்தில் செமஸ்டர் தேர்வுகள் வைக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு தேதிகள் ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிக்கப்படும். எனவே வீட்டில் இருக்கும்போது பதற்றமில்லாமல், விருப்பமான நேரங்களில் படித்து தேர்வுகளுக்குத் தயாராகவேண்டும்.

நேரத்தை வீணடிக்காமல், மனசுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இந்த தனித்திருக்கும் நாட்களில் மாணவர்கள் உடலையும் உள்ளத்தையும் சமநிலையில் வைத்திருக்கவேண்டும். நம்பிக்கையையும் உறுதியையும் இழந்துவிடக்கூடாது. மனம் பலமாக இருக்கும்போதுதான் படிப்பது மனதில் நிற்கும். மேலும் படிப்பில் விருப்பத்துடன் ஈடுபடமுடியும்.

ஒவ்வொரு நாளும் நேரத்தை வகுத்துக் கொள்வது நல்லது. குறிப்பிட்ட நேரம் ஆங்கிலம், ஓவியம், சாப்ட்வேர், ஆன்லைன் படிப்புகள் என ஈடுபட்டு மென்திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். படிப்பு தவிர மற்ற விஷயங்களிலும் ஈடுபடுவதால் கவனம் கூடும். தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டதும் தீவிரமாகவும் முழுமையாகவும் படிக்கலாம்.

பேராசிரியர் வி. அம்பேத்கர், கல்வியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சில மாணவர்களுக்கு வீட்டில் தனிமையில் படிப்பது சிரமமாகத் தோன்றலாம். குரூப் ஸ்டடி செய்து பழகியவர்களாக இருப்பார்கள். தேர்வு என்று பார்க்காமல் வாழ்க்கைக்கான தொடக்கம் என்று நினைத்துக்கொண்டு படிக்கவேண்டும். கல்லூரி நாட்களில் படிப்பதற்கான அழுத்தம் இருந்திருக்கும்.

அது தற்போது கிடையாது. கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவர்கள் தங்களைத் தாங்களே தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது நல்லது.

வீட்டிலேயே நாள் முழுதும் இருந்தாலும் கவனச் சிதறல்கள் அதிகம். குடும்பத்தினர் டிவி பார்ப்பார்கள். விளையாடுவார்கள். எனவே படிக்கும் நேரத்தையும் சூழலையும் மாற்றிக்கொள்ளுங்கள். வீட்டில் தனிமையும் நேரமும் கிடைத்துவிடும் என்று நம்பமுடியாது. ஒவ்வொருவருக்கும் குடும்பச் சூழல்கள் மாறுபடும். அதற்கேற்ப மாணவர்கள் படிக்கவேண்டியிருக்கும்.

டாக்டர் எம். முருகன், துணை முதல்வர், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி

ஏற்கெனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன. நேரடி வகுப்பறைகளைவிட ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. பேராசிரியர்களுடன் உரையாடும் வசதிகளும் இருப்பதால் கற்றல் எளிதாகிறது. நாட்கள் வீணாகவில்லை. அசைன்மெண்ட்ஸ் கொடுக்கப்படுவதால், அதை செய்வதன் மூலம் கற்றல் மேம்படுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு இதுவொரு சவாலான நேரம். தொடர்ந்து படிப்பதற்கு உத்வேகம் குறைவான நாட்கள். தேர்வு என்ற எண்ணம் இருப்பது ஒருவிதமான மன அழுத்தம் தரும். அதிலிருந்து மீண்டுவர வேண்டும்.

ஏற்கெனவே படித்த பாடங்கள் என்பதால் சலிப்பாகத் தோன்றினால், கொஞ்சம் கொஞ்சமாகக்கூட படித்துவரலாம்.
எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்ற எண்ணம் தேவையில்லை. அந்தப் படிப்பு நம்முடைய வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று நினைத்தால் ஆர்வம் வந்துவிடும். தினமும் படிக்கத்தான் வேண்டும். ஆனால் அதன் அளவை வரையறை செய்துகொள்ளலாம்.

கண்மணிப் பிரியா, அரசு முதுகலை பட்டதாரி ஆசிரியர், வில்லிவாக்கம்

மாணவர்களில் நன்றாக படிக்கக்கூடியவர்கள் ஏற்கெனவே படித்து முடித்திருப்பார்கள். இதுவரை படிக்காதவர்கள் படிப்பதற்கும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கான சரியான தருணம் இது. 2015 ஆம் ஆண்டில் இப்படித்தான் நீண்ட நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

அந்த நாட்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வந்தது. பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள்.

விடுமுறை நாட்களில் தினமும் படித்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அதேபோலவே இந்த ஊரடங்கை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பதின் வயதினருக்கு எந்த மனத்தடையும் இருக்காது. சிறந்த எதிர்காலத்திற்காக அவர்கள் படித்தே ஆகவேண்டும். தினமும் நான்கு மணி நேரம் படிக்கவேண்டும். கண் மூடி கண் திறப்பதற்குள் நாட்கள் சென்றுவிடும்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கியமான பாடங்கள் அடங்கிய புத்தகங்கள் எல்லா மாணவர்களிடமும் உள்ளன. மேலும் பாடங்களையும் குறிப்புகளையும் வாட்ஸ்ஆப் மூலமும் ஆசிரியர்கள் அனுப்பிவருகிறார்கள். இணையம் வழியாக படிப்பதற்கும் பள்ளிக்கல்வித்துறை இணையதளம் தொடங்கியுள்ளது. எல்லா வகையிலும் படிப்பு தொடர்பான உதவிகள் கிடைப்பதால், மாணவர்கள் கவலையின்றி படிக்க வேண்டும்.

எம். பிரபாகரன், அரசு பட்டதாரி ஆசிரியர், கொரடாச்சேரி

அரசால் அதிகாரப்பூர்வமாக தேர்வு அட்டவணை வெளியிடப்படும் வரை பாடங்களை மாணவர்கள் திட்டமிட்டு படிக்கவேண்டும். சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளால் குழம்பக்கூடாது. பாடபுத்தகத்தில் உள்ள QR கோடுகள் மற்றும் ICT கார்னர் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தால், மனஅழுத்தம் நீங்கி மகிழ்வாக கற்கலாம். கல்வி வலைதளங்களில் வழங்கப்படும் இலவச ஆன்லைன் தேர்வுகள் மற்றும் மாதிரி வினாக்களில் பயிற்சி செய்யலாம்.

மெய்நிகர் வகுப்புகள் தன்னார்வமிக்க ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.

மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், கூகுள் கிளாஸ்ரூம் செயலி வழியாக இணைந்து சந்தேகங்கள் கேட்கலாம். பல மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட திருப்புதல் வினாக்களில் பயிற்சி செய்யலாம். கல்வி டிவி, யூ டியூப் வழி பாடங்கள் கற்கலாம். அதிக நேரம் கிடைப்பதால், காலையில் ஒரு பாடமும் மாலையில் ஒரு பாடமும் என்று ஒரு அட்டவணை தயாரித்து சிறு சிறு அலகுகளாக பிரித்துப் படிக்கலாம்.

எல்லாம் படித்துவிட்டோம். தேர்வுக்கு முந்தைய தினங்களில் படித்துக் கொள்ளலாம் என்று இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தில் உள்ள கடினப் பகுதியை திரும்பப் பார்க்கவேண்டும். முழுமையான மாதிரித் தேர்வுகளை 3.15 மணி நேரம் எந்தவித இடையூறு இல்லாமல் எழுதிப்பார்த்து, சுயமதிப்பீடு செய்ய இந்த நாட்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here