நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர்!

291

-சேவியர்

பத்து குணாதிசயங்கள்.

கடந்த பல வாரங்களாக ஒரு புராஜக்டின் பல்வேறு நிலைகளைப் பற்றியும், ஒவ்வொரு நிலையிலும் புராஜக்ட் மேனேஜர் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் பார்த்தோம். குறிப்பாக புராஜக்டின் முக்கியமான நிலைகளான,

1. துவக்கம்
2. திட்டமிடல்
3. செயல்படுத்துதல்
4. கவனித்தல், கட்டுப்படுத்துதல்
5. முடித்தல்

எனும் ஐந்து பெரும் நிலைகளில் என்னென்ன செய்யவேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? அந்தந்த நிலைகளில் ஒரு புராஜக்ட் மேனேஜர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன என்பது பற்றியெல்லாம் பார்த்தோம். அந்த விஷயங்களைப் பற்றிய நல்ல புரிதல் இருந்தால், நீங்கள் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் பணிக்குள் தாராளமாக இறங்கலாம்.

அவற்றைக் குறித்த அதிக விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள உங்களுடைய புராஜக்ட் மேனேஜ்மெண்ட் திறமை அதிகரிக்கும். புராஜக்ட் மேனேஜ்மெண்டில் ஸ்டாராக விரும்புபவர்களுக்கென பி.எம்.பி (PMP – Project Management Professional ) சர்டிபிகேஷன் உண்டு. அதைப் பெற்றுக்கொள்வது உங்களுடைய பணிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். சரி, இந்த வாரம், ஒரு புராஜக்ட் மேனேஜருக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் குணாதிசயங்கள் பற்றிப் பார்ப்போம். தொழில் நுட்ப விஷயங்களைத் தாண்டி, இந்தக் குணாதிசயங்கள் ஒரு புராஜக்ட் மேனேஜரை மிகச் சிறந்த தலைவராக அடையாளம் காட்டும்.

1. பார்வை

ஒரு புராஜக்ட் மேனேஜர் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவராக இருக்க வேண்டும். புராஜக்ட் சார்ந்த நோக்கு மட்டுமல்லாமல், புராஜக்டில் உள்ள பணியாளர்களின் இலட்சியம், அவர்களுடைய கனவு போன்றவற்றையும் ஒரு புராஜக்ட் மேனேஜர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஒரு பணியை மேலிருந்து பார்த்து ஒரு முழுமையான புரிதல் கொண்டிருக்க வேண்டியது இவருடைய பணியாகும்.

சிறந்த புராஜக்ட் மேனேஜர் தனது புராஜக்டையும், அதில் பணிசெய்கின்ற மக்களுடைய கனவுகளையும் ஒரு சேர இயக்குபவராக இருக்க வேண்டும். நிறுவனத்தின் இலட்சியங்களையும், புராஜக்டின் இலட்சியங்களையும் இணைத்துப் பார்க்கும் பார்வை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

2. கம்யூனிகேஷன்

ஒரு புராஜக்ட் மேனேஜருக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களில் மிக முக்கியமானது இது. பல நிலையிலுள்ளவர்களோடு தொடர்பாடுதல் என்பது புராஜக்ட் மேனேஜருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பணி. அந்த குணாதியத்தில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். கம்யூனிகேஷன் என்பது மொழி சார்ந்தது மட்டுமல்ல, ஒரு செய்தியை எப்படிச் சொல்கிறோம், எப்போது சொல்கிறோம், யாருக்கெல்லாம் சொல்கிறோம் என பல விஷயங்களை உள்ளடக்கியது.

மின்னஞ்சல், ரிப்போர்ட், உரையாடல், மீட்டிங் என எல்லா நிலைகளிலும் அவர்களுடைய கம்யூனிகேஷன் திறமை சரியாக இருக்க வேண்டும்.

3. உற்சாகமும், ஆர்வமும்

கண்டிப்பாக ஒரு புராஜக்ட் மேனேஜர் உற்சாகம் நிறைந்தவராக இருக்க வேண்டும். ஏன்னா, அவரு தான் புராஜக்ட்ல இருக்கிற மற்ற உறுப்பினர்களை உற்சாகமாய் வைத்திருக்க வேண்டியவர். அவரே உற்சாகம் இல்லாதவராக இருந்தால் குழுவுக்கு அவர் உற்சாகம் ஊட்ட முடியாது.

நல்ல பாசிடிவ் சிந்தனை, நல்ல ஆரோக்கியமான உரையாடல், நல்ல சுறுசுறுப்பான பணி, செய்வதை ரொம்பவும் ரசித்து சிலாகித்துச் செய்வது போன்றவையெல்லாம் ஒரு புராஜக்ட் மேனேஜரிடம் இருக்க வேண்டும்.

4. இளகிய மனம், கரிசனை

என்னப்பா ஏதோ ஆன்மீக விஷயம் போல இருக்கே என நினைக்கவேண்டாம். ஒரு புராஜக்ட் மேனேஜர் அந்த புரஜக்டிலுள்ள உறுப்பினர்கள் மீது கரிசனை கொண்டவராக இருக்க வேண்டும். உறுப்பினர்களுடைய மனநிலையை அறிந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் அதை சரிசெய்ய உதவ வேண்டும்.

எனவே அடிப்படையிலேயே பிறரைப் பற்றிய கரிசனை உங்களிடம் இருக்கட்டும். “என்ன நடந்தா என்ன ? என்னோட புராஜக்ட் போகணும்” எனும் மனநிலை வேண்டாம். புராஜக்டிலுள்ள உறுப்பினர்கள் எல்லோரும் இயல்பான, ஆரோக்கியமான மனநிலையில் இருந்தால்தான் புராஜக்டும் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. திறமை வேண்டும்.

ஒரு தலைவர் சிறப்பானவர் என டீமில் உள்ளவர்கள் நம்பினால்தான் வேலை சிறப்பாக நடக்கும். தலைவர் சிறப்பானவர் இல்லை என்று நினைத்தால் பணி சிறப்பானதாக நடக்காது. எனவே ஒரு புராஜக்ட் மேனேஜர் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

அனுபவங்களானாலும் சரி, அல்லது சான்றிதழ் பயிற்சிகளானாலும் சரி, ஏதோ ஒரு வகையில் தன்னுடைய திறமையை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

6. பணியைப் பகிர்ந்தளித்தல்

இதைப்பற்றி நாம் விரிவாகப் பார்த்தோம். இருந்தாலும் ஒரு முறை நினைவூட்டிக் கொள்வோம். இருக்கின்ற பணியை பகிர்ந்து அளிப்பது, யாருக்கு எந்த வேலையை எப்போது கொடுப்பது, கொடுத்த வேலையை எப்படி கண்காணிப்பது போன்ற பல விஷயங்கள் புராஜக்ட் மேனேஜர் சிறப்பாகச் செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற திறமைகளை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பணியைப் பகிர்ந்தளிப்பது எளிதான வேலை என நினைப்போம், ஆனால் அதில் பல சூட்சுமங்கள் உள்ளன அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

7. நிதானமான அணுகுமுறை

எடுத்தோம் கவிழ்த்தோம் என எந்த ஒரு விஷயத்தையும் புராஜக்ட் மேனேஜர் செய்யவே கூடாது. ஒரு புராஜக்ட் நாம் திட்டமிட்டபடி போகவே போகாது. பல சிக்கல்கள் வரும். நினைக்காத விஷயங்கள் பல நேரங்களில் நடக்கும் அதற்காக பதட்டப்படக் கூடாது. நிதானமாகச் செயல்பட வேண்டும். குழுவுக்குள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ, மேலிடத்திலிருந்தோ அழுத்தங்கள் வரும். அதற்காக அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. நிதானித்துச் செயல்பட வேண்டும். அது ஒரு புராஜக்ட் மேனேஜருக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான குணாதிசயம்.

8. பிரச்சினைகளைத் தீர்க்கும் பண்பு

புராஜக்ட் மேனேஜர் என்பவர் பிரச்சினையோடு பிறந்து, பிரச்சினையோடு புரண்டு, பிரச்சினையோடு வளர்பவர். அந்தப் பிரச்சினைகளையெல்லாம் அறிவுடன் தீர்த்து வைக்க வேண்டும். புராஜக்ட் மேனேஜர் கிட்டே போனா இந்த பிரச்சினை தீரும் என மக்கள் நம்பவேண்டும் அதுதான் சிறந்த புராஜக்ட் மேனேஜரின் அடையாளம். எந்த சிக்கல் எழுந்தாலும் பிரச்சினையைத் தீர்க்கும் சிந்தனையுடன் அதை அணுக வேண்டுமே தவிர, பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நபர்களை வைத்து ஒரு பிரச்சினையை அணுகக்கூடாது என்பது பால பாடம்.

9. குழுவைக் கட்டமைத்தல்

ஒரு குழுவைத் திறம்பட கட்டியெழுப்பும் திறமை ஒரு புராஜக்ட் மேனேஜருக்கு இருக்க வேண்டியது அவசியம். குழுவிலுள்ள மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து, பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்க வைப்பது கடினமான வேலை. அதை சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டியது ஒரு புராஜக்ட் மேனேஜரின் பணிகளில் முக்கியமான ஒன்று.

குழுவில் உற்சாகத்தை ஊட்ட வேண்டியதும், சரியான விகிதத்தில் திறமையானவர்களைக் கொண்டு குழுவைப் பின்ன வேண்டியதும் முக்கியமான விஷயங்கள்.

10. நேர்மையான பண்பு

ஒரு புராஜக்ட் மேனேஜர் நேர்மையானவராக இருக்க வேண்டும். வாக்கிலும், செயலிலும் நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும்.

உற்சாகமூட்டுகிறேன் என்பதற்காக பொய்யைச் சொல்வது தவறு. புராஜக்ட் ரிப்போர்ட்களையோ, மின்னஞ்சல்களையோ தவறான தகவல்களைச் சுமந்து செல்வது ரொம்ப தப்பு.

சொல்கின்ற விஷயங்களும், செய்கின்ற செயல்களும் நேர்மையாக இருக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் புராஜக்டை லாபகரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக நேர்மையை விட்டு விலகக் கூடாது.
ஒரு புராஜக்ட் மேனேஜருக்கு ஏகப்பட்ட நல்ல குணாதிசயங்கள் இருக்க வேண்டும், அதில் முக்கியமாக இந்த பத்து விஷயங்களும் நிச்சயம் இருக்கவேண்டும்.

– திட்டமிடுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here