ஆன்லைன் வழி பாடங்கள்!

264

-சுந்தரபுத்தன்

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் இணையவழி கற்றல், கற்பித்தல் முறைகள்
திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (NIT) கல்வி நிறுவனமும் மாணவர்களுக்காக உரையேடுகள், விளக்கக்காட்சிகள் மற்றும் பிற ஆய்வுப்பொருட்கள் ஆகியவற்றை கல்லூரி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் சான்றுகளின் மூலம், அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். மேலும், ஸ்வயம் இணையதளத்தில் உள்ள சில பாடங்களும்கூட மாற்றுப் பாடங்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பேராசிரியர்கள் காணொலிக்காட்சிகள் மூலம் பாடங்களை நடத்திவருகின்றனர். சரியான இணைய வசதி இல்லாத இடங்களில் இவ்வகுப்புகள் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.

திருச்சி என்ஐடி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ், “நவீன முறைகளில் கற்பிக்க பேராசிரியர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம். ஆன்லைன் வழி பாடங்கள் மாணவர்கள் தங்கள் ஊரடங்கு நேரத்தை சரியாக செலவிட உதவியாக இருக்கும். இணைய வழி வகுப்புகள் நடத்தத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

கூடுதலாக வாட்ஸ்ஆப், கூகுள் ட்ரைவ் போன்ற வலைத்தளங்களையும் பேராசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் மாணவர்கள் பாடங்கள் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். இணையம் மூலம் அசைன்மெண்ட்களை மாணவர்கள் அனுப்புகின்றனர்.

அசைன்மெண்டுகள் அவர்களுடைய பாடங்கள் சார்ந்த பேராசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
மாணவர் நலன்களைக் கவனிக்கும் என்ஐடி பேராசிரியர் என். குமரேசன், “ஊரடங்கு நேரத்தில் மாணவர்கள் பயனுள்ள வகையில் நேரத்தை பயன்படுத்தும் நோக்கத்துடன் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளோம். எங்களுடைய 25 சதவீத பேராசிரியர்கள் இணையத்தைப் பயன்படுத்தி வகுப்புகள் எடுக்கின்றனர். பவர்பாயிண்ட் மூலம் வகுப்புகளை விளக்கி, இணையதளத்தில் பதிவிடுகிறார்கள். அதனை மாணவர்கள் டவுன்லோடு செய்துகொண்டு படிக்கலாம். வீடியோ கான்பரன்சிங் முறையிலும் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

பல மாணவர்கள் அவசரத்தில் லேப்டாப்புகளைக்கூட விடுதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். பாடத்திட்டத்தில் பல போர்ஷன்கள் நடத்தப்படவில்லை. அதனையே ஆன்லைன்வழியாக நடத்துகிறோம். இனிமேல் மாணவர்கள் கல்லூரிக்குத் திரும்பும்போது தேர்வு எழுதும் அளவுக்குத் தயாராகிவருவார்கள்.

அசைன்மெண்ட்ஸ் கொடுக்கப்படுகின்றன. அதனை கையில் எழுதி ஸ்கேன் செய்து அனுப்பவேண்டும்” என்கிறார்.

இணையம் மூலம் நடத்தமுடியாத ஆய்வுப் படிப்புகளை நிறைவு செய்ய, ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் சில நாட்களுக்கு மாற்றுக் கால அட்டவணைப்படி வகுப்புகள் நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இணையம் மூலமாகவே தேர்வுகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here