லிப்ட் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ

229

-சுந்தரபுத்தன்

இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகமாகும் புதுமையான டிப்ளமோ படிப்பு

சென்னையில் உள்ள நாட்டின் முன்னணி லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் நிறுவனமான கோன் இந்தியா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிட்காரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து லிப்ட் தொழில்நுட்பம் பற்றிய வெர்டிக்கல் டிரான்ஸ்போர்ட்டேஷன் என்ற மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

இரு நிறுவனங்களும் டிப்ளமோ படிப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவின்கீழ் வழங்கப்படும் டிப்ளமோவில் சிறப்புப் படிப்பாக, வெர்டிக்கல் டிரான்ஸ்போர்ட்டேஷன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும். மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும்.

கல்வித்தகுதி

லிப்ட் தொழில்நுட்பம் பற்றிய டிப்ளமோ படிப்புக்குத் தேவையான, தரமான பாடத் திட்டம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் திறன் மேலாண்மை போன்றவற்றை கோன் இந்தியா நிறுவனமும் சிட்காரா பல்கலைக்கழகமும் இணைந்து கல்வி மற்றும் தொழில் அனுபவத்துடன் வடிவமைத்துள்ளன.

உலக நாடுகளில் வேகமாக வளர்ந்துவரும் வெர்டிக்கல் டிரான்ஸ்போர்ட்டேஷன் துறையில் நிபுணர்களை உருவாக்க டிப்ளமோ தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுபோன்ற தனித்துவமான படிப்பு மாணவர்களுக்கு வழங்கப் படுவது இதுவே முதல்முறை. இந்த டிப்ளமோ படிப்பில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் சேரலாம்.

பயிற்சியும் வேலையும்

படித்து முடிப்பவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பும் காத்திருக்கிறது. மூன்று ஆண்டு படிப்பின் இறுதி ஆண்டில் கோன் இந்தியா நிறுவனத்தில் ஐந்து மாத காலம் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பயிற்சிக் காலத்தில் உற்பத்தி, இன்ஸ்டாலேஷன், கமிஷனிங் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

கோன் இந்தியா நிறுவனத்தில் பெறும் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்குப் பிறகு, டிரெய்னியாக மாறுவதற்கு ஒரு தேர்வை எழுதவேண்டும். பின்னர் இன்ஸ்டாலேஷன் பொறியாளர்கள், பாதுகாப்பு மற்றும் தர மேலாளர்கள், டெக்னிக்கல் லைன் பொறியாளர்கள் போன்ற பணிகளில் சேர்ந்து உயரமுடியும்.

“தொழில்துறை மற்றும் பல்கலைக்கழக கூட்டு முயற்சியுடன் இளைய தலைமுறையின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் திறன்மிகுந்த பட்டதாரிகளை உருவாக்குவதற்கும் கோன் இந்தியா உறுதிகொண்டுள்ளது” என்கிறார் கோன் இந்தியா மேலாண்மை இயக்குநர் அமித் கோஸைன்.

இரு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் கோன் இந்தியாவின் வலிமையும் சேர்ந்து தொழில் சார்ந்த பாடத்திட்டம், பயிற்சிகளுடன் சேர்ந்து பணியாற்றும் நிறுவனங்களுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடிய திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்க இருக்கிறார்கள்.

விவரங்களுக்கு: www.chitkara.edu.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here