மாணவர்களுக்காக இலக்கிய அகராதி!

325

-சுந்தரபுத்தன்

தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயன்படும் மாணவர் இலக்கிய அகராதியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமூகத்தின் பல நிலைகளிலும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுத்து நடைமுறை சொல்லகராதி மற்றும் அயற்சொல் அகராதியையும் வெளியிடவுள்ளார்கள்.

ஏற்கெனவே, மக்களிடம் அன்றாடப் பயன்பாட்டிற்கு வரும் புதிய தமிழ்க் கலைச் சொற்களை சொல் உண்டியல் மூலம் சேகரிக்கும் சொற்குவை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவருகிறார்கள். தமிழகம் முழுவதும் 13 கலை அறிவியல் கல்லூரிகளுக்குச் சென்று 43 ஆயிரம் மாணவர்களைச் சந்தித்து தமிழ்ச் சொற்களைச் சேமித்துள்ளார்கள். சொற்களை சேகரிக்கும் பணி தினமும் தொடர்கிறது.

ஆங்கிலச் சொற்களைத் தொகுத்து வேர்ட் கார்ப்பஸ் என்று வைத்துள்ளார்கள். அந்த மொழியைக் கற்பவர்களுக்கும், ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் பெரிதும் அது பயனளிக்கிறது. புதிய கலைச்சொற்களைப் படைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கிறது. அதுபோலவே தமிழைக் கற்பவர்களுக்கும், மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும், தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் பயன்படும் வகையில் அகராதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனர் தங்க காமராஜ், “மொழிக்கு அடிப்படை சொற்களே. சொல் வளமே மொழி நலம். காலந்தோறும் ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் பதியவேண்டியது அகராதியின் நோக்கமாகும். மொழியின் நிலைப்புத் தன்மைக்கு இத்தகைய கட்டமைப்பு இன்றியமையாததாகும்.

அதனால்தான் அகராதிப் பணி என்பது கால எல்லைக்குள் சுருங்கி விடாமல், தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஆய்வுப்பணி” என்று விவரிக்கிறார்.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களின் வழிகாட்டலின்றி மாணவர்கள், தங்களுக்குத் தாங்களே படித்து விளங்கிக்கொள்ள உதவியாக இலக்கியங்களில் உள்ள அருஞ்சொற்களின் பொருள்களைத் தொகுத்துப் பதிவு செய்திருப்பது மாணவர் இலக்கிய அகராதி. கேளிர், களிறு, இமில், ஏறு, ஏது போன்ற சங்க இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்படும் பழந்தமிழ்ச் சொற்களுக்கான பொருளும் விளக்கமும் இந்த அகராதியில் அளிக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதற்கும் தமிழ் இலக்கிய வளத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளவும் உதவும்.

தமிழகத்தில் பல காலகட்டங்களில் பிறமொழிச் சொற்கள் தமிழ் மொழியுடன் இரண்டற கலந்துவிட்டன. இன்றும் அவை மக்களிடம் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட வாழ்விலும் பேச்சிலும் கலந்த சொற்களைத் தொகுத்து அகர வரிசைப்படுத்தி, அதற்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பதிவு செய்திருப்பது அயற்சொல்லகராதி. சந்திரன், சத்தம், சம்மதம், சன்னல், சவடால் போன்ற ஆயிரக்கணக்கான பிறமொழிச் சொற்களுக்கு தமிழில் பொருள் அளிக்கப்பட்டுள்ளது.

அகராதிகளை உருவாக்குவதற்கும் வெளியிடுவதற்கும் தனித்துவமாக தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். விரைவில் அவர்கள் வெளியிடப் போகும் மூன்று அகராதிகளில் ஒன்று நடைமுறைத் தமிழ்ப் பேரகரமுதலி. பொதுவாக வீடுகள், அலுவலகம், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், சிறுகதை, புதினம், கவிதை என அனைத்து வகையிலும் பயன்படுத்தப்படும் நடைமுறைச் சொற்கள் தொகுக்கப்பட்டு நடைமுறைச் சொல்லகராதி தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்பாட்டில் உள்ள சொற்களைத் திரட்டி அகராதி வடிவில் வெளியிடுதல், நடைமுறையில் உள்ள சொற்களின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் புழக்கத்திற்குக் கொண்டுவருதல், அந்தச் சொற்களுக்குத் தமிழில் பொருள் விளக்கம் கூறுதல், இணையான ஆங்கிலப் பொருள் விளக்கத்தையும் கூறுதல், தேவையான இடங்களில் சொற்களின் பொருள் விளக்கத்தைத் தகுந்த எடுத்துக்காட்டுத் தொடரின் மூலம் விளக்குதல் போன்ற சிறப்புகளை அந்த அகராதி வைத்துள்ளது.

இணையம், முகநூல், மருந்தாளுநர், நடமாடும் நூலகம், இசைக்குழு, ஊரடங்கு உத்தரவு, ஊடுகதிர், பச்சைப்பிள்ளை போல அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் சொற்களுக்குப் பொருளும் விளக்கமும், அதற்கான ஆங்கிலச் சொல்லும் நடைமுறை அகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும். மூன்று அகராதிகள் ஒவ்வொன்றும் 400 பக்க அளவில் 8 ஆயிரம் சொற்கள் வீதம் வெளியிடப்படவுள்ளன. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

அகராதி உருவாக்கம் பற்றிப் பேசிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனர் தங்க காமராஜ், “தமிழ்மொழியின் சொல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல வகைப்பட்ட அகராதிகளைத் தயாரிக்கும் பணியில் தமிழ் வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதலுடன் ஈடுபட்டுவருகிறோம்.

சொற்களைச் சேகரிப்பதற்காக சொற்குவை திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். பலதரப்பினரிடம் இருந்தும் சேகரமான சொற்களை முறைப்படி தொகுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு அகராதிக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் பணியில் இருக்கிறார்கள். தமிழ் ஆய்வாளர்களின் வழிகாட்டு நெறிகளுடன் எங்களுக்குள் உரையாடி, விவாதித்து சொற்களைத் தொகுத்துவருகிறோம். இளம் தலைமுறையினரிடம் சொல்வளத்தைக் கொண்டுசேர்ப்பது, பிறமொழிக் கலப்பில்லாத தமிழ்ச் சொற்களை அடையாளம் காட்டுவது, பிறமொழிக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை மாணவரும் மற்றவரும் உருவாக்குவதற்குத் துணைநிற்பது எனப் பல உயரிய நோக்கங்களுடன் செயல்பட்டுவருகிறோம்” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here