-மோ. கணேசன்
தேசிய அளவில் DBT – JRF 2020 (Department of Biotechnology – Junior Research Fellowship) என்ற நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் உயிரித் தொழில்நுட்பவியல் துறை வெளியிட்டுள்ளது.
உலகில் எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் உயிரித் தொழில்நுட்பவியல் துறையில் அரசின் உதவித்தொகையோடு ஆராய்ச்சி செய்ய விரும்பும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் உயிரித் தொழில்நுட்பவியல் துறையின் உதவித்தொகை பெற்று இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம்.
கல்வித்தகுதி
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று ஆராய்ச்சியில் சேர விரும்புவோர் பயோ டெக்னாலஜி துறையில் எம்.எஸ்சி, எம்.டெக், எம்.வி.எஸ்சி, பிஎஸ்-எம்எஸ், பி.டெக், பி.இ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் படித்து முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி. லைஃப் சயின்ஸ்/ பயோ சயின்ஸ் / விலங்கியல், தாவரவியல், மைக்ரோ பயாலஜி, பயோ பிசிக்ஸ் படித்திருப்பவர்களும் நுழைவுத்தேர்வை எழுதலாம்.
பொதுப்பிரிவினர், ஓபிசி, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் ஆகியோர் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கு 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
நுழைவுத்தேர்வு
டிபிடி – ஜேஆர்எஃப் 2020 தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் உதவித்தொகை பெறுவதற்கான மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
பொதுப்பிரிவினர், ஓபிசி, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. ஏனைய பிரிவினருக்கு ரூ. 250. ஆன்லைன் மூலமாக கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 18.5.2020
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: 30.6.2020
விவரங்களுக்கு: https://rcb.res.in/BET2020