இது மகிழ்ச்சி கொரோனா ஒழிந்தால் தங்கம் விலை குறையலாம்! இது அதிர்ச்சி கச்சா எண்ணெய் சரிந்தும் பெட்ரோல் விலை குறையவில்லை!

300

-சு. வீரமணி

கொரோனோ தொற்று ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் அனைத்தும்கூட மூடியிருக்கின்றன, ஆனாலும், ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

32 ஆயிரத்தில் இருந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை இப்போது 36 ஆயிரத்தையும் தாண்டி உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனோ அச்சத்தில் இருக்கும் மக்கள் உயரும் தங்கத்தின் விலையைக் கண்டு, திருமணம் போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது என்று விழிபிதுங்கி நிற்கின்றனர். ஏன் இந்த விலையேற்றம்? மீண்டும் இறங்குமா?

தங்கம் விலை ஒருபக்கம் உயர்கிறது என்றால், இன்னொரு பக்கம் கச்சா எண்ணை விலை தரைமட்டத்திற்கு சரிந்துள்ளது. அமெரிக்கா உபயோகிக்கும் உயர்ரக கச்சா எண்ணெய்யின் விலை பூஜ்ஜியத்திற்கும் கீழாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய விலை சரிவிற்கு பிறகும்கூட இந்தியாவில் ஒரு ரூபாய்கூட பெட்ரோல் விலையை குறைக்காமல், தினசரி பெட்ரோல் விலை நிர்ணய நடவடிக்கைகளையே நிறுத்தி, 40 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் விலையை ஒரே மதிப்பில் வைத்துள்ளது மத்திய அரசு.

சரி, அது இருக்கட்டும். ஏன் தங்கம் விலை உயர்கிறது? ஏன் கச்சா எண்ணெய் விலை சரிகிறது? இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளதா?

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

நகைக்கடைகள் திறக்கவில்லை வணிகமும் நடக்கவில்லை; ஆனாலும், எப்படி தினமும் தங்க நகையின் விலை மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது? பொருளாதார வல்லுநர் சோம.வள்ளியப்பனிடம் கேட்டோம். “தங்கம் வணிகத்தைப் பற்றிய நமது பார்வை என்பது சில குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே உள்ளது, அதனால்தான் நமது பார்வைக்கு ஏற்றப்படி அதன் வணிகத்தையும் விலை ஏற்ற இறக்கத்தையும் கற்பனை செய்து கொள்கிறோம்.

தங்க நகை வணிகம் என்றாலே அட்சயதிருதியை அல்லது திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காகக் கடைக்கு சென்று ஐந்து அல்லது பத்து பவுன் வாங்குவது என்றுதான் நினைத்துக்கொள்கிறோம். இதுபோன்ற ஆபரணத் தங்க விற்பனை சில்லறை விற்பனை எனப்படும். இது மாதிரியான சில்லறை விற்பனையில் தங்க வணிகம் என்பது மிகக்குறைந்த சதவீதம்தான்; இதுமட்டுமே இப்போது கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தங்கத்திற்கு இருக்கும் தேவை என்பது பல வகைகளில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களின் தேவைக்காகவும் பொருளாதார ஸ்திர தன்மைக்காகவும் அதிகளவில் தங்கம் வாங்கி வைத்துக்கொள்வார்கள். அதன்படி அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் அதிகளவு தங்கத்தை இருப்பாக வைத்துள்ளனர்.

அதுபோல உலகம் முழுவதும் வணிக முதலீட்டிற்காக ‘எக்ஸ்சேஞ்ச் டிரேடர் ஃபண்ட்’ எனும் முறை உள்ளது. இதன் மூலமாக அதிக அளவில் தங்கம் வாங்கி வைத்திருப்பார்கள். மேலும், தனிநபர்கள் எனப்படும் எச்.என்.ஐ. (HIGH NETWORTH INDIVIDUALS), இவர்களும் இப்போது பங்குச்சந்தைகள் நிலையாக இல்லை என்பதால் தங்கத்தை அதிகளவில் வாங்கி வைக்க ஆரம்பித்துள்ளனர். மேலும், ஆன்லைனில் கமாடிட்டி எனப்படும் முன்பதிவு முறை மூலமாக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தி தங்கம் வாங்கி வைத்துக்கொள்வதும் அதிகரித்துள்ளது. மேலும், தங்கப் பத்திரங்களும் இப்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல பல முறைகளில் தங்க நகை விற்பனை செய்யப்படுகிறது” என்கிறார்.

தொடர்ந்து பேசும் அவர், “இப்போது சில்லறை வணிகத்தில் தங்கம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற வகைகளில் தங்க வணிகம் கூடுதலாக சுறுசுறுப்படைந்துள்ளது. உண்மையாக பார்க்கவேண்டுமானால் ஒட்டுமொத்த தங்க வணிகத்தில் ஆபரணத் தங்கத்தின் சில்லறை விற்பனை என்பது அதிக பட்சம் 10 சதவீதம்தான் இருக்கும். அதுவும் இந்தியா மற்றும் சீனாவில்தான் சில்லறை விற்பனை அதிகம். மற்ற அனைத்து நாடுகளிலும் மேற்சொன்ன முறைகளில்தான் 90 சதவீதம் தங்க வணிகம் நடைபெறுகிறது.

கொரோனோ காரணமாக இப்போது உலகளவில் பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும் என்ற அச்சம் அனைவரிடமும் இருக்கிறது. அந்த நிச்சயமற்ற தன்மைக்கு மாற்றாகவும் முதலீட்டுக்கு உகந்ததாகவும் தங்கம் பார்க்கப்படுகிறது. இதனால்தான், மேலும் மேலும் அதிகளவில் தங்கம் வாங்கப்படுகிறது.

எனவேதான், இப்போது கிடுகிடுவென தங்கம் விலை உயர்கிறது. ஆதலால், கொரோனோ கிராஃப் இறங்கும் வரைக்கும் தங்கத்தின் விலை உச்சத்தில்தான் இருக்கும்” என்கிறார்.

கச்சா எண்ணெய் விலை ஏன் குறைகிறது?

கொரோனோ வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரச் செயல்பாடுகள் இல்லாமல் போய்விட்டன. வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து என அனைத்து துறைகளும் கொரோனோ காரணமாக முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசலின் தேவை பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்துள்ள பெட்ரோலியக் கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாததால் மிகக்குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை விற்றுவருகிறார்கள்.

ஆனால், இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கும்போதும், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.28 ரூபாயாகவும் டீசல் விலை லிட்டருக்கு 65.71 ரூபாய் எனவும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஒரே நிலையில் விற்கப்பட்டு வருகிறது.

இது பற்றி நம்முடன் பேசிய பொருளாதார வல்லுநர் ஜோதி.சிவஞானம், “ஒபெக் எனப்படும் அரபு நாடுகளின் கூட்டமைப்பின் மூலமாகத்தான் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் தலைமையாக சவூதி அரேபியா உள்ளது, சவுதி அரேபியா தலைவர் என்பதால் அந்த நாட்டின் எண்ணெய் உற்பத்திக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், மற்ற நாடுகள் ஒபெக்கின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும்.

ஒபெக் பிளஸ் எனப்படும் முறை மூலமாக ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து இக்கூட்டமைப்புடன் இணைந்து இயங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக ரஷ்யா, சவூதி அரேபியாவிடம் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்குமாறு கோரிக்கை வைத்தது. ஆனால், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு போட்டியாக சவூதியிடம் உற்பத்தியை அதிகரிக்க சொன்னது. இந்த நேரத்தில்தான் மார்ச் வருடக் கணக்கு முடிவும், கொரோனோவும் ஒன்றாக வந்து சேர்ந்தது. எனவே, கடந்த நிதி ஆண்டுக்கான வணிகத்தை நிறைவு செய்வதற்காக உற்பத்தி செய்து வைத்துள்ள கச்சா எண்ணெய்யை விற்க ஒபெக் முயன்றபோது, உலகம் முழுவதும் கொரோனோ பெருந்தொற்று காரணமாக முடங்கிப் போயிருந்ததால் பெட்ரோல், டீசல் நுகர்வு பெருமளவில் குறைந்துவிட்டது.

இதனால்தான் கச்சா எண்ணெய்யின் விலை அதள பாதாளத்தில் விழுந்தது.

விமான எரிபொருள்தான் அதிக அளவில் விற்பனையாகக் கூடியது. விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட உடனே எரிபொருள் நுகர்வு பெருமளவு குறைந்தது. அதன்பிறகு ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துகள் உலகளவில் நிறுத்தப்பட்டவுடன் எரிபொருள் நுகர்வு இன்னும் சரிந்தது. ஏற்கனவே கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாக உள்ள சூழலில், நுகர்வும் பெருமளவில் குறைந்துவிட்டதால் கச்சா எண்ணெய் விலை அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

159 லிட்டர் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் எனப்படும். இந்தியா பயன்படுத்தும் கச்சா எண்ணெய்யின் விலை 2008ஆம் ஆண்டு ஒரு பீப்பாய் 147 டாலராக இருந்தது, அது இப்போது வெறும் 18 டாலராக குறைந்துவிட்டது.

இந்த சூழலை பயன்படுத்தி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பதுதான் பெரும் சோகம்” என்கிறார் வருத்தத்துடன்.

தொடர்ந்து பேசும் அவர், “இப்போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்திருப்பது இறக்குமதி செய்யும் நம் போன்ற நாடுகளுக்கு பெரும் பலன். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே நமது பொருளாதாரம் சரிந்து கிடந்தது. இப்போது கொரோனோ காரணமாக இன்னும் நிலைமை மோசமாகி இருக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவை சிறப்பாக நம் நாடு பயன்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார்.

மக்கள் கருத்து

ரேவதி, சென்னை

ஒரு பக்கம் கொரோனோ காரணமாக சிறு, குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது, இதனால், அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் சவாலாக மாறியுள்ளது. வரும் நாட்களிலும் பொருளாதாரம் மேம்படும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. ஏனென்றால், மக்கள் கையில் காசு சுத்தமாக இல்லை. மறுபக்கம் தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இப்படி இருந்தால் ஏழை, எளியக் குடும்பங்கள் எப்படி பெண்களை திருமணம் செய்துவைக்க முடியும்? எப்படி நகை வாங்க முடியும்?

சீனிவாசன், தஞ்சாவூர்

நான் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறேன். இப்போது என் சம்பளத்தை பாதியாக குறைத்துவிட்டார்கள். ஆனால், இப்போதும் மாதாமாதம் பெட்ரோலுக்காக மட்டும் மூன்றாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. தினமும் செய்திகளில் பார்க்கும்போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளதாக சொல்கிறார்கள்.

இருந்தாலும் இந்தியாவில் அதே விலைதான். இப்போது இருக்கும் பொருளாதார சிக்கலுக்கு பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைத்தாலே, பொருட்களின் விலையும் குறையும். மக்களிடம் பணப்புழக்கமும் அதிகமாகும். இந்திய பொருளாதாரமும் உயரும். ஆனால், மக்கள் நலன் அரசு என்று வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே கூறிக்கொண்டு, பல நூறு மடங்கு வரிவிதித்து மக்கள் வயிற்றில்தான் அடிக்கிறது மத்திய அரசு.

600 மடங்கு வரி!

“18 டாலரின் இந்திய மதிப்பு 914 ரூபாய். ஒரு பீப்பாய கச்சாய் எண்ணெய் விலை 18 டாலர் என்றால் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யின் விலை இந்திய மதிப்பில் 5.75 ரூபாய். இதற்கு நுழைவு வரி, சுத்திகரிப்பு கட்டணம், டீலர் கமிஷன், போக்குவரத்து இதனையெல்லாம் 5.50 ரூபாய் ஆகும். அப்படியானால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 11.25 ரூபாய்தான். இதற்கு மேல் விதிக்கப்படும் அனைத்துமே வரிதான். இப்போது விலை 72.28 ரூபாய் என்றால் கிட்டத்திட்ட 61 ரூபாய் வரியாக விதிக்கப்படுகிறது. அதாவது 600 சதவீத வரி. உலகிலேயே எந்த நாட்டிலும் இவ்வளவு வரி கிடையாது. இந்த 61 ரூபாயில் சுமார் 15 ரூபாய் மட்டுமே மாநில அரசுக்கு வாட் வரியாக கிடைக்கும். மற்ற அனைத்துமே மத்திய அரசுக்குத்தான் போகும். 11.25 ரூபாய்க்கு 30 சதவீதம் வரி போட்டால்கூட 15 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கலாம்” என்கிறார் ஜோதி. சிவஞானம்
இதுதான் மக்கள் நலனா?

“முன்பெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை அரசுதான் நிர்ணயிக்கும். கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்து அரசே விலையையும் நிர்ணயம் செய்தார்கள்.

2010ஆம் ஆண்டுக்குப் பிறகு எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயிக்கலாம் என்று விதிகளை மாற்றினார்கள். ஆனால், டீசல் விலை அத்தியாவசிய தேவை என்பதால் அதுமட்டும் அரசின் கைகளில் இருந்தது.

அதன்பிறகு மோடி அரசு பெட்ரோல், டீசலுக்கு வழங்கும் அனைத்து மானியங்களையும் ரத்து செய்துவிட்டு, அதன்விலையை எண்ணெய் நிறுவனங்களே தினசரி நிர்ணயிக்கலாம் என்றும் விதிகளை மாற்றினார்கள்.

அதனால் கச்சா எண்ணெய் விலை உயரும்போது நிறுவனங்கள் விலையை உயர்த்தின. கச்சா எண்ணெய் விலை குறையும்போது அரசு கிடுகிடுவென வரியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்த்திக்கொண்டே வருகிறது.

இப்போது அதலபாதாளத்தில் கச்சா எண்ணெய் விலை கிடக்கும்போது 40 நாட்களுக்கும் மேலாக தினசரி விலை நிர்ணயத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால்தான் இப்போது கச்சா எண்ணெய் இவ்வளவு விலை குறைந்தும்கூட பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனோ காரணமாக இந்த தினசரி விலை நிர்ணயத்தை நிறுத்தி வைக்கவில்லை, கச்சா எண்ணெய் விலை சரியத்தொடங்கியவுடனே இதனை நிறுத்திவிட்டனர் என்பதுதான் கொடுமை. இதுதான் மக்கள்நல அரசா?” என்று கேள்வி எழுப்புகிறார் ஜோதி சிவஞானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here