காந்தி கணக்கு கச்சிதம் நமக்கு!

544

– உ.ஸ்ரீராமநாராயணன்

காந்திஜி கற்றுத் தந்த ‘மினிமலிஸம்’ வாழ்க்கை

உலக பொருளாதாரத்தை மட்டுமல்ல, குடும்ப பொருளாதாரத்தையும் சேர்த்தே கபளீகரம் செய்திருக்கிறது கொரோனா. இந்த வைரஸுக்கு பிந்தைய மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கும்?

யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை. ரெஸ்யூம் பட்டனை தட்டுவதுபோல் விட்ட இடத்திலிருந்தே எல்லோரின் இயல்பு வாழ்க்கையும் தொடங்கிவிடுமா அல்லது வேறுவிதமாக இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை பற்றி பேசும்போது ‘மினிமலிசம்’ என்ற வார்த்தை பலராலும் முன்வைக்கப்படுகிறது.

மினிமலிசம் என்றால் என்ன?

கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து பிற பொருட்கள் வாங்குவதை மக்கள் அடியோடு குறைத்துவிட்டனர். வாங்க நினைத்தாலும் அதற்கான வழிகளை இந்த லாக்டவுண் தடுத்துவிட்டது. மக்களுக்கும் அத்தியாவசிய பொருள்களை தாண்டி மற்ற ஆடம்பர பொருள்கள் கிடைக்காமல் இருப்பதால் வருத்தப்படுவதாக தெரியவில்லை. இந்த இடம்தான் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ‘மினிமலிஸ்ட்’களாக வாழத்தொடங்கியிருக்கும் இடம். இந்த பழக்கம் அப்படியே தொடரும் பட்சத்தில் லாக்டவுனுக்கு பிறகு பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வாழ்வதற்கு அத்தியாவசியமான அடிப்படை பொருள்கள் மட்டும் போதும் ஆடம்பரங்கள் தேவையில்லை என்பதே ‘மினிமலிஸ்ட்’ கான்செப்ட்டின் ஒன்லைன். பல நாடுகளில் இந்த ‘மினிமலிஸ்ட்’ வாழ்க்கை முறை வேகம்பெற தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை இந்த மினிமலிசம் குறித்து பெரிதாக யாரும் கருத்தில் கொண்டதில்லை. ஆனால், ஒரு காலத்தில் நம் தேசப்பிதா மகாத்மா காந்தியே ஒரு ‘மினிமலிஸ்ட்’தான். கோட் சூட்டை துறந்ததிலிருந்து தொடங்கிய அவரின் மினிமலிசம் ஒரு கட்டத்தில் அவர் வாழ்வதற்கு மூக்குக் கண்ணாடி, வாட்ச், சாப்பாட்டு தட்டு இந்த பொருள்கள் மட்டுமே போதும் என்ற நிலைக்கு உச்சம்பெற்றது.

இன்றும் பல தலைவர்கள் மினிமலிச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் காந்திக்குப் பிறகு மினிமலிசத்தை ஒரு இயக்கமாக முன்னெடுக்க எந்த தலைவரும் புறப்படவில்லை. உலகமயமாக்கல் மக்களுக்கு முரட்டுத்தனமான நுகர்வு கலாச்சாரத்தைப் பழக்கப்படுத்தியது. தேவையானது எது? தேவையற்றது எது? மக்கள் யோசிப்பதற்கு முன் ஆஃபர், இஎம்ஐ, டிஸ்கவுண்ட் என அடுத்தடுத்த விளம்பர வலைகளை வீசி சிக்கலான வாழ்வியலுக்குள் இழுத்துவிட்டுள்ளனர். ஆனால், இஎம்ஐ போன்ற பிக்கல் பிடுங்கல் கள் இல்லாத ஒரு குடும்பத்துக்குள் காணப்படும் பிணைப்புக்கும் வீட்டு லோன், கார் லோன், பைக் லோன் என எல்லா இம்சைகளையும் இழுத்துப் போட்டிருக்கும் குடும்பத் துக்குள் இருக்கும் பிணைப்புக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

வீட்டிற்குள் நாம் தேவையென்று வாங்கி போட்டிருக்கும் பல பொருள்களை மூன்று விநாடிகள் நின்று குறுகுறுவென உற்றுப் பார்த்தால் புரிந்துவிடும் நாம் அந்த பொருளை வாங்கிய நாளோடு சரி அதன்பிறகு பயன்படுத்தவே இல்லை என்பது. இந்த லாக்டவுண் இல்லையென்றால் இந்த இரண்டு மாதத்தில் எவ்வளவு ஷாப்பிங் என்ற பெயரில் எவ்வளவு பொருள்களை வாங்கி குவித்திருப்போம்!? இப்போது அதெல்லாம் இல்லாமல் நம்மால் வாழ முடியாமல் போய்விட்டதா?

இப்படி, நமது தேவைகள் மீது நாமே கேள்வி எழுப்பிக்கொள்வதுதான் மினிமலிசத்தின் அடிப்படை சாரம். மக்கள் இவ்வளவு வறுமையில் இருக்கும்போது நமக்கு எதற்கு மேலாடை என காந்தி தனக்கு தானே கேள்வி எழுப்பியதன் விளைவே காந்தியைக் கோட் சூட்டை துறக்க செய்தது.

காந்தி பேசிய தற்சார்பு பொருளாதாரமும் மினிமலிசமும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப் பட்டவை. இன்றைய சூழலில் மினிமலிஸம் பற்றி மட்டும் பேசிவிட்டு கடந்துவிட முடியாது. தற்சார்பு பொருளாதாரத்தின் தேவையையும் இந்த கொரோனா தொற்று விழித்துக்கொள்ள செய்துள்ளது.

நமக்குத் தேவையானவற்றை நம்மை சுற்றியுள்ள மூல ஆதாரங்கள் மூலம் நாமே பூர்த்தி செய்துகொள்வது தற்சார்பு பொருளாதாரம். காந்தியின் கனவுப்படி ஒவ்வொரு கிராமமும் தானே தன்னந்தனியாக தற்சார்பு பொருளாதாரத்தால் கால் ஊன்றி நிற்க வேண்டும். அந்த கிராம மக்களுக்கு தேவையான உணவு, வேலைவாய்ப்பு உட்பட எல்லாமும் அந்த கிராமத்திலேயே கிடைக்க வேண்டும்.

காந்தியின் தற்சார்பு பொருளாதாரத்தை, டெல்லியிலும் சென்னையிலும் இருந்து தொழிலாளர்கள் சாரை சாரையாகச் சொந்த ஊருக்கு கிளம்பின காட்சியோடும் ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு சீனாவை எதிர்பார்த்து இருபது நாள் காத்திருந்த நமது அரசாங்கத்தோடும் ஒப்பிட்டு பார்த்தால் புரியும், காந்தியின் கனவுகள் எவ்வளவு பெரியதென்று.

பல் துலக்கும் பேஸ்ட், ப்ரஷ் முதற்கொண்டு உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி பழகிவிட்ட சூழலில் காந்தியின் தற்சார்பு பொருளாதாரத்தை இன்றைய சூழலில் உலக நாடுகளும் சரி இந்தியாவுமே சரி எந்தளவுக்கு கிரகித்து கொள்ள முடியும் என தெரியவில்லை. ஆனாலும், என்றாவது ஒரு நாள் இன்றைய பொருளாதார பாதையில் பயணித்து முட்டிக்கொண்டு நிற்கும்போது காந்திய பொருளாதார முறையின் தேவையை உலகம் உணரும்.

உலகம் முழுவதும் லாபி செய்து ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்து, கடைசியில் உயிர் காக்கும் வெண்டிலேட்டர் இல்லாமல், இன்று கொரோனாவால் பல்லாயிரம் உயிர்களை பறிகொடுத்து நிற்கும் அமெரிக்காவுக்கும் காந்தி தேவைப்படுகிறார்; ஆண்டிப்பட்டி சந்தையில் நாளை என்ன ஆகுமென்று தெரியாமல் கூடுதலாக இரண்டு கிலோ வெங்காயத்தை அள்ளி போட சொல்லும் நம்மூர் சாமானியனுக்கும் காந்தி தேவைப்படுகிறார்.

‘ஒவ்வொருத்தரின் தேவைக்கும் இந்த பூமியில் வழியிருக்கிறது. ஆனால், பேராசைகளுக்கு இல்லை. நமது விருப்பங்களை எளிமைப்படுத்துவதுதான் பெரிதும் விரும்பப்பட வேண்டிய விஷயம்’ என்கிறார் காந்தி.
உலகமே கிராமமானது போதும், இனி காந்தி யின் கனவுப்படி ஒவ்வொரு கிராமமும் ஒரு உலகமாகட்டும்!
‘ஒவ்வொருத்தரின் தேவைக்கும் இந்த பூமியில் வழியிருக்கிறது.

ஆனால் பேராசைகளுக்கு இல்லை. நமது விருப்பங்களை எளிமைப்படுத்துவதுதான் பெரிதும் விரும்பப்பட வேண்டிய விஷயம்’

– காந்தியடிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here