குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மத்திய அரசுக்கு எதிரான மாநில அரசுகளின் ‘ஒத்துழையாமை’ போராட்டங்களும் உச்சத்தை அடைந்துள்ளன!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, பாஜக தவிர்த்த பல்வேறு மாநில அரசுகளும், தங்கள் மாநிலத்தில் அதனை நடைமுறைப்படுத்த மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரள அரசு முதல்முறையாக அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து பஞ்சாப் சட்டமன்றத்திலும் ஆளும் காங்கிரஸ் அரசு தீர்மானம் நிறைவேற்றியது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகளும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றப்போவதாக அறிவித்துள்ளன. பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். அதற்காக மோடி எங்கள் அரசை கலைத்தாலும் கவலைப்படமாட்டோம்” என்று சவால்விட்டுள்ளார்.

இதனிடையே, கேரள அரசு இன்னும் ஒருபடி மேலே போய், இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தன்னுடைய அனுமதியின்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசிடம் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் விளக்கம் கேட்டு, அது ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது தனிக்கதை.

சரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை எதிர்க்க மாநில சட்டசபைக்கு அதிகாரம் உண்டா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் கூறுவது சட்ட சாசனத்திற்கு எதிரானதா? பல்வேறு தரப்பினருடமும் கேட்டோம்.

மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது!

தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் உ.பலராமன், “நாடாளுமன்றம் இயற்றுகின்ற ஒரு சட்டத்துக்கு எதிராகவும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற ஒவ்வொரு மாநில சட்டப்பேரவைக்கும் உரிமை உண்டு. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டமானது, அரசமைப்புச் சட்டத்தின் 7ஆவது அட்டவணையின் கீழ் இயற்றப்பட்டுள்ளதால், இச்சட்டத்தை அமல்படுத்தமுடியாது என்று கூற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது.

அது தெரிந்தும் ஏன் தீர்மானம் இயற்றப்படுகிறது என்றால், குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினராலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது மாநில அரசுகள் இயற்றிய இத்தகைய தீர்மானங்கள் வழக்கில் தாக்கத்தை செலுத்தும். அது குடியுரிமை திருத்தத்திற்கு எதிராக சாதகமான தீர்ப்பு வர உதவும்” என்கிறார் உறுதியுடன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரா.சிந்தன் கூறும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய நாடாளுமன்ற விவாதத்திலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்திருக்கிறோம்.

அசாம் நிலைமையையும் சுட்டிக்காட்டினோம். இந்த சட்டத்தின் பிரிவினை இயல்பையும் குறிப்பிட்டோம். உரிய திருத்தங்களை முன்வைத்தோம். பாஜக அரசாங்கம் அவை எதையும் கணக்கில் எடுக்கவே இல்லை.
குடியுரிமை திருத்தம் மட்டுமல்ல, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) ஆகிய மூன்றையும் இணைத்து முன்னெடுப்போம் என்று 9 முறை நாடாளுமன்றத்தில் பதில் சொன்னார்கள். இப்படிப்பட்ட அழிவுத்திட்டம் இந்திய ஒற்றுமையை பாதிக்கும்; ஏழை எளிய மக்களை அலைக்கழிக்கும். இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களை நேரடியாகவே ஒதுக்கும் திட்டம் இச்சட்டத்தில் உள்ளது. மேலும், இது அசாம் ஒப்பந்தத்தையும் பாதிக்கும்.

அரசமைப்பு சட்ட விரோதமான திருத்தம் என்பதால் கேரள அரசு இதனை அமலாக்க முடியாது என தெளிவாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் போட்டுள்ளது. சி.ஏ.ஏ. உடன் இணைந்த என்.பி.ஆர். முன்னெடுக்க மாட்டோம் எனவும் தெளிவாக்கியிருக்கிறோம். நாட்டின் பொருளாதார நிலைமையைத்தான் கவனம் செலுத்த வேண்டும். பாஜகவிடம் அதற்கு எந்த திட்டமும் இல்லை.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு போலியான வாதங்களால் முட்டுக் கொடுக்கிறார். இது சட்டப் பிரச்சினை மட்டும் அல்ல, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எழுந்திருக்கும் சவால். அதனால்தான் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு பரந்த ஒற்றுமையோடு போராடுகிறோம். ஆயுதங்களைக் கொண்டும், வன்முறைகளின் மூலமும் இந்த ஒற்றுமையை சிதறடிக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
கேரள அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ். திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என வெளிப்படையாக அறிவித்து செயல்படுகிறது. என்.பி.ஆர். திட்டத்திலேயே மாநில அரசுகள் மறுத்தால்தான் என்.ஆர்.சி. திட்டத்தை தடுக்க முடியும். எனவே, எதிர்க்கட்சிகள் களப் போராட்டங்களோடு, ஆட்சி நிர்வாகத்தை பயன்படுத்தியும், சட்ட வழிமுறைகள் அனைத்திலும் போராடுகிறோம். நம்மிடம் வேறுவாய்ப்புகள் இல்லை” என்கிறார்.

நாடு முழுவதும் என்.ஆர்.சி. இல்லை!

பாஜக தரப்பில் நம்முடன் பேசிய தமிழக மாநில செயலாளர் கரு.நாகராஜன், “குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம், அது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல’ என்பதனை மத்திய அரசு தெளிவாக விளக்கியிருக்கிறது. இச்சட்டத்திற்கு எதிராக மாநில சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதே கள யதார்த்தம்.

எதிர்க்கட்சிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி ஒருதரப்பினரை கொந்தளிப்புக்கு உள்ளாக்குகிறார்கள். இந்த சட்டத்தால் குடியுரிமை பறி போகும் என யார் கருதுகிறார்களோ அவர்களிடம் தெளிவாக விளக்குவதற்கு மத்திய பாஜக அரசு தயாராக உள்ளது. இதுகுறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் பல்வேறு விளக்கங்களை அளித்த பிறகும்கூட சிலர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள்.

1964 முதல் 2008ஆம் ஆண்டுக்குள் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 172 வங்கதேச மக்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

2014 வரை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. 2016 முதல் 2018 வரை 391 ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்கள் மற்றும் 1,595 பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில்தான் அட்னான் சாமிக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது ஒரு எடுத்துக்காட்டு. வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை மற்றொரு எடுத்துக்காட்டு. இது மத்திய பாஜக அரசு மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்பதை நிரூபிக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய இரண்டிற்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் என்.ஆர்.சி. மேற்கொள்வது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் மத்திய அரசு பலமுறை தெளிவுபடுத்திவிட்டார்கள். இந்த விவகாரத்திலும்கூட எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டமானது அரசமைப்புச் சட்டத்தின் 7ஆவது அட்டவணையின் கீழ் இயற்றப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ள விவகாரங்கள் குறித்து சட்டமியற்ற நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; மாநில சட்டப் பேரவைகளுக்கு அல்ல. எனவே, இச்சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று கூற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது. எனவே, மாநில கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள் அரசியல் விளையாட்டுகளை நிறுத்திவிட்டு, உரிய சட்ட அறிவுரைகளை பெற வேண்டும்” என்கிறார்.

ஆனால், இதனை மறுக்கும் இரா. சிந்தன், “ஆளுங்கட்சியினர் இது தொடர்பாக பொய்களை பேசுகிறார்கள். அவர்களிடம் உண்மை இல்லாததால் குறுக்கு வழிகளை முயற்சிக்கிறார்கள். பிரதமர் மோடி பேசும்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வாதத்தையே மறுத்தார். அமித்ஷாவோ, நாடாளுமன்றத்தில் சொன்னதை வெளியில் மாற்றிப் பேசினார். நிர்மலா சீத்தாராமன் அடுத்த எல்லைக்கு போயுள்ளார். தஸ்லிமா நஸ்ரினுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதாக, நடக்காத ஒன்றை போகிற போக்கில் அடித்து விடுகிறார்கள். பொய்களையும் போலியான வாதங்களையும் நிறுத்தி, இச்சட்டத்தை திரும்பப் பெறுவதே, நாட்டு வளர்ச்சிக்கு பாஜக செய்ய வேண்டிய முதல் கடமையாகும்” என்கிறார்.

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here