அமைதி அமைச்சர்கள் அறிமுகம்

முதல்வர், துணை முதல்வர் இருவர் முகங்களும் வெகு பிரபலம். மற்ற அமைச்சர்கள் என்றாலே நம் கண்முன்னால் வந்து நிற்பது செல்லூர் ராஜு, ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர்தான்; மொத்தமாக 31 அமைச்சர்கள் இருந்தாலும் சிலர் முகம்தான் பெரும்பான்மை மக்களுக்கு தெரிந்திருக்கிறது. அபூர்வமாக, எதாவது ஒரு விவகாரத்தில் சில அமைச்சர்கள் பெயர் சொல்லப்படும்போது இவர் இவ்வளவு நாளும் அமைச்சராகத்தான் இருந்தாரா என அதிர்ச்சி ஏற்படுகிறது. எந்த அமளி துமளியிலும், பத்திரிகை பரபரப்பிலும் சிக்காமல் பதவி வகித்துவரும் சில அமைச்சர்களை பற்றி இங்கே…

ஜி. பாஸ்கரன், காதி மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜி.பாஸ்கரன். பூதானம், கிராம தான துறையும் இவர் வசம்தான் உள்ளது. முதல்முறையாக சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. இப்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் அமைச்சராகவே தொடர்கிறார்.
“செல்போனைக் கண்டுபிடித்தவனைப் பார்த்தால் மிதிக்கணும்”, “பாஜக கூட்டணியில் இருந்து விரைவில் அதிமுக விலகும்”, “இந்த ஆட்சி போனால் ஒருத்தரும் மதிக்கமாட்டார்கள்” என்று இவர் கடந்த சில வாரங்களாக பேசிய மேடைப் பேச்சுக்களுக்கு பிறகுதான் இப்படி ஓர் அமைச்சர் இருக்கிறார் எனப் பலரும் அறிந்தனர். இந்த கட்டுரை வெளிவருவதற்குக் கூட ஒருவகையில் இவர்தான் காரணம்.

பெஞ்சமின், ஊரக தொழிற்துறை அமைச்சர்
மதுரவாயல் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் இவர். சென்னையின் ஹாட் சிட்டியான மதுரவாயல் தொகுதியை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த சர்ச்சையிலும் சிக்காத வண்ணம் அரசியல் செய்து கொண்டிருப்பவர். ஜெயலலிதாவால் முதலில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, பிறகு அத்துறையிலிருந்து மாற்றப்பட்டார்.

உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்பாளர்களை அழைத்து சென்று மக்களின் காலில் விழச் சொல்லி வாக்கு சேகரிக்க வைத்து பரபரப்பை கிளப்பினார். ஊரகத் தொழில்கள் துறையுடன் குடிசைத்தொழில் மற்றும் சிறுதொழில்கள் துறையும் இவர் வசம்தான் உள்ளது.

துரைக்கண்ணு, வேளாண்மைத்துறை அமைச்சர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார், துரைக்கண்ணு. தமிழகத்தின் முக்கியமான துறையின் அமைச்சராக இருந்தும் பரபரப்பில்லாமல் இருக்கிறார். வேளாண்மைப் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு போன்ற துறைகளும் இவர் வசம் உள்ளன.

சசிகலாவின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் இருந்தாலும், இவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர். “முதன்முறையாக அமைச்சரான காரணத்தால் இந்த மாவட்டத்தின் முக்கிய அதிமுக தலைவரான வைத்தியலிங்கத்தின் சொற்படி செயல்படுபவர். இதன் காரணமாகவே எந்த விஷயத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசிக்கிறார்” என்கிறார்கள் தொகுதிகாரர்கள்.

ஹைட்ரோகார்பன், காவிரி பிரச்சினை, மேகதாட்டு, கஜாபுயல், வறட்சி போன்ற எந்த விவசாயம் சார்ந்த பிரச்சினை பற்றியும் இவர் கருத்துசொன்னது போலவே தெரியவில்லை என்பதே மக்களின் குரல்.

வளர்மதி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர்
திருச்சி, திருவரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார், இவர். வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையும் இவர் வசம்தான் உள்ளது. தமிழகத்தின் முக்கியமான நகரமான திருச்சியைச் சேர்ந்த அமைச்சராக இருந்தாலும், எந்த சர்ச்சையிலும் சிக்காதவகையில் தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

2011ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் பதவியை இழந்தார். அதன்பிறகு ஸ்ரீரங்கம் தொகுதியை மாற்றி 2015இல் ஆர்கே நகரில் களமிறங்கினார் ஜெயலலிதா. அப்போது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பெண் வேட்பாளர் என்றமுறையில் களமிறங்கி வென்ற வளர்மதி, 2016இலும் அங்கே வென்று இப்போது அமைச்சராகவும் உள்ளார்.

ராஜலெட்சுமி, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார், இவர். மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் உள்ளிட்ட துறைகளும் இவர் வசம் உள்ளன. முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரான இவருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

அரசியலில் பெரிய அனுபவம் இல்லாத காரணத்தால் எந்த சர்ச்சைக்கும் ஆளாகாமல் அமைதி காக்கிறார் என்கிறார்கள் நெருக்கமானவர்கள். துறை சார்ந்த கேள்விகளைக் கேட்டால்கூட இவரிடம் இருந்து, “எடப்பாடியார் வழியில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது” என்பது ஒன்றுதான் பதிலாக வருகிறது. இப்போதுள்ள அமைச்சரவையிலேயே இளம் வயது அமைச்சர் இவர்தான்.

சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், இவர். சேவூர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் போன்ற உள்ளாட்சி பதவிகளை வகித்த இவரை 2016இல் ஆரணி சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் ஆக்கினார் ஜெயலலிதா.

இந்து சமய அறநிலையத்துறை தமிழகத்தில் அதிகளவில் சொத்து , வருமானம், பண்பாட்டு முக்கியத்துவம் உள்ள மிக முக்கியமான துறை. ஆனால், துறை ரீதியாக எந்த செயல்பாட்டிலும் இவரை பார்க்க முடியாது. தமிழகமே அமளி துமளியான சிலைகடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேலை மக்களுக்கு தெரிந்த அளவுக்குக்கூட இவரை யாருக்கும் தெரியாது.

அத்தி வரதர் தரிசனம், பெரியகோவில் குடமுழுக்கு என்று நாடே பரபரப்பாக இருக்கும் நிகழ்வுகளில்கூட துறை அமைச்சராக எந்த பரபரப்பு இல்லாமல் இருப்பவர் இவர். ஆனால், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ள இவர், அந்த மாவட்டத்துக்குள்ளே முக்கிய அரசியல் புள்ளியாக இருக்கிறார்.

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here