மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் பாராட்டத்தக்க ஒரு செயலைச் செய்துள்ளார், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். தனது தொகுதி மக்கள் எந்நேரமும் தன்னை தொடர்புகொள்ளவும், அவர்களது நிறைகுறைகளை தன்னிடம் சொல்வதற்காகவும் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி, வெளியிட்டுள்ளார். இந்த ஆஃப் அறிமுகம் செய்யப்பட ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ளனர்!

ரவிக்குமார் எம்.பியிடம் பேசினோம். “நம்முடைய காலத்தை டிஜிட்டல் யுகம் என்று சொல்லலாம். அந்தளவிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்துள்ளது. இதைக்கொண்டு எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாமே என யோசித்த போதுதான் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

ஏற்கனவே பேஸ்புக், வாட்ஸ் அப் மாதிரியான சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் நடந்து வந்தாலும் அதில் பிரைவசி கேள்விக்குறியாக உள்ளது. இன்னொரு பக்கம், சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு இருப்பது மாதிரி அலுவலகங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை.

இருந்தாலும், எங்களிடம் மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளைப் பெறுவதற்காக அவரவர் சொந்த செலவில் அலுவலகம் அமைத்துள்ளோம். விழுப்புரத்தில் ஒரு வாடகை கட்டிடத்தில் எனது அலுவலகத்தை அமைத்து, அதன் மூலமாக மக்களது நிறைகுறைகளைக் கேட்டு வருகிறேன். ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ள விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி மிகப்பெரியது என்பதால், தூர ஊர்களை சேர்ந்த தொகுதி மக்கள் என் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து அவர்களது கோரிக்கைகளை
சொல்வதென்பதே பெரும்பாடாக உள்ளது. அதையெல்லாம் களைவதற்காகவும், என்னை நேரடியாக தொகுதி மக்களே தொடர்புகொள்ளவும்தான் இந்த அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளேன்.

மக்களோடு என்னை இணைப்பில் வைத்திருக்கும் வகையில் இந்த அப்ளிகேஷனை வடிவமைத்து கொடுத்தது, விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமத்தினர்தான்.

இந்த அப்ளிகேஷனை தொகுதி மக்களுக்கு அறிமுகம் செய்த நாளிலிருந்து இதுவரை பல நூறுகணக்கான கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்களை எல்லாம் சம்மந்தப்பட்ட அலுவலர்களின் பார்வைக்கு கொண்டு செல்வதோடு, அதற்கான தீர்வை கொண்டு வருதற்குமான முயற்சிகளை என்னால் முடிந்த வரை எடுப்பேன்.

அதோடு நாடாளுமன்ற உறுப்பினரான எனது அன்றாட நிகழ்வுகள், பணிகள் குறித்தும் இந்த அப்ளிகேஷனில் நோட்டிபிகேஷனாக கொடுத்து வருகிறேன். மேலும், தொகுதி மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசவும் எனக்கு இந்த அப்ளிகேஷன் கைகொடுப்பதோடு நாடாளுமன்ற உறுப்பினராக எனது செயல்பாடுகளில் மக்கள் மத்தியில் வெளிப்படத்தன்மையைக் கொண்டு வரவும் உதவும் என நம்புகிறேன்‘ என்கிறார்.

அப்ளிகேஷனை வடிவமைத்த விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழும வடிவமைப்பாளர்களில் ஒருவரான கலீலிடம் பேசினோம். “இளைஞர்களுக்கு சமுதாய பொறுப்புகள் உள்ளன என்பதை உணர்ந்த நான்கு இளைஞர்களால் 2013இல் உருவாக்கப்பட்டதுதான் எங்கள் குழு. தற்போது 60 உறுப்பினர்கள் இதில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.

மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளைக் களத்தில் இறங்கி அறிந்துகொள்வதோடு, அந்த பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட நபர்களிடத்தில் கொண்டு சென்று தீர்வு காண்பதுதான் எங்கள் பணி. இந்த சூழலில்தான் 2018இல் தோழர் ரவிக்குமார் எம்.பியோடு எங்களுக்கு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வந்தது.

அவர் தத்தெடுத்த கிராமமான காந்தலவாடி கிராம மக்களின் தரவுகளைப் புள்ளி விவரங்களோடு எடுத்து கொடுக்குமாறு கோரியிருந்தார். அதை செய்து முடித்த பிறகு, ’மக்களையும் என்னையும் இணைகின்ற மாதிரியான தொழில்நுட்ப ஏற்பாடு ஏதாவது செய்து கொடுக்க முடியுமா எனக் கேட்டிருந்தார். அதனடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த அப்ளிகேஷன்.

பல்வேறு பரிசோதனை முயற்சிகளுக்கு பிறகு மக்கள் கொடுக்கின்ற புகார்கள், கோரிக்கைகள் அனைத்தும் மூன்றாம் நபர் தலையீடின்றி எம்.பி.யின் பார்வைக்கு செல்லும் வகையில் வடிவமைத்துள்ளோம். இந்த அப்ளிகேஷனில் எம்.பி. சார்பாக கொடுக்கப்படுகின்ற பதில்கள், நோட்டிபிகேஷன்கள், டெக்ஸ்ட் சேட்கள் என அனைத்துமே அவரே கொடுப்பதுதான். இதில் எங்களது தலையீடோ, அட்மின், மாடிரேட்டர் மாதிரியான யாரது தலையீடும் இல்லை. ஒன் – டு – ஒன் என்ற கான்செப்டில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இயங்கும் இந்த அப்ளிகேஷனை யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்து, அவர்களது போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பெயர், வயது, ஊர் மற்றும் மொபைல் எண் மாதிரியான விவரங்களை கொடுத்து இதில் பதிவு செய்துகொண்டு எம்.பி.யோடு இணைந்திருக்கலாம்” என்கிறார்.

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here