இந்தியாவை உலுக்கிய நரேந்திர தபோல்கார், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகிய முற்போக்கு சிந்தனையாளர்களின் கொலைகளைத் தொடர்ந்து, அதே கொலையாளிகளால் மேலும் 34 பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை செய்திருப்பது கடும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைப் பட்டியலில் தமிழகத்தில் இருந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் பெயரும் உள்ளது மேலும் அதிர்ச்சி. இந்தச் சூழலில் ரவிக்குமாரிடம் பேசினோம்:
கொலைப் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறதே? உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
உள்ளூர் சாதிய, மதவாத சக்திகள் அரசியல் ரீதியாக நேரடியாக மிரட்டல் விடுத்தால் அதனை எதிர்கொள்ளலாம். ஆனால், இது முகம் தெரியாத ஒரு பயங்கரவாதக் குழு. யாரென்றே தெரியாது. புனேயில் இருப்பவர்களின் கொலைப் பட்டியலில் எனது பெயர் இருக்கிறது. அந்த நெட்வொர்க் தமிழகத்திலும் இருக்கிறது என்பதுதான் பெரிய அதிர்ச்சியாக உள்ளது. அப்படி இல்லையென்றால், எப்படி என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்? தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்கள்தான் தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, நான் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதுள்ளது.
இது ஒரு புதிய விதமான அச்சுறுத்தலாக உள்ளதே; இதுவரை வகுப்புவாதம் என்பது வெளிப்படையான அரசியல் ரீதியான அச்சுறுத்தலாக மட்டும்தான் இருந்தது?
உண்மைதான். அதுதான் இப்போது புதிய பரிமாணம் எடுத்து பயங்கரவாத அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது தமிழகத்தையே சீர்குலைக்கும் திட்டத்துடன் இருப்பதாகப் பார்க்கின்றேன். பெரும்பான்மை சமூகம் என்பதால் அரசை இதனை அலட்சியப்படுத்துகிறதோ, மூடி மறைக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பெரிதுபடுத்தினால் மத்தியில் ஆளும் கட்சிக்கு அரசியல்ரீதியாகப் பின்னடைவு வந்துவிடும் என்று பார்க்கிறார்களோ எனக் கருதத் தோன்றுகிறது.
இந்த அச்சுறுத்தல் காரணமாக உங்கள் அரசியல் பணிகளில் இருந்து பின்வாங்குவீர்களா?
‘ஓர் அரசியல்வாதியாக இருப்பது எளிது. ஆனால், ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருப்பது பெரிய சவால்’ என்பார், புரட்சியாளர் அம்பேத்கர். தலித் அரசியல் என்பது மற்ற கட்சிகளின் தேர்தல் அரசியல்போல் கிடையாது. அது ஒரு சமூக சீர்திருத்த அரசியல். மற்ற கட்சிகளில் இருப்பதைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பது சவால் நிறைந்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல, இது சாதி ஒழிப்பு என்கின்ற சமூக சீர்திருத்த செயல் திட்டத்தை வைத்திருக்கும் கட்சி. எனவே, சவால் நிறைந்த பணி என்று தெரிந்துதான் இதைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, எனது அரசியல் பணிகளிலிருந்து நான் பின்வாங்க முடியாது. பின்வாங்கவும் மாட்டேன். ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளைப் பற்றிப் பேசுகிறேன். அதைப் பேசவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதைப் பேசினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் வரும் என்றால் அதற்காக நான் அஞ்சமாட்டேன்.
குடும்பத்தினர் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?
எனது குடும்பத்தில் முதலில் பயந்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் எனக்கு அளித்துவரும் ஆதரவு அவர்களது பயத்தைப் போக்கியிருக்கிறது.
உங்கள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்ன சொன்னார்?
‘ரவிக்குமாருக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தல் என்பது இயக்கத்தைச் சீர்குலைப்பதற்கான முயற்சி. ஏனென்றால், மதச்சார்பின்மையை வலியுறுத்தி இந்தியாவில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பலரையும் சந்தித்து கோரிக்கைகள் வைக்கிறோம். இந்த கொலைத் திட்டம் அவரை அழிப்பதற்கானது மட்டுமல்ல, கட்சியையே அழிப்பதற்கான சதி’ என்று கூறியுள்ளார். ஏற்கெனவே அவரும் சாதிய பயங்கரவாதிகளின் கொலைப் பட்டியலில் இருக்கிறார். அவரைக் கொலை செய்ய பலமுறை முயற்சித்துள்ளனர் என்பது காவல்துறைக்கே தெரியும்.
வகுப்புவாத பயங்கரவாதிகள் கொலைப் பட்டியலில் உங்களை சேர்ப்பதற்கு உங்களின் எந்த நடவடிக்கை காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
கௌரி லங்கேஷ் கொலையாளி அமோல் காலே பிடிபட்டபோது, ‘இந்து ராஜ்யத்தை அமைக்க யார் யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அழித்தொழிப்போம்’ என்று தெரிவித்தார்.
நான் ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக மட்டுமல்லாமல், இந்திய அளவில் அம்பேத்கரிய கருத்தியலை முன்னெடுப்பவனாகவும் இருக்கிறேன். அதனாலேயே, அவர்களின் கொலைப் பட்டியலில் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். கருத்தியல் ரீதியாக அரசியலமைப்புச் சட்டத்தை யாரெல்லாம் பாதுகாக்க நினைக்கிறார்களோ அவர்கள் எல்லோருமே இந்து ராஜ்யத்திற்கு எதிரானவர்கள் என்றுதான் வகுப்புவாதிகள் நினைக்கிறார்கள்.
தமிழகத்தை பெரியார் பூமி என்கிறார்களே? இங்கும் இப்படியெல்லாம் நடக்குமா?
மற்ற மாநிலங்களைப்போல நேரடியாக மதவாத அரசியல் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் இருப்பதற்கு தமிழகம் பெரியார் பூமியாக இருப்பதே முதன்மையான காரணம். ஆனால், வகுப்புவாதப் பயங்கரவாதம் என்பது வேறு. எங்கோ திட்டமிட்டு எங்கேயோ நிறைவேற்றுகிறார்கள்.
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டு வருவதைத் தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் என்ன செய்ய வேண்டும்?
கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக அமோல் காலே என்பவர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து டைரி அப்போதே கைப்பற்றப்பட்டு, அதிலிருந்த கொலைப் பட்டியல் மத்திய உளவுத்துறைக்கு உடனடியாக சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த டைரியில் இருந்த 34 பேருக்கும் உடனடியாகப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அறிவிப்பு அனுப்பி எச்சரிக்கை செய்து, சம்பந்தப்பட்ட இயக்கங்கள் உள்ளனவா என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், இதனையெல்லாம் செய்யாமல், ஆகஸ்ட் மாதத்தில்தான் எங்களுக்குத் தகவல் தருகிறார்கள்.
இப்படியில்லாமல் மத்திய அரசும் மாநில அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தப் பயங்கரவாத அமைப்புகள் எந்தெந்த மாநிலங்களில் இருக்கிறதோ, அதனைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். கௌரி லங்கேஷின் கொலையாளிகள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், 60-க்கும் மேற்பட்டோர் ஆயுதப் பயிற்சி எடுத்தவர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதன் உண்மைத்தன்மையை மத்திய – மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்துள்ளீர்களே, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
தமிழக அரசின் சார்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எங்கள் முன்னிலையிலேயே காவல்துறையிடம் பேசினார். உடனடியாக உத்தரவுகளையும் வழங்கினார். தற்காலிகமாக என் வீட்டிற்கு காவல் போட்டுள்ளனர்.
சமீபத்தில் வரவர ராவ், சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, அருண் பெரேரா, வெர்னன் கன்சல்லெஸ் ஆகிய ஐந்து தலித் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளார்களே, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒருபக்கம் பயங்கரவாதக் குழுக்களின் மூலமாகக் கொலை செய்வது; மற்றொரு பக்கம் காவல்துறை மூலம் பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்துவது என்று சிந்தனையாளர்கள் மீது இருமுனைத் தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஒரு சமூகத்திற்கு சிந்தனையாளர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்?
பூகம்பம் வருவது பறவைகளுக்குத்தான் முதலில் தெரியும் என்பார்கள். அதுபோல, இந்த சமூகத்திற்குக் கேடு வருவதை முதலிலேயே நுண்ணுணர்ந்து சமூகத்திற்கு அறிவிப்பவர்கள் சிந்தனையாளர்கள்தான். அதனால்தான், அவர்களை பயங்கரவாதக் குழுக்கள் குறி வைக்கின்றன. எங்கு சுதந்திரமான சிந்தனைக்கு இடம் இருக்கிறதோ, எந்த சமூகம் சிந்தனையாளர்களைப் பாதுகாக்கிறதோ, அந்த சமூகம் மட்டும்தான் தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். சிந்தனையாளர்களுக்கு மதிப்பளிக்காத சமூகம் தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. ∙
-பூ. சர்பனா