மேடம் நீங்க முன்னாடி வாங்க, ஸார் நீங்க பின்னாடி போங்க, தம்பி நீ மூன்னாடி கீழே வந்து உட்கார்ப்பா. எல்லோரும் கொஞ்சம் சிரிங்கப்பா. ஓகே ரெடியா?
விழா நாயகர்களான மாப்பிள்ளை, பெண் தொடங்கி யாருக்கும் கட்டுப்படாத சுட்டிகள் வரைக்கும் கல்யாண மண்டபத்தில் அனைவருமே அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். கல்யாணம் என்றல்ல எந்த குடும்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, வேறு எதாவது நிகழ்வாக இருந்தாலும் சரி, அங்கே உண்மையில் போட்டோகிராபர்தான் நாயகன். மற்றவர்களை அதிகாரம் செய்ய யாருக்குத்தான் ஆசை இருக்காது? நாமும் ஒருநாள் போட்டோகிராபர் ஆக முடிவெடுத்தோம்.
வீடியோகிராபர் விஜயகுமாரிடம் சொல்லி வைத்தோம். உறுதியளித்தபடி அழைத்தார். வணக்கம் கலீல், வர்ற 19, 20 பழனியில கல்யாண பங்ஷன். நீங்க போட்டோ எடுங்க என்று கூற உற்சாகமாக கிளம்பினோம்.
மதியம் 3 மணி. பழனி மலை அடிவாரத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி திருமண மண்டபம். உள்ளே நுழைந்தோம். கல்யாண வீட்டார் யாரையும் காணோம்.
என்ன விஜி யாரையுமே கா@ணாம்? என நாம் அதிர்ச்சியாக, தெரியல கலீல்,
மதியம் 3 மணிக்கெல்லாம் வந்துருங்கன்னு சொன்னாங்க என்ற விஜியிடம், அவங்க முன்னாடியே வர சொல்லிருவாங்க. நாம லேட்டா வந்தா காசு கொடுக்குற வரைக்கும் அதயே குறையா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. சரி, வாங்க உட்காரலாம் என்று ஓரமாக உட்கார்ந்தோம்.
சமையல்காரர்கள், மேடை டெக்கரேஷன்காரர்கள், பூமாலை தொடுப்பவர்கள் என அவரவர் வேலையை விறுவிறுப்பாக செய்துகொண்டிருந்தனர். அவற்றில் சிலவற்றை பதிவு செய்துகொண்டோம்.
மாலை 4 மணி. நம் அருகில் வந்த ஒருவர், வாங்க விஜி அண்ணே! வந்துட்டீங்களா? கொஞ்சம் உட்காருங்க. இப்ப எல்லோரும் வந்துருவாங்க என்றார். ரிசப்ஷன் எத்தனை மணிக்கு? என்று நாம் கேட்க, 7 மணிக்குத்தான் என்றார். போட்டோகிராபர்களின் வேதனை நம் நெஞ்சையும் குத்தியது.
7 மணி பங்ஷனுக்கு எதுக்கு விஜி 3 மணிக்கெல்லாம் வர சொன்னாங்க?
கல்யாண மண்டபத்துக்கு மொதல்ல வந்து கடைசியா போறது எப்போதும் நாமதானே கலீல் என்ற விஜியிடம், சரி, வெளியே போய் டீ சாப்பிட்டுட்டு வரலாம் என்றோம்.
மாலை 5 மணி. வேகவேகமாக வெள்ளையும் சொள்ளையுமா வந்த ஒருவருக்கு விஜி எழுந்து வணக்கம் போட நாமும் எழுந்துகொண்டோம். வாங்க தம்பி! பொண்ணு ரெடியாகிட்டு இருக்கு. இப்ப போட்டோ எடுத்தரலாம். இவர்தான் நீங்க சொன்ன போட்டோகிராபரா? புதுசா இருக்கார், நல்லா எடுப்பாரா என்றவருக்கு வணக்கத்தை வைத்தோம்.
என்ன கேமரா தம்பி வச்சிருக்கீங்க? என்றவரிடம் நிக்கான் என்றோம். கேனன் கேமரா இல்லையா? சரி எதுலேயோ எடுங்க, ஆனா ஆல்பம் சூப்பரா இருக்கணும் என்றவாறே நம் பதிலை எதிர்பார்க்காமல் சமையல் அறையை நோக்கி நடந்தார்.
பிளாஷ் லைட், வீடியோ லைட்டை ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, மணமகள் அறைக்கு சென்று, பொண்ணு ரெடியாயிட்டாங்களா என்று கேட்க, இன்னும் அஞ்சு நிமிஷம் அஞ்சே நிமிஷம்தான் என்று சொல்லி, அரைமணி நேரத்துக்கு மேலே ஆக்கினார்கள்.
மாலை 6 மணி. அருகில் ஓடிவந்த குழந்தை, அங்கிள் போட்டோ எடுக்க வரச் சொன்னாங்க என்றதும் கேமராவை எடுத்துக்கொண்டு மணமகள் அறைக்கு சென்றோம். பொண்ணை நிற்க வைத்து போட்டோ எடுக்க முடியாத அளவுக்கு அனைத்து சொந்தங்களும் அறையில் ஆஜராகி இருந்தனர்.
ஸ்டேஜுக்கு வாம்மா, அங்க போட்டோ எடுக்கலாம் என்று சொல்லி அழைத்து வந்து போட்டோ எடுக்க ரெடியானோம். நமக்கு போட்டியாக பெண்ணுடன் வந்த தோழியரும் உறவினரும் தங்கள் கையில் வைத்திருந்த செல்போனில் பெண்ணை படம் பிடிக்க ஆரம்பித்தனர். மேடம்! கொஞ்சம் விலகி நில்லுங்க. பிரதர் கொஞ்சம் விலகி நில்லுங்க என்று நாம் சொன்னதை காதில் வாங்காமல், படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.
தம்பி! நான் போட்டோ எடுக்கத்தான் வந்திருக்கேன். சாப்ட் காப்பி தர்றேன் என்றதற்கு, நீங்க என்னக்கி சாப்ட் காப்பி தர்றது, நான் என்னக்கி பேஸ்புக்லேயும் வாட்ஸ்அப்லேயும் ஸ்டேட்டஸ் போடுறது என்றார் அலட்சியமாக. பெண்ணுக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அப்புறம் எதுக்கு தம்பி எங்கள போட்டோ எடுக்க வர சொன்னீங்க என்று நாம் கேட்க முறைத்தபடி விலகிச் சென்றார்.
ஒரு வழியா ஆல்பம் டிஸைன் பண்ண தேவையான போட்டோவை எடுத்து முடித்தோம்.
இரவு 7 மணி. மண்டபம் முழுவதும் சீரியல் பல்புகளால் அழகாகி இருந்தது. ரிசப்ஷனில் நின்றிருந்தவர்களை, சார்! இங்கே பாருங்க இங்கே பாருங்கன்னு சொல்ல, சும்மா எடுப்பா. வர்றது வரட்டும்னு சொன்னவரை பார்த்து சிரித்தபடி போட்டோ எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
பழனி மலை அடிவாரத்துல இருக்குற பாத விநாயகர் கோவில்ல இருந்து மாப்பிள்ளை அழைப்பு. விநாயகரை கும்பிட்ட மாப்பிளைக்கு பொட்டு வச்சு மாலை போட்டார்கள். அதை படம் பிடித்துவிட்டு சாரட் வண்டியில் ஏறி அமர்ந்த மாப்பிள்ளையிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, சார் முகத்துல பவுடர் ஓவராக இருக்கு. கொஞ்சம் தொடச்சுக்கோங்க என்றோம்.
வண்ண வண்ண மத்தாப்புகள், வாண வேடிக்கைகள், 10 ஆயிரம் 20 ஆயிரம் வாலா வெடிகள், மேளதாள வாத்தியம் முழங்க ஆடலுடன் அலப்பரையாக தேரடி வீதியை கடந்து மண்டபம் வருவதற்கு மூன்று மணி நேரமாகி விட்டது.
இரவு 10 மணி. தங்கச்சங்கிலி இட்டு மாப்பிள்ளையை வரவேற்றார் மைத்துனர். சாரட் வண்டியில் இருந்து இறங்கிய மாப்பிள்ளை பேண்டு வாத்தியம் முழங்க தனது தோழர்களுடன் குத்தாட்டம் போட்டார். பின்பு பெண்வீட்டார் வகை வகையாக ஆரத்தி எடுத்து பாட்டு பாடி மண்டப வாயிலில் மாப்பிள்ளையை வரவேற்றனர். ஆல்பம் சூப்பரா இருக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா நாம சொல்றத மட்டும் கேட்கவே மாட்டாங்க. அதுக்காக நாம் படம் எடுக்காம இருக்க முடியுமா என்று அலுத்துக்கொண்டார் விஜி அண்ணன்.
இரவு டின்னருக்குப் பிறகு நிச்சயதார்த்தம் நடந்தது. தாய்மாமன்கள் சம்பந்தம் கலந்து வெற்றிலை பாக்கு மாற்ற தயாரானார்கள். அப்போது அருகில் வந்த அம்மா, தம்பி! ஏம் பேத்திய ஒரு போட்டோ எடு என்றார். இருங்கம்மா. பங்ஷன் முடியட்டும், எடுத்துக்கலாம் என்றேன். அதுக்குள்ள அவ தூங்கிருவாப்பா என்று பிடிவாதமா நம்மை கூட்டிக்கொண்டு போனார்.
அதற்குள், ஏம்பா! இங்க தாம்பூலம் மாத்திக்கிட்டு இருக்காங்க, அங்க என்னப்பா செய்ற? வாப்பா இங்கேன்னு கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
மாமன் சீர், முகூர்த்தக்கால்னு நைட் ஃபங்ஷன் முடியுறதுக்கு மணி ரெண்டாயிருச்சு. ஆர்டர் கொடுத்தவரிடம், காலைல எத்தனை மணிக்கு ரெடியா இருக்கணும்னு கேட்டதுக்கு, நாலு மணிக்கெல்லாம் பொங்கல் வச்சிருவாங்க. ரெடியாயிருங்க என்றார் உத்தரவாக.
பார்ட்டியிடம் சென்று பேசினார். இருங்க விஜி! போகலாம் என்றார் அவர். அரை மணிநேர காத்திருப்பிற்குப் பிறகு மீண்டும் சென்ற விஜியிடம், போங்க, நாளைக்கு வந்து உங்கள பாக்குறேன் என்றார், கல்யாண வீட்டுக்காரர்.
பந்தல் போடுறவர்ல இருந்து பந்தி பரிமாறுபவர் வரை அத்தனை பேருக்கும் கல்யாண நாள் அன்றே காசு கொடுத்து கணக்கு முடித்துவிடுவார்கள். அவர் அவர் வேலை முடிந்ததும் துண்டை உதறி தோளில் போட்டுக்கிட்டு கிளம்பிருவாங்க. ஆனால், அவர்கள் நடத்திய கல்யாணத்தை ஆல்பமாகவும் சி.டி.யாகவும் காலத்துக்கும் இருக்கும்படி பதிந்து கொடுக்கும் எங்களுக்கு மட்டும் பணம் பாக்கி வைப்பார்கள் என்று திரும்பி வந்து நம்மிடம் புலம்பினார் விஜி அண்ணன்.
வெளிச்சம் இருக்குமிடத்தில் நிழலும் இருக்கத்தானே செய்யும்!
-எம். கலீல் ரஹ்மான்