[Close X]

[Close X]

செய்திகள்
Ptmag-product

புதியதலைமுறை கல்வி

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஓவியமே அடிப்படை!

நிர்வாகம்: 72

சென்னை ஓவியக் கல்லூரிப் பேராசிரியர் ஓவியர் புகழேந்தி தமிழகமெங்கும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று இலவச ஓவியப் பயிற்சி அளித்துவருகிறார் தமிழகமே மதிப்பெண்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்போது ஓவியம் வரைய நேரம் எங்கே கிடைக்கும்? ஒரு காலத்தில் கிராஃப்ட், ஓவிய வகுப்புகள் இருந்த பள்ளிகளின் சுவர்களில்கூட ஓவியங்களைப் பார்க்கமுடிவதில்லை. ஆனால், காலம் கடந்துவிடவில்லை என அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பல ஆண்டுகளாக இலவச ஓவியப் பயிற்சி அளித்துவருகிறார் பிரபல ஓவியரும் சென்னை ஓவியக் கல்லூரிப் பேராசிரியருமான புகழேந்தி. “நான் ஓவியக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளித்திருக்கிறேன். தஞ்சாவூரில் ‘அரும்புகள்’ என்ற அமைப்பையே இதற்காகத் தொடங்கினோம். தொடரமுடியவில்லை. அன்றிலிருந்து ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கே நண்பர்களிடம் பேசி அரசுப் பள்ளிக்குச் சென்று ஓவியப் பயிற்சி அளிப்பேன். கடந்த வாரம்கூட திருப்பூரில் தாய்த்தமிழ் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்” என்று பேசத் தொடங்கும் புகழேந்தி, விடுமுறை நாட்களையும் ஓய்வுநேரத்தையும் பயிற்சிக்காகப் பயன்படுத்துகிறார். ஒவியக் கண்காட்சி நடத்துதல், புதிய நூல் வெளியீடு ஆகியவற்றுக்கு இணையான ஒரு செயல்பாடாகவே பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் ஓவியப் பயிற்சியைப் பார்க்கிறார். மாலையில் ஒரு நிகழ்வுக்காகச் செல்கிறார் என்றால், காலையில் அங்குள்ள அரசுப் பள்ளியை அணுகி ஓவியப் பயிற்சி வகுப்பு நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தனியார் பள்ளிகள் மட்டுமே ஓவியப் பயிற்சி வகுப்பை நடத்த அழைக்கின்றன. அவரது அனுபவத்தில் அரசுப் பள்ளிகள் அழைப்பதேயில்லை. “இன்று பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், கட்டடக்கலை என எந்தப் படிப்புக்குச் சென்றாலும் ஓவியம் என்பது அடிப்படையான திறனாக இருக்கிறது. ஓவியத் திறன் படைத்த மாணவர்கள் அத்தகைய படிப்புகளில் ஜொலிக்கிறார்கள். பள்ளிகளில் நடக்கும் ஒரு நாள் பயிற்சியில் முழுமையான அளவில் கற்றுக்கொடுக்கமுடியாது. அவர்களுக்கு முதல் கட்டமாக ஓவியத்திற்கான அடிப்படை கோடுகளைக் கற்பிக்கிறேன்” என்கிறார் புகழேந்தி. சொல்லுக்கு எப்படி எழுத்துக்கள் அடிப்படையோ அப்படித்தான் ஓவியத்திற்கு கோடுகள் என்று மாணவர்களுக்குப் புரியவைக்கும் புகழேந்தி, ஆசிரியர் என்ற நிலையை மறைத்து சக தோழரைப்போல ஓவியப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறார். கோடுகள், கோடுகளின் வகைகள், கோடுகளின் தன்மைகளை முதல் ஒரு மணி நேரத்தில் மாணவர்களுக்குப் புரியவைக்கிறார். “குழந்தைகள்’ ஓவியம் என்றதும் உருவத்தைப் பார்த்து வரையத் தொடங்கிவிடுவார்கள். ஓவியத்துக்கு ஆதாரம் கோடுகள் என்பதை புரியவைக்கவேண்டும். அதேபோல ஒரு பொருளை உற்றுநோக்குவதன் மூலம் அதனை முழுமையாக வரைவதற்கான பயிற்சியும் முக்கியம். கற்பனையில் வரைவதுதான் ஓவியம் என்ற மனநிலையும் அவர்களிடம் உள்ளது. இலையை பார்த்து வரையச் சொல்வேன். இலையை வைத்து ஓவியத்தின் அடிப்படையைப் புரியவைக்க முயற்சி செய்வேன். ஆர்வமாக கற்றுக்கொள்வார்கள்” என்கிறார். மாணவர்களிடம் இலையைக் கொடுத்து வரையச் சொல்லும் அவர், “இலைதானே என்று நினைக்காதீர்கள். வளைவுகள், நரம்புகள், வண்ணங்கள் என கூர்மையாகக் கவனித்து வரைய, அதில் பல விஷயங்கள் இருக்கின்றன. உற்றுநோக்கி வரையத் தொடங்கும்போது, ஓவியம் அழகுபெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்” என்று அவர்களிடம் பரிவுடன் பேசி பயிற்சி அளிக்கிறார் புகழேந்தி. பள்ளியில் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டால், படிப்பு பாழாகிவிடும் என்ற தவறான கண்ணோட்டம் பெற்றோர்களிடைய இருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், ஓவியம் வரையும் திறன்தான் அவர்களுக்கு படிப்பு மீதான ஆர்வத்தை அதிகரிக்கவைக்கும் என்பதையே மறந்துவிடுகிறார்கள் என்கிறார். முதலில் ஓவியம் வரைவதன் மூலம் கவனம் குவிகிறது. தன்னம்பிக்கை கிடைக்கிறது. கூர்ந்து நோக்கும் திறன் வளர்கிறது. “ஓவியப் பயிற்சி வழங்கும்போது குழந்தைகளிடம் கருத்துகளைக் கேட்ட பின்னர் தான் அடுத்த பாடத்திற்குச் செல்வேன். லியானார்டோ டாவின்ஸி அந்தக் காலத்தில் ஹெலிகாப்டர் படத்தை வரைந்திருக்கிறார். அவரிடம் ஒவியம் வரையும் திறமை இல்லையென்று வைத்துக்கொள்ளுங்கள். ஓர் அறிவியல் கற்பனையை எப்படி உருவமாக்கியிருக்க முடியும். பள்ளியில் படிக்கும் வயதில் அவர்களுடைய கற்பனைகளுக்கு ஓவியம் உருவங்களை வழங்குகிறது. உலகளவில் பாடப்புத்தகங்கள் ஆடியோ விஷூவலாக மாறிவரும் நிலையில், ஓவியமே வேண்டாம் என்று மறுக்கும் மனநிலை வளர்ச்சியைத் தடுப்பதாகும்” என்று வருத்தப்படுகிறார். புகழேந்தி. ஓர் ஓவியத்தைப் பார்த்து அப்படியே வரையச் சொல்வது ஓவியக் கலை அல்ல. ஒவ்வொரு கோடுகளையும் சொல்லித்தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எந்த வயதில் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுப்பது சிறப்பாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிமூன்று வயது சரியாக இருக்கும் என்கிறார். எண்பதுகளில் தொடங்கி அவரது ஓவியப் பயிற்சிப் பயணம் இடைவிடாது தொடர்கிறது. “நான் செல்லும் பள்ளிகளில் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட எத்தனையோ மாணவர்களைப் பார்க்கிறேன். அந்தப் பிள்ளைகளுக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது. என்னைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு வெளியூர்களில் இருந்து பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுடன் வந்து ஓவியம் பற்றி தெரிந்து செல்கிறார்கள். சில பள்ளிகளில் ஓவியப் பயிற்சி ஏன் முடிகிறது என்று வருத்தப்படுவார்கள்” என்று கூறும் புகழேந்தி, அரசுப் பள்ளிகளில் இலவசமாக ஓவியப் பயிற்சி வழங்க ஆர்வமாக இருக்கிறார். ஓவியம் வரைவதால் ஓவியராகத்தான் வேண்டும் என்பதில்லை. அந்தக் கலைத்திறன் பள்ளியைத் தாண்டி கல்லூரியில், வாழ்க்கையில் உதவியாக இருக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும். அதற்கான ஆயத்தப் பயிற்சியைத்தான் மாணவர்களுக்கு வழங்கிவருகிறார் புகழேந்தி. -சுந்தரபுத்தன்

SUBSCRIBE

Combined-pt-kalvi

18 Dec 2017

Add To Cart

Combined-pt-kalvi

11 Dec 2017

Add To Cart

Combined-pt-kalvi

02 Dec 2017

Add To Cart

Combined-pt-kalvi

27 Nov 2017

Add To Cart

Combined-pt-kalvi

20 Nov 2017

Add To Cart

Combined-pt-kalvi

13 Nov 2017

Add To Cart

Combined-pt-kalvi

06 Nov 2017

Add To Cart

Combined-pt-kalvi

30 Oct 2017

Add To Cart