இனி இலவச சிகிச்சைஅவ்வளவுதானா!

ஏழை எளிய நடுத்தர மக்களைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனைகள் என்பவை தங்களின் உயிர் காக்கும் உன்னத திருத்தலங்கள்; அங்கு பணிபுரியும் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களுக்கு கடவுளின் மறு உருவங்கள். அப்படித்தான் இவற்றை மதிக்கிறார்கள், கைகூப்பி அவர்களை துதிக்கிறார்கள்.
ஆனால் இனி அப்படி இலவச சிகிச்சைகள் கிடைக்குமா, அடுத்து என்ன நடக்குமோ என்று இப்போதே அச்சத்தில் தவிக்கிறார்கள்.
இதற்குக் காரணம் மத்திய அரசு எடுத்திருக்கும் அதிரடி முடிவு.
ரயில்வே, எல்.ஐ.சி. தொடங்கி ஒவ்வொன்றாக தனியார்மயமாக்கி வருவதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளையும் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரை மருத்துவத்துறை வட்டாரத்திலும் கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
அப்படியானால், அரசு மருத்துவமனைகளின் இலவச மருத்துவ சேவை இனி அவ்வளவுதானா? மருத்துவத் துறையினருடன் பேசினோம்.
நிதி ஆயோக் பரிந்துரை
மத்திய அரசுக்கு ‘நிதி ஆயோக் செய்துள்ள பரிந்துரையில், நாட்டில் தகுதி வாய்ந்த மருத்துவர்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் மத்திய மாநில அரசுகளிடம் இல்லை. இதைப் போக்க அரசு – தனியார் பங்களிப்பு என்ற நடைமுறைப்படி மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து செயல்படுத்தலாம். தனியார் கல்லூரிகள் தங்களிடம் ஒப்படைக்கப்படும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். இலவச சிகிச்சை யாருக்கு அளிக்கலாம் என்பதையும் தனியார் நிர்வாகமே முடிவு செய்யும்’ என்று அதிர்ச்சியூட்டும் அம்சங்களும் நிதி ஆயோக்கின் பரிந்துரையில் இருக்கிறது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவத் துறையினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆனாலும், இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ‘நாடு முழுவதும் மருத்துவர்களுக்கும் மருத்துவ சேவைகளுக்கும் பற்றாக்குறை இருப்பதால், அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அரசு மருத்துவ மனைகளில் இலவச சிகிச்சையை பெற்றுவரும் ஏழை, எளிய மக்களுக்கு இதனால் என்ன பாதிப்பு வரும்?
இது ஆரம்பம்தான்!
சமூக சமத்துவதிற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் கேட்டோம்.
“ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு தாரைவார்க்கப் பார்க்கிறது மத்திய அரசு. இந்தப் பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட மருத்துவமனைகளில் அரசு – தனியார் பங்களிப்பு மாடலில் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது அதற்கான தொடக்கம்தான்.
இன்னொரு பக்கம், மாவட்ட மருத்துவ மனைகள் இலவசமாக சிகிச்சை அளிக்கக் கூடாது. மாவட்ட மருத்துவமனையில் 50 படுக்கைகள் தனியார் ஆரம்பித்தால் 15 ஆயிரம் ஆயிரம் சதுர அடியும், அதுவே, 100 படுக்கைகள் என்றால் 30 ஆயிரம் சதுர அடியும் இடம் மாநில அரசுகள் தனியாருக்கு கொடுக்கவேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
இது எல்லாமே மோசமான விஷயம். ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் மிகவும் பாதிக்கக்கூடியது. இன்றும் கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களில்வசிக்கும் ஏழை, எளியவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு அரசு தலைமை மருத்துவ மனையைத்தான் நாடி வருகிறார்கள். இதை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டால், அவர்கள் எங்கு செல்வார்கள்?
தமிழக அரசும் சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழகத்தில், மேலும் 9 மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப் போவதாகவும் 1200 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் செல்கிறார்கள். ஆனால், அக்கல்லூரிகளை அரசை நடத்துமா அல்லது தனியாரிடம் கொடுக்கப்படுமா என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.
புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான 60 சதவீத நிதியை மத்திய அரசும் மீதமுள்ள 40 சதவீத நிதியை மாநில அரசும் கொடுக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிகளை மாவட்ட மருத்துவமனைகளில்தான் ஆரம்பிக்கப் போகிறார்கள். அதற்காக, மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பதையும் சொல்லவில்லை.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதிலும் என்ன உள்ளது என்று தெளிவுபடுத்தவில்லை. எல்லாமே வெளிப்படையாக இல்லாமல் ஒளிவு மறைவாக நடக்கிறது. மக்கள் வரிப் பணத்தை உலக வங்கியும் கார்பரேட் நிறுவனங்களும் கொள்ளையடிக்கவே இதெல்லாம் நடக்கின்றன.
இதனால் பெரிய சிக்கல்கல்கள் வரும். உதாரணமாக கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய் பரவல்களின் போது தனியாரில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அவசர காலம், பேரிடர் காலங்களில் உதவமாட்டார்கள். இந்நிலையில், அரசு மருத்துவ மனைகளும் இல்லை என்றால், மக்கள் என்ன செய்வார்கள்?
கல்வியையும் மருத்துவத்தையும் அரசு இலவசமாகத்தான் கொடுக்க வேண்டும். பொது சுகாதாரத்தை வலுப்படுத்தி ஏழை எளிய மக்களை காக்கவேண்டும். ஆனால், இங்கே எல்லாமே நேர்மாறாக நடக்கிறது” என்கிறார் காட்டமாக.
அரசியல் சட்டத்திற்கே எதிரானது!
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரும் தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவருமான டாக்டர் ரெக்ஸ் சற்குணம் நம்மிடம் பேசும்போது, “நிதி ஆயோக்கின் பரிந்துரை முழுக்க முழுக்க தவறானது.
மக்களுக்கு இலவச சுகாதாரத்தைக் கொடுப்பது அரசின் கடமை. மக்கள் வரிப்பணத்தில் அரசு மருத்துவமனை கட்டமைப்புகளையும், மருத்துவ உபகரணங்களையும், மருத்துவர்களுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிட்டு தனியாரிடம் மருத்துவமனையை கொடுப்பது எப்படி சரியான திட்டமாகும்?
அமெரிக்காவிலேயே ராணுவத்திற்கு நிதியைக் குறைத்துவிட்டு சுகாதாரம், கல்விக்கு அதிக நிதியை ஒதுக்குங்கள் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, நார்வே, நியூசிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் மருத்துவத்தை முற்றிலும் இலவசமாகத்தான் கொடுக்கிறார்கள். இந்நிலையில், இங்கு எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த போக்கு நாட்டிற்கே ஆபத்தானது.
ஏற்கனவே, மிக முக்கிய உடல்நலப் பிரச்சினைகளான இதயநோய், நெஞ்சக நோய், புற்றுநோய் சம்பந்தப்பட்ட துறைகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் சர்க்குலரே அனுப்பியுள்ளது. இவை எல்லாம் அதிக மருத்துவ செலவு பிடிக்கும் நோய்கள். இதனால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் சிகிச்சைக்கு எங்கு செல்வார்கள்? இதனால், மீண்டும் இறப்பு விகிதம்தான் அதிகரிக்கும்.
நமது வளங்களை எல்லாம் முறையாக பயன்படுத்தாமல் தனியாருக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிறது, அரசு. இதனால், நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளிலிருந்து முதியோர் வரைக்கும் பல நோய்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கும் சூழ்நிலைகள் உள்ளன. அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்திக்கொண்டே இருக்க முடியுமா?
அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு அரசியல் சட்டத்திற்கே எதிரானது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
டெல்லியில் ஆம் ஆத்மி எப்படி வெற்றி பெற்றது? முழுக்க முழுக்க கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்தினார்கள். அதிக நிதியை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் ஒதுக்கினார்கள். ஒரு கிலோ மீட்டரிலேயே அருகாமை மருத்துவமனைகள் அமைத்த தோடு, காலை, மாலை மருத்துவம் அளிக்கும100க்கும் மேற்பட்ட பரிஓதனைகளை செய்துகொள்ளும் மொஹல்லா சுகாதாரத் திட்டங்களையும் அளித்து, இரண்டாவது முறையும் ஆட்சியில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
அதைப் பார்த்தாவது, ஓர் அரசு என்பது மக்கள் நல அரசாகத்தான் இருக்கவேண்டுமே தவிர கார்ப்பரேட்களின் அரசாக இருக்கக்கூடாது என்பதை நமது ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் அக்கறையோடு.
ஆனால், ‘நிதி ஆயோக்கின் பரிந்துரையில் சிலவற்றை ஏற்றுக்கொள்ளலாம்’ என்கிறார், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் கலாநிதி. மேலும், “அரசு மருத்துவமனை நிர்வாகத்தையே தனியாருக்கு கொடுப்பது முற்றிலும் தவறானது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையின் நோயாளிகளை வைத்து பயிற்சி கொடுக்கலாம். இது பல மாநிலங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைதான். இதை இங்கே செயல்படுத்தி இதற்கு கட்டணம் வசூலிக்கலாம். அந்த கட்டணத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கலாம்” என்று ஆலோசனைகள் சொல்கிறார்.
இறப்பு விகிதம் அதிகரிக்கும்!
ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர், டாக்டர் பாலகிருஷ்ணன் நம்மிடம், “பீஹார், ஜார்கண்ட் மாதிரி மருத்துவ வசதிகளில் பின்தங்கிய மாநிலங்களில் நிதி ஆயோக் பரிந்துரைகள் மூலம் மருத்துவத் துறை முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தமிழகம் மாதிரி சுகாதாரத் துறையில் முன்னேறிய மாநிலங்களில் இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தும்போது அதனால் சிக்கல்கள்தான் உருவாகும். பொது மக்களுக்கு கிடைத்துவரும் பலன்கள் குறையத்தான் வாய்ப்புகள் உள்ளது.
தமிழகத்தில் சாதாரண மக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் பார்க்கிறார்கள். தனியார் நிச்சயம் பணம் வாங்குவார்கள். பாகுபாடும் ஏற்படும்.
குழந்தைகள் இறப்பு விகிதம், மகப்பேறு மருத்துவத்தில் தாய் இறப்பு விகிதம் போன்றவற்றை கட்டுக்குள் வைத்து இந்தியாவிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது. அதோடு, குழந்தைகளை 5 வயதுவரை கவனித்து வருவதிலும் தமிழகம் முதலாவதாக உள்ளது. தனியாரிடம் ஒப்படைத்தால் ஏழைகளுக்கு இந்த சேவை கிடைக்காது.
இதனால், இறப்பு விகிதம் அதிகரித்துவிடும்” என்று எச்சரிக்கிறார்.
அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை அளிப்பதென்பது ஒரு நல்ல அரசின் அடிப்படைக் கொள்கை. தம்மை நம்பி ஆட்சியில் அமர்த்தியிருக்கும் மக்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவதென்பது அதன் உயரிய பொறுப்பும்கூட. அப்படிப்பட்ட உயிர் காக்கும் விஷயத்தில் இதுபோன்ற இலவச சிகிச்சைகளை வழங்குவதை மேலும் செம்மைப்படுத்துவதும் உறுதிப்படுத்துவதும்தான் மத்திய அரசு செய்ய் வேண்டிய அவசர, அவசியக் கடமை. அதில் சுறுக்குவது அரசுக்கு அழகா?அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளையும் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் இந்த திட்டத்தை கேரளா எதிர்த்துள்ளது. கேரளா இந்த திட்டத்தை செயல்படுத்தாது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலாஜா உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
“இது நிதி ஆயோக்கின் பரிந்துரைதான். கட்டாய உத்தரவு என்று தெரிவிக்கப்படவில்லை. எது எப்படியிருந்தாலும், நாங்கள் அதற்கு தயாராக இல்லை. மாநிலத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை தனியார்மயமாக்க கேரளா அரசாங்கம் தயாராக இல்லை.
மத்திய அரசின் பல கொள்கைகள் மாநில நலன்களுக்கு எதிரானவை. மாநிலத்திற்கு போதுமான நிதி கிடைக்கவில்லை. மேலும், மத்திய அரசின் புதிய திட்டங்களில் பெரும்பாலானவை வட மாநிலங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற ஒன்றுதான் இந்த திட்டமும்.
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கருத்துக்கு கேரளா உடன்படாது. அதற்கு பதிலாக, மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்” என்று கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.
சரி, தமிழக அரசு இதில் என்ன முடிவு எடுக்கப்போகிறது? தெரிந்துகொள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்புகொண்டோம். நம் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை!
-பூ. சர்பனா