Now Reading
பனிக்காலத்தில் ஊட்டி காய்கறி!

பனிக்காலத்தில் ஊட்டி காய்கறி!

கேரட், பீட்ரூட், காலிஃபிளவர், நூக்கல், டர்னிப், பீன்ஸ் போன்ற காய்கறிகளை எல்லாம் ஊட்டி, கொடைக்கானலில் விளைகிறது என்றால் நம்புவோம், கும்பகோணம் பக்கத்தில் விளைகிறது என்றால் நம்ப முடிகிறதா? இப்படித்தான் ஊரே ஆச்சரியப்படும் விதமாக குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில், மலைப்பிரதேச காய்கறிகளை விளைவித்து அசத்தி வருகிறார் விவசாயி சேகர்!

காய்கறிகளை விளைவிப்பதோடு தஞ்சை – கும்பகோணம் சாலையில் தனது வயலுக்கு அருகிலுள்ள நேரடி விற்பனைக்கடை மூலமாக தனது நிலத்தில் விளையும் காய்கறிகளை தானே சந்தைப்படுத்தியும் வருகிறார் சேகர். விற்பனைக்காக கேரட்டை பறித்துக்கொண்டிருந்த சேகரை அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.

“நான் திருவலஞ்சுழி அருகிலுள்ள நடுப்படுகை கிராமத்தை சேர்ந்தவன். எனக்கு தொழிலே விவசாயம்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எனது வாழைத் தோட்டத்தில் எதார்த்தமாக பீன்ஸ் விதைத்தேன், நன்றாக விளைந்தது. அதைத் தொடர்ந்து வாழைக்கு ஊடு பயிராக பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ் போன்றவற்றை பயிரிட்டு பார்த்தேன் அதுவும் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. அப்போதுதான் எனக்கு காய்கறி சாகுபடியில் மிகுந்த நம்பிக்கை வந்தது.

சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்போது நான் காய்கறி பயிரிட்டுக் கொண்டிருக்கும் நிலத்தை குத்தகைக்கு வாங்கினேன். அதில்தான் முதன்முறையாக மலைப்பிரதேச காய்கறிகளை விதைக்கலாம் என்ற யோசனை வந்தது. அதற்கான விதைகளை எங்கே வாங்குவது என்றுகூட அப்போது தெரியாது. பிறகு ஒருவாறு தெரிந்துகொண்டு கொடைக்கானலில் சென்று விதைகள் வாங்கினேன். அவர்களே கும்பகோணத்திலெல்லாம் கேரட், காலிஃபிளவர் விளையாது என்றார்கள்.

இருந்தாலும் நான் நம்பிக்கையுடன் இங்கே அப்பயிர்களை பயிரிட்டேன். இப்போது எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல முறையில் சாகுபடி செய்து வருகிறேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

இவர் மழை, பனிக்காலத்தில் கேரட், முட்டைகோஸ், காலிஃபிளவர், பிராக்கோலி, பச்சைப் பட்டாணி, நூங்கில், டர்னிப், பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் மற்ற நாட்களில் நாட்டுக் காய்கறிகளான கத்திரி, கொத்தவரை, வெண்டை, சுரைக்காய், பீர்க்கன், அவரை, பூசணி, பரங்கி, பச்சை மிளகாய், மஞ்சள், தங்காளி, முள்ளங்கி, கீரைகள், வாழை போன்ற 21 வகையான காய்கறிகளையும் சுழற்சி முறையில் தனது நிலத்தில் தொடர்ந்து விளைவித்து வருகிறார்.

இதுபற்றி பேசும் சேகர், “எல்லா காய்கறிகளுக்கும் ஒரு பட்டம் உண்டு. அந்த பருவத்தில் அப்பயிரை சாகுபடி செய்தால்தான் நல்ல விளைச்சல் எடுக்க முடியும். மலைப்பிரதேசத்தில் விளையும் காய்கறிகளை நான் மழைக்காலம், பனிக்காலத்தில் மட்டுமே பயிரிடுவேன். இந்த ஆறுமாத காலத்தில் இரண்டு மூன்றுமுறை இக்காய்கறிகளை அறுவடை செய்துவிடுவேன்.

கேரட், முட்டைகோஸ், காலிஃபிளவர் எல்லாம் 90 நாள் பயிர். நூங்கில், டர்னிப், சிவப்பு முள்ளங்கி எல்லாம் 60 நாள் பயிர். பனிக்காலத்தில் நம்ம ஊரே ஊட்டிபோல உள்ளதால் இந்த பயிர்கள் எல்லாம் இங்கு சிறப்பாக விளைகிறது. பனிக்காலம் தவிர்த்து மற்ற பருவங்களில் நமது நாட்டு காய்கறிகளை பயிரிடத் தொடங்கிவிடுவேன். இதுபோல எப்போது எனது தோட்டத்தில் 20 காய்கறிகள் சாகுபடியில் இருப்பதுபோல பார்த்துக்கொள்வேன். இந்த நிலமும் மேட்டுப்பாங்கான நிலமாக உள்ளதால் அதிக மழைபெய்தால்கூட எளிதாக வடிந்துவிடும். தண்ணீர் வடிகால் வசதியில்லாத நிலத்தில் காய்கறி சாகுபடி செய்யமுடியாது” என்கிறார்.

சந்தை வாய்ப்புகள் எப்படி உள்ளன, இந்த சாகுபடி முறையில் லாபம் கிடைக்கிறதா என்பது பற்றி சொல்லும் சேகர், “நான் எனது தோட்டத்தில் விளையும் எந்த காய்கறியையும் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதே இல்லை, எனது வயலுக்கு வெளியிலுள்ள காய்கறிக் கடையில் வைத்தே விற்பனை செய்துவிடுவேன்.

முழுவதும் பூச்சிமருந்து இல்லாமல், இயற்கை முறையிலேயே காய்கறிகளை விளைவிப்பதால் எனது காய்கறிகளின் சுவையே தனி. அதனால் கும்பகோணம், தஞ்சாவூரில் உள்ள உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் பலரும் என்னிடம் வாடிக்கையாக காய்கறிகள் வாங்குகின்றனர். அதுபோல பொதுமக்களும் தினமும் என்னிடம் வாடிக்கையாக காய்கறிகள் வாங்குகின்றனர். நேரடியாக நானே எனது காய்கறிகளை விற்பனை செய்வதால் எனக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் வரைகூட லாபம் கிடைக்கும்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

See Also

தொடர்ந்து தனது சாகுபடி முறைகள் பற்றி சொல்லும் சேகர், “முழுவதும் இயற்கை முறையில்தான் காய்கறிகளை விளைவிக்கிறேன். ஆட்டுப் புழுக்கை, மீன் அமிலம், வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் போன்றவற்றை அடிக்கடி வயலுக்கு இடுவேன். அதுபோல டீ கம்போஸ்டு திரவத்தை பாசன நீரில் கலந்து தொடர்ச்சியாக வயலுக்கு பாய்ச்சுவேன். இதைத்தவிர எந்த உரமும் கிடையாது.

எனது காய்கறி செடிகளை நான் குழந்தைபோல பார்த்துக்கொள்வேன். ஏனென்றால், மலைப்பிரதேச காய்கறிகள் மலையில் இயல்பாக விளையும். ஆனால், இங்கே அது சவலைப்பிள்ளைதான். எனவே, அதற்கு சரியான ஊட்டம் கொடுத்தால்தான் சிறப்பாக விளையும். அதனால், சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதுகளை பறிப்பது என்று எல்லாவற்றையும் சரியாக செய்வதால்தான் லாபத்துடன் மலைக் காய்கறிகளை பயிர்செய்ய முடிகிறது” என்கிறார்.

இவரது சிறப்பான விவசாயத்தை பாராட்டி தமிழக வேளாண்மைத் துறை இவருக்கு ‘சிறந்த காய்கறி விவசாயி விருது’ வழங்கியுள்ளது. அதுபோல தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை இவரது வயலுக்கே வந்து பாராட்டி ஊக்கம் கொடுத்துள்ளார். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றிவிழாவில் விவசாயி சேகரை அழைத்து கவுரவப்படுத்தி, அவருக்கு இரண்டு இலட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கியுள்ளனர் நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும். மேலும் பல அமைப்புகளும் இவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இதுபற்றி பேசும் சேகர், “முழுமையான நம்பிக்கையுடன் இந்த காய்கறி விவசாயத்தை தொடங்கினேன். அது என்னை கைவிடவில்லை. என்னால் இத்தனை சிறப்பாக இந்த விவசாயத்தை செய்யமுடிவதற்கு காரணம் எனது அப்பா சீதாபதியும் அம்மா முத்துலட்சுமியும்தான். இவர்கள்தான் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அதுபோல எனது மகன்கள் பாலமுருகன், சூர்யா இருவரும் பொறியியல் பட்டதாரி என்றாலும் எனக்கு வயலில் நின்று உதவி செய்வார்கள். குடும்பத்துடன் உழைப்பதால்தான் லாபகரமாக இந்த விவசாயத்தை தொடர முடிகிறது” என்கிறார் புன்னகையுடன்.

-சு. வீரமணி

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top