முத்து நகரின் தங்க மகள்!

ஆட்டிஸம், மனவளர்ச்சி பாதிப்பு, வறுமையான குடும்பச் சூழல் என வாழ்க்கைப் பாதையே ‘தடை’ களமாக இருக்க, தடகளத்தில் சாதனைகள் செய்திருக்கிறார் முத்துமீனா. தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தேசிய அளவில் பதக்கங்களையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்.
நாம் பேசினால்கூட புரிந்துகொள்ள இயலாது. எந்தநேரத்தில் என்ன செய்வாரோ என்ற எல்லைமீறிய துறுதுறுப்பு என முத்துமீனாவின் பிரச்சினைகளைக் கேட்டாலே இதயம் கனத்துவிடும். ஆனால், இப்படிப்பட்ட பாதிப்பிலும் கடந்த வாரம் சண்டிகர் மாநிலத்தில் நடந்த பாரா தடகளப் போட்டியில் இரண்டு தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இதுபோல் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் பதக்கங்களைக் குவித்து வருகிறார். எப்படி முடிகிறது?
முத்துமீனாவின் அம்மா ஜெயலட்சுமியிடம் பேசினோம். “முத்துமீனாதான் எங்களுக்கு முதல் குழந்தை. குழந்தையை நல்லபடியா படிக்கவைத்து பெரிய ஆளாக்கணும்னுங்குற கனவோடு இருந்த எங்களுக்கு, “உங்கள் குழந்தைக்கு மனவளர்ச்சி குன்றிய பிரச்சினையும் 60 சதவீதம் ஆட்டிஸமும் இருக்கிறது” என்று டாக்டர்கள் சொன்னபோது அதிர்ச்சியாகிவிட்டோம்.
சொந்த மாமா பையனையே திருமணம் செய்துகிட்டதாலதான் குழந்தைக்கு இப்படி ஆகிடுச்சின்னு டாக்டர்கள் சொன்னார்கள். அதைப் பற்றி உறவினர்களே ஏளனமாக பேச ஆரம்பிச்சுட்டாங்க. அது, இன்னும் எங்களுக்கு மனவலியைக் கொடுத்தது. அந்த மனவலிதான் மனவலிமையையும் அதிகமாக்கியது.
குழந்தைக்கு பிரச்சினைகள் இருந்தால் என்ன? எப்படியாவது பேர் சொல்ற பிள்ளையாய் இருக்கவேண்டுமென்று வளர்க்க ஆரம்பித்தோம். மாதா, பிதா, குரு, தெய்வம்ங்குறதுக்கு இலக்கணமா, ‘சீனா வானா அரசு மேல்நிலைப் பள்ளி’ தலைமை ஆசிரியர் செந்தூர்கனி மேடம் எங்களுக்கு வழிகாட்டினார்கள். முத்துமீனாவை படிக்க ஊக்கப்படுத்தினாங்க. அவளும் நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டா. தொடர்ந்து, விளையாட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தி ஆட்டிஸம் மற்றும் மூளை வளர்ச்சி பாதிப்பைத் தாண்டி சக மாணவிகளைப்போல செயல்படவைக்க முயற்சித்தார்.
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது பள்ளியில் பாக்ஸிங் பயிற்சியாளர் ஸ்டீபன் சாரிடம் விளையாட்டுப் பயிற்சிக்காக சேர்த்தேன். உயரம், எடையை எல்லாம் வைத்து பார்த்து குண்டு எறிதல் விளையாட்டு இவளுக்கு சரியாக இருக்கும் என்று சொன்னார். அதிலிருந்து, கடந்த மூன்று வருடங்களாக குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என தடகளப் போட்டிகளில் சாதித்து வருகிறாள்” என்றார்.
மாநில அளவில் 10க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், தேசிய அளவில் ஆறு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் என்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததோடு, 8.9 சென்டிமீட்டர் தூரம் குண்டு எறிந்து சர்வதேசப் போட்டிகளுக்கும் தேர்வாகியுள்ளார்.
“இதற்கெல்லாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உதவியும் ஊக்கப்படுத்துதலும் முக்கிய காரணம்” என்கிறார்கள் முத்து மீனாவின் பெற்றோர்.
“இரண்டாவது மகள் ரம்யாவையும் பாக்ஸராக்கியிருக்கிறோம்” என்று பெருமைப்படும் முத்துமீனாவின் தாய் ஜெயலட்சுமி, “எனது கணவர் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்பவர். மாதத்துக்கு பாதி நாட்கள்தான் வேலை இருக்கும். அவருக்கு, சர்க்கரை நோய் இருப்பதால் அடிக்கடி கால் வேறு வீங்கிக்கும். அந்தச் சூழலிலும் எங்கள் மூணுபேருக்காக உழைச்சுக்கிட்டு கிடக்கிறார்.
எங்கள் இரண்டாவது பெண் ரம்யா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். பாக்ஸிங் போட்டிகளில் மாநில அளவில் விளையாடிக்கிட்டிருக்காள். சமீபத்தில் நடந்த பாக்ஸிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாள்.
இவ்வளவு வறுமையான சூழலிலும் எப்படி இரண்டு பேருக்கும் பயிற்சி கொடுக்கமுடிகிறது என்றால் பலரது உதவிகள்தான் காரணம். காலை, மாலை இரண்டு நேரமும் பயிற்சிக்காக ஸ்டீபன் சாரிடம் அழைத்துச் சென்று வருவேன். முத்து மீனாவிற்காகப் பயிற்சிக் கட்டணமாக ஒரு ரூபாய்கூட வாங்கியதில்லை.
ஒவ்வொரு முறை போட்டிக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது கடன் வாங்கிட்டுத்தான் போவோம். 2018 தேசிய அளவிலான போட்டிக்கு என்னுடைய நகையையெல்லாம் அடமானம் வைத்துத்தான் போனோம். அந்தப் போட்டியில், முத்துமீனா தங்கம் வென்றதால் 2019 போட்டியிலும் தேர்வாகிவிட்டாள். ஆனால், போக்குவரத்து செலவுக்கூட பணமில்லாததால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சாரை சந்தித்து மனு கொடுத்தோம். கனிவோடு கேட்டவர், கலெக்டர் நிதியிலிருந்து 69 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்து “ஆல் தி பெஸ்ட், பதக்கத்தோடு வரவேண்டும்” என்று ஊக்கப்படுத்தி அனுப்பினார்.
அதேபோல், இந்த வருடமும் போட்டிக்குத் தேர்வானதும் 59,500 ரூபாய் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திடம் ஸ்பான்சர் வாங்கிக் கொடுத்தார். மீண்டும் இரண்டு தங்கப் பதக்கங்களோடு வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றோம்’ என்கிறார் பூரிப்போடு.
ஆட்டிஸம், மனவளர்ச்சி குன்றிய சூழலிலும் முத்து மீனா விளையாட்டில் மட்டுமல்ல! படிப்பிலும் கெத்து மீனாவாகத்தான் இருக்கிறார். பத்தாம் வகுப்பில் 282 மதிப்பெண் எடுத்துள்ளவர், தற்போது ப்ளஸ்டூ பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
-பூ. சர்பனா