Now Reading
மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற மாஸ்டர்

மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற மாஸ்டர்

பிறந்து வளர்ந்த கிராமத்தை விட்டே அதிகம் வெளியே சென்றிராத பள்ளி மாணவர்கள் அவர்கள். சிவகாசியில் இருந்து ரயில் வழியே சென்னைக்கு இருநாள் சுற்றுலா சென்றுவிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் திரும்பியுள்ளனர். சிவகாசியிலுள்ள மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 5-ஆம் வகுப்பு படிக்கும் அந்த 20 மாணவர்களின் முகங்களில் இன்னும் விமானத்தில் பயணம் செய்த பிரமிப்பு அகலவில்லை. இந்தப் பயணத்தைத் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன்.

சிவகாசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது அந்தப் பள்ளி. பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரனைச் சந்தித்து இந்த யோசனை எப்படி வந்தது என்று கேட்டோம்.

இங்கிருக்கும் சுக்கிரவார்பட்டிதான் எங்க சொந்த ஊர். 1987-ல் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். படிப்படியாக உயர்வு பெற்று, 2004-ல், தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டேன். அப்போது இப்பள்ளியில் 150 மாணவர்கள் படித்துவந்தனர்.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சியும், ஆர்.டி.இ. திட்டத்தின்படி அப்பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு முறையில், இலவச கல்வியும் தருவதால், எங்கள் பள்ளியில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வந்தது. தற்போது 64 பேர்தான் படிக்கிறார்கள்.

மாணவரின் சேர்க்கை எண்ணிக்கைதான் குறைந்தது என்றால், வருகைப் பதிவேட்டிலும் மாணவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. இங்கே 200 குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள்தான். காலையில் 7 மணிக்கு போனால், இரவு 6 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்கள். அவர்களால் குழந்தைகளை சரிவர கவனித்துக்கொள்ள முடியாது. நாங்கள் ஏதேனும் வீட்டுப்பாடம் செய்யச் சொன்னாலோ, படித்து வரச் சொன்னாலோ அதை செய்து வரமாட்டார்கள். மீறிக்கேட்டால், அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிக்கூடம் பக்கமே வர மாட்டார்கள்.

வகுப்புக்கு வந்தால்தானே, பாடம் சொல்லித்தரமுடியும். இவர்களை படிப்பின்மீது கவனம் செலுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து, 6 மாதத்திற்கு முன்பு எனது 5-ஆம் வகுப்பு மாணவர்களிடம் ‘யாரெல்லாம் ஒழுங்காக, லீவு போடாமல் வகுப்புக்கு வருகிறீர்களோ, வீட்டுப்பாடம் செய்கிறீர்களோ, நன்றாக படிக்கிறீர்களோ அவர்களை எல்லோரையும் நான் விமானத்தில் கூட்டிட்டுப் போவேன்’ என்று அறிவித்தேன்.

அன்றிலிருந்து வகுப்பிற்கு மாணவர்கள் தவறாமல் வரத்தொடங்கினர். வீட்டுப்பாடங்களை முறையாகச் செய்துவந்தனர். படிக்கவும் ஆரம்பித்தனர். சொன்னதை செய்து முடித்த மாணவர்களுக்கு நான் கொடுத்த வாக்குப்படி, கடந்த மார்ச் 1- ஆம் தேதி 5 ஆசிரியர்கள், 20 மாணவர்கள் உள்பட மதுரையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்குப் பயணமானோம். இரண்டு நாட்கள் அங்கே சுற்றிப் பார்த்துவிட்டு, மார்ச் 3-ஆம்தேதி மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். இதற்கான செலவுகளை நானே பார்த்துக் கொண்டேன். பயணத்தை என் வகுப்பு மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

நாங்கள் விமானப் பயணம் சென்றுவிட்டுவந்தபிறகு, எங்களை ஏன் கூட்டிக்கிட்டு போகல என்று மற்ற வகுப்பு மாணவர்கள் எல்லோரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தமுறை எல்லோரையும் கூட்டிட்டு போவதாக சொல்லி இருக்கிறேன்” என்றார்.

விமானப்பயணம் செய்த மாணவர்களை அவர்களது வகுப்பறையில் சந்தித்தோம். சாமானிய மக்களின் குழந்தைகள் ஆர்வமாகத் தமிழ் படித்துக் கொண்டிருந்தார்கள். விமானப்பயணம் எப்படி இருந்தது என்று கேட்டதற்கு, சூப்பராக இருந்தது சார்…” என்று கோரஸாக சந்தோஷக் குரல் கொடுத்தனர்.

தனலட்சுமி என்ற மாணவி, வானத்துல போகும்போது கீழ நின்னுதான் ஏரோபிளேனை பாத்திருக்கேன்.

அன்னிக்குதான் முதமுதலா அதுல போனேன். சன்னலோரமா எனக்கு இடம் கிடைச்சுது. மேலே ஏறும்போது, நாங்க எல்லோரும் ‘ஓ’ன்னு சந்தோஷத்துலயும், சில புள்ளைங்க பயத்துலயும் சத்தம்போட்டோம். மேலே விமானம் பறக்கும்போது, கீழ பார்த்தா, ஊருங்க எல்லாம் குட்டி, குட்டியா தெரிஞ்சுது. வீடுங்க எல்லாம் எறும்பு போல தெரிஞ்சுது. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு…” என்றார்.

சாதனா என்ற மாணவி, சார்… நான் ஏரோபிளேன்ல போறதுக்கு முன்னாடி லெப்டல போனேன்.” என்றாள் வெள்ளந்தியா. அது என்ன லெப்ட் என்று கேட்டதற்கு, அருகில் இருந்த மாணவன் அது லிஃப்ட் சார். அதைத்தான் அந்த புள்ள அப்படி சொல்லுது…” என்றான்.

See Also

லெப்ட்ல போயி, ஏரேபிளேன்ல ஏறி ஒக்காந்தோம். பெல்ட் போடச் சொன்னாங்க. எனக்கு போடத்தெரியல. தொப்பி போட்ட ஒரு அக்கா வந்து எனக்கு பெல்ட் போட்டுவிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. நான் நல்லா படிச்சி எங்க சார் மாதிரி ஆகணும். அவரைப்போல என்னால முடிஞ்சவரைக்கும் மத்தவங்களுக்கு உதவி செய்யணும்…” என்று நெகிழ வைத்தாள்.

சுவேதாவிடம் கேட்டதற்கு, எனக்கு ஏரோபிளேன்ல ஏறவே பயம். ஏறி உக்காந்துட்டேன். சர்ருன்னு மேலே ஏறும்போது எனக்கு தலை சுத்திருச்சி. எப்படா ஊருக்கு போவோம்னு நினைப்பு வந்துருச்சி. நாங்க சென்னைக்கு வரும் போது, ராத்திரி முழுக்க பயணம் செஞ்சோம். ஏரோபிளேன்ல வரும் போது கொஞ்ச நேரம் தான் ஆச்சி…அதுக்குள்ள மதுரைக்கு வந்துட்டோம். தரைக்கு வந்ததும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சி…” என்றாள்.

மனோஜ் பாண்டி என்ற மாணவன், ரயில், சென்னை சுற்றுலா, ஏரோபிளேன் பயணம் எல்லாமே எங்களுக்குப் புதுசு சார். ரொம்ப சந்தோஷமா ரெண்டு நாள் இருந்தோம். எங்க சார்தான் பத்திரமா பாத்துகிட்டார். பிளைட்ல போயிட்டு வந்ததிலிருந்து, ஊர்ல இருக்கிறவங்க எல்லாம், பிளைட்ல போனவனே இங்க வாடான்னு கூப்பிடறாங்க…” என்று சிரித்தான்.

மாணவர்கள் மட்டுமின்றி ஜெயச்சந்திரன் தன்னோடு கூட்டிச்சென்ற ஆசிரியர்களுக்கும் அதுதான் முதல் விமானப் பயணம். அனைத்து செலவுகளும் இவரே பார்த்துக்கொண்டதால், பயணம் முடிந்தபின்பு, அந்த ஆசிரியர்கள் பணத்தை தர முன்வந்தபோது, நீங்களே வச்சிக்கோங்க, இன்னும் ஆறு மாதத்தில் மொத்த பள்ளியையே விமானத்தில் கூட்டிகிட்டு போகலாம். அதற்கு பயன்படட்டும்…” என்று சொல்லிவிட்டார் ஜெயசந்திரன்.

கோபத்தில் அடித்துவிட்டால்கூட, அடுத்த அரைமணி நேரத்தில் என் மேல் அன்பு காட்டும் மாணவச் செல்வங்கள் இவர்கள். மொத்த பள்ளி மாணவர்களும் தங்களையும் விமானத்தில் கூட்டிச் செல்லும் படி கேட்டிருக்கிறார்கள். லீவு போடாம, நல்லா படிக்கற, வீட்டுப்பாடம் செய்யற எல்லாரையும் வரும் ஆகஸ்ட் மாதம் பிளைட்ல கூட்டிகிட்டு போறேன்னு செல்லியிருக்கேன். பள்ளியே இப்போது மகிழ்ச்சியில் மட்டுமின்றி, படிப்பிலும், வருகையிலும் நேர்த்தியாகிவிட்டது. அடுத்த விமானப்பயணத்திற்கு பள்ளியே தயாராகிக் கொண்டிருக்கிறது…” என்று உற்சாகமாகக் கூறினார் ஜெயச்சந்திரன்.

சந்திப்பு, படங்கள்: மோ.கணேசன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top