Now Reading
வாவ் ஐந்தறிவு – 41

வாவ் ஐந்தறிவு – 41

விலங்குகளின் விந்தை உலகம்!

அரணையை அடித்தால் பாவமா?

சட்டென்று பார்த்தால் சிறிய பாம்புக் குட்டிகளைப்போல் தோற்றமளிக்கும் அரணைகள் பரம சாதுவானவை. இந்தியாவில் மட்டும் 110 அரணை இனங்கள் உள்ளன. இவை 18 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஊர்வன இனத்தில், இவை சின்சிடே (SCINCIDAE) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.

இவற்றில் பாப்பரணை  எனப்படும் பிராமின அரணையைத்தான் நம்மில் பெரும்பாலோர் பார்த்து இருப்போம். பொதுவாக கிராமப்பகுதிகளில் வசிப்பவர்கள் அரணையைப் பார்த்தால், அதனைக் கொல்லமாட்டார்கள். குழந்தைகளிடம், அரணையை அடிக்க வேண்டாம். அடித்தால் பாவம் என்று சொல்லி எச்சரித்துவைப்பார்கள். இதன் புறத்தோலில் இம்பிரிக்கேட் வரிசையில் அமைந்திருக்கும் பளபளப்பான செதில்களின் தோற்றமும், அதன் அழகான வண்ணமும் குழந்தைகளுக்குப் பிடித்திருப்பதால், அவர்களும் அரணைகளைத் துன்புறுத்துவதில்லை. அரணையின் தோல் பகுதி கொம்புச் செதில்கள் எனப்படும் செல் போர்வையைக் கொண்டு மூடப்பட்டிருக்கும். கோடைக்காலங்களில் அரணை அடிக்கடி தோலை உரித்துக் கொண்டு மினுமினுப்பான உடம்போடு திரியும்.

இவை வறண்ட இடங்களில் வசிக்கக்கூடிய உயிரினமாகும். வெப்பமான வேளைகளில் மட்டுமே வெளியே வந்து இரை தேடும். இரவு வேளைகளில் கற்களுக்கு அடியிலோ பொந்துகளிலோ பாதுகாப்பாய் பதுங்கிக்கொள்ளும்.

ஆங்கிலத்தில் ஸ்கிங்க் (SKINK) என்று அழைக்கப்படும் அரணைகள் குளிர்காலங்களை விரும்புவது இல்லை. குளிர் காலம் ஆரம்பித்துவிட்டால் கற்பாறைகளின் இடுக்குகளில் நுழைந்து, ஒரு பாதுகாப்பான இடத்தைப் பிடித்துக்கொண்டு நுழைவுப்பகுதியை பாசி அல்லது களிமண் போன்றவற்றைப் பயன்படுத்தி அடைத்துவிட்டு, தூங்க ஆரம்பித்துவிடும். தூக்கம் என்றால் சாதாரண தூக்கமல்ல. குளிர்காலம் முடியும் வரைக்குமான ஹைபர்னேஷன் எனப்படும் ஆழ்ந்த உறக்கம். குளிர் முற்றிலுமாக மறைந்து வெயில் காலம் ஆரம்பித்த பின்தான் அரணைகள், அந்தப் பாறை இடுக்குகளில் இருந்து வெளியே வந்து தங்களுடைய பழைய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன.

பொதுவாக ஆண் அரணைகள் பச்சை நிறமும், பெண் அரணைகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறமும் கொண்டவை. இந்த நிறங்களின் காரணமாக அரணைகள் தரை மற்றும் புல்வெளிகளில்  காணப்பட்டாலும் நம்முடைய கண்களுக்குப் புலப்படுவதில்லை.

உணவும் பாதுகாப்பும்

அரணைகளின் பிரிய உணவாக சிலந்திகள், பூச்சிகள், புழுக்கள் போன்றவை உள்ளன. இவற்றுக்கு இரையாகும் பூச்சிகளின் உடலை முழுமையாக உண்ணாமல், அந்த உடலில் உள்ள திரவத்தை மட்டும் உறிஞ்சிக் குடிக்கின்றன. புழு, பூச்சிகள் இரையாகக் கிடைக்காத நேரத்தில் புல்லின் மேல் நிற்கும் பனித்துளிகளை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

அரணைகள், தங்களுடைய எதிரிகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள ஓர் உபாயத்தைக் கையாளுகின்றன. அதாவது எதிரிகள் இவற்றை தாக்க முயன்றாலோ அல்லது இரையாக்கிக் கொள்ள முயன்றாலோ தங்களின் வால் பகுதியை முறித்து தனியே விட்டுவிட்டு, வினாடி நேரத்திற்குள் மறைந்துவிடுகின்றன. இப்படி முறித்துக்கொள்ளும் செயலை ‘தன் உறுப்பு முறிவு’ என்று பிராணி இயல் வல்லுநர்கள் அழைக்கிறார்கள். வாலை இழந்துவிடும் அரணைகளுக்கு தங்களின் உயிரைப்பாதுகாத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன் வால், அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே முன்பு இருந்த அதே வண்ணத்தோடு, நீளத்தோடு, முழுமையாக வளர்ந்துவிடுகின்றன.

அரணைகள் விஷமற்றவை. உணவுச் சங்கிலியில் பூச்சிகள், புழுக்கள், சிலந்திகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது இதனுடைய பிரதான பணியாகும். இதன் உருவம் பார்ப்பதற்கு பாம்பு மாதிரியும் இல்லாமல், பல்லி மாதிரியும் இல்லாமல், இரண்டும் சேர்ந்தது போன்ற கலவை இனமாக தெரிவதால், இதற்கு பாம்பிராணி என்று பெயர். பாப்பராணி என்று அழைப்பவர்களும் உண்டு.

இதுபோக சின்னரணை, மணலரணை, மீனரணை போன்ற அரணைகளும் உண்டு. சில வகை அரணைகள் சற்றே நீளமாக, ஒல்லியாக, உருவி விட்ட உடம்பு போன்று, கிட்டத்தட்ட பாம்புகளைப் போலவே இருக்கும். இது போன்ற அரணைகள் ராஜஸ்தான் பாலைவனங்களில் மிகுந்து காணப்படுகின்றன.

ஹிமாலயன் அரணை

அரணைகளில் அரிதான ஒரு வகை ஹிமாலயன் அரணை. இதன் விலங்கியல் பெயர் ‘அசிம்பிள்பரஸ் ஹிமாலயன்ஸ்’ (ASYMBLEPHARUS HIMALAYANS). இவற்றை காஷ்மீர், கார்வால், சிம்லா, நைனிடால், டார்ஜிலிங் போன்ற இடங்களில் 5,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரை உள்ள ‘குளு குளு’ பகுதிகளில் பார்க்கமுடியும். டார்ஜிலிங் பகுதியில் மட்டும் தென்படும் இன்னொரு அரணையின் பெயர் சிக்கிமென்ஸ்.

இப்படி அரணைகள், தன்னுடைய தோற்றங்களில் எவ்வளவு வித்தியாசம் காட்டினாலும், அதன் குணநலன்களும், பண்புகளும் மாறுவது இல்லை.  அரணைகளுக்கு சற்று ஞாபக மறதி அதிகம். ஓர் இரையைப் பார்த்து விட்டால் வேகவேகமாய் சரசரவென்று அந்த இரையைப்பிடிக்கப் போகும். ஆனால், பாதி வழியில் வேறு  அரணையைப் பார்த்துவிட்டாலோ அல்லது ஏதாவது ஒரு சிறிய குறுக்கீடு நேர்ந்துவிட்டாலோ பிடிக்கப்போகும் இரையை மறந்துவிட்டு, அங்கேயே நின்று கொள்ளும். பிறகு சிறிது நேரம் கழித்து தன்னுடைய இடத்திற்கு திரும்பி வந்துவிடும். இன்னமும்கூட கிராமத்தில் ஞாபகமறதி உள்ளவர்களை “அவனுக்கு அரணை புத்தி அரை புத்தி” என்று சொல்லி கிண்டல் செய்வார்கள்.

வழக்கமான அரணைகளைத்தவிர இந்த உலகம் முழுவதும் விதவிதமான அரணைகள் ஆஜானுபாகுவான தோற்றங்களோடு காணப்படுகின்றன. இதில் உள்ள முக்கியமான இனங்கள் ஆல்பர்ன் அரணை (ALBORN SKINK), பாரியர் அரணை (BARRIER SKINK), பர்கன் அரணை (BURGAN SKINK),

செஸ்டர் ஃபீல்டு அரணை (CHESTER FIELD SKINK), செவ்ரான் அரணை (CHEVRON SKINK), கோப்பில் அரணை (COBBLE SKINK), கிராண்ட் அண்ட் ஒடாகோ அரணை (GRAND AND OTAGO SKINK), ஆர்னேட் அரணை (ORNATE SKINK), சிந்பாத் அரணை (SINBAD SKINK), ஸ்ட்ரைப்டு அரணை (STRIPED SKINK), தே காகூ அரணை (TE KAKAHU SKINK), விரிநாகி அரணை (WHIRINAKI), ஒயிட் பெல்லைடு அரணை (WHITE BELLIED SKINK).

கிராண்ட் அண்ட் ஒடாகோ அரணை

இது அரணைகளில் பெரிதான இனம். நியூசிலாந்தில் காணப்படுகிறது. 300 மில்லி மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் ஆயுட்காலம் 20 ஆண்டுகள். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இனப்பெருக்கம் செய்யும்.

அரணைகள் பிறந்தது முதலே தனிப்பட்ட வாழ்க்கைதான். தாயிடம் அண்டுவதில்லை. பொதுவாக அரணை விஷமற்றவையாக இருந்தாலும், அவை மனிதனை நாக்கால் நக்கும்போது, தோலில் ஒருவித அலர்ஜி ஏற்பட்டு நமைச்சல் உண்டாகும். ஆனாலும், நம் தமிழ்நாட்டில் இரண்டு பழமொழிகள் வழக்கத்தில் உண்டு. ஒரு பழமொழி – அரணை கடித்தால் மரணம் நிச்சயம். மற்றொன்று – இருதலை பாம்பு கடித்தால் மலை மருந்தாலும் பலனில்லை.

இந்த இரண்டு பழமொழிகளையும் மேலோட்டமாய்ப் படித்துப்பார்த்தால் அரணையும், இருதலை பாம்பு எனப்படும் மண்ணுளிப் பாம்பும், அதிக வீரியமுள்ள விஷ ஜந்துக்கள்போல் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. அரணை கடித்தால் மரணம் நிச்சயம் என்பதற்கான பொருள், அரணை அவ்வளவு சுலபத்தில் மனிதர்கள் யாரையும் கடிக்காது. அப்படி கடித்தாலும் யாருக்கும் எதுவும் நேர்ந்து விடாது. ஒரு மனிதனைக் கடிக்கும் குணம் கொண்டதாக இருந்தால், அதை அடித்துக் கொன்றுவிடுவார்கள். அதாவது அரணை கடிக்கும் குணம் கொண்டதாக இருந்தால், அதற்கு மரணம் நிச்சயம் என்பது அதன் பொருள்.

அதேபோல் இருதலை பாம்பு, மண்ணுளி பாம்புக்கு விஷம் இல்லை. அப்படியே கடித்து விட்டாலும் அதற்காக எந்த ஒரு மலைக்கும் போய் மருந்து தேடாமல், வீட்டில் இருக்கும் சுண்ணாம்பை எடுத்து கடிவாயில் தேய்த்தாலே போதும். கடிபட்ட காயம் குணமாகிவிடும்.

See Also

பல்லிக்கும் அரணைக்கும் உள்ள வித்தியாசம்

பல்லியும் அரணையும் ஒரே இனம் என்றாலும், நமக்கு அவற்றைப் பார்த்ததுமே வித்தியாசம் தெரிந்துவிடும். பல்லிக்கு நிறம் நிறமான மினுமினுப்பு தோல் கிடையாது. ஆனால் அரணை மேக்கப் போட்டுக்கொண்ட தினுசில் அழகாக இருக்கும். தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதுபோலவே இரண்டின் பண்புகளும் வெவ்வேறானவை. அதுவும் இனப்பெருக்க விஷயத்தில் அவற்றின் அணுகுமுறைகள் விசித்திரமானவை.

ஒரு ஆண் பல்லியானது ஒரு பெண் பல்லியைப் பார்த்துவிட்டால், அதை விடாமல் துரத்திக் கொண்டே போய், மூர்க்கமாய் தாக்கவும் செய்யும். இந்த பலாத்காரத்தில் பெண் பல்லி இறந்து போவதும் உண்டு. இப்படி ஒரு ஆபத்து இருப்பதன் காரணமாகவே பெண் பல்லி, ஆண் பல்லியைப் பார்த்ததுமே ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும். ஆனால், அரணைகள் விஷயத்தில் அப்படியில்லை.

ஆண் அரணை ஒரு பெண் அரணையைப் பார்த்து விட்டால், தயங்கித் தயங்கி அதனருகே போகும். பெண் போகுமிடமெல்லாம் தானும் கூடக்கூடச் சென்று இணை சேர அதனுடைய சம்மதத்தை எதிர்பார்க்கும். பெண் அரணை சம்மதம் கொடுத்தால் மட்டுமே பக்கத்தில் சென்று, அதன் உடம்போடு மோதும். பக்கத்தில் போய் படுக்கும். பெண் அரணையின் உடம்பைத் தன் நாக்கால் நீவிவிடும். அதன் பிறகே பெண்ணின் முழு சம்மதத்தோடு இணை சேரும்.

அரணைகளை அவற்றின் உருவ அமைப்பைக்கொண்டு எளிதாகக் கண்டறிய முடியும். அதன் கழுத்துப் பகுதி ஒரு முறையான அமைப்பின்றி, உடம்போடு பொருந்தி இருக்கும். உடலின் மேல்பகுதி அறுகோண வடிவம் கொண்ட செல்கள் போல் காணப்படும்.  வயிற்றின் அடிப்பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். இதன் கண்கள் வட்ட வடிவமாகவும், கருப்பு நிறத்திலும், கோலி குண்டுகள் போல் மின்னும். கூரிய நகங்களோடு, ஐந்து விரல்களை உடைய, குட்டையான கால்கள் முன்பும் பின்பும் அமைந்துள்ளன.

மனிதர்களால் ஆபத்து இல்லை என்பதை நன்கு புரிந்துவைத்திருக்கும் அரணைகள், மனிதர்கள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு தைரியமாய் வந்து செல்லும். மனிதர்களும் அது ஒரு அப்பிராணி என்று நினைத்து விட்டுவிடுவார்கள்.

இரு அரணைகளுக்கு இடையே நடைபெறும் வாழ்விடத்திற்கான போட்டியை டெரிட்டோரியல் ஃபைட் (TERRITORIAL FIGHT) என்று அழைக்கிறார்கள். இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டப்படி, அரணைகள் பாதுகாக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. அரணைகள் அழகானவை, தீங்கற்றவை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே, அவற்றைப் பாதுகாக்க முடியும்.

அரணை, உயிர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு அரணாக இருப்பதால் சிலந்தி, கொசு போன்றவை அழிந்து மனித வாழ்வு ஆரோக்கியமாக உள்ளது.

-ராஜேஷ் குமார்

(வாவ் வளரும்)

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top