Now Reading
ஆன்லைனில் பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

ஆன்லைனில் பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இன்றைய ஊரடங்குச் சூழலில் ஆன்லைன் கல்வியைப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஊக்குவித்துவரும் நிலையில், அதற்கு மற்றொருபுறமிருந்து எதிர்ப்புக் குரல்களும் எழுந்துவருகின்றன.

சார்லி சாப்ளின் நடிப்பில் ‘தி மாடர்ன் டைம்ஸ்’ படத்தில், சென்ற நூற்றாண்டில் இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு எதுவரை செல்லும் என்பது குறித்த கற்பனைக் காட்சியை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்.

உங்கள் முயற்சி எதுவுமே தேவை இல்லாமல். உங்களைச் சாப்பிட வைக்கும் கருவிக்கு டெமோ காட்டவருவார்கள். ஆலை முதலாளி அப்பாவிப் பணியாளரான சாப்ளினை வைத்து பரிசோதிப்பார். இந்த 21ஆம் நூற்றாண்டில்  நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. கொரோனா காலத்தில் பாடம் நடத்தும் ‘கருவி’ ஆன்லைன்  டெமோவுக்கு சாப்ளினாக, நம் குழந்தைகளை இன்றைய கல்வி வர்த்தகம் ஆய்வுக்கூட எலிகளாகப் பயன்படுத்துகிறது.

இதுதான் ஆன்லைன்

புதிய கல்விக்கொள்கையில் ஏற்கெனவே மத்திய அரசு, மக்கள் பின்பற்றவேண்டும் என ‘ஆசை ஆசையாய்’ அறிவித்த கல்வி வர்த்தகம், கொரோனா ஊரடங்கால் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமலேயே  நடைமுறைக்கு வந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இந்த நோய் விடைபெற்றுப் போய்விட்டாலும்,  அதை அரசு நிறுத்திக்கொள்ளுமா என்பது சந்தேகமே.

ஆன்லைன் மூலம் நடப்பது கல்வியா என்ற கேள்வியிலிருந்து நாம் தொடங்கலாம்.

அமேசானிலும் ஃபிளிப்கார்டிலும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறோமே, அதேபோல் பள்ளிக்கூடம் போகாமலேயே ஆன்லைனில் ஆர்டர் செய்து படித்துவிடமுடியாதா? நவீன அறிவியல் நமக்கு வழங்கியுள்ள இதுபோன்ற வாய்ப்பை இப்போது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ‘நேரத்தை வீணாக்காமல்’ கல்விக்காக,  இடைவெளி வராமல் தொடர்வது நல்லதுதானே. இவை இன்று மத்தியதர வர்க்க, வசதி படைத்த வீடுகளில் இருந்து பொதுவாக கேட்கும் வார்த்தைகள். ஆன்லைன் வகுப்புக்கூட இல்லாத ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு, இன்று கஷ்டமாக உள்ளது என்பவர்களும் உண்டு.

ஆன்லைனில் வகுப்பறைகள் சாத்தியமா? சென்ற வாரம் காய்கனிக் கடையில் நான் சந்தித்த ஓர் ஆசிரியர், “கால்குலஸ் நுண்கணிதம் பாடப்பகுதியை ஜூம் ஆப்ஸ்லேயே   முடிச்சுட்டேன்” என்றபோது எனக்குப் பகீரென்றது. புதிய கல்விக்கொள்கை ரொம்ப நயவஞ்சகமாக சர்வதேச ஆன்லைன் வர்த்தகமாக உயர்கல்வி மாற்றப்படவேண்டும் என்று அறிவித்தது. அதனை வீராப்போடு எதிர்த்த நம் மக்கள், கல்வி  நாயகர்கள் சிலர்,  தற்போது வெப்மினார்களில் புகுந்து, இதுவே எதிர்காலம் என நடக்கப்போவது தெரியாமல் திருவாய் மலர்கிறார்கள்.

கற்றல் என்பது என்ன?

கற்றல் நடவடிக்கை என்பது  (1) கற்றல் நோக்கம் (2) பாடப்பொருள் மீதான ஈடுபாடு (3) ஈடுபாட்டை ஊக்குவிக்கும் கற்பித்தல் நடவடிக்கை (4) கேள்விகள் மற்றும் கலந்துரையாடுதல், தேடல் மூலம் நடக்கும் சுயமதிப்பீடு  (5) கற்றதை தன் மொழியில் மறு உற்பத்தி செய்வதன் மூலம் சுயஅறிவாக மாற்றுதல் (6) வகுப்பறைச் செயல்பாடுகள் விவாதங்கள், குழுத்தேர்வு பிறகு மாதிரித்தேர்வு என  பல படிநிலைகளைக் கொண்டது.

மேற்கண்ட பட்டியல், பாடத்துக்குப் பாடம் வேறுபடும். மொழிப்பாடம்  தொடர்பான கற்றல், கற்பித்தல் படிநிலைகள் வேறு. கணிதத்திற்கு வேறு. அறிவியலுக்கு வேறு. அதுமட்டுமல்ல, இந்த கற்றல் படிநிலைகள் குழந்தைகளின் வயதைப் பொருத்தும் மாறும். பெரும்பாலும் கல்வி தொடர்புள்ள யாவருமே அறிந்ததுதான். இதில் எதுவுமே ஆன்லைன் கல்வியில் சாத்தியமில்லை என ஆய்வுகள் நிருபித்துள்ளன.

உயிருள்ள சக மனிதரான ஆசிரியர், நம்முடைய குழந்தைகள் முன்னால் நின்று நிஜ உருவமாய் தன் கருத்துக்களையும், தன் அனுபவ அறிவையும் சேர்த்து அடுத்த தலைமுறைக்கு  வழங்கும் வகுப்பறைக் கல்வி, பல பரிமாணங்களைக் கொண்டது. தனி மனித உளவியலால் மாற்றங்களைச் சுவீகரிக்கும் வல்லமைகொண்டது. அதை ஒரு கணினி மானிட்டருக்குள் அடக்குதல் சாத்தியமே இல்லாத விஷயம்.

கணினியில் கேட்காத குரல்

இது இந்த குழந்தைக்குப் புரியும். அதே அந்தப் பையனுக்குப் புரியாது என தன் தொனியை, கற்பிக்கும் விதத்தை லேசாக ஆளுக்குத்தக்கவாறு மாற்றி அசத்துபவரே ஆசிரியர். ‘அங்கென்ன வேடிக்கை  இங்கே கவனி’ என்கிற குரல் கணினியில் கேட்காது. ‘புரியலையா… என்ன முழிக்கிறீங்க… திரும்ப நடத்துறேன் கவனி…’ என ஆன்லைன் வகுப்பு சொல்லாது. ‘டேய்… தூங்காத…’ என்று அது குரலை உயர்த்தி கவனிக்க வைக்காது. ஆன்லைன் வகுப்பைப் பொருத்தவரை நீங்கள் மாணவர்கள் அல்ல, லட்சக்கணக்கான நுகர்வோரில் ஒருவர்.

மழலை வகுப்புகளைக்கூட ஆன்லைனில் நடத்த இன்று நடக்கும் முயற்சி நம்மை அதிரவைக்கிறது.  ஆசிரியர் தலையில் கைவைத்து தலை இது, கழுத்து என்று நேருக்கு நேர் நடத்தி கற்றலை இனிக்கவைப்பதை, இயந்திரத்தனமாக குழந்தைகளை கணினி மானிட்டரைப் பார்த்துச் செய்யவைப்பது மகா அபத்தம். உண்மை வகுப்பறைக்கும் காட்சிப்படுத்தலுக்கும் இடையிலான வேற்றுமை, எத்தகைய உளவியல் சிக்கல்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்  என்பதையும்  பார்க்க  இருக்கிறோம்.

கல்வியியல்  தொழில்நுட்பம், வன்பொருள் (Hardware) மென்பொருள் (Software) மற்றும் இ-கற்றல் கோட்பாடு இது மூன்றையும் உள்ளடக்கியது. ஒரு மாணவரின் கற்றல் செயல்பாட்டை உடனிருந்து ஊக்கப்படுத்தி, அவரது தேர்ச்சி முடிவு மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்க உபச்செயல்பாடாகப் பயன்படுத்திட, அதுவும் கல்லூரி கல்வியியலில் உருவான  ஒன்று அது. மாணவர்களைவிட ஆசிரியர்களுக்கே குறிப்பெடுக்கும் வசதிக்காக  நூலகங்களுக்கு  மாற்றாக  கொண்டுவரப்பட்டது.

ஜூம் உருவான கதை

இன்று வீட்டில் குழந்தைகளை வதைக்கும் ஜூம் வகை செயலிகள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல ஊர்களில் வேலைசெய்யும் தன் ஊழியர்களுக்கு டார்கெட் கூட்டங்கள் நடத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. குழந்தைகளுக்கு இருபது நிமிடத்தில் நுண்கணிதம் நடத்த தரவுகளுடன் உருவானவை அல்ல. ஜூம் நிறுவனர்  சீனத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் தொழில்நுட்ப நிபுணர் எரிக் யுவான், தனது யூனிகார்ன் கார்ப்பரேட் வழியாக ‘வீடியோ வழி உரையாடல்’ செயலியாகவே, அதை 2013ல் அறிமுகம் செய்தார். வெளிநாட்டில்  வேலைபார்க்கும் ஒரு குடும்பத்தலைவர், உலகெங்கும்  சிதறுண்ட தன் குடும்ப உறுப்பினர்களிடம் வாரம் ஒருமுறை அளவளாவிட குடும்பத்தை உருபெருக்க உதவியது அது.

திடீரென்று இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் இலக்கியக் கூட்டம் முதல் மருத்துவ அறுவைச் சிகிச்சை, நாடாளுமன்ற குழுக்கூட்டம், சார்க் சேவை எனப் பயன்பாடு அதிகரித்து எரிக் யுவானை திக்குமுக்காடவைத்தது. ஆனால் ஒரு மூன்றாம் வகுப்பு மழலையை கணினிமுன் உட்காரவைத்து பெருக்கல் கணக்கு  நடத்திடவும், ஆங்கில இலக்கணம் நடத்தவும் அது பயன்படுமா என்பதில் யுனிகார்ன் நிறுவனத்திற்கே சந்தேகம் உள்ளதாக ‘வால்ஸ்ட்ரீட் ஜெர்னல்’ இதழ் தெரிவிக்கிறது. இன்றைய மற்றொரு ஆன்லைன் வகுப்பு கூகுள் வகுப்பறை செயலி. இது ஆசிரியரை காட்டும் அல்லது பாடத்தைக் (பலகை) காட்டும், சராசரி வகுப்புபோல இரண்டையும் காட்டாது. பள்ளி மாணவர்களின் கவனக்குவிப்பு, அதாவது ஒருமுகப்படுத்துதல் அவர்களது வயதைப் பொருத்து சில நிமிடங்களே சாத்தியம். அதை, மேலும் தன் பக்கமும் பாடத்தின் மீதும் ஈர்க்கும் மந்திரசக்தி நேரடியாக தோன்றும் ஆசிரியர் கையில்தான் உள்ளது.

முழுமையான வகுப்பறைகளா?

ஆன்லைன் பாடங்களே முழுமையான வகுப்பறை ஆகமுடியுமா? உயர்கல்வியை முடித்து வேலையில் சேர்ந்த பின்னர், மிக மிகத் தேவையான ஒரு திறனைக் கற்பிக்க  பகுதிநேரத்தில் இணையப்  பயிற்சி என்பது வேறு. 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கல்வி செயற்கைக்கோளை அனுப்பினோம் என்றாலும், 1986 முதல் தொலைதூரக் கல்வி என்ற அஞ்சல்வழிக் கல்வியை நடத்திவருகிறோம். செயற்கைக்கோளைப் பயன்படுத்தி தொலைக்காட்சி வழியே வகுப்புகள்கூட இருந்தன.  எல்லாமே உயர்கல்வியில்தான். தற்போது பல பல்கலை கழகங்களில் ஆன்லைன் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. பள்ளிக்கூடங்களில் அல்ல.

ஒன்றாம் வகுப்பில் நுழையும் 100 மாணவர்களில், 27 பேர் மட்டுமே கல்லூரிப் பட்டம்  பெறுகின்றனர் என்பதே புள்ளிவிவரம் காட்டும் அவலநிலை. பள்ளியில் நுழையும் 100 மாணவர்களில், 80 பேருக்கு மேல் பட்டப்படிப்பை முடிக்கும் கனடாவில்கூட ஆன்லைன் படிப்புகள் இல்லை. நம் நாட்டில் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு உள்ளூர்க் கல்லூரிகளை மூடிவிட்டு, ஆன்லைனில் சர்வதேசக் கல்வி என கொண்டுவரப்படும் புதிய வர்த்தகக் கல்வி  ஏற்படுத்தப்போகும் விளைவுகள் நடுங்கவைக்கின்றன.

கல்வியின் அடிப்படை நோக்கம்

See Also

கல்வியின் அடிப்படை நோக்கம் என்ன? எல்லா வகை கல்வியின் அடித்தள நோக்கமும் சமூக விடுதலைதான் என்பார் மார்க்சிய அறிஞர் கிராம்சி. ஆன்லைன் கல்வியின் நோக்கம் என்ன? ஊரடங்கின்போது நோய் பீதிக்கு நடுவே பாடத்தை கணினிவழியே தந்து வேலைநாளாக்கி சிறுவர்களின்மீது பரிசோதிப்பதா? 6.7 சதவிகித குடும்பங்களில்தான் கணினி வசதி உள்ளது என்பதுதானே எதார்த்த உண்மை.

மூன்று முக்கிய முடிவுகள்

கற்றல் குழந்தைகளுக்கு உள்ளே எப்படி நடக்கிறது. கற்றல் பாடங்கள் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு தொடங்குகிறது. பாடங்கள் சார்ந்து தன் வகுப்பறை நண்பர்களுக்கு முன் தனக்கு எவ்வளவு தெரியும், அவர்களுக்கு என்ன தெரியும் என்பதை அளவளாவும் ஒரு வகுப்பறை கலந்து உறவாடுவதன் மூலம், ஒரு குழந்தை பெறும் கற்றலின் முழுமையை ஆன்லைன் பாடம் எப்படி வழங்கமுடியும்? ஆன்லைனில் மட்டுமே கல்வியை தொடர்ந்தவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் குறித்த ஓக்லஹாடா பல்கலைகழக  உளவியலாளர் டக் வாலன்டினாவின் மூன்று முடிவுகள் நம்மை  அதிரவைக்கின்றன.

  1. ஆன்லைன் மாதக்கணக்கில் தொடரும்போது வாழ்க்கை தனக்கும் தொலைதொடர்பு கருவிகளுக்கும் இடையிலானது. தனக்கும் சக மனிதர்களுக்கும் இடையிலானது அல்ல என ஒரு குழந்தை நம்புகிறது. தன்னிடம் பெற்றோர்கள் பேசவதைவிட, டெக்ஸ்ட் செய்வது அதிகம். பெரும் மனச்சோர்வுடன் வெளி ஆட்கள் குறித்த அச்சத்தோடு இருக்கும் ஒரு சமூகத்தை அது உருவாக்கும்.
  2. ஆன்லைன் கல்வி மட்டுமே பெற்று வளரும் ஒரு குழந்தை, சமூகத்தில் அல்லது தனக்கு நடக்கும் எந்தப் பிரச்னைக்கும் உடனே எதிர்வினையாற்றுகின்ற திறனை இழக்கிறது. ‘பாடத்தை’ பார்த்தபடியே இருக்கும் டிஜிட்டல் உலகைவிட்டு விலகமுடியாமல், தன்னால் தலையீடு செய்யமுடியாத உலகமாக ஏற்று, தன்னைச் சுற்றி நடப்பவற்றை வேடிக்கை மட்டுமே பார்க்கும் உளவியல் பாதிப்பை அடைகிறது. பிறகு ஒரு குழுவாகச் செயல்பட, அதனால் ஒருபோதும் முடியாது.
  3. ஆன்லைன் கல்வியை மாதக்கணக்கில் தொடர்ந்தால் எதிர்கற்றல் என்ற விபரீதம் நடக்கிறது. கற்கும் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தமுடியாமல் தொடர்ந்து அழுத்தப்படுவதால், எதையும் கற்பதன் மீதான ஆர்வம் விடைபெறுகிறது. கல்வி என்றாலே வெறுத்து அதனை ஓடவைக்கிறது. கொரோனாவைவிட இவ்வகை நிலை கொடியது அல்லவா?

‘எதிர்வினை ஆற்றுவதன் மூலமே கல்வி சாத்தியம்’ என்பார் நோம் சாம்ஸ்கி. தான் ஏற்கெனவே அறிந்த தனக்குச் சொல்லப்பட்ட ஒன்றின்மீதான  சந்தேக உணர்வும், அது தவறெனில் எது உண்மை என்பதை நோக்கிய உரையாடலும் இல்லாமல் நடப்பது கல்வி இல்லை என்று, தனது கற்றல் கற்பித்தல் கோட்பாட்டில் அவர் விளக்குவார். அத்தகைய உண்மையான கற்றல் என்பது பொது வகுப்பறைகளில்  மட்டுமே சாத்தியம்.

ஆன்லைன் கல்வி வர்த்தகம்

இதெல்லாம் அரசுக்குத் தெரியாதா. பின் அவசரம் அவசரமாக ஆன்லைன்  கல்விக்கு அது சாமரம் வீசுவது ஏன் எனப் பலவகையான சந்தேகங்கள் எழுவது நியாயமே. கிராமப்புறக் கல்வியைக் கைவிடுதல், அடித்தள மக்களின் உயர்கல்வி ஆசையை சிதைத்தல், மருத்துவக்கல்வி (நீட் மூலம்) நிர்மூலமாகி லட்சக்கணக்கில் செலவுசெய்து பல ஆண்டுகள் பயிற்சி வகுப்புகளில் படித்தால் மட்டுமே சாத்தியம் என்பதுபோல, ஏனைய படிப்புகளையும் ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாக்கிவிடுவது, சர்வதேசப் பல்கலைக்கழகங்களை நாட்டிற்குள் வரவைக்கும் வர்த்தக கார்ப்பரேட் கல்விச் சதியே ஆன்லைன் கல்வி.

கல்வி முழுவதும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு குவிய செய்யப்படும் இன்னொரு முக்கிய திணிப்பு இது. ஆன் லைன் கல்வி என்பது இன்றைய  இந்தியாவின்  மிக பிரமாண்டமாக வளர்ந்துவரும் பலகோடிகளைக் குவிக்கும் வர்த்தகம். குறிப்பாக தாய்மொழிக்கல்வியை அப்படியே கிடப்பில் போடவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

நம் அப்பாவிக் குழந்தைகளை ஆன்லைன் என்ற போலியான பணம் பிடுங்கும் கொடூர மாற்றாந்தாயிடம் ஒப்படைத்துவிட்டு ஏமாந்துவிடக்கூடாது. இப்போது நாம் விழித்துக்கொள்ளாவிட்டால், இதுவே நிரந்தர புதைகுழியாகி சமத்துவக்கல்வி எட்டாத கனவாகும். எனவே தமிழக அரசும் மக்களும் எச்சரிக்கையுடன் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

 கட்டுரையாளர்:  கல்வியாளர், எழுத்தாளர்

-ஆயிஷா இரா. நடராசன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top