Now Reading
நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர் – 27

நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர் – 27

KPI பற்றி தெரிஞ்சுக்கலாம்

புராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிப் பேசும்போது மறக்காமல் நினைவில்கொள்ளவேண்டிய விஷயம், இந்த KPI எனும் Key Performance Indicator. தமிழ்ப்படுத்த வேண்டுமெனில், ‘முக்கியமான செயல்திறன் அடையாளங்கள்’ என சொல்லலாம். ஆனால் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் உலகில் இதை கேபிஐ என்றே அழைப்பதால், அப்படியே நாமும் அழைப்போம்.

புராஜக்ட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் புராஜக்ட் எப்படி செயல்படுகிறது எனும் செயல்திறனை அளவிடுவதற்காக இந்த கேபிஐ பட்டியல் பயன்படுகிறது. ஒவ்வொரு செயல்திறனை அளவிடுவதற்கும் ஒவ்வொரு ஃபார்முலா இருக்கிறது என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். இவைதான் ஒரு புராஜக்ட் சரியான திசையில் பயணிக்கிறதா என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொள்ள நமக்கு உதவுகின்றன.

பொதுவாக இந்த செயல்திறன் சுட்டிகளையெல்லாம் நான்கு முக்கியமான பிரிவுகளில் அடக்கலாம்.

காலம், டைம்லைன்:

புராஜக்டின் பணிகளெல்லாம் திட்டமிட்டபடி சரியான கால அளவில் செயல்படுகிறதா என்பதை அடையாளம் காணும் பிரிவு இது. ஒருவேளை சரியான டைமில் நடக்கவில்லையெனில், ஏன் நடக்கவில்லை அதை எப்படி நிவர்த்தி செய்வது போன்றவற்றை அலச இந்த செயல்திறன் சுட்டிகள் பயன்படும்.

நிதி / பணம்:

நமக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்குள் நமது புராஜக்ட் செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்பதைப் பார்க்கும் பகுதி இது. அதிகப்படியான செலவு நேர்கிறதெனில், அதை எப்படிக் கட்டுப்படுத்துவது? அல்லது அதிக நிதியை எப்படிப் பெறுவது போன்றவற்றைத் திட்டமிட இது உதவும்.

தரம்:

தயாராகிக்கொண்டிருக்கின்ற பொருள் சரியான தரத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறதா எனும் செயல்திறனைச் சோதிக்கும் அடையாளங்கள் இங்கே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தரத்தில் குறை இருந்தால், அதை எப்படி சரிசெய்வது எனும் தர முன்னேற்றத் திட்டங்களுக்கு இது உதவும்.

திறன்:

இதை எஃபக்டிவ்னெஸ் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். நடைபெறுகின்ற வேலை எந்த அளவுக்கு திறமையாக நடக்கிறது என்பதைப் பார்ப்பதும், யார் திறமையாக செயல்படுகிறார்கள், எந்த குழு திறமையாக செயல்படுகிறது போன்றவற்றையெல்லாம் அறிந்துகொள்ளவும் இந்த பிரிவு உதவும்.

இந்த நான்கு பிரிவுகளிலும் ஒரு புராஜக்டின் செயல்திறனை அளவிட்டுப் பார்க்க ஏராளமான அடையாளங்கள்/சுட்டிகள் உண்டு. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றை இந்த வாரம் பார்ப்போம்.

சைக்கிள் டைம்:

ஒரே மாதிரியான செயல்கள் நிறைய இருந்தால், அவற்றில் ஒவ்வொன்றுக்கும் சராசரியாய் எவ்வளவு நேரம் ஆகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் கேபிஐ இது. உதாரணமாக பாட்டிலுக்கு லேபிள் ஒட்டுவதுதான் புராஜக்ட் எனில், ஒவ்வொன்றையும் ஒட்டி முடிக்க எவ்வளவு காலம் ஆகிறது என்பதை கண்டறிவது சைக்கிள் டைம். இதன் மூலம் அந்த சைக்கிள் டைமைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளை எடுக்கலாம்.

சரியான நேரத்தில் முடித்த விழுக்காடு:

கொடுத்த வேலைகளில் எந்தெந்த வேலைகள் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் முடிந்திருக்கிறது என்பதை கண்டறியும் கேபிஐ இது. இதை ஆன் டைம் கம்ப்ளீஷன் பர்சண்டேஜ் என்பார்கள்.

செலவிட்ட நேரம்:

ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு நேரம் செலவாகியிருக்கிறது என்பதைக் கண்டறிவது இது. ஒரு குறிப்பிட்ட நபர் ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு நேரம் செலவிட்டார் என்பதை வேண்டுமானாலும் இதன் மூலம் கண்டறியலாம்.

திட்ட விலகல்:

ஒரு பணியைச் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்திருப்போம் அல்லவா, அதிலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோம் என்பதை ஷெட்யூல் வேரியன்ஸ் எனப்படும் இந்த கேபிஐ மூலமாகக் கண்டுபிடிக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பும் முடித்திருக்கலாம், காலம் கடந்தும் சென்றிருக்கலாம், இரண்டையும் இதன் மூலம் அறியலாம்.

எத்தனை நாள்:

இதை ஆங்கிலத்தில் எஃப்.டி.ஈ டேஸ் என்பார்கள்.அதாவது ஃபுல் டைம் எம்ப்ளாயிஸ் டேஸ் என்பார்கள். அதாவது விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், ஊரடங்கு நாட்கள் இவற்றையெல்லாம் கழித்து விட்டு எத்தனை நாட்கள் பணி செய்தோம் என்பதைக் குறித்த விவரம் இது.

திட்டமிட்ட காலம் திண் செலவான காலம்:

ஒரு பணியைச் செய்வதற்கு ஒரு காலத்தைத் திட்டமிட்டிருப்போம் அல்லவா ? அதற்கும் செலவான காலத்துக்கும் இடையேயான இடைவெளியைக் கண்டுபிடிப்பது இது. இதில் எத்தனை மணி நேரம் செலவிட்டோம் என்பது பதிவு செய்யப்படும். திட்ட விலகலில் எவ்வளவு நாட்கள், அல்லது மாதங்கள் விலகியிருக்கிறது என்பது கணக்கிடப்படும்.

ஊழியர்களின் நேரம்:

ஊழியர்களின் நேரம் என்பது அவர்கள் பணி செய்வதற்காக செலவிடப்படும் நேரம் என்பதாகும். ஒரு புராஜக்டில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர், தினமும் எத்தனை மணி நேரம் வேலை செய்கின்றனர் எனும் கணக்கு புராஜக்டின் அளவைக் கண்டறிய உதவும். ஆட்களை அதிகப்படுத்த வேண்டுமா, குறைக்க வேண்டுமா போன்ற முடிவுகளை எடுக்க உதவும்.

நிதி விலகல்:

கால விலகலில் எப்படி திட்டமிட்ட காலத்துக்கும், செலவான காலத்துக்கும் இடையேயான இடைவெளியைக் கணக்கிடுகிறோமோ, அதே போல பண விஷயத்தில் திட்டத்துக்கும், ஆக்சுவல் செலவுக்கும் இடையேயான இடைவெளியைக் கணக்கிடும் கேபிஐ இது. பட்ஜெட் வேரியேஷன் என்பார்கள்.

செலவுத் திறன்:

செலவிட்ட பணத்தை எந்த அளவுக்குத் திறமையாக செலவிட்டிருக்கிறோம், எவ்வளவு அதிகம் பயன் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டறியும் கே.பி.ஐ இது. குறைந்த செலவு நிறைய பணி என்பது அதிக பாராட்டைப் பெறும். அது சிறப்பான திட்டமிடலுக்கு உதாரணமாகவும் திகழும்.

See Also

திட்டமிட்ட மதிப்பு:

இது ஒரு முக்கியமான கேபிஐ. ஒரு புராஜக்டுக்கு செலவாகும் பணத்தையும், முடிந்த வேலையின் விழுக்காட்டையும் வைத்து உருவாக்குவது இது. எவ்வளவு பணம் மீதமிருக்கிறது, எவ்வளவு வேலை மீதமிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது இதன் முக்கிய அம்சம். இதை வைத்துக்கொண்டு, நாம் புராஜக்டை குறிப்பிட்ட செலவில் செய்துமுடிக்க முடியுமா என்பதைக் கண்டறியலாம். கூடவே என்னென்ன செய்து செலவைக் குறைக்கலாம் என்பதையும் ஆராயலாம்.

பயனாளரின் திருப்தி:

இது எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்கின்ற ஒரு கேபிஐ. கஸ்டமர் சேட்டிஸ்ஃபேக்‌ஷன் சர்வே என்பார்கள். பொருளைப் பயன்படுத்துபவர்கள், அல்லது சேவையைப் பயன்படுத்துபவர்கள் என்ன மதிப்பு கொடுத்தார்கள் என்பதன் அடிப்படையில் இது கணக்கிடப்படும். இது தான் ஒரு பொருளின் அல்லது சேவையின் சந்தை மதிப்பை நமக்குப் புரிய வைக்கும்.

என்.பி.எஸ்:

இதை நெட் புரமோட்டர் ஸ்கோர் என்பார்கள். இதுவும் கஸ்டமர்கள் தருகின்ற மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுவதுதான். ஆனால் இது பொதுவாக நம்முடைய பிராண்ட் எந்த அளவுக்கு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது என்பதைக் கண்டறிய முயல்வது.

பணி விலகல்:

ஒரு புராஜக்ட் நடந்து கொண்டிருந்த கால இடைவெளியில், எத்தனை பேர் நிறுவனத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள் என்பதைக் கணக்கிடுவது இது. பணியாளர்களின் விலகல் பல காரணங்களுக்காக நிகழலாம், பணியில் திருப்தியின்மை, சம்பளத்தில் திருப்தி இன்மை, தலைமையில் திருப்தியின்மை, வேறு நல்ல வேலைவாய்ப்பு எனப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றையும் பதிவு செய்ய இது பயன்படும்.

முதலீட்டுக்குப் பலன்:

இதை ஆங்கிலத்தில் ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் என்பார்கள். ஒரு புராஜக்ட்டுக்காக ஒரு கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறேன். எப்போது எனக்கு பணம் கிடைக்கத் துவங்கும். எப்போது பிரேக்கிங் பாய்ண்ட் எனப்படும் செலவு தாண்டி லாபம் கிடைக்கத் துவங்கும் என்பதையெல்லாம் கணக்கிடுவது இது.

பழுதானவை/திரும்பியவை:

தயாரிப்புப் பொருட்களில் எத்தனை பழுதானவை, எத்தனை திரும்ப வந்திருக்கிறது, போன்றவற்றையெல்லாம் கணக்கிடும் கேபிஐ இது. இதன் மூலம் தயாரிப்புப் பொருளின் தரம் நமக்குத் தெரியவரும்.

ஒரு புராஜக்டின் திறமையை மதிப்பிட இன்னும் ஏராளம் கேபிஐகள் உள்ளன. அவற்றைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வது, உங்களை ஒரு சிறந்த புராஜக்ட் மேனேஜராக உருவாக்கும்

-சேவியர்

(திட்டமிடுவோம்)

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top