Now Reading
என் எதிர்காலத்திற்கு நானே பொறுப்பு!

என் எதிர்காலத்திற்கு நானே பொறுப்பு!

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டில் இருந்து வருகிறார்கள். தங்களுடைய படிப்பு, எதிர்காலம் தொடர்பான பல சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். மன அழுத்தமும் கவலைகளும் அளிக்கும் இந்த நாட்களைக் கடப்பது பற்றியும், எதிர்காலத்தைக் கட்டமைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் பகிர்ந்துகொள்கிறார் சர்வதேச வாழ்வியல் பயிற்றுநர் உதயசான்றோன்.

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள, பிரச்னைகளில் இருந்து மீண்டெழ என்னவெல்லாம் செய்யலாம் என்று ஒரு தனி மனிதனாக முடிவெடுத்து, அதைச் செயல்படுத்தினால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஒரு பயிற்சியாளர் என்ற முறையில் என்ன செய்யலாம் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது ஸ்பானிஷ் ப்ளூ. உலகத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள், இந்தியாவில் மட்டுமே ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தார்கள். அதனை ஒப்பிடும்போது, இன்றைய நிலை பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். மருத்துவம் வளர்ந்திருக்கிறது. பேராபத்து ஏற்படாமல் நாம் தடுக்கப்பட்டுள்ளோம். வளர்ந்த நாடுகளே திணறிவருகின்றன. ஆனால், நம் பாரம்பரிய உணவுகள் மற்றும் நமக்கு இயல்பாகவே உள்ள நோய் எதிர்ப்புச்சக்தி மூலமாக பாதுகாப்பாக இருக்கிறோம். இன்று இயற்கைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே உணர்கிறேன்.

முதலில் இளைய சமூகம் கற்க வேண்டிய பாடம் ஒன்றுள்ளது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். இன்றைய இளைய தலைமுறை, குறிப்பாக மாணவர்களிடம் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதை உணர்கிறேன். இனிவரும் நாட்களில் உடலுக்கும் மனத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டு நம்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

படித்தோம், மதிப்பெண் பெற்றோம், அதோடு படிப்பு முடிந்துவிட்டது என்ற மனநிலையிலிருந்து மாற வேண்டியுள்ளது. கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்க வேண்டும். தினம்தினம் நிறைய புதிய விஷயங்களை வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கத் தவறுவதில்லை. உடல்நலம் பாதி, திறன்கள் பாதியாக மெருகேற்றிக்கொள்ள வேண்டிய நேரம்.

பெற்றோர்களுக்குப் பல பிரச்னைகள். குறிப்பாக உங்களுடைய மேற்படிப்பு சார்ந்த யோசனைகள், எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்ற எண்ணங்கள். அதில் சவாலாக சிலருக்கு வேலையிழப்பு, தொழில் வருமான இழப்பு போன்ற பல பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ளக்கூடும்.

நீங்கள் பொறுப்போடு இருக்க வேண்டும். பிரச்னைகளை உணர்ந்து அவர்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். உங்களது அணுகுமுறை, நடவடிக்கை, செயல்களின் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை தரமுடியும்.

எதையும் சொல்லிச் சொல்லி செய்யாமல்,என் வாழ்க்கைக்கு நானே 100 சதவீத பொறுப்பு என்ற மனோபாவத்தோடு ஒவ்வொரு மாணவரும் செயல்பட்டால் இயல்பான மாற்றங்கள் ஏற்படும்.

என் படிப்புக்கு நானே பொறுப்பு, உடல் நலத்திற்கு நானே பொறுப்பு, குடும்ப மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு, என் எதிர்காலத்திற்கு நானே பொறுப்பு, என் வளர்ச்சிக்கு நானே பொறுப்பு என்று பொறுப்பேற்றுக்கொள்கிற மனோபாவம் வந்துவிட்டால், நீங்கள் எளிதில் வளர்ச்சியைப் பெறுவீர்கள். நேரத்தை வீணடிக்கமாட்டீர்கள்.

குடும்ப மகிழ்ச்சிக்காக விட்டுக்கொடுப்பீர்கள்.

நான் 100 சதவீதம் நிறைவானவன் என்ற நிலையில் இருந்து, என்னிடமும் சரிசெய்ய வேண்டிய குறைகள் உள்ளன என்பதை உணரவேண்டும்.  அது பொய் கூறும் பழக்கமாக, பயம்கொள்வதாக, கவலைப்படுவதாக, குற்றம் காண்பதாக, சோம்பலாக, பொழுதுபோக்கில் கழிப்பதாக, வெட்டிப்பேச்சில் நேரத்தை விரயம் செய்வதாக இப்படி எதுவாகவும் இருக்கலாம்.இப்படி உங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் பழக்கங்களை மெல்ல நீக்க வேண்டும். ஒரு கல்லில் உள்ள தேவையற்றப் பகுதிகளை உளியால் செதுக்கி நீக்கும் ஒரு சிற்பியைப்போல நம்மிடம் தென்படும் தேவையற்ற பழக்கங்களை நீக்கிக்கொண்டே இருந்தால், முடிவில் ஒரு ஆளுமையுள்ள சிறந்த மாணவராக உருவாக முடியும்.

See Also

ஒரு சவாலுக்கு உங்களை அழைக்கிறேன்.  ஒரு செயலை 21 நாட்கள் தொடர்ந்தால், அது பழக்கமாக மாறும். அடுத்து அதையே 48 நாட்கள், அதற்கடுத்து 72 நாட்கள், கடைசியாக 90 நாட்கள் தொடர்ந்தால், அந்தச் செயல் உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியிருக்கும். காலையில் குறிப்பிட்ட நேரம் படிப்பு, திறன் மேம்பாடு, பொழுதுபோக்கு எனப் பிரித்துக் கொண்டு 21 நாட்கள் தொடர்ந்து செய்துவந்தால், அது பழக்கமாக மாறிவிடும்.

பொதுவாக, பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனிதர்கள். நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு முதலில் தேவையற்றவை நம்மிடமிருந்து அகலவேண்டும். உதாரணமாக கோபம். இன்றைய பிள்ளைகளுக்கு கோபம் நிறையவருகிறது. அதை எப்படி நல்லமுறையில் மாற்றலாம்? கோபத்தின் முக்கிய இயல்பு, ‘நான் 100 சதவீதம் சரி. மற்றவர்கள் சரியில்லை’ என்பதுதான்.  இதை கொஞ்சம் மாற்றி, நானே 100 சதவீதம் பொறுப்பு. மற்றவர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.  என் செயல்பாடுகள் மூலம் மற்றவர்களை மாற்றிக்காட்டுவேன் என்ற முடிவோடு கொஞ்சம் கருணையுடன் நிதானமாக செயல்பட்டால் கோபம் தணிந்துவிடும்.

இந்த உலகம் நீங்கள் எதிர்பார்க்கிறபடி இருப்பதில்லை.  ஆனால் உங்களுடைய செயல்பாடுகளால் அந்த புதிய உலகத்தை உருவாக்கலாம். அதற்குப் பயிற்சியும், முயற்சியும், உழைப்பும் தேவைப்படுகின்றன. எதையும் பழக்கமாக்க பழக்கமாக்க எல்லாம் சாத்தியமாகும். வாழ்க்கைப் பாடத்தை தொடர்ந்து கற்போம். நாளும் வளர்வோம்.

-உதயசான்றோன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top