Now Reading
திறந்திடு சீசே!

திறந்திடு சீசே!

பொதுமக்கள் பார்வைக்கு வரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா

சொத்துக்கள் என்றால் வில்லங்கம் இருக்கும்; ஆனால் வில்லங்கத்திலேயே தொடர்கிறது, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள்! அவர் வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பால் மீண்டும் சர்ச்சைக்கு எழுந்துள்ளது.

போயஸ் அரண்மனை!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் ‘வேதா இல்லம்’ என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டரின் ரத்தத்திலும் உணர்விலும் கலந்த மரியாதைக்குரிய இடம். அவர்களுக்கு கோவில் அதுதான். செயிண்ட் சார்ஜ் கோட்டைக்கு நிகரான ஒரு அதிகார கோட்டை. அதிமுக தொண்டர்களுக்கு அந்தக் கோட்டையின் ராணி, கடவுள் எல்லாமே, அவர்களின் ‘அம்மா’ ஜெயலலிதாதான்.

அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் இருந்தாலும், கட்சியின் அதிகாரத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவுகள் எல்லாமே போயஸ் கார்டன் ’வேதா’ இல்லத்தில்தான் எடுக்கப்பட்டன. தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுக்கால வரலாற்றை கோபாலபுரம் இல்லம் தீர்மானித்தது என்றால், அதில், 30 ஆண்டுக்காலம், கோபாலபுரத்திலிருந்து 2 கிமீ தூரத்திலிருந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கும் உண்டு.

கலைஞர் என்ன அறிக்கைவிட்டாலும் உடனுக்குடன் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து பதிலடி வரும். ஏறக்குறைய கோபாலபுரம் வந்த அனைத்து தலைவர்களும் போயஸ் கார்டனுக்கும் வந்துள்ளார்கள். கோட்டையில் நகராத ஃபைல்கள்கூட வேதா இல்லத்தில் நகர்ந்தது. அதிமுகவில் யார் மாவட்ட செயலாளர் ஆகவேண்டும்? யார் சட்டமன்ற உறுப்பினர்? யார் நாடாளுமன்ற உறுப்பினர்? யார் மாநிலங்களவை உறுப்பினர் என முடிவு செய்யப்பட்டது எல்லாமே கடந்த 30 வருடங்களாக போயஸ்கார்டனின் முதல் மாடியில் உள்ள ஜெயலலிதா அறையில்தான்.

பிரதமர் மோடி வேதா இல்லத்திற்கு சென்றிருக்கிறார் என்பதே அந்த இல்லத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பெற்று ஜாமீனில் இருந்தபோதே, அப்போது இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக இருந்த அருண்ஜேட்லி போயஸ் கார்டன் இல்லத்தில் வந்து சந்தித்தார். இதிலிருந்தே அந்த இல்லத்தின் அதிகாரம் எவ்வளவு பவர்ஃபுல்லானது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

அவ்வளவு அதிகார மையமாக இருந்த வேதா இல்லத்தை, ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்ற தற்போது தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கு எப்படி வேதா இல்லம் 44 நான்கு ஆண்டுகள் சாட்சியாகிறதோ, அப்படித்தான், அவரது அரசியல் வாழ்க்கைக்கும் 34 ஆண்டுகள் சாட்சியாய் இருக்கிறது. கடந்த 1982ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி கடலூரில் அதிமுகவில் தன்னை இணைத்து அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் ஆனார். ஆம், ஜூன் 4 ஜெயலலிதா என்னும் பெண் சூறாவளி தமிழக அரசியலுக்குள் நுழைந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதா இல்லம் எப்படி உருவானது?

கர்நாடகாவின் மைசூரில் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் ஜெயராம் – வேதவள்ளி தம்பதிக்கு மகளாக

1948ஆம் ஆண்டு பிறந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க தனது இயற்பெயரான வேதவள்ளியை ‘சந்தியா’ என்று மாற்றிக்கொண்ட ஜெயலலிதாவின் அம்மா, தனது உறவினர்கள் தமிழகத்திலிருந்ததால், தனது இரண்டு பிள்ளைகளோடு சென்னை வந்துவிட்டார்.

வேதவள்ளி தனது தங்கை வீட்டில் தங்கியிருந்த படியே சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஜெயலலிதாவையும் நடிக்க வைத்தார்.

அதன்பிறகு தங்களுக்கென்று தனிவீடு வாங்க வேண்டுமென்று நினைத்து சென்னை தேனாம்பேட்டையிலுள்ள போயஸ்கார்டனில் 1967ஆம் ஆண்டு 1 லட்சத்து 32 ரூபாய்க்கு ஒரு இடத்தை தனது பெயரில் வாங்கி வீடு கட்டத் துவங்கினார் வேதவள்ளி. ஆனால், இல்லம் முழுமையடைவதற்கு முன்பே, 1971ஆம் ஆண்டு இறந்துவிடவே, அந்த சொத்து ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது.

அம்மாவின் நினைவாக, போயஸ் கார்டன் இல்லத்திற்கு ‘வேதா இல்லம்’ என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா. அதன் கிரகபிரவேசத்தின்போது எல்லோரையும் அழைத்துச்சென்று ஒவ்வொரு அறையாக காட்டி, “எனது அம்மா இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து பார்த்து எனக்காக கட்டினார். ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை” என்று கண்கலங்கி இருக்கிறார்.

வேதா இல்லத்தின் கிரகபிரவேசம் 1972ஆம் ஆண்டு நடந்தது. சரியாக 44 ஆண்டுகள் அந்த இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, சோகம் என அனைத்தையும் பார்த்துள்ளது.

இரும்புப் பெண்மணி என அறியப்படும் ஜெயலலிதா இந்த இல்லத்தில் ஒரு எளிமையான சாதாரண பெண்மணியாகத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார். அங்கு பணியாற்றுபவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் சொல்வதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

வேதா இல்லம் – ஒரு பார்வை!

“வேதா இல்லத்தின் பெரிய கேட்டின் வழியாக உள்ளே நுழைந்தால் வீட்டின் மெயின் கதவு. அந்த வாசலில்தான் அம்மா வெளியில் புறப்படப்போகிறார் என்றால் கார் வந்து நிற்கும். அதை கிராஸ் பண்ணிக்கொண்டு வலதுபுறம் சென்றால் முதல் தளத்தில் வரவேற்பறை.

வீட்டின் மெயின் கதவை திறந்து உள்ளே சென்றால் ஹால். அதற்கு வலதுபுறத்தில் ஒரு  கதவு இருக்கும். அந்தக் கதவை திறந்துகொண்டு சென்றால் முக்கிய அரசியல்வாதிகள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசும் அறை. பேசிமுடித்துவிட்டு வெளியில் வந்துதான் ஹாலில் ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பார்கள்.

ஹாலிலிருந்து நேராக சென்றால் சுமார் 35க்கு மேற்பட்டவர்கள் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு மிகப்பெரிய டைனிங் ஹால். சுற்றி 100 பேர் கூட நிற்கலாம். அந்தளவுக்கு பெரிய டைனிங் ஹால். அப்படியே, இடதுபுறத்திற்கு சென்றால் ஒரு கதவு. அதைத் திறந்துகொண்டு சென்றால் அமைச்சர்களுடன் ஜெயலலிதா முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும் அறை. அதாவது, முன்பு இருந்ததைவிட இன்னும் கொஞ்சம் பெரிதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் இந்த அறை. இந்த அறையின் கதவுக்கு நேராகத்தான் அம்மாவின் அறைக்கு, அதாவது முதல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டு உண்டு. தனது அறைக்கு அந்தப் படிக்கட்டின் வழியாக மட்டுமே அம்மா செல்வார். வேறும் யாரும் செல்லமாட்டார்கள். அதை கடந்ததும் ஒரு கண்ணாடி கதவு இருக்கும். உள்ளே சென்றதும் அவரே தாழிட்டுக்கொள்வார்.

அம்மா பால்கனியில் வந்து நின்று தொண்டர்களிடம் இரட்டை விரலை அசைத்து காண்பிப்பாரே அந்த பால்கனிக்குப் பின்னால் இருப்பதுதான் அவரது அறை. அங்கிருந்து, பார்த்தாலே கீழே மெயின் கேட்டில் யார் நிற்கிறார்கள் என்று நன்றாகத் தெரியும்.

கண்ணாடிக் கதவைக் கடந்து சென்றால் அம்மாவும் சசிகலாவும் சாப்பிடும் இடம்.

இரண்டு பேருக்கும் வாஸ்துப்படி இரண்டு இருக்கைகள்தான் போடப்பட்டிருக்கும். இதுவரை, அம்மாவின் இருக்கையில் சசிகலாவோ, அவரின் இருக்கையில் அம்மாவோ மாற்றி அமர்ந்து சாப்பிட்டதே இல்லை. அதற்கு, நேராக இன்னொரு கதவு இருக்கிறது. அங்குதான் சீக்ரெட் சந்திப்பு அறை உள்ளது. அதாவது, டாக்டர்கள், வழக்கறிஞர்கள் என மிகமிக முக்கியமானவர்கள் மட்டுமே அங்கு அம்மாவை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.

சாப்பிடும் அறைக்கு நேராக ஒரு கதவு இருக்கும். அந்தக் கதவைத் திறந்தால் நூலக அறை உள்ளது. தமிழகத்திலுள்ள மிக முக்கியமான அத்தனை செய்தித் தாள்களும் பத்திரிகைகளும் வந்துவிடும். அங்கு பணியாற்று பவர்களிடம் ’நான் எம்.பியாக இருக்கும் போது கொடுத்த புத்தகம் இது’ என்று ஒவ்வொரு புத்தகத்திற்கும் நினைவுகளை பகிர்ந்து கொள்வார்.

அதைக் கடந்து சென்றால் வரும் நம்பர்-2 அறை சசிகலாவுடையது. அதை, கடந்து உள்ளே சென்றால் நம்பர்-1 அறைதான் ஜெயலலிதாவுடையது. நம்பர்-1 ஏ என்பது அவரின் அலுவலக அறை. வேதா இல்லத்தில் அறைகள் நம்பர்களால்தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஜெயலலிதாவின் அறை

பெரும்பாலும் காலை 7:30 மணிக்கு எழுந்துவிடும் ஜெயலலிதா, பிரேக்பார்ஸ்ட்டை முடித்துவிட்டு நூலக அறைக்குச் சென்று பத்திரிகை, செய்திகளை படிப்பார். தினமும் காலையில் பிரட் டோஸ்ட்தான் அவரது உணவு. ஒரு நாளைக்கு ஒரு ஜாம் ஃப்ளேவேர் என்று விதவிதமாக ரசித்து உண்பார். பொங்கல், அவியலும் அவரின் ஃபேவரைட். இளவரசிதான் சமைத்து கொடுப்பார். ஜெயலலிதாவின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அவ்வளவு ருசியாக சமைக்கும் கைப்பக்குவம் இளவரசி யுடையது.

ஜெயலலிதாவுக்கு பிடித்த பாட்டு ‘பலே பாண்டியா’ படத்தில் வரும், “நீயே என்றும் உனக்கு நிகரானவன்”. அதில் வரும் “மாமா மாப்ளே”ஐ பார்த்து சத்தம்போட்டு சிரிப்பார். அதோடு பழைய படங்களைப் பார்க்கும்போது, இந்தப் படத்திற்கு இத்தனை நாள் ஷூட்டிங், இத்தனை டேக் என்று அங்கிருப்பவர்களிடம் பகிர்ந்துகொள்வார்.

ஜிலேபி, நெய் தோசை என பிடித்த உணவை விரும்பி சாப்பிடுவார்.

ஜூலி, முரளி, கர்த்திக், பரணி, பத்மினி என ஐந்து நாய்களையும் அம்மா செல்லமாக வளர்த்து வந்தார். எத்தனை வேலை இருந்தாலும் தினமும் 40 நிமிடங்கள் கண்டிப்பாக பூஜை செய்வார்” என்கிறார் வேதா இல்லத்தில் பணியாற்றிய ஒருவர்.

சசிகலா, தீபா எதிர்ப்பு!

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம்  தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று சிறைக்குச் சென்ற சசிகலா வரும் ஜூலை மாதம் வெளியாக வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு வேகம் காட்டுகிறது என்பது சசிகலா தரப்பு குற்றச்சாட்டு.

ஆனால், அதிமுக தரப்பு இதை மறுக்கிறது. “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பலகட்ட அதிரடி மாற்றங்களுக்குப் பிறகு, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு பிரிவு என்று இருந்த அதிமுகவை ஒன்றிணைக்க நடந்த பேச்சு வார்த்தையின்போதே இதை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார் ஓபிஎஸ். அதாவது, “ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைப்பது, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை எடுப்பது, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும்’ ஆகிய மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் கட்சியில் இணைவேன் என்றார். அவர், வைத்த மூன்று கோரிக்கைகளில் முதல் இரண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியதோடு, வேதா இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று, கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இதனையடுத்து வேதா இல்லத்தை கையகப்படுத்த தமிழ் வளர்ச்சித்துறை, அதே ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி நிர்வாக ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து அதற்கான பூர்வாங்க அறிவிப்பு கடந்த வருடம் வெளியிடப்பட்டு, கடந்த 5ஆம் தேதி உறுதி ஆவணமும் வெளிடப்பட்டு, தற்போது சட்டப்பூர்வாக்கியுள்ளது தமிழக அரசு. அந்த அறிவிப்புதான் இப்போது அவசர சட்டமாகியுள்ளது” என்கிறது அதிமுக தரப்பு.

இந்நிலையில், ”அத்தையின் சொத்துகளை எங்களிடம் ஒப்படைப்பதுதானே முறையாக இருக்கமுடியும்? வேதா இல்லத்தை மீட்க அதிமுக தொண்டர்களின் உதவி தேவைப்படுகிறது. அனைவரும் சேர்ந்து மீட்கவேண்டும்” என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா.

See Also

போயஸ்தோட்டத்தில் கதவு எண் 81இல் இருக்கும் வேதா இல்லம் 24,000 சதுர அடி இடம் கொண்டது.

போயஸ் கார்டன் வேதா இல்லம் ஜெயலலிதா வீடு என்று அறியப்பட் டாலும், அந்த 30 ஆண்டுகளும் சசிகலாவுக்கும் அதுதான் வாசஸ்தலம். 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு சசிகலாவும் வேதா இல்லத்தில் நிரந்தரமாக தங்க ஆரம்பித்துவிட்டார். அவரது உறவினர்களான தினகரன், சுதாகரன், பாஸ்கரன் என எல்லோரும் அந்த வீட்டில் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள்தான். அதனால், மன்னார்குடி லாபியின் அதிகார மையமாகவும் வேதா இல்லம் இருந்தது.

சசிகலாவின் தம்பி ஜெயராமன் இறந்தபிறகு அவரது மனைவி இளவரசியோடு மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக் ஆகியோரையும் ஜெயலலிதா போயஸ்கார்டனிலேயே தங்க வைத்துக்கொண்டார். அதனால், ஜெயலலிதா, சசிகலா முகவரி மட்டுமல்ல. அவர்கள் வரிசையில் இளவரசிக்கும் வேதா இல்லம் முகவரியானது.

“சசிகலா கடைசியாக சிறைக்குச் செல்லும்போது வேதா இல்லத்திலிருந்துதான் சென்றிருக்கிறார். அவருடைய பொருட்களும் அங்குதான் இருக்கிறது. நினைவு இல்லமாக்கப்படும்போது அவருடைய கருத்தையும் கேட்கவேண்டாமா? சட்டப்படி அவருக்கு ஒரு உரிமையும் இல்லை என்றாலும் உங்கள் பொருட்களை எடுத்துக்கொள்கிறீர்களா என்றுகூட கேட்கவில்லை” என்கிறது சசிகலா தரப்பு.

இந்த இல்லத்தில் ஜெயலலிதாவின் சித்தி ஒரு மாதம் தங்கியிருந்திருக்கிறார். அதற்குப் பிறகு, அவரது அண்ணன் பிள்ளைகள் தீபா, தீபக் திருமணத்திற்கு முன்பு தங்கியிருந்தார்கள். மேலும், பூஜைகள் நடக்கும்போது வீட்டின் ஆண் பிள்ளை நடத்தவேண்டும் என்பதால் அடிக்கடி தீபக்கை மட்டும் சசிகலா அழைத்துக்கொள்வார். ஆனால், கெடுபிடிகளோடுதான் அங்கு இருக்க முடியும்.

இவர்கள் தவிர ஜெயலலிதாவைப் பார்க்க சோ அடிக்கடி செல்வார். கடைசிவரை ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதா இல்லத்தில்தான் இருந்தார். அவர்தான் போயஸ் கார்டனின் நுழைவு வாயில். அவரைத் தாண்டித்தான் ஜெயலலிதா, சசிகலாவை சந்திக்கமுடியும். இப்போது, பூங்குன்றனே அந்தப் பக்கம் செல்லமுடியாமல் இருக்கிறார்.

தீபா எதிர்ப்பு, சசிகலா தரப்பு சலசலப்புகளுக்கு நடுவே, வேதா இல்லத்தை நினைவிடமாக்கவும், ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கவும் தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அந்த அறக்கட்டளையின் தலைவர்களாக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் உறுபினர்களாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போயஸ்கார்டன் வாசலுக்கே போக முடியாத அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் போயஸ்கார்டன் வீட்டை ஒருமுறை பார்வையிட வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

வேதா இல்லமும் சர்ச்சைகளும்

முதன்முறை ஜெயலலிதா முதலமைச்சரான போது வேதா இல்லம் சர்ச்சைக்குள்ளானது. போயஸ் கார்டன் ஏரியாவுக்குள் சென்றவர்களை எல்லாம் போலீஸார் தடுத்தி நிறுத்தி அனுப்பினார்கள். இதனால், 1991 – 1996 காலகட்டத்தில் போயஸ் கார்டன் பகுதியில் வசித்த மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்; ரஜினிகாந்த் கொதித்து எழுந்தார். இதனால், 2001ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ’அந்தப் பகுதி மக்களிடம் கறார் காட்டக்கூடாது’ என்று காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் வருமானவரித் துறையினர் போயஸ் கார்டன் இல்லத்தில் முகாமிட்டிருந்தபோது பட்டுப்புடைகள், நகைகள், செருப்புகள் எனப் படங்கள் வெளியாகி அகில இந்திய அளவில் போயஸ் கார்டன் இல்லம் சர்ச்சையானது. இதே போயஸ் கார்டன் இல்லத்தில்தான் சசிகலா முதலில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கைது; அதன்பின்னர், டான்சி வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் மீண்டும் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்தே போயஸ் கார்டன் சர்ச்சைக்கு உள்ளானது. படிப்படியாக தனது அதிகார மையத்தையும் இழக்க ஆரம்பித்துவிட்டது. அதன்பிறகு சசிகலா அரசியலுக்கு வந்ததும் மீண்டும் அதிகார மையமாக உருவெடுக்க ஆரம்பித்தது. எல்லா தலைவர்களும் சசிகலாவை சந்திப்பதும் வாழ்த்து தெரிவிப்பதுமாக இருந்தார்கள். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவரும் இளவரசியும் கைதான பிறகு, அந்த வீடு மீண்டும் தனது அதிகார மையத்தை இழந்து சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது.

இப்போது நினைவு இல்லமாக்கப்படும் அறிவிப்பால் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது வேதா இல்லம்.

கோர்ட் அதிரடி!

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி அவரது அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தனியாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். விசாரணையின் முடிவில் ‘தீபா, தீபக் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள். போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவில்லமாக மாற்றலாம். இது தொடர்பாக 8 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது  உயர் நீதிமன்றம்.

பூ.சர்பனா

 

What's Your Reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top