Now Reading
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தேவையா?

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தேவையா?

ஒரு கல்வியாளரின் புதுமையான ஆலோசனை

நாம் சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. எல்லா துறைகளிலும் எவ்வளவோ மாற்றங்கள் நடந்துள்ளன. அந்தத் துறைகளின் வல்லுனர்களும், அதிகாரிகளும், சேவை செய்பவர்களும், சிந்தனை ரீதியாக மாறியுள்ளனர். ஆனால், பள்ளிக்கல்வியில் மட்டும் நாம் இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின்னே இருக்கிறோம்.

கல்வித்துறையை நிர்வகிப்பவர்களும் சரி, ஏன் ஆசிரியர்களும் சரி, பெற்றோர்களும் சரி, குழந்தைகளை எப்படிப் பொதுத்தேர்வு என்று சொல்லி பயமுறுத்துவது, அடக்குவது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பதில்தான் இருக்கிறோம். நெருக்கடியான சமூகச் சூழலிலும் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள பத்தாம் வகுப்புத் தேர்வுகள் இதைத்தான் காட்டுகின்றன.

இன்று பெரும்பாலான தமிழக இளம்பருவத்தினர், பத்தாம் வகுப்பு முடித்ததும், பதினோராம் வகுப்பில் பல்வேறு பிரிவுகளை பெற்றோர்களுக்குப் பிடித்ததாலும், கட்டாயப்படுத்தப்பட்டும் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளின் நிலவரப்படி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களில், ஏறத்தாழ 90 சதவீதத்துக்கும் மேலானோர் தேர்ச்சி அடைகின்றனர். 30-40 ஆண்டுகளுக்கு முன்பு 60 சதவீதம் தேர்ச்சி அடைந்தால் பெரிய விஷயம். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 35-40 சதவீதம் பேர்தான் தேர்ச்சியடைந்தனர்.

2016 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, தமிழகத் தேர்வு வாரியத்தில் பத்தாவது பொதுத்தேர்வு எழுதிய 9.6 லட்சம் பேரில் 91 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் பள்ளிகளின் வாயிலாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 95 சதவீதம். கடந்த 3 மாதங்களாக மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத வீட்டுச்சூழல், தேர்வுக்காக வெளியில் சென்றால் கொரோனா வந்துவிடுமோ என்ற பயம், அதன் தாக்கம் போன்றவற்றை கருத்தில்கொண்டு வேறுமாதிரி யோசித்தால் என்ன?

பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்களைப் பெற்று, அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்புச் சான்றிதழ்களை உருவாக்கித் தந்தால் என்ன? என்ன பெரிய இழப்பு வந்துவிடப்போகிறது? மதிப்பெண் சான்றிதழ் எப்படி தருவது, எந்த குரூப்பில் (பொதுப்பிரிவு) பதினோராவது வகுப்பில் சேர்ப்பது என்கிற கேள்விகளுக்கு இரு உதாரணங்களை முன்வைக்கிறேன்.

2009 முதல் 2015 வரை மத்திய உயர்நிலை தேர்வு வாரியம் (CBSE) ஒரு முக்கியமான தேர்வு சீர்திருத்தத்தை, தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005-ல் பரிந்துரைத்தபடி, தங்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் செயல்படுத்தியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கட்டாயமாக்காமல் விரும்புபவர்கள் மட்டும் எழுதலாம் என்ற நடைமுறையை கொண்டுவந்தது. பள்ளிகளில் 9, 10 ஆம் வகுப்புகளில் இரு ஆண்டுகளும் நடந்த தேர்வுகள், செயல்முறைகளின் அடிப்படையில் மாணவர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழ் இருந்தது.

அந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகம் என்றாலும், சமூக ரீதியிலான பல மாற்றங்கள் நிகழ்ந்தன. டியூஷன் போவது குறைந்தது. தேர்வு பற்றிய பயம், மன அழுத்தம் குறைந்தது. பல்வேறுவிதமாக ஆசிரியர்களும், பள்ளிகளும் மாணவர்களின் கற்றலை மதிப்பிட பதிவு செய்யவேண்டியிருந்தது. வேலைப்பளு அதிகமானது. மதிப்பீட்டுக்கான ஆதாரங்களையும் பத்திரமாக 2-3 ஆண்டுகள் பள்ளிகளில் வைத்திருக்க வேண்டியிருந்தது. மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. இந்தியக் கல்வியைப் பொருந்தவரையில் ஒரு படி முன்னே சென்றால், இரண்டு படிகள் பின்னே செல்லவேண்டியிருக்குமே. அதுதான் நடந்தது.

தேசிய ரீதியிலான அரசியல் மாற்றம் 2015ல் நடந்தபோது, முந்தைய அரசுகள் கொண்டுவந்த பள்ளித்தேர்வு சீர்திருத்தங்கள் குப்பைக்கூடையில் போடப்பட்டன. மீண்டும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு என்ன இருந்ததோ, அதையே கொண்டு வந்தார்கள். இங்கு முக்கியமாக சொல்லவருவது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்கிற ஒன்றே இல்லாமலும் இருக்கமுடியும் என்பதுதான்.

இரண்டாவது உதாரணம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் நம்மூர் பள்ளித் தேர்வு வாரியம் மாதிரியான ஓர் அமைப்பை வைத்து 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்துகிறது. அந்தச் சான்றிதழ்களுக்கு A லெவல், AS – லெவல், O- லெவல், Pre-U என்று பல்வேறு பெயர்கள் உள்ளன. 1858 ஆம் ஆண்டில் இருந்து இந்த தேர்வு வாரியம் செயல்படுகிறது. ஏறக்குறைய 160 நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், இந்த தேர்வுகளை எழுதுகிறார்கள். நம்முடைய தேர்வு வாரியங்களுக்கு முன்னோடிகளே அவர்கள்தான்.

ஆண்டுக்கு 80 லட்சம் கேள்வித்தாள்களை உருவாக்குவதாக தேர்வு வாரியத்தின் இணையதளம் (www.cambridgeinternational.org) தெரிவிக்கிறது. கேம்ப்ரிட்ஜ் தேர்வுகளை 1500க்கும் அதிகமான உலகத்தரம் வாய்ந்த பல்கலை கழகங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியாவில் 400க்கும் அதிகமான பள்ளிகளின் மாணவர்கள், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்துகிறார்கள். இந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்போவதில்லை என அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

பதிலாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை முடித்த மாணவர்களின் பாடரீதியிலான கிரேடை தயார் செய்து அனுப்பும்படி பள்ளிகளிடம் கேட்டுள்ளனர். என்ன செய்யவேண்டும் என்பதை விலாவாரியாக வீடியோவாகவும் எழுத்து மூலமாகவும் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர். மாணவர்களின் ஒவ்வொரு பாடத்தின் கிரேடுக்கும் – கடந்த ஓர் ஆண்டில் மாணவர்கள் எழுதிய தேர்வுகள், செயல்பாடுகளை ஆதாரமாகப் பயன்படுத்த வலியுறுத்தியுள்ளனர். அந்த ஆதாரங்களை பத்திரமாக வைத்திருந்து எப்போது கேட்டாலும் அனுப்பவேண்டும்.

பள்ளிகள் அனுப்பும் கிரேடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு சான்றிதழ் தரப்போவதில்லை. கடந்த ஆண்டுகளில் தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவரும் என்ன கிரேடு வாங்கியிருக்கின்றனர் என்ற புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி, பள்ளிகள் அனுப்பும் மாணவர்கள் கிரேடுகளை தரப்படுத்துகின்றனர். எனவே பள்ளிகள், திடீரென தங்கள் மாணவர்களுக்கு அதிக கிரேடுகளைப் போட்டு அனுப்பமுடியாது. இந்த தரப்படுத்தலில், சில பள்ளிகள் அனுப்பிய கிரேடுகளைவிட அதிகமாகவோ, குறைவாகவோ ஒவ்வொரு மாணவரின் கிரேடுகளும் மாறலாம். மேலும், கேம்பிரிட்ஜ் தேர்வு வாரியம் வழங்கும் சான்றிதழில் உள்ள மதிப்பெண்கள் / கிரேடுகளில் எந்த மாணவருக்காவது ஆட்சேபனை இருந்தால், 2020 நவம்பர் மாதத் தேர்வுகளை எழுதலாம்.

உலக அளவில் 175 ஆண்டுகளாக தேர்வுகளை நடத்திவரும் ஒரு சர்வதேச தேர்வு வாரியமே புதுமையான ஒரு முடிவை எடுக்கும்போது, தமிழக தேர்வு வாரியம் ஏன் அதை பின்பற்றக்கூடாது?

தமிழக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு, திருப்புத்தேர்வுகள், மாதாந்திர தேர்வுகளைச் சந்தித்துள்ளார்கள்.

சென்ற ஆண்டில் பல புராஜக்ட்டுகளையும் செய்தார்கள். பல்வேறு போட்டிகளிலும் பங்குகொண்டார்கள். ஒவ்வொரு பள்ளியும் மதிப்பெண் பட்டியலை வைத்துள்ளன.

அவற்றைப் பயன்படுத்தி கேம்பிரிட்ஜ் தேர்வு வாரியம் செய்த மாதிரி நாம் ஏன் செய்யக்கூடாது? இந்த ஆண்டு மட்டும் பாட ரீதியிலான மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடுகளைத் தரலாமே.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பத்தாவது வகுப்புச் சான்றிதழ் என்பது வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. போட்டித் தேர்வுகளுக்குப் பத்தாவது படித்திருந்தாலே பெரிய விஷயம். அதனால்தான் வங்கிகள், ரயில்வே, மத்திய, மாநில அரசுத்துறையில் குமாஸ்தா வேலை போன்ற பெரும்பாலான போட்டித் தேர்வுகளுக்கு குறைந்தபட்சத் தகுதியாக இருந்தது. இன்று அப்படியா?

See Also

தொழிலாளர் சந்தைகளில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மேற்படிப்பு, பிளஸ் டூ அடிப்படையிலான உயர்கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் படிப்பு, பாடங்களில் கருத்துரீதியிலான புரிதல், புத்திக்கூர்மை இன்னும் பல விஷயங்கள் இளம் தலைமுறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. பத்தாம் வகுப்பு என்பது தமிழகத்தைப் பொறுத்த வரையில் மாணவர் களுக்கான கடைசி வகுப்பு இல்லையே. பெரும் பாலானோர் பதினோராவது வகுப்புக்குச்

செல்கின்றனர்.ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்கின்றனர்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாற்றாக, பள்ளிகளில் பெறப்படும் மதிப்பெண்களைக் கொண்டு சிபிஎஸ்இ / கேம்பிரிட்ஜ் போன்று கிரேடிங் தரலாம். தொழில்நுட்பப் படிப்புகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் பெறும் மதிப்பெண்களை /கிரேடுகளைப் பொறுத்து சேர்க்கையை செய்யலாம். பள்ளிகளில் நடந்த தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற / எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறமுடியாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அளித்து தேர்ச்சிபெறச் செய்துவிட்டால் தலைமுழுகிப்போகாது. ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக நடந்துவரும் விஷயம்தானே இது.

யாரையும் பெயில் செய்யவேண்டாமே. ஒருக்கால் இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் 95 சதவீதம் என்றே வைத்துக்கொண்டாலும், 9.4 லட்சம் இளம் வயதினரில் 40 ஆயிரம் மாணவர்களையும் சேர்த்து தேர்ச்சி பெறச்செய்துவிட்டால், என்ன பெரிய சமூகப் பொருளாதார இழப்பு வந்துவிடப்போகிறது? தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளிலோ, தொழில்நுட்பக் கல்லூரிகளிலோ அவர்களும் படித்துவிட்டுப் போகட்டுமே.

தற்போது கேம்பிரிட்ஜ் வாரியம் கடைப்பிடித்துள்ள நடைமுறையைப் பின்பற்றினால், எதிர் வரும் ஆண்டுகளில் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள் எல்லோரும் தேர்வு முறைகளில் புதிய சீர் திருத்தங்களுக்குத் தயாராகி விடுவார்கள்.

பத்தாவது பள்ளிப்படிப்பு என்பது ஏதோ ஆண்டுக் கடைசியில் நடக்கும் தேர்வு, அப்போது மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பதற்குப் பதிலாக, ஆண்டு முழுவதும் கற்கும் விஷயமாக மாறிவிடும். ஆசிரியர்களும் ஒவ்வொரு தேர்வை நடத்தும்போதும் கவனத்துடன் இருப்பார்கள். மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெரும்பட்சத்தில் மீண்டும் கற்பிப்பதில் கவனம் செலுத்துவார்கள். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் யாரும் யாரையும் வஞ்சிக்க முடியாது. பள்ளிகள் பயிற்சி மையங்களாக மாறுவதும், அவற்றால் பாதிக்கப்படுவதும் குறையும். பள்ளிகள் இழந்த கண்ணியத்தை மீண்டும் பெற இதுவொரு நல்ல வாய்ப்பு.

கொரோனாவை நினைத்து பெரியவர்கள் எல்லோரும் பெரும் பதட்டத்தில் தவித்துக் கிடக்கிறோம். உயிரிழப்பு, பணியிழப்பு, சம்பளக்குறைப்பு என்று ஏகப்பட்ட மன அழுத்தங்கள். இந்தப் பிள்ளைகளாவது வீட்டில் சில மாதங்கள் கல்வி நிலையங்கள் திறக்கும் வரை நிம்மதியாக இருக்கட்டுமே.

குறிப்பு: கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள்.

– முனைவர் ம.வ. சீனிவாசன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top