Now Reading
மாணவர்களின் கண்ணீரைத் துடைக்கும் விரல்கள் ZOOMக்கு இல்லை!

மாணவர்களின் கண்ணீரைத் துடைக்கும் விரல்கள் ZOOMக்கு இல்லை!

பள்ளிகளின் நெடுங்கதவுகள் பூட்டப்பட்டு கிட்டதட்ட 75 நாட்கள் ஆகிவிட்டன. வகுப்பறைகளில் பாடம் பயின்ற மாணவச் செல்வங்கள் இன்று வீடுகளில் காணொலிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். ஜூன் 15ல் பத்தாம் வகுப்புத் தேர்வுகள், பள்ளி திறப்பது குறித்த சர்ச்சைகள் என்று நெருக்கடியில் உழல்கிறது நம் பள்ளிக் கல்வித்துறை. இந்நிலையில் கல்வியாளரும் பேராசிரியருமான ச. மாடசாமியுடன் தொலைபேசியில் உரையாடியதிலிருந்து…

வழக்கமான வாழ்க்கை காட்டாத புதிய முகங்களை ஊரடங்கு காட்டியது. பெரும்பாலோர் சுய பாதுகாப்பில் வீடொடுங்கிக் கிடந்தபோது, வீதிக்கு வந்து பசித்த மனிதர்க்கு உணவு வழங்கிய கருணை முகங்களையும் ஊரடங்கு காட்டியது. வீடுகளின் புதிய முகங்களும் தெரிந்தன. ஊரடங்கில் சில குடும்பங்கள் சிதைந்தன; சில உறுதிப்பட்டன. சில வீடுகளில் வன்முறை பெருக, சில வீடுகளில் அன்பு கூடியது. பிள்ளைகளுக்கு வீடு இனித்த காலம் போய் இது சலித்த காலம் ஆனது.

அரசுகளின் நிஜ முகங்களும் ஊரடங்கில் தெரிந்தன. வீதிகளில் இதுவரை அக்கறை எடுத்துக் காணாத ஒரு துயர வாழ்க்கை முன்னே வந்து நின்று நம் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பியது. அது புலம் பெயர் தொழிலாளிகளின் வாழ்க்கை. ரயில் தடத்தில் மட்டும் நாம் சாகக் கொடுத்த தொழிலாளிகள் 80 பேர்; நடைப் பயணத்தில் பட்டினியால் மாண்டோர் பல நூறு பேர்! இந்த தேசத்தின் நேசத்தின் அளவு இவ்வளவுதான்! பேச்சு மட்டும் இங்கு ஏராளம்!

ஊரடங்கில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் நிலை என்ன?

ஊசலாட்டம்தான்! யதார்த்தத்துக்கும் விதிகளுக்கும் இடையேயான ஊசலாட்டம்! பள்ளித் திறப்பை ஆகஸ்டுக்குத் தள்ளிப்போட்டிருப்பதில் உள்ள யதார்த்த ஞானம், பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஜுன் 15ல் நடத்தும் அவசரத்தில் சிறிதும் இல்லை. சென்னை போன்று நோய்த்தொற்று பெருகிவரும் இடங்களில் தேர்வு நடத்துவதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. பள்ளிகள் நோய்த் தொற்று மையங்கள் ஆகிவிட்டால், இந்த ஆண்டில் பள்ளி திறப்பது சாத்தியமே இல்லாமல் போய்விடும் என்பதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு குறித்து ஆசிரியர், பெற்றோர், மாணவர் மனநிலை என்ன?

ஒரே மாதிரி இல்லை. பல விதமாக இருக்கின்றன. குழப்பமாக இருக்கின்றன. நோய்த் தொற்று கடுமையாகி வரும் இவ்வேளையில், ஜுன் 15இல் தேர்வு இருக்கட்டும் என நினைப்பவர்கள் இரக்கமற்றவர்களாகவே இருப்பர். பெற்றோர்களோ ஆசிரியர்களோ அப்படி யாரும் இல்லை. பிள்ளைகள் முக்கியம் என்றே கருதுகின்றனர்.

அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகளில் அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்திருக்கிறார்கள். தேர்வே வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கு ஆசிரியர், பெற்றோர் பலர் இங்கு தயாரில்லை என்பதும் உண்மை. மரபுகளுக்குள் சிக்கிய மனோபாவம் அது. பொதுவாக, மத்தியப் பாதையைத் தேர்வு செய்யவே பலர் விரும்புகின்றனர். தேர்வு வைக்கட்டும்; ஆனால் இப்போது வேண்டாம் என்பது அவர்கள் கருத்து.

பள்ளி திறந்து சில நாட்களில் பிள்ளைகள் சகஜ மனோநிலைக்கு வந்த பின்னர் தேர்வு நடத்தலாம் என்றே பெரும்பாலான பெற்றோர் ஆசிரியர் விரும்புகின்றனர். பிள்ளைகளைப் பொறுத்தவரை ‘வீடுகள் போதாது’ என்ற உண்மையைக் கொரோனா தனிமை உணர்த்தியிருக்கிறது. இயல்பான மனநிலைக்குத் திரும்ப, ஆர்வமும் உற்சாகமும் கொப்புளித்துப் பெருக ஆசிரியர்கள் வேண்டும்; சக மாணவ நண்பர்கள் வேண்டும். ஆசிரியர்களையும் நண்பர்களையும் சந்தித்து உரையாடி கொரோனா மனநிலையில் இருந்து மீண்ட பின்னரே அவர்களைத் தேர்வுக்கு அனுப்பவேண்டும். அதுதான் நியாயம்!

இனி கல்வியாண்டின் அளவு குறையும். அதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது?

இது, இதுவரை நாம் நடந்திராத பாதை. கொரோனா பாதை. யூகங்களால் தீர்வு காண முடியாது. கல்வியாண்டின் அளவு குறைவதாலோ, பாடப் புத்தகங்களின் கனம் குறைவதாலோ கல்வியின் தரம் குறைந்து போகாது. அது பிரமை. பிஞ்சுகளின் உயிர் முக்கியம். அதுதான் முதல் கடமை. மேல்படிப்புக்குத் தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் நேர்மையாக அமைக்கப்பட்ட ஆசிரியர் பெற்றோர் குழு ஒன்றே போதும். இதுவரை மேல்படிப்புக்குத் தேர்வான முறைகளில் பல கோளாறுகள் உண்டு. முக்கியமாக,மாணவன் ஆர்வம் கொண்டுள்ள துறையை அறிய மதிப்பெண் ஒரு போதும் உதவாது.

See Also

இணையவழிக் கல்வி இந்த நேரத்தில் மாற்றாகுமா?

வகுப்பறைக்குத் துணையாக இணையவழிக் கல்வி வரவேண்டும். எல்லோர்க்கும் சமமாக இவ்வாய்ப்புவேண்டும்.இன்றைக்குச் சில மெட்ரிகுலேசன் பள்ளிகள் ZOOM வகுப்புகள் நடத்துகின்றன. பெரும்பாலும் அவை சடங்குகள். ‘கத்திக் கத்தி தொண்டை வறள்கிறது’ என்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் நிலைபற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆசிரியர் மாணவரின் நேரடி உறவுக்கு நிகரேது? கண்ணீரைத் துடைக்கும் விரல்கள் ZOOMக்கு உண்டா? தோள் தட்டிக் கொடுக்கும் ஆசிரிய ஸ்பரிசத்தை ZOOM ஆல் தரமுடியுமா? ‘வகுப்பறைக்கு மனித முகம் தேவை’ என நெடுங்காலமாகச் சொல்லி வந்திருக்கிறேன்.

இன்றும் என் நிலை அதுதான்!

மோ.கணேசன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top