Now Reading
வாவ் ஐந்தறிவு – 42

வாவ் ஐந்தறிவு – 42

விலங்குகளின் விந்தை உலகம்!

பறக்கும் மினி அணுகுண்டுகள்

உலகிலேயே வலிமைமிக்க உயிரினம் எது என்று கேட்டால், நம்மில் 90% பேர் யானை என்றோ, திமிங்கிலம் என்றோ சொல்வதுதான் பதிலாக இருக்கும். ஆனால் பூச்சியியல் வல்லுநர்களைக் கேட்டால், வண்டு (BEETLES)தான் என்று சத்தம் போட்டு, சத்தியம் செய்யாத குறையாகச் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

வண்டுகள், உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் வலிமை வாய்ந்தவை. அதாவது, வண்டுகள் அதிக எடை இழுக்கும் திறனைக் கொண்டவை என்பது பலவித ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.  அது எந்த ஒரு வகை வண்டினமாக இருந்தாலும் சரி, அந்த வண்டு தன் எடையைப் போல் 850 மடங்கு எடையை தூக்க அல்லது இழுத்துச் இழுத்துச்செல்லும் திறன்கொண்டது.

கோலியோப்டெரா (COLEOPTERA) என்னும் பிராணியியல் பெயரில் அழைக்கப்படும் வண்டுகளில் 3 லட்சம் இனங்கள் இருக்கின்றன. இவை ஒரு மில்லி மீட்டர் நீளத்திலிருந்து 150 மில்லி மீட்டர் நீளம் வரை இருக்கின்றன. உலகிலேயே மிகச் சிறிய வண்டியின் பெயர் நானோசெல்லா பங்கை (NANOSELLA FUNGI). இது ‘தில்லிடே’ (PTILLIDAE) என்ற குடும்பத்தைச் சேர்ந்த் வண்டாகும்.

அதேபோல் வண்டினத்திலேயே மிகப் பெரிய வண்டின் அறிவியல் பெயர் கோலியாத்தஸ் ஜைகாண்டியஸ் (GOLIATHUS GIGANTEUS) என்பதாகும். இந்த ராட்சச வண்டுகள் ஆப்பிரிக்காவின் இருண்ட காடுகளில் பறந்து திரிந்து கொண்டிருக்கின்றன.

இது விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும் மனிதனைக் கொல்வதற்கு, அதன் விஷம் தேவையில்லை. வேகமாய்ப் பறந்து வந்து மனிதனின் பின்னந்தலையை தாக்கினாலே போதும். அதே வினாடி, அந்த மனிதனின் மரணம் உறுதி செய்யப்பட்டுவிடும். ஏனென்றால் கோலியாத்தஸ் வண்டின் எடை ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ எடை கொண்டதாக இருப்பதனால்தான் இதனை மினி அணுகுண்டு என்று அழைக்கிறார்கள். இந்த வண்டைப்  போலவே இன்னொரு ராட்சஸ வண்டும் இருக்கிறது. அந்த வண்டியின் பெயர் மூக்குக் கொம்பன். காண்டாமிருகம் போன்ற,  ஒற்றைக் கொம்புள்ள இந்த வண்டானது, டைனாஸ்டெஸ் ஹெர்குலிஸ் (DYNASTES HERCULES) என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது.

வண்ண வண்ண வண்டுகள்

வண்டுகள் இந்த பூமியின் வட, தென் துருவப் பகுதிகள் மற்றும் கடல் பகுதிகளைத் தவிர, எல்லா நாடுகளிலும், இயற்கை சூழல்களிலும் நீக்கமற நிறைந்து, கோடிக்கணக்கான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன. எல்லா வண்டுகளுக்கும் ஆறு கால்கள் நான்கு இறக்கைகள் உள்ளன. இவை  முன் இறக்கைகள், பின் இறக்கைகள் என்று அழைக்கப்பட்டாலும், பின் இறக்கைகள்தான் பறப்பதற்குப் பயன்படுகின்றன. முன் இறக்கைகள் கெட்டியானவை. இதுதான் பின் இறக்கைகளைப் பாதுகாக்கும் உறைகளாக மாறிவிடுகின்றன. இந்த முன் இறக்கைகளுக்கு வன்சிறகு அல்லது காப்புச் சிறகு (ELYTRA) என்று பெயர்.

இந்த சிறகுகளின் அமைப்பு ஒரு சிறிய குன்று போல் வளைந்திருக்கும். இப்படி வளைந்து குன்றுபோல் காணப்படுவதால், இவற்றுக்கு வண்டு என்று பெயர். தமிழ் அகராதியில் ‘வண்டு’ என்ற வார்த்தைக்கு ‘வளைந்தது’ என்ற அர்த்தம் காணப்படுகிறது. நம்முடைய நாட்டில் கருப்பு நிறத்துடன் கூடிய, ஒரு வகை விஷ வண்டுகள் உள்ளன. இந்த வண்டுகளின் பெயர் ‘கதம்ப வண்டுகள்’. இந்த வண்டை கிராமத்தில் உள்ளவர்கள் கடந்தை என்று அழைக்கிறார்கள்.

கதம்ப வண்டுகளை ஆங்கிலத்தில் டார்கஸ் பேராலெல்லிபைபிடேஸ் (DORGUS PARALLELIPIPEDUS)  என்று அழைக்கிறார்கள். இது ஒரு விஷ வண்டு. இந்த வண்டுகள் தேனீக்கள் கூடு கட்டுவதைப்போல கூடுகட்டி வாழக்கூடியவை. பகல் முழுவதும் பறந்து, இரை தேடி உண்டு விட்டு, மாலை வேளையில்தான் கூடுகளுக்குத் திரும்பும். தங்களுக்கு ஏதாவது ஆபத்து என்பதை இந்த கதம்ப வண்டுகள் உணர்ந்துகொண்டால், ஒவ்வொரு வண்டும் ஒரு போர் வீரனாக மாறி விடும். எதிரிகள் யாராக இருந்தாலும் சரி, பயந்து ஓடாமல், தன்னுடைய இறப்பைப் பற்றி கவலைப்படாமல் மூர்க்கமாய்ப் போராடும்.

இந்த கதம்ப வண்டுகளில் நான்கைந்து வண்டுகள், ஒரே நேரத்தில் கடித்துவிட்டால் மரணம் நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை மரணத்தில் இருந்து தப்பித்தாலும் இதயம், சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு, அவை செயல் இழக்கும் அபாயமும் உண்டாகும் என்று பூச்சியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கதம்ப வண்டுகள் மட்டுமல்ல மற்ற இன வண்டுகள் கூட, தங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, பல வழிகளைக் கையாளுகின்றன. தாங்கள் வாழும் இடங்களுக்கு ஏற்றாற்போல் அடர் நிறங்களில் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்கள் கூடிய உடம்புகளைப் பெற்றுக் காணப்படுகின்றன.  சில வண்டுகள் காய்ந்த இலைகளுக்கு நடுவில், தானும் ஒரு வாடிய இலையின் உடம்பின் வடிவத்தைப் பெற்று, எதிரியின் கண்களை ஏமாற்றி விடும். ஹிஸ்டர், பாம்பார், பிளிஸ்டர் வண்டுகள் ஓரளவு விஷம் படைத்தவை. இவை மனிதர்களைக் கடிக்கும்போது கடிபட்ட இடம் வீங்கி, சிறிது நேரத்தில் கொப்புளங்களை உண்டாக்கும்.

பெரும்பாலான வண்டினங்கள் தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவி செய்தாலும், அதன் அதிமுக்கியமான பணி மனிதர்களுக்கு எதிராக இருப்பதுதான். இதில் ஸ்பைடர் வண்டு, விதை வண்டு, மர வண்டு,

சாண வண்டு போன்றவைகள், கோடவுன்களில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கும் தானியங்களைத் தின்றும், அவற்றில் இனப்பெருக்கம் செய்தும், அதன் தரத்தைக் குறைகின்றன. ‘மெட்டாலிக்’ என்ற ஒரு வகை வண்டுகள், பணக்கார மனிதர்களைப்போல ஆப்பிள்களை மட்டுமே சாப்பிடுகின்றன. இந்த மெட்டாலிக் வண்டுகள் ஜுவல் பீட்டல்ஸ் (JEWEL BEETLES) என்றும் அழைக்கப்படுகின்றன.

இலை வண்டுகளும், ஜப்பானீஸ் வண்டுகளும் எல்லாவிதமான தாவரங்களைப் பதம் பார்த்து, இளம் செடிகளை வளரவிடாமல் தடுத்துவிடுகின்றன. அதேபோல் ‘போஸ்ட்’ எனப்படும் வண்டுகளானது, விலை உயர்ந்த மரங்களால் உருவாக்கப்பட்ட, வேலைப்பாடுகளோடு கூடிய ஃபர்னீச்சர்களை அரித்து பவுடரைப்போல் மாற்றிவிடுகின்றன. பார்க் வண்டு என்று அழைக்கப்படும் ஒரு வகை வண்டானது, மூங்கில்களில் நூற்றுக்கணக்கான துவாரங்களைப் போட்டு உள்ளே இருக்கும் தண்டுச் சாற்றை உறிஞ்சிவிடுகின்றன.

இப்படி அனேக வண்டுகள் விவசாயப் பயிர்களை துவம்சம் செய்துகொண்டிருக்க, லேடி பேர்ட் (LADY BIRD) என்னும் வண்டு மட்டும் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பணி ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறது. அதாவது விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் தெள்ளுப் பூச்சிகள் போன்ற சில வகை பூச்சிகளை ஏராளமான அளவில் சாப்பிட்டு, பயிர்களைக் காப்பாற்றுகின்றன.

பொதுவாக 90 சதவீத வண்டுகள் தேன், பூ, இலை போன்ற சைவ சமாசாரங்களையும், சிறு சிறு பூச்சிகள், சிறிய அளவிலான பிற இன வண்டு போன்ற அசைவ வகைகளையும் உணவாக எடுத்துக்கொள்கின்றன.

ஆனால், செக்ஸ்டன் எனப்படும் ஒருவித வண்டுகள், ஒரு கோஷ்டியைச் சேர்த்துக்கொண்டு, ஒரு எலியையோ, ஒரு தவளையையோ, சில நேரங்களில் பறவையையோ வேட்டையாடி விழ்த்துவதும் உண்டு. அப்படி வீழ்த்தப்பட்ட இரையின் உடலை, அடுத்த சில மணி நேரத்திற்குள் குழி தோண்டி, ஆழத்தில் புதைத்து வைத்துவிடும். அந்த குழிக்குப் பக்கத்திலேயே இன்னொரு குழியைத் தோண்டி, சுரங்க வழி அமைத்துக் கொண்டு, பசிக்கும்போதெல்லாம் அந்த அழுகிப்போன இரை இருக்கும் இடத்திற்குப் போய், தேவையான அளவு சதையை உணவாக எடுத்துக் கொள்ளும்.

See Also

தமிழ் இலக்கியங்களில் வண்டுகளுக்கு தனி இடம் உண்டு. வண்டுகளுக்கு குளவி, அறுபதம், கரும்புசம், பிரமரம் என்ற பெயர்களும் சூட்டப்பட்டு, பாடல்களில் இடம் பிடித்துள்ளன. வண்டுகளில் உயர்ந்த சாதி வண்டுக்கு தும்பி என்று பெயர்.

இப்போதுள்ள பூச்சியியல் வல்லுநர்கள் (ENTOMOLOGISTS) வண்டுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்கள். அதாவது வண்டுகள் அனிச்சை செயல் (REFLEX) மூலம்தான் இயங்குகிறது. உதாரணத்திற்கு அதன் கழுத்துப் பகுதியில் சின்னதாய் தூண்டிவிட்டால் போதும் வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ திரும்பிப் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த உண்மையை அடிப்படையாக வைத்து, ஒரு மினியேச்சர் ரேடியோ ரிசீவரை, வண்டின் பின்புறம் பொருத்தி, கையில் ரிமோட் கண்ட்ரோலை வைத்துக்கொண்டால், நம் விருப்பப்படி அதைப் பறக்க வைக்க முடியும்.

வெடாலியா வண்டு

வெடாலியா வண்டு (VEDALIA BEETLES) என்பது ஒரு வகையான புள்ளி வண்டுகள். கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு முறை ‘காட்டனி குஷன் ஸ்கேல் இன்செக்ட்ஸ்’ (COTTONY CUSHION SCALE INSECTS) எனப்படும் ஒரு வகையான பூச்சியினம் எக்கச்சக்கமாய்ப் பெருகி, அந்த மாகாணத்தில் உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை பழ வகைத் தோட்டங்களைப் பதம் பார்த்தது. அனைத்துமே அழிந்துவிடும் நிலை ஏற்பட்டது மட்டுமல்லாமல் அதை நம்பியிருந்த தொழிற்சாலைகளையும் இழுத்து மூடும் நிலைமை ஏற்பட்டது. இதை அறிந்த பூச்சியியல் நிபுணர் ஒருவர், இந்த பூச்சிகளை அழிப்பதற்காக வண்டு இனம் ஒன்றைக் கண்டறிந்தார். அது ஆஸ்திரேலியாவில் இருப்பதை அறிந்து, அங்கு தேடிச் சென்றார். ‘வெடாலியா’ என்ற புள்ளி வண்டுகளே, பூச்சிகளுக்கு சரியான தீர்வு என்பதையும் கண்டறிந்தார். ஆயிரம் வண்டுகளை கலிபோர்னியாவுக்குக் கொண்டு வந்து, அதை இனப்பெருக்கம் செய்ய வைத்து, ஒரு வருட காலத்திற்குள் கலிபோர்னியா முழுவதும் இருந்த ‘காட்டனி குஷன் ஸ்கேல் இன்செக்ட்ஸ்’ பூச்சிகளை அழித்து, பழத்தோட்டங்களையும், அவை சார்ந்த தொழிற்சாலைகளையும் காப்பாற்றினார்.

வண்டுகளின் இனப்பெருக்க காலம் வண்டினங்கள் பலவற்றின் ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே. முதிர்ந்து வயதான வண்டுகள் பறக்க இயலாமல், வறண்ட பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, கிடைத்ததை உண்டு, வாழ்நாளைக் கழித்து மடிகின்றன. ஆண் வண்டுகளுக்கு கோபம் அதிகம். தன்னுடைய அதிகாரத்தை உச்சஸ்தாயில் வெளியிட்டவாறு, பெண் வண்டை நெருங்கும். வேறு ஒரு ஆண் வண்டு குறுக்கிட்டால், இரண்டுக்குமிடையே மல்யுத்தம் போன்ற போர் நடக்கும். ஒரு வண்டு புறமுதுகு காட்டிய பின், இனச்சேர்க்கை நடக்கும். இணை சேர்ந்த பிறகு பெண் வண்டு, மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாக முட்டைகளை இடும்.

தெள்ளுப்பூச்சிகள் ஏராளமாக இருக்கும் இலையின் அடிப்பரப்பில்தான் வண்டுகள் முட்டையிடும். காரணம், முட்டையிலிருந்து வெளியே வரும் லார்வாக்கள் இந்த தெள்ளுப் பூச்சிகளைத்தான் விரும்பி உண்டு, உடல் பருத்து, ஒரு செடியோடு ஒட்டிக்கொண்டு, கூட்டுப் புழுவாக மாறி, பிறகு வண்டாக உருவெடுத்து வெளியே வரும். ஆரம்பத்தில் நிறமில்லாமல் காணப்படும் அதன் உடம்பு ஏதாவது ஒரு வண்ணத்தை அடைந்து, அதன் மரபணுக்களுக்கு ஏற்ற மாதிரி புள்ளிகளும், கோடுகளும் தோன்றும்.

ஆரம்பத்தில் பறக்க சிரமப்படும் வண்டுகள் மேலே எழும்பி எழும்பி கீழே விழும். அடுத்த இரண்டு, மூன்று நாட்களிலேயே எந்த இறக்கைகளை அசைத்தால், சுலபமாய்ப் பறக்க முடியும் என்பதைக் கற்றுக்கொண்டு ரீங்காரமிட்டபடி பறக்க ஆரம்பித்து விடுகின்றன.

– ராஜேஷ் குமார்

(வாவ் வளரும்)

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top