Now Reading
வெற்றியின் வேர்கள் – 29

வெற்றியின் வேர்கள் – 29

இடுக்கண் வருங்கால் நகுக!

நாம் எப்பொழுது சிரிக்கவேண்டும்? மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டும்தானா? மற்ற நேரங்களில் சிரிக்கக்கூடாதா?

நிச்சயமாக இல்லை. சோகம், கோபம், ஆத்திரம், பொறாமை போன்ற எதிர்மறையான உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்போதுதான் நாம் அதிகம் சிரிக்கவேண்டும். தேவையில்லாத அந்த உணர்வுகளிலிருந்து அப்போதுதான் விடுபட முடியும். கவலைகளை மறந்து, கோபம், பொறாமை போன்றவற்றைத் துறந்து சிரிக்கத் துவங்கினால், எதிர் மறையான எண்ணங்கள் காணாமலேயே போய்விடும். மனமும் தக்கைபோல அழுத்தமற்று லேசாகிவிடும்.

எதிர்பாராத நிகழ்வு ஒன்று நிகழ்ந்துவிடுகிறது. நீங்கள் ஒரு ஹோட்டலில் மில்க் ஷேக் ஒன்றை ஆசையாக ஆர்டர் செய்கின்றீர்கள். ஒரு கோப்பையை உங்களிடம் கொடுக்கிறார்கள். நீங்களும் ஆசை ஆசையாக அதைக் குடிக்கிறீர்கள். ஆனால், குடிக்கும்போதுதான் தெரிகிறது அது மில்க் ஷேக் இல்லை. மோர் என்று.

உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏமாற்றமாக இருக்கும் அல்லவா?

நீங்கள் அப்போது என்ன செய்வீர்கள்?

சர்வரிடம் கோபமாக “மில்க் ஷேக் கொண்டு வாருங்கள்” என உத்தரவிடலாம். அல்லது போனால் போகிறது என்று அலுப்புடன் மோரையே குடித்துவைக்கலாம்.

அதேநேரம், நீங்கள் மோர் கேட்டு அவர்கள் மில்க் ஷேக் கொடுத்திருந்தால் என்ன செய்வீர்கள்? நமக்கு இன்று உடம்பெல்லாம் மச்சம் என்று எண்ணி குடித்துவிடுவீர்கள்தானே?  இப்படி நாம் எதிர்பாராத பல நிகழ்வுகள் நம் வாழ்வில் நடக்கும். எதிர்பார்த்தபடியே வாழ்க்கையில் எல்லாம் நடந்துவிட்டால் ஒரு த்ரில் இருக்காதுதானே?

எதிர்பாராத ஒன்று உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால் ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால், அது பிடிக்காததாக அமைந்து விட்டால், உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதானே? அதை முதலில் சரி செய்ய வேண்டும்.

சரி செய்ய முடியவில்லை என்றால், நடந்ததையே நினைத்து நொந்து கொண்டிருக்காமல், சரி போகட்டும் விடு என அப்படியே அதனை ஏற்றுக்கொண்டு சிரித்துவிடவேண்டும். அப்படிச் செய்வதால் உங்களது எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் விலகி, சிந்தனை சீராகி, நேர்மறைச் சக்தி உங்களை உற்சாகப்படுத்துவதை உணர்வீர்கள்.

மகாபாரதத்தில், ஒரு கட்டத்தில் பாண்டவர்கள் மாய வனத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அங்கு சென்ற யாரும் உயிருடன் திரும்பியது கிடையாது. அரக்கர்களுக்கு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை. அச்சூழலில் கூட அர்ஜுனனும் அவர் சகோதர்களும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது குந்திதேவியின் விழிகளில் துளிகள்.

“ஏன் அழுகின்றீர்கள் தாயே?” என அர்ஜுனன் பதட்டத்துடன் கேட்க, அதற்கு குந்திதேவி “இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட சிரிக்கின்றீர்களே என எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டேன்…” என்பாள்.

இதைத்தான் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவரும், ‘துன்பம் வரும் வேளையில் சிரிங்க’ என பட்டினத்தாரும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் நாம் என்ன செய்கிறோம்?

‘சே… நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? நாம யாருக்கு என்ன கெடுதல் பண்ணினோம்? எல்லோருக்கும் நல்லதுதானே பண்ணினோம்… இது நியாயமா? இப்படி நடக்காமல் அப்படி நடந்திருக்கலாமே?’ என்றெல்லாம் அலுத்துக்கொள்கிறோம்.

நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்போது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் நாம், விருப்பம் இல்லாத நிகழ்வுகள் நடக்கும்போது, ஏன் அழுது புலம்ப வேண்டும்? இதுபோன்ற சூழ்நிலைகளில் மறைந்த பிரபல டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

யு எஸ் ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலியன் ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்றவர் ஆஷ். அவருக்கு ரத்தம் மாற்றியபோது, எய்ட்ஸ் தொற்றிக்கொண்டது. அப்பொழுது அவரிடம் சிலர், ‘ஆஷ்… உங்களுக்குப்போய் இந்தக் கொடிய நோய் வரலாமா?’ என வேதனையுடன் கேட்டார்கள். அவர்களுக்கு ஆஷ் அளித்த பதில், அதுபோன்ற சூழ்நிலைகளை மனிதர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாகும்.

ஆஷ் அளித்த பதில் பதில் இதோ: “இவ்வுலகில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களில் சில லட்சக்கணக்கானவர்கள்தான் டென்னிஸ் ஆடுகின்றனர். அவர்களில் நானும் ஒருவன். அப்போது நான் சொன்னேனா, ‘ஆஷ் நீயெல்லாம் டென்னிஸ் ஆடுகிறாயே…’ என்று.

அந்த லட்சக்கணக்கானோரில் சில ஆயிரக் கணக்கானோர்தான் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன். அப்போது நான் என்றாவது கேட்டிருக்கின்றேனா, ‘ஆஷ் நீ போய் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்கின்றாயே…’ என்று.

அந்த ஆயிரக்கணக்கனோரில் சில நூறு பேர் தான் விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போன்ற கிராண்ட் ஸ்லாம் நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். அன்றெல்லாம் நான் சொன்னேனா, ஆஷ் ‘ நீ விம்பிள்டன் ஆடுகிறாயே… நீ யுஎஸ் ஓபன் ஆடுகிறாயே’ என்று. இல்லையே.

See Also

அந்த சில நூறு பேரில் ஒரே ஒருவர் தான் டைட்டில் சாம்பியன்ஷிப் பெறுகிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். அப்போது நான் சொன்னேனா, ‘ஆஷ் உனக்கு விம்பிள்டன் சாம்பியன்ஷிப் ஒரு கேடா?’ என்று. இல்லவே இல்லையே…

எனவே, நல்லதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் நாம், நல்லது அல்லாதவற்றையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அது தானே முறை.” ஆஷ் கூறியது எவ்வளவு முதிர்ச்சியான வார்த்தைகள். நாமும் அவரது அணுகுமுறையைப் பின்பற்றினால் எந்தவொரு மனவலியும் நம்மை நெருங்காது மாணவர்களே.

எதிர்பார்ப்பென்பது ஒன்று. எதார்த்தம் என்பது வேறு. நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா? அல்லது நடந்ததையே நினைத்திருந்தால் வாழ்வில் மகிழ்ச்சிதான் வருமா? நன்றாகப் படித்து பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள். ஆனால், அது கிடைக்காது. போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றிருப்பீர்கள். ஆனால், ஆறுதல் பரிசு கூட உங்களுக்குக் கிட்டாமல் போய்விடக் கூடும். அத்தகைய தருணங்களை இரண்டுவிதமாக எதிர்கொள்ளும் சாத்தியங்களே உண்டு.

  1. நிகழ்வை சரி செய்ய உங்களை நீங்களே அர்ப்பணிக்க வேண்டும். சூழலை உங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள உங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
  2. அது இயலாத நிலையில், மனச் சோர்வடையாமல், என சிரித்த முகத்தோடு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் .

மழை பெய்தால் குடை எடு. வெய்யில் அடித்தால் நிழல் தேடு. தென்றல் வீசினால் அனுபவி. புயல் வீசினால் இழப்பை எதிர்கொள். என்ன நிகழ்ந்தாலும் ஏமாற்றமோ, மனச்சோர்வோ இல்லாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையே மகிழ்ச்சியாகி விடும்.

நகைச்சுவை உணர்வோடு எதையும் அணுகினால், அச்சூழ்நிலையை நாம் பார்க்கும் பார்வையும் மாறிவிடும். அச்சூழல் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தின் பரிமாணமும் மாறிவிடும்.

திரைப்படங்களில் சார்லி சாப்ளின் கீழே விழுந்தால், நாம் வயிறு குலுங்கச் சிரிக்கிறோம். அதேபோல் சிலர், அடுத்தவர்கள் விழுந்தால் சிரிப்பார்கள் கேலியாக. அடுத்தவர்கள் விழுவதைப் பார்த்து நாம் சிரித்தால், நாம் விழும்போது அடுத்தவர்கள் சிரிப்பார்கள் கண்டிப்பாக. நாம் எப்போது விழுவோம் என்று காத்துக் கொண்டு அல்லவா இருக்கிறார்கள் சிலர். இத்தகைய சூழலை நாம் எப்படி அணுகவேண்டும்?

நாம் கீழே விழும் சூழலில், பிறர் நம்மைப் பார்த்து சிரிக்கும் முன் நாமே முதலில் சிரித்துவிட வேண்டும். நாமே சிரிக்கும்போது மற்றவர்களுக்குச் சிரிக்கும் எண்ணம் தோன்றாது. வெற்றிகரமாக எழுந்து தொடர்ந்து பயணிக்க வேண்டும். இனி ஜாக்கிரதையாக நடப்பதற்குத் திட்டமிட வேண்டும்.

இங்கே நாம் விழுவது என்று குறிப்பிடுவது வெறும் உடல்ரீதியாக மட்டும் அல்ல. மனரீதியாக, உணர்வுரீதியாக… ஒவ்வொரு முறை நாம் விழும்போதும் அதனை வலியாக உணராமல், அதை ஓர் எதார்த்த நிகர்வாக நினைத்துச் சிரித்து கொண்டே எழுந்து பீடுநடைபோடப் பழகிக் கொண்டால், இந்த உலகில் நம்மைப் போன்ற மகிழ்ச்சியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

-எம். சிதம்பரம்

(தொடர்ந்து வெல்லுவோம்)

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top