Now Reading
கருத்து சுதந்திரத்தை ஒடுக்கக் கூடாது…

கருத்து சுதந்திரத்தை ஒடுக்கக் கூடாது…

பார்த்திபன் உரிமைக்குரல்

வித்தியாசப் பன்முக வித்தகர் பார்த்திபன் பாதை எப்போதுமே புதிய பாதை. புரட்சிப் பாதை. நாளை பற்றி நேற்றே யோசித்து இன்றே செயலில் இறங்குபவர். இப்போது ’பொன்மகள் வந்தாள்’ படத்தில் வழக்கறிஞர் ராஜரத்தினமாக நடித்து அசத்தியதற்காக பாராட்டுப் பூங்கொத்துகள் வந்து குவிகின்றன பார்த்திபனுக்கு.

அவருடனான உற்சாக உரையாடல் இனி…

‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் ஜோதிகா பாத்திரம்தான் முதன்மைப் பாத்திரம். ஆனாலும், எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?

’பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஃபிரெட்ரிக்கின் முதல் படம். படத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர்தான் என்னிடம் முதலில் பேசினார். ’உங்கள் நடிப்புக்கு ஏற்ற ஒரு கதை வந்துள்ளது. நடித்தால் சிறப்பாக இருக்கும்’ என்றார். இப்போது மட்டுமல்ல; எப்போதுமே நடிக்கும் படங்களில் கதையில் எனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். அப்படித்தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’ படங்களில் நடித்தேன். எந்த ஹீரோவுடன் வேண்டுமென்றாலும் நடிப்பேன். எனக்கு ஈகோவே கிடையாது. அப்படித்தான் ‘பொன்மகள் வந்தாள்’ படத்திலும் நடித்தேன்.

‘ஆயிரம் வழக்குகளில் வெற்றி பெறும் ஒரு வழக்கறிஞர், நீதிக்காக வாதாடும் ஒரு பெண்ணின் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக ஆஜராகிறார். ஆனால், நியாயம் அவள் பக்கம் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு ஒருமுறை நீதிமன்றத்தில் இவர் பேசாமல் இருக்கிறார். அந்தப் பெண் வெற்றிபெறக் காரணமே, இவர் பேசாமல் இருப்பதுதான். ஆயிரம் கேஸில் பேசி வெற்றி பெற்றவர், இதில் மௌனத்தில் வெற்றி பெறுகிறார்’. இப்படத்தில் எனக்கு சொல்லப்பட்ட பாத்திரம் இதுதான். ஜோதிகாதான் மெயின் ரோல் பண்ணப் போறாங்கன்னு தெரிந்தால்கூட, நான் என்னப் பண்ணப்போகிறேன், என் பாத்திரம் பேசக்கூடிய அளவில் இருக்குமா என்றுதான் யோசித்தேன். அந்தவகையில் இந்த பாத்திரம் எனக்கு திருப்தியாக இருந்தது.

நெகட்டிவாக நடிப்பதென்பது என்னுடைய முதல் படத்திலிருந்தே தொடர்கிறது. எல்லோரும் எப்போதும் பாஸிட்டிவாக இருப்பதுமில்லை, நெகட்டிவாக இருப்பதுமில்லை. இப்போது கொரோனா நெகட்டிவாக இருந்தால்தான் நல்லது, பாஸிட்டிவ் என்றால் பிரச்சினை. அதனால், நான் நெகட்டிவாக நடிப்பதில் கவலையே படமாட்டேன். மக்களுக்கு நான் என்ன ரோலில் நடித்தாலும், பார்த்திபன் என்ன சொல்லப்போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என தெரிந்தால், உடனே இந்தக் கெட்டப் இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படித்தான் ஹேர்ஸ்டைல் வைக்கவேண்டுமென்று தயாராகிவிடுவேன். பாக்கியராஜ் சார்கூட பார்த்துட்டு, ‘என்னய்யா ‘ஒத்த செருப்பு’ படத்துல வேறுமாதிரி இருந்த, இதுல வேற மாதிரி இருக்க; தலைமுடியெல்லாம் இவ்ளோ இருக்கு’ என்றார். ‘உங்கள் தலையில் நிறைய மூளை இருக்கு; என் தலையில் நிறைய முடி இருக்கு’ என்றேன்.

அரசு தரப்பு வழக்கறிஞராக நடித்துள்ளீர்கள், என்ன மாதிரியான ஹோம் ஒர்க் செய்தீர்கள்?

இதற்கு நான் எந்த ஹோம் ஒர்க்கும் செய்யவில்லை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரியான ஒரு படத்திற்கு ஹோம் ஒர்க் பண்ணுவேனே தவிர மற்றபடி மற்ற படங்களில் கேரக்டரை சொல்லும்போதே மனதில் பதிந்துவிடும். ஒருவித புது ஸ்டைலை நானே உருவாக்கிக்கொள்வேன். மிகவும் கம்பீரமானவன். எல்லா வழக்கறிஞரும் அவனது தரப்புக்காகத்தான் வாதாடுவார்கள். ஆனால், இதில் ஒரு பெண்ணின் பிரச்சினையைத் தீர்க்க விட்டுக்கொடுத்து ஹீரோவாகிவிடுவான். எனக்கு அது புரிந்ததால் கம்பீரம் குறையாமல் பண்ணவேண்டும் என்று மட்டும் முடிவாகிவிட்டேன்.

ஜோதிகா பற்றி?

ஜோதிகாவைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் பத்தி பத்தியாகத்தான் சொல்லவேண்டும். எத்தனைப் பத்தி வரும் என்று சொல்ல முடியாது. இது ஒட்டுமொத்த பெண்களின், பெண் குழந்தைகளின் பிரச்சினை. ஜோதிகா அட்டகாசமாக பண்ணியிருந்ததைப் பாராட்டி அவருக்கு ஒரு கடிதமும் ஒரு வாய்ஸ் நோட்டும் அனுப்பினேன். அதில், ‘அசோக சக்கரத்தில் நான்கு சிங்கம் இருக்கும். நான்கு சிங்கமாக நாங்கள் நடித்திருந்தாலும், அதற்கு பில்லர் நீங்கள்தான்’ என்றேன். அதுதான் உண்மையும்கூட. அப்படத்தில் ஒரு சப்போர்ட்டிவாக இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி.

நான் ஜோதிகாவை அவரின் திருமணத்தில் பார்த்திருக்கிறேன், விழாக்களில் பார்த்திருக்கிறேன். பேசினது ரொம்ப அதிகம் இல்லை. ஷூட்டிங் போனதும், ‘உங்கள் எதிரில் நடிக்க எனக்கு பயமா இருக்கு’ என்றார். ஆனால், உண்மையான விஷயம், அவர் பயங்கர முன் தயாரிப்போடுதான் ஷூட்டிங் வருவார். சிவகுமார் சார்கூட என்னிடம், ‘நான் ஒரு படத்தில் வழக்கறிஞராக 90 பக்கம் டயலாக் பேசினேன்’ என்றார். ‘இதெல்லாம் பெருமையில்லை சார். மொழி தெரியாமல் நீங்களும் நானும் இந்தி படத்தில் ஒரு சீன்கூட நடிக்க முடியாது. ஆனால், ஜோதிகா எங்கிருந்தோ வந்து நம் தமிழ் நடிகையாகி, தமிழைக் கற்றுக்கொண்டு பேசுவதுதான் பெரிய விஷயம்’ என்றேன். அதுவும் ஒரே டேக்கில் ஒகே வாங்குவார். இந்தக் கேரக்டர் ஃபவர்புல்லானது. அவ்வளவு கவனமாகவும் அர்ப்பணிப்போடும் நடித்தார்.

பொதுவாகவே ஒரு குடும்பப் பெண்ணிற்கு நிறைய பொறுப்புகளும் பிரச்சினைகளும் இருக்கும். ஜோதிகாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவரையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவும், சூர்யா குடும்பமே பெரிய குடும்பம். ஷூட்டிங் வந்தால் செல்லைக்கூட தொடமாட்டார். உணவு இடைவெளியில் அவரது கேரவனுக்குள் சென்றுவிடுவார். அப்போது வீட்டிற்கு பேசினாரா மொபைலை எடுத்தாரா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு தடவைகூட போனை எடுத்தது கிடையாது. எல்லோரிடமும் மிகவும் ஃப்ரெண்ட்லியாக பழகுவார். அவர் நடிப்பைப் பார்த்து ஷாட் முடிந்ததும் ஒவ்வொருமுறையும் கைதட்டுவார்கள்.

படத்திற்குக் கிடைத்த முக்கியமான பாராட்டாக நீங்கள் கருதுவது?

’உங்கள் நடிப்பைப் பார்த்தால், 1960களில் நடித்த சார்லஸ் லாஃப்டன் ஹாலிவுட் ஆக்டர் போல் உள்ளது’ என்று பெருமையோடு சொன்னார் சிவகுமார் சார். இப்படி நிறைய பேர் பாராட்டினார்கள். சமூக வலைத்தளங்களிலோ பாராட்டிக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இவ்வளவு பாராட்டை நான் எதிர்பார்க்கவில்லை. படம் வெளியான இரண்டே நாளில் இரண்டரை கோடி மக்கள் பார்த்துள்ளார்கள். முதல் ஓடிடி படம் என்பதால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடி மூலம் வெளியாகியிருக்கும் முதல் தமிழ் படம் இது. தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்களே, நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கருத்து சுதந்திரம் மாதிரியே தொழில் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. எதையும் ஒடுக்கக் கூடாது. நான் ஒரு படம் எடுத்தால், அதை எப்படி வேண்டுமென்றாலும் எனக்கு ரிலீஸ் செய்ய உரிமை உள்ளது. பயாஸ்கோப் மாதிரிகூட கூட ரோட்டில் காட்டலாம். இந்த சுதந்திரத்தை யாரும் மறுக்கக்கூடாது. இதை ஆதரித்ததற்கு நீங்க எப்படி இப்படி சொல்லலாம் என்று பலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். சினிமா தியேட்டர் என்பது அழியவே அழியாது. அமெரிக்காவில் இந்த ஒடிடி ஃப்ளாட்பார்ம் என்பது ரொம்ப வருஷமாகவே இருக்கிறது. ஆனால், அங்கு தியேட்டரிலும் பார்க்கிறார்கள். அதற்கு தனி ஆடியன்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தியாவில் 68 கோடி பேர் அடுத்தமாதம் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி இருக்கையில், ஏதோ ஒரு வகையில் மக்களும் பொழுதுபோக்கோடு இருப்பதற்கும், இது தேவையான விஷயம்.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்புணர்வு குறித்து உங்களது தனிப்பட்ட பார்வை என்ன?

See Also

இதற்கு, உடனடி தண்டனையாக எல்லோரும் ‘நடுரோட்டில் வெட்டணும்’ என்கிறார்கள். அரபு நாடுகளில் அப்படித்தான் தண்டனை கொடுக்கப்படுகிறது. இங்கும், அப்படித்தான் பண்ணவேண்டும். கொஞ்சம் விட்டால் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியில் வந்துவிடுகிறார்கள். இனிமேலும் யாரும் பாதிக்கப்படக்கூடாது. ஒரு குழந்தையை எப்படி இப்படி அணுக முடிகிறது? யோசித்துப் பார்த்தாலே அருவருப்பாக உள்ளது.

எனக்கும் பெண் குழந்தைகள் உள்ளார்கள். ஒரு குழந்தையைத் தவறாகப் பார்த்தால் கண்டிப்பாக அவன் தண்டிக்கப்பட வேண்டியவன். குழந்தையில் பெண் குழந்தை, ஆண் குழந்தை என்றில்லை; எல்லோரும் சமமானவர்கள்தான். அது வளரும் சூழல்தான் எல்லாமே மாறிப்போய்விடுகிறது. இன்று இருக்கும் சோஷியல் மீடியாவில் குழந்தைகள் துல்லியமாக எல்லா அருவருப்பையும் பார்க்க வாய்ப்பு வந்துவிட்டது. சாதாரணமாகவே, ஒரு பருவ வயதில் இருப்பவர்கள் தவறு செய்ய வாய்ப்பாக உள்ளது. எல்லா விஷயங்களும் திறந்துபோட்டதால் சரியா தவறா என்று தெரியவில்லை. இது எல்லாம் தனித்தனியாகப் பேசுவதற்குப் பதில் மொத்தமாகப் படம் பேசுகிறது. நான் சொன்னால் என்ன, ஜோதிகா சொன்னால் என்ன?

ஊரடங்கு நாட்கள் உங்களுக்கு எப்படி இருந்தது?

நான் ஏற்கனவே, ஷூட்டிங் நேரம் தவிர்த்து கொஞ்சம் உள்ளடக்கி இருக்கும் ஆள்தான். உடற்பயிற்சிகள் செய்வதோடு நல்ல டயட்டும் இருக்கிறேன். புத்தகம் படிக்கிறேன். கொஞ்சம் நேரம் மௌனம் காக்கிறேன். தினமும் ஒரு படம் பார்க்கிறேன். அதோடு, புதிய புதிய கதைகள் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ‘பொன்மகள் வந்தாள்’ படத்திற்காக பாராட்டாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும், தினந்தோறும் சம்பாதித்துப் பிழைக்கும் மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியிருப்பதுதான் எனக்கு வேதனையைக் கொடுக்கிறது. ’என் ஹோட்டல் தொழில் எல்லாம் நசுங்கிப்போய்விட்டது சார்’ என்று ஒரு பெரிய பணக்காரர் என்னிடம் சொன்னார். ‘விற்றுத் தின்ன உங்களுக்கு ஆயிரம் வழி இருக்கு. ஆனால், வாங்கித் தின்பவர்கள் என்ன நிலைமையில் இருப்பார்கள்? அவர்களைப் பற்றித்தான் நான் யோசிக்கிறேன்’ என்றேன்.

ஒரு பன்னை-ஐகூட வாங்கித் தின்னமுடியாமல் வறுமையில் இருப்பவர்கள் குறித்துதான் எனது கவலையெல்லாம். இந்த நிலை தொடர்ச்சியாக இருந்துகொண்டேதான் இருக்கும். தீர்வு என்றால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதுதான். அதற்கு இன்னும் ஆறு மாதம் ஆகலாம். அதனால், நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டு கவனமாக நமது உடலைப் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். இந்தியாவில் 68 கோடி மக்கள் பாதிக்கப்படும்போது பாதி மக்கள் தொகையே பாதிக்கப்படும். அப்போது இருவரில் ஒருவருக்குக் கண்டிப்பாக கொரோனா இருக்கும். அதனால், முன்னெச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

உங்கள் அடுத்த முயற்சியான ’இரவின் நிழல்’ படம் எந்த நிலையில் உள்ளது?

அது ஸ்கிரிப்ட்டாகத்தான் இன்னும் உள்ளது. அதற்குள் கொரோனா வந்துவிட்டது.

-பூ. சர்பனா

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top