Now Reading
எனக்கு போட்டி யாருமில்லை! கீர்த்தி சுரேஷ்

எனக்கு போட்டி யாருமில்லை! கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

‘‘இவர் சாதாரண அழகியல்ல. ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகிய மூவரையும் மிக்ஸியில் போட்டு அரைத்து உருவாக்கப்பட்டவர்தான் இவர். இவரது பெற்றோர் ஒரே பெண்ணோடு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாமல் டஜன் கணக்கில் பெற்று கலைச் சேவைக்கு இறக்கி விட்டிருக்க வேண்டும்.’’

பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷை இயக்குனர் பார்த்திபன் சிலாகித்துப் பேசிய கவிவரிகள்தான் இவை.

திரைத்துறையை பொறுத்தவரை, கதாநாயகர்கள் அளவுக்கு கதாநாயகிகள் நிலைத்திருக்க மாட்டார்கள். அறிமுக படம் வெற்றிப்படமாக அமைந்தாலும், கிடைத்த வெற்றியை நடிகைகள் தக்க வைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. சினிமா குடும்பப் பின்னணியில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் இதை உணர்ந்தே திரைவானில் சிட்டாக பறந்து கொண்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்; அம்மா மேனகா 80களில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். எனவே, இயல்பாகவே கீர்த்தி சுரேஷுக்குள் சினிமா ரத்தம்தான் ஓடிக் கொண்டிருந்ததுது. இச்சூழலில் 2000-ஆம் ஆண்டில் தன்னுடைய தனது எட்டு வயதில் ‘பைலட்ஸ்’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்புப் பயணத்தை துவக்கினார் கீர்த்தி சுரேஷ்.

அடுத்தடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடர்ந்த கீர்த்தி சுரேஷ் 2002-க்கு பிறகு பத்து ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பின்னர் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். அலட்டல் இல்லாத நடிப்பு, குடும்பப் பாங்கான முகம், லட்சணமான தோற்றம், கவர்ந்திழுக்கும் அழகு ஆகியவை கீர்த்தி சுரேஷை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

சென்னையில் ஃபேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்பு பயின்றவரான கீர்த்தி சுரேஷ், தான் நடிக்கிற படங்களில் தனக்கான ஆடைகளை அவரே வடிவமைத்துக் கொள்கிறார். பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத ஆடை தேர்வுகளும், ஆரவாரமற்ற ஒப்பனையும் கீர்த்தி சுரேஷ்க்கு ஒரு டீசன்ட்டான லுக்கை கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் அந்த இயல்பான அழகே பக்கத்து வீட்டு பெண் போன்ற சினேகமான தோற்றமாக ரசிகர்கள் மனதில் பதிந்தது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ‘ரஜினி முருகன்’ படம் கீர்த்தி சுரேஷுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ‘செல்லக்குட்டி உன்ன காண சிலையாக நிக்கிறேன் வாடி’ என்கிற அந்த பி.ஜி.எம்.மில் கீர்த்தி சுரேஷை பார்த்து மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்போது முதல் தமிழ் ரசிகர்கள் மனதில் கெட்டியாக இடம் பிடித்துக் கொண்டவருக்கு தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பெரிய ஹீரோக்கள் உடனான பட வாய்ப்புகள் கதவைத் தட்டின.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடி’ கீர்த்தி சுரேஷின் கரியரில் ஒரு மைல்கல். வெகுளித்தனம், காதல், கோபம், கம்பீரம், தனிமை, ஏக்கம் என சாவித்திரியை அச்சு அசலாக திரையில் பிரதிபலித்தார் கீர்த்தி.

அதிலும் படத்தின் பின்பாதியில் உடல் எடை கூடிய சாவித்திரியை செயற்கைத்தனமின்றி கண்முன் நிறுத்தியது அபாரமான மெனக்கிடல். இப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நாள்முதல் திரைத்துறையினரால் இரண்டாம் சாவித்திரியாக கொண்டாடப்படுகிறார் கீர்த்தி சுரேஷ்.

‘மகாநடி’ படத்தின் மூலம் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தை பிடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், அந்த இடத்தை தக்க த்துக்கொள்ள, நல்ல கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகிலும் தனக்கென தனி மார்க்கெட்டை நிறுவியுள்ளார்.

See Also

முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த ஹீரோயின்கள் எல்லோருக்குள்ளும் துளிர்க்கும் ஆசை, கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆசை ‘பென்குயின்’ என்ற படம் மூலமாக கீர்த்தி சுரேஷுக்கு நிறைவேறியிருக்கிறது. த்ரில்லர் படமான இது நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் இம்மாதம் (ஜூன்) வெளியாகிறது. கடைசியாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘சர்க்கார்’ படத்தில் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதுவும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதால் ‘பென்குயின்’ பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மிஸ் இந்தியா’ என்ற ஓர் தெலுங்கு படத்திலும் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் பட ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். கூடிய விரைவில் நயன்தாரா, அனுஷ்கா போன்ற தனி கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். குஷ்பூ, மீனா, நயன்தாரா என மூன்று மூத்த நடிகைகள் இணைந்து நடிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கே செம வெயிட்டான கேரக்டராம்.

இதற்கிடையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’ (அரபிக்கடலின் சிங்கம்) என்ற சரித்திர படத்தில் முக்கிய கேரக்டரில் கமிட் ஆகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படமான இது மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாவது உறுதியாகியுள்ளது. ‘பாகுபலி’ படங்களுக்கு அடுத்து ‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’ தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்கள்; கதாநாயகி மைய படங்கள் என தனது திரை வாழ்க்கையில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக அவதாரம் எடுத்ததன் ரகசியத்தை ஆராய்ந்தால் அவரே ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார்.

‘‘நான் போட்டி நடிகைகள் என்று யாரையும் தேர்வுசெய்து, அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்க மாட்டேன். என்னை எப்படி மெருகேற்றிக் கொள்வது என்பதை மட்டுமே யோசிப்பேன்’’ என்கிறார் கூலாக.

– ஜஸ்டின்துரை

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top