Now Reading
அது ஒரு அட்லஸ் சைக்கிள் காலம்!

அது ஒரு அட்லஸ் சைக்கிள் காலம்!

இந்திய சாலைகளில் றெக்கைகட்டிப் பறந்த அட்லஸ் சைக்கிள் தன் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தியுள்ளது.

சைக்கிள் இந்தியாவின் கண்டுபிடிப்பல்ல; வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் வெளியிலிருந்துதான் இந்தியாவுக்கு வந்தது. அக்காலத்தில் ராலி, பி.எஸ்.ஏ., ரட்ஜ், ஹம்பர் என பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் சைக்கிள் உற்பத்தி பணியில் இறங்கினர்.  அவர்களில் ஒருவர்தான், ஜான்கி தாஸ் கபூர்.

‘நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கட்டுபடியாகின்ற நியாயமான விலையில், தரமான சைக்கிள்களை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும்’ என்ற பெருங்கனவோடு 1951இல் ஹரியானாவின் சோனிபேட் பகுதியில் தகர கொட்டகை ஒன்றில் அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தைத் தொடங்கினார் ஜான்கி தாஸ் கபூர். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் முன்னணி சைக்கிள் உற்பத்தி நிறுவனமாக அசுர உருவெடுத்தது, அட்லஸ். அட்லஸ் வளர்ச்சியின் ஊடாக இந்தியாவில் சைக்கிள் புரட்சி ஏற்பட்டது.

ஒவ்வொரு இந்தியனுக்குமான வாகனமாக மாறியது அட்லஸ். பேப்பர் போடுபவர், பால் கொடுப்பவர், தபால் விநியோகிப்பவர் என அதன் பயன்பாடு பயனரின் தேவைக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்தது. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் அமர்த்தியா சென் வறுமையில் வாழும் மக்களின் நிலை குறித்த ஆய்வை மேற்கொள்ள மேற்குவங்கத்தின் பல கிராமங்களுக்கு கருப்பு நிற அட்லஸ் சைக்கிளில்தான் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மோட்டார் வாகனங்களின் படையெடுப்பால் 2000க்கு பின்னர் சைக்கிள் பயன்பாடு மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அதன் எதிரொலியாக சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் சரிவை சந்திக்க ஆரம்பித்தன. அந்த சரிவில் அட்லஸ் நிறுவனமும் சிக்கியது. தொடர் விற்பனை சரிவை அடுத்து, மலன்பூர், சோனிபேட் தொழிற்சாலை யூனிட்களை முறையே 2014, 2018 ஆண்டுகளில் மூடியது அட்லஸ் நிறுவனம். ஷாகிபாபாத் யூனிட் மட்டுமே இயக்கி வந்தது. உலக சைக்கிள் தினமான கடந்த ஜூன் மூன்றாம் தேதி அந்த யூனிட்டும் மூடப்பட்டுள்ளது.

ஆனால், “நிதி பற்றாக்குறையினால்தான் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளோம். மீண்டும் பீனிக்ஸ் பறவையாக சைக்கிள் உற்பத்தியில் மீண்டெழுவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார், அட்லஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்.பி. சிங் ராணா.

See Also

 

எல்லுச்சாமி கார்த்திக்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top