Now Reading
2 ரூபாய்க்கு கொரோனா மருந்து!

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து!

தமிழக மருத்துவர் கண்டுபிடிப்பு கொரோனாவை ஒழிக்குமா?

கொரோனா பாதிப்புக்கு மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகம் முழுக்க தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கொரோனாவுக்கு தீர்வு காணும் மருந்தை தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் நடேசன்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த மருந்தை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யார் இவர்? இவர் கண்டுபிடித்துள்ள மருந்து என்ன? மருத்துவர் வசந்தகுமார் நடேசனிடம் பேசினோம்.
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை டவுன்தான் என் சொந்த ஊர். அப்பா மருத்துவர்.
அதனால் எனக்கும் வளர்ந்து பெரியவனானதும் மருத்துவராக வேண்டுமென்ற ஆர்வம். நாளடைவில் அந்த ஆர்வமே மருத்துவ கல்வியை படிக்கவும் செய்தது.

மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் பயின்று முடித்தேன். தொடர்ச்சியாக பெங்களூரூவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் மருத்துவ கல்விக் கூடத்தில் நரம்பியல் மருத்துவத்தில் எம்.பில் முடித்தேன்.

பின்னர் மருத்துவ ஆய்வுப் பணிக்காக ஜெர்மனி மற்றும் பின்லாந்து மாதிரியான நாடுகளுக்கு சென்று, அங்கிருக்கும் மருத்துவர்களோடு இணைந்து ஆய்வுப் பணிகளை சில காலம் மேற்கொண்டேன். அந்த அனுபவத்தின் மூலம் உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் இதழ்களில் செல் கல்ச்சர், பேட்ச் கிளாம்ப் டெக்னிக் என வெவ்வேறு சப்ஜெக்ட்களில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் வாய்ப்பும் கிடைத்தது.

வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜில் முனைவர் பட்டம் முடித்துள்ளேன். உள்ளூரில் இருக்கும் நேரங்களில் அப்பாவின் கிளினிக்கில் மருத்துவமும் பார்ப்பேன்” என்றார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை எப்போது மேற்கொண்டீர்கள்?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க படவில்லை.

பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் அதற்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் கொரோனா தடுப்புக்கான மருந்தை உருவாக்க எப்படியும் சில மாதங்கள் ஆகலாம். அதனால்தான் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மருந்துகளை கொண்டு உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள அறிகுறிகளை பொறுத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின், அசித்ரோமைசின், ரெம்பேசிவர் மாதிரியான மருந்துகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதும் இந்த அடிப்படையில்தான். சில இடங்களில் பிளாஸ்மா சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.

அதே முறையை பின்பற்றி கடந்த காலங்களில் வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகளைப் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தொடங்கினேன். அதே நேரத்தில் வெளியான, கொரோனாவினால் உயிரிழப்பவர்களில் ‘சைடோக்கின் ஸ்டார்ம்’ என்ற கோளாற்றினால் உடல் செல்களில் பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழப்பதினால் உயிரிழக்கின்றனர் என்ற கோட்பாடு எனது ஆராய்ச்சிக்குக் கைகொடுத்தது.

இந்த கோட்பாட்டை பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கொரோனா உயிரிழப்புக்கான காரணமாக முன்மொழிந்தனர். ஆனால், அந்த பாதிப்பு ஒருவருக்கு எதனால் ஏற்படுகிறது என்பதை சொல்ல தவறி விட்டனர். அதனை களைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் ‘அட்ரானஜிக் ஸ்டார்ம்’ என்ற கோளாற்றினால்தான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவரின் உடலில் சைடோக்கின் ஸ்டார்ம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர் என்பதைக் கண்டறிந்தேன்.

உதாரணமாக ஏ.ஆர்.டி.எஸ், நுரையீரலுக்கு ரத்தம் போகாமல் இருப்பது, செப்டிக் ஷாக் என உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கொரோனா உயிரிழப்பு விகிதத்தை குறைக்கவும், வைரஸ் உடலின் செல்களில் நுழைவதைத் தடுக்கவும், பல வருடங்களாக பயன்பாட்டில் உள்ள மருந்துகளில் ஒன்றான ‘பீட்டா அட்ரானஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என உணர்ந்தேன்.

குறிப்பாக உடல்களின் செல்களுக்கு மேற்புறமுள்ள ஏசிஇ2 ரெசிப்ட்டார் மற்றும் சிடி147 ரெசிப்ட்டார் ஊடாக கோவிட்19 வைரஸ் செல்களுக்குள் நுழைவதை தடுக்க இந்த மருந்து பெரிதும் உதவும். அதோடு இந்த மருந்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்படாமலும் தடுக்கும். இந்த மருந்தின் விலையும் இரண்டு ரூபாய் அல்லது அதற்கும் கீழ்தான் இருக்கும்.

See Also

இதனையெல்லாம் முன்னிறுத்தி வெவ்வேறு மருத்துவ இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். அதனடிப்படையில், கடந்த மார்ச் மாதத்தில், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தையும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பீட்டா அட்ரானஜிக் பிளாக்கர்ஸ் மருந்தை பரிசீலிக்கும்படி மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொண்டேன். அதற்கு ஏப்ரல் இறுதியில் இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் இயக்குநர்களில் ஒருவரான மருத்துவர் ராமன் ‘தங்களது பரிந்துரையை ஆய்வு குழுவினரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளோம்’ என பதில் கொடுத்தார். அதன் பிறகு எந்த பதிலும் வரவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான காரணம் என்ன?

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பிரச்சினையின் தீவிரத்தை கருதி துளியும் தாமதிக்காமல் நீதிமன்றத்தை அணுகினேன்.

அதில் பீட்டா அட்ரானஜிக் பிளாக்கர்ஸ் மருந்தை, பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே பயன்படுத்தி பரிசோதனையை மேற்கொள்வதற்கான பரிசீலனையை விரைந்து எடுக்குமாறு இந்திய மருத்துவ ஆய்வு கழகத்திற்கு நீதிபதிகள் உத்தரவு போட்டுள்ளனர். விரைவில் இந்த மருந்தை பயன்படுத்தி கொரோனாவினால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

உலக புகழ்பெற்ற மருத்துவப் பல்கலைக்கழங்களில் ஒன்றான அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘ஆல்பா 1 அட்ரானஜிக் பிளாக்கர்ஸ்’ என்ற மருந்தை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி வருகின்றனர். அதனால் விரைவில் இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் முடிவு எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

இந்த மருந்து மலிவான விலைக்கு கிடைக்க காரணமென்ன?

பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த உலகம் முழுவதும் பீட்டா அட்ரானஜிக் பிளாக்கர்ஸ் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதும் மலிவான விலையில் கிடைப்பதற்கு காரணம் என சொல்லலாம்.

– எல்லுச்சாமி கார்த்திக்

What's Your Reaction?
Excited
1
Happy
0
In Love
2
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top