Now Reading
வாவ் ஐந்தறிவு – 44

வாவ் ஐந்தறிவு – 44

அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்?

பிள்ளை என்ற சொல்லை, பொதுவாக நாம் மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், அரிதாக சில தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு தென்னம்பிள்ளை, கிளிப்பிள்ளை, அணில் பிள்ளை போன்ற வார்த்தைகளைச் சொல்லலாம். இது, அவற்றின் மேல் நாம் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு.

ஒரு அணிலோடு நாம் பழக ஆரம்பித்துவிட்டால், அது ஒரு குழந்தையைப் போல் நம் உணர்வுகளுக்கு ஏற்ப பழக ஆரம்பித்துவிடும். இன்று நாம் பார்க்கப்போவது அப்படிப்பட்ட அணில்களைப் பற்றித்தான்.

அணிலானது, ஆங்கிலத்தில் ‘ஸ்குரில்’ (SQUIRREL) என்று அழைக்கப்பட்டாலும், அதன் பிராணியியல் பெயர் ‘ஸியூபிடே’ என்பதாகும். இந்தியாவில் உள்ள அணில்கள், வெளிர் சாம்பல் நிறத்தில், முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். இந்த மூன்று கோடுகள்தான் இந்திய அணில்களின் அடையாளம். இவை இலங்கையிலும் பெருமளவில் காணப்படுகின்றன.

உலகில் எத்தனையோ வகை அணில்கள் இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் முதுகில் மூன்று கோடுகள் இல்லை என்பது வியப்புக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்திய-இலங்கை அணில்கள் ராமாயண காவியத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது. கடலில் பாலம் கட்டுவதற்கு உதவிய அணில்களை ராமர் பாராட்டும் விதமாக, அதன் முதுகில் தடவி கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக, அணில்கள் பயந்த சுபாவம் கொண்டவை. எச்சரிக்கையோடு அதன் பார்வை எல்லா பக்கமும் சுழன்றுகொண்டிருக்கும். எதிரிகளால் ஆபத்து வரப்போகிறது என்பதை வினாடிக்கும் குறைவான நேரத்தில் உணர்ந்து, சட்டென்று தாவிக் குதித்து பார்வையில் இருந்தும் மறைந்துவிடும்.

புசுபுசுவென்று ரோமம் மண்டிய வாலும், மரம் ஏறும் விலங்குகளுக்குத் தேவையான, கூர்மையான பார்வைத் திறனுடைய கண்களும் கொண்டவை. பின்னங்கால்கள், முன்னங்கால்களை விடவும் நீளமானவை. நான்கு அல்லது ஐந்து விரல்களைக் கொண்டிருக்கும். இவற்றின் பாதங்கள் மரத்தில் தலைகீழாக இறங்கும் திறன் பெற்றவை.

தலைகீழாக இறங்கும்போது, அவற்றின் கணுக்கால்கள் 180 டிகிரி வரை திரும்புவதால், பின்னங்கால்களின் பாதங்கள் மேல் நோக்கி மரப் பட்டைகளை வலுவாகப் பற்றிக்கொள்ளும்.

உணவுப் பழக்கம்

அணில்களின் உணவு மெனுவில் வெஜ், நான்-வெஜ் இரண்டுமே உண்டு. பெரும்பாலும் பழங்கள், கொட்டைகள், விதைகள், பூக்கள் என்று தாவர வகைகளைச் சாப்பிட்டாலும், அணில்களில் சில குறிப்பிட்ட இனங்கள், சிறு பூச்சிகள், வண்டுகள், சிட்டுக்குருவி போன்ற எடை குறைந்த பறவைகள், இந்த பறவைகள் இடும் முட்டைகள், சில சமயங்களில் பாம்புக் குட்டிகளையும் உணவாக எடுத்துக்கொள்ளும். பனித் துருவங்கள், கடும் பாலைவனங்கள் தவிர, மற்ற எல்லா மிதவெப்பமண்டலப் பகுதிகளிலும், மழைக்காடுகளிலும் அணில்கள் வசிக்கின்றன.

எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் சரி, அதன் உச்சி பகுதிக்குப்போக, ஒரு அணிலுக்கு அதன் வால்பகுதி மிகப்பெரிய அளவில் உதவியாய் இருக்கிறது. ஒரு மரத்தின் கிளை எவ்வளவு கோணலாக இருந்தாலும், அதன்மீது தடுமாற்றம் இல்லாமலும், கீழே விழுந்து விடாமலும், விரைந்து ஓடும் திறன் கொண்டது. அடுத்தமுறை, அணிலொன்று மரம் ஏறுவதைக் கவனித்துப் பாருங்கள்.

அது ஒரு கோணலான கிளையிலோ அல்லது கம்பி போன்ற ஒரு பரப்பிலோ செல்லும்போது, தன்னுடைய வாலை இரு பக்கமும் ஆட்டிக்கொண்டே செல்லும். அது அப்படி தனது வாலை ஆட்டிக்கொண்டே செல்வது, தன் உடல் கீழே விழாமல் இருப்பதற்காக, தன்னை பேலன்ஸ் செய்துகொள்கிறது என்று பிராணியியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதுதவிர எதிரிகள் தென்பட்டால், தன் இனத்தைச் சார்ந்த மற்ற அணில்களை எச்சரிக்கக் குரல் கொடுக்காமல், புத்திசாலித்தனமாக தன் வாலை உயர்த்தி, மூன்று முறை ஸ்லோமோஷனில் ஆட்டும். மற்ற அணில்கள் இந்த சமிக்ஞையைப் புரிந்துகொண்டு, உடனே அங்கிருந்து வேகமாய் அகன்றுவிடும்.

கடுமையான குளிர் வாட்டும் பனிக் காலங்களிலும், மழை பெய்யும் நாட்களிலும், தன்னுடைய உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்ள, அடர்த்தியான தனது வாலினை ஒரு கம்பளிப் போர்வையைப்போல மாற்றிக்கொண்டு, தன் உடம்பின் மீது போர்த்திக் கொள்ளும்.

அதுபோன்ற சமயங்களில் அணிலின் உடம்பு ஒரு பந்து போல் காணப்படும். வெயில் மிகுந்து காணப்படும் கோடை காலங்களில், உடல் உஷ்ணத்தைத் தணித்துக்கொள்வதற்காக, அணில்கள் தங்களின் வாலுக்கு அதிக ரத்தத்தைப் பாய்ச்சி, உடம்பைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

இந்த வகை அணில்கள் 40 கிராம் முதல் 100 கிராம் வரை எடை கொண்டவை. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் விரவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

இவற்றில் நீலகிரி அணில்கள் எனப்படும் ஒரு வகை அணில்கள் 200 மீட்டர் முதல் 1700 மீட்டர் உயரம் வரையிலான மலைப்பகுதியில் வாழ்கின்றன. நீலகிரி அணிலின் அறிவியல் பெயர் ‘புனாம்புலஸ் சுப்லிநேட்டஸ்’ (FUNAAMBULAS SUBLINEATUS) என்பதாகும். இவ்வகை அணில்கள், ரோமம் அடர்ந்த காணப்படுவதால் முதுகின் மேல் உள்ள மூன்று கோடுகள், வெளிறிப்போன நிறத்தில் தெரியும்.

இதன் காரணமாகவே, இதற்கு மங்கிய வரி அணில் என்று பெயர். இவற்றின் அடிவயிறு பசுமஞ்சள் நிறத்தில் இருக்கும். நீலகிரி அணில்களை இப்போது பார்ப்பது அரிதாக உள்ளது. இதற்கான காரணத்தைப் பிராணியியல் வல்லுனர்கள் ஆராய முற்பட்டபோது, ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அதாவது மழைக்காடுகளின் மரக்கிளைகளில், அசையாமல் படுத்திருந்து இரையைக் கவ்விப்பிடிக்கும் புல் விரியன் பாம்புகள், நீலகிரி அணில்களை வேட்டையாடுவது தெரியவந்துள்ளது.

பெரிய கறுப்பு அணில்

அணில்களில் இதுவே பெரிய அணில். இது ‘மலயான் அணில்’ (MALAYAN GIANT SQUIRREL) என்ற பெயரிலும், பெரிய கருப்பு அணில் (BLACK GIANT SQUIRREL) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது வடக்கு வங்கதேசம், நேபாளம், வடகிழக்கு இந்தியா, பூட்டான், தெற்கு சீனா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள அடர்ந்த காடுகளில் காணப்படுகிறது.

இதன் தலை மற்றும் உடல் பகுதி 40 சென்டிமீட்டர் முதல் 60 சென்டிமீட்டர் வரை நீளம் கொண்டது. இதன் வால் பகுதி மட்டும் 70 சென்டிமீட்டர் வரை இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த அணிலின் நீளம் 120 சென்டிமீட்டரில் இருந்து 130 சென்டிமீட்டர் வரை இருக்கும். இதன் காதுகளும், வால் பகுதியும் அடர்த்தியான கருப்பு நிறத்திலும், அடிவயிற்றுப் பகுதி பிரவுன் நிறத்திலும் காணப்படும். இவை அடர்த்தியான வனப்பகுதிகளில் காணப்பட்டாலும் சிங்கம், புலி, மலைப் பாம்பு போன்ற விலங்குகளுக்கு இரையாகிவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக, காடுகளின் உட்பகுதிக்கு இவை செல்வதில்லை. இந்த அரியவகை பெரிய கருப்பு அணில்களைப் பாதுகாப்பதற்காக, அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் சரணாலயம் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

பறக்கும் அணில்

பறக்கும் அணில்களில் 50-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. வட அமெரிக்காவிலும், வடக்கு யுரேசியாவிலும் காணப்படும் இந்தவகை அணில்கள், பறப்பதற்கு ஏற்றவாறு உடல்வாகு பெற்று இருந்தாலும், அதில் சில வகை அணில்கள், மரங்களில் இருந்து சறுக்குகின்றன. இப்படி வேகமாய் சறுக்கும் போது, அவை பறப்பது போல் தோற்றம் காட்டுகின்றன. இதில் ஒன்று பலவன் பறக்கும் அணில். இது பிலிப்பைன்ஸ் நாட்டின் வெப்பமண்டலக் காடுகளில் மட்டும் தென்படுகின்றன.

See Also

இந்தோ-சீனா பறக்கும் அணில், சீனா பெரும் பறக்கும் அணில், வெண் சிவப்பு பறக்கும் அணில், சாவனிய பறக்கும் அணில், சாம்பல் பறக்கும் அணில் என்று பல பெயர்களில் அணில்கள் பல்வேறு நாடுகளில் பறந்து கொண்டு இருக்கின்றன.

நம்முடைய இந்தியாவிலும் பறக்கும் அணில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று திருவாங்கூர் பறக்கும் அணில். இதனுடைய அறிவியல் பெயர் ‘பெட்டினோமிஸ் புஸ்கோகோப்பில்லஸ்’ (PETINOMYS FUSCOCOPPILLUS) ஆகும். ஒரு காலகட்டத்தில், இந்தியாவில் இந்த பறக்கும் அணில்களின் இனம் அடியோடு அழிந்து விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால், 1989-ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து, மீண்டும் மைசூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விலங்கியல் நிபுணர்களால், திருவாங்கூர் காட்டுப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அணில்கள் மலையாள மொழியில் ‘குஞ்ஞன் பாறான்’ என்றும், கன்னட மொழியில் ‘சிக்க ஆரு பெக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது.

திருவாங்கூர் பறக்கும் அணில்கள், மற்ற நாட்டு அணில்களைப்போல் அளவில் பெரியது அல்ல. சிறிய அளவிலான உடம்பு வாகு கொண்டவை. இவற்றின் தலைப் பகுதியில் இருந்து உடல் பகுதியின் நீளம் 32 சென்டி மீட்டர் முதல் 34 சென்டிமீட்டர் வரை இருக்கும். வாலின் நீளம் 25 சென்டிமீட்டர் முதல் 30 சென்டிமீட்டர் வரை அடர்த்தியான ரோமத்தோடு இருக்கும். இவற்றின் எடை 700 கிராம் முதல் 750 கிராம் வரை மட்டுமே என்பதால், ஒரு பறவையைப் போல் எளிதாய், மரத்துக்கு மரம் தாவிப் பறந்து செல்லமுடிகிறது. இதனுடைய வாழ்விடமாக பசுமைமாறாக் காடுகள் அமைந்துள்ளன. 500 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரையிலான உயரத்தில் உள்ள மலைப் பகுதிகளிலும் இவை வாழ்கின்றன.

அணில்களின் இனப்பெருக்கம்

பொதுவாக எல்லாவகை அணில்களுமே பாலூட்டிகள் என்பதால், மரங்களில் அல்லது மறைவான பகுதிகளில் நார், மட்டை போன்ற மிருதுவான பொருள்களை வைத்து நேர்த்தியாய் கூடுகட்டும். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை இனப்பெருக்கம் செய்யும். ஒன்று முதல் ஒன்றரை மாத காலத்திற்குள் குட்டிகளை ஈனும். பிறக்கும்போது குட்டிகளுக்குப் பற்களும், பார்வைத் திறனும் இருக்காது என்பதால், தாய் அணில்கள் எங்கும் வெளியே செல்லாமல் குட்டிகளை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்கும்.

அப்படி பாதுகாத்தாலும் குட்டி அணில்களில் சில இறந்துபோவதும் உண்டு. மற்றபடி நன்கு வளர்ந்த அணில்கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரையிலும், வீடுகளில், மிருகக்காட்சி சாலைகளில் வளர்க்கப்படும் அணில்கள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியவை.

அணில்கள், அதிகப்படியான ஆண்டுகள் உயிர்வாழ வேண்டும் என்றால், அவை உறங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் எதையாவது கொறித்துக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

ஏனென்றால், அணிலின் முன்பற்கள் நீளமானவை. கூர்மையானவை. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து வளரும் தன்மை கொண்டவை. அணில்கள் தொடர்ந்து மரப்பட்டைகளையோ, கொட்டைகளையோ கொறித்துக் கொறித்து தங்களுடைய பற்களைத் தேய்த்துக்கொள்ளாவிட்டால், முன்பற்கள் நீளமாக வளர்ந்து, வாயைப் பூட்டு போட்டு லாக் செய்வதுபோல் மூடிவிடும்.

இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டால், அவற்றால் வாயை அசைக்கமுடியாது. வாயை அசைக்க முடியவில்லை என்றால், இரையை எப்படி உண்ண முடியும்? எனவேதான் நாம் அணில்களை எப்போது பார்க்க நேர்ந்தாலும், அவை தனது முன் கால்களால் ஏதாவது ஒன்றைப் பிடித்தபடியே கொறித்துக்கொண்டே இருக்கும்.

– ராஜேஷ் குமார்

(வாவ் வளரும்)

What's Your Reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top