Now Reading
கைகழுவும் பழக்கத்தை அறிமுகம் செய்த மருத்துவர்!

கைகழுவும் பழக்கத்தை அறிமுகம் செய்த மருத்துவர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான சிறந்த தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கைகளைக் கழுவுவது வலியுறுத்தப்படும் நிலையில், அதனை மருத்துவநோக்கில் முதன்முதலில் பரிந்துரைத்த முன்னோடி மருத்துவர் இக்னாஸ் செமல்வெய்ஸ். அவரைக் கவுரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டது.

1818-ஆம் ஆண்டு ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் பிறந்த இக்னாஸ், பின்னர் வியன்னா பல்கலையில் மருத்துவம் படித்தார். பிறகு வியன்னா பொது மருத்துவமனையில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது, சைல்டுபெட் காய்ச்சல் என்ற மர்மநோய் இளம் தாய்மார்களை அதிக அளவில் பாதித்தது.

பெரும்பாலான மருத்துவர்கள் தடுக்கமுடியாத நோய் என கருதிய நிலையில், இக்னாஸ் மட்டும் அதற்கான காரணத்தை அறிய தீவிர ஆய்வை மேற்கொண்டார். மருத்துவமனையின் முதல் பிரிவை விட, பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றிய பிரிவில் இறப்பு விகிதம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதை அவர் கவனித்தார். ஒரு பிரிவில் மட்டும் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததற்கான காரணம், அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது.

இதனிடையே, மருத்துவ நண்பர் ஒருவரும் உயிரிழந்தார். மர்ம காய்ச்சலால் பாதித்த பெண் ஒருவருக்கு பிரேத பரிசோதனை செய்தபோது ஏற்பட்ட காயத்தின் விளைவாக, அவர் இறந்திருந்தார். ஆய்வின் முடிவில் மர்மகாய்ச்சல் தொற்றால் நண்பர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

மருத்துவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்படுவதையும், பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த கையோடு, மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, நோய் பரவியதையும் அவர் உணர்ந்தார். அதன் விளைவாக, மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிறகு தங்கள் கைகளை குளோரினேட்டடு லைம் கரைசலில் கழுவிக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்தார்.

மருத்துவர் இக்னாசின் பரிந்துரையை மருத்துவ உலகம் சந்தேகத்துடன் அணுகினாலும், கை கழுவும் பழக்கம் அமல்செய்யப்பட்ட பிறகு இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. ஆனால், மருத்துவ உலகம் அவரது கருத்தை முழுமையாக ஏற்கவில்லை. இதுதொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளையும் கடிதங்களையும் எழுதினாலும் பெரும்பாலும் அலட்சியமே அவருக்குப் பதிலாக கிடைத்தது.

See Also

பின்னர், அவர் மனநலக் காப்பகத்தில் சேர்க்கப் பட்டு, அங்கு தாக்கப்பட்டு நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். எனினும், பல ஆண்டுகளுக்குப் பின், விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் கிருமிகள் பாதிப்பு குறித்து கண்டறிந்து கூறியபோது, மருத்துவர் இக்னாசின் கைகழுவும் பழக்கம் தொடர்பான முக்கியத்துவத்தை மருத்துவ உலகம் தெளிவாகப் புரிந்து கொண்டது.

– சைபர் சிம்மன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top