Now Reading
சொல்ல மறந்த கதை!

சொல்ல மறந்த கதை!

கொரோனா மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மன அழுத்தங்கள்!

‘கடந்த மூன்று மாதங்களில் ஒரே ஒருமுறைதான் கணவர், குழந்தைகளை நேரில் பார்த்திருக்கிறேன்’ என்று சொல்லும் அந்த பெண் மருத்துவரின் கண்களில் பணிச்சுமை படர்ந்திருக்கிறது.

‘உடன் படித்த, உடன் பணிபுரிந்த மருத்துவ நண்பர்களின் மரணம் சக மருத்துவ பணியாளர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’ என மனதில் வலியுடன் விவரிக்கிறார் ஒரு மருத்துவர்.

‘என்னிடம் இருந்து வீட்டில் உள்ள பெற்றோர்களுக்கு கொரோனா வந்துவிடுமோ? வந்தால் என்ன செய்வது போன்ற குற்ற உணர்ச்சிகளை தூண்டும் எண்ணங்கள் தலைதூக்குகின்றன’ என வேதனையுடன் சொல்கிறார் ஒரு இளம் மருத்துவர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்களின் குமுறல்கள்தான் இவை.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பணியாற்றும் நிலை உள்ளது. தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்றுவதால் கடுமையான மன அழுத்தத்தையும் பணிச் சுமையையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெறும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 15-06-2020 அன்று வரையான நிலவரப்படி கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவார்கள், செவிலியார்கள், மருத்துவப் பணியாளார்கள் உள்ளிட்ட 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக உள்ள மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அழுத்தங்கள் என்ன? அவர்களிடமே கேட்டோம்.

குடும்பத்தினர் பேரச்சத்தில் உள்ளனர்!

கொரோனா வார்டில் பணியாற்றி வரும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனு ரத்னாவிடம் பேசினோம். “இதுவரை எங்கள் அரசு மருத்துவமனையில் 120க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 23 அன்று கணவர் மற்றும் குழந்தைகளை கண்டேன். அதன்பின் இந்நாள் வரையில் ஒரேயொரு நாள் சில மணி நேரம் மட்டுமே அவர்களை கண்டேன். இனி என்று காண்பேனோ தெரியவில்லை. காரணம் இந்த கொரோனா பணிகளில் நான் இரவு பகலாக பணிபுரியும் போது நாம் பாதிக்கப்பட்டாலும் நம் குடும்பம் பாதிப்பு அடையக் கூடாது என்ற சிந்தனை தான்.

நான் இப்படி பணிபுரிவதால் எந்நேரமும் நோய்த் தொற்றுக்கு நான் ஆளாக நேரிடும் என அறிவேன்.

ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை.நான் அணியும் வெள்ளை மேல் ஆடையும் என் கழுத்தை அலங்கரிக்கும் ஸ்டெதஸ்கோப்பும் என்று என் உடல் மீது பட்டதோ அன்றே முடிவானது என் சமூக மருத்துவப் பணி. வாழ்நாளில் இப்படியான பிரபஞ்ச நோய் தொற்றலை எல்லாரும் காண முடியாது. ஆனால், நம் வாழ்நாளில் நாம் காண்கிறோம். இத்தகைய சூழலில் குடும்பம் உறவுகள் குறித்த கவலையை விட நோய் தொற்றை தடுக்க வேண்டும், நோய் தாக்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே எண்ணமாக உள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் பேரச்சத்தில்தான் உள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே எங்கள் பணியை செய்கிறோம். மகப்பேறு மருத்துவர் நான். கொரோனா பணிகளுக்கு இடையிலும் கடந்த பத்து நாளில் 63 பிரசவங்கள் பார்த்துள்ளேன். இந்த குழந்தைகளின் முகத்தை காணும்போது சோகங்கள் மறைகின்றன; உடல் சோர்வு பெரிதாய் தெரியவில்லை.

பணிச்சுமை கூடியிருப்பதும், பணியில் தொழில்ரீதியான நோய் தொற்று உருவாக வாய்ப்பு உள்ளது என்பதும் நான் அறிந்ததே. ஆனால், இந்த மருத்துவ அவசரநிலைக் காலத்தில் சமூகத்திற்கு என்னால் இயன்ற பங்களிப்பை நான் செய்யாமல் போனால் என் பெயருக்கு பின் இருக்கும் என் கல்விக்கு எந்த அங்கீகாரமும் இருக்காது.

நமக்கும் கொரோனா வரலாம் என்று தெரிந்தேதான் எஞ்சிய அனைத்து அரசு மருத்துவர்களும் அனைத்து நிலை மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களும் பணியில் உள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை கூட நிறுத்தாமல் தொடர்ந்து எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாடு மிகப்பெரிய சுகாதார நெருக்கடியில் உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்ததால்தான் விடுப்புகூட எடுக்காமல் பணியிலேயே இருக்கிறோம்’’ என்கிறார்.

நிம்மதியாக உறங்கவில்லை!

மருத்துவர் சென்பாலன் கூறும்போது, “2020 பிப்ரவரி மாத இரண்டாம் வாரம் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் பரபரப்பு தொற்றியது. அன்றிலிருந்து இன்று வரை ஏறத்தாழ நான்கு மாதங்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் வாழ்க்கை பரபரப்பாகவே செல்கிறது.

ஊரே லாக்டவுனில் இருந்த போது வீட்டிற்குக்கூட வரமுடியாமல், பணியிடத்திலும் குவாரண்டைன் இடங்களிலும் தங்கிப் பணிபுரிந்தனர். இதில் கணவர், மனைவி இருவருமே மருத்துவராக, செவிலியராக இருக்கும் குடும்பங்களின் நிலை மிகவும் பரிதாபமானது. இருவருமே பணி மற்றும் குவாரண்டைனுக்கு செல்வதால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சில குழப்பங்களும் மருத்துவர்களை பெருமளவு சிரமத்திற்கு ஆளாக்கின. தினமும் ஒரு அறிவிப்பு, தினமும் ஒரு விதிமுறை. காலை எழுந்தவுடன் மருத்துவமனை வாட்ஸ்-அப் குழுக்களில் இன்று என்ன புதிய விதிமுறை பகிரப்பட்டுள்ளது என்பதைப் பார்த்துவிட்டு தான் அன்றைய வேலையையே ஆரம்பிக்கும் நிலை. இது இன்று வரை தொடர்கிறது.

இவை தவிர நிர்வாக ரீதியிலான பல புதிய விதிமுறைகள், நடு இரவு தொலைபேசி அழைப்புகள் என கடந்த நான்கு மாதங்களில் எந்த மருத்துவப் பணியாளரும் நிம்மதியாக உறங்கவில்லை.

ஆரம்பத்தில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க் போன்றவற்றிற்கு நிலவிய பற்றாக்குறை தற்போது குறைந்திருந்தாலும், இன்னும் முழுமையாக மாறவில்லை. ஆரம்ப காலங்களில் மாஸ்க் கேட்ட மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மருத்துவத்துறை பணியாளர்களிடம் இன்னும் மறையவில்லை.

சென்னை மருத்துவக் கல்லூரியின் செவிலியக் கண்காணிப்பாளர் மறைவும் அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும் அனைவரும் அறிந்ததே. கொரோனா வார்டில் பணிபுரிந்த சீனியர் செவிலியருக்கே இந்நிலையா என்று கொரோனா தொற்றுப் பணியில் இருக்கும் அனைவரிடமும் விரக்தியை ஏற்படுத்திய சம்பவம் அது.

தினமும் பல மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு தொற்று ஏற்படுகிறது, இறப்புகளும் நிகழ்கின்றன. உடன் படித்த, உடன் பணிபுரிந்த நண்பர்களின் மரணம் மருத்துவப் பணியாளர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது’’ என்கிறார்.

மனரீதியான அயற்சி!

மருத்துவர் அரவிந்தராஜ் கூறும்போது, “கிருமி பரவாமல் இருக்க முக கவசம்; உடலை பாதுகாத்திட PPE உடை; கைகளை காத்திட கையுறை; கிட்டத்தட்ட சஹாரா பாலவனைத்தின் வெப்ப சூழ்நிலையில் இருப்பதைப் போன்ற சூழலில் இரவுபகலாக பணிபுரிந்ததாக வேண்டும். இதுவே கடந்த 4 மாதங்களாக மருத்துவர்களின் நிலை.

மருத்துவன் என்பவன் சமூகத்தின் சக மனிதனே. அனைவரையும் போன்று குடும்பம், குழந்தை, ஆசாபாசங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஜீவன். தன்னிடமிருந்து வீட்டிலிருப்பவர்களுக்கு கிருமி பரவி விடக்கூடாது என்பதற்காக பணி முடிந்து வீடு திரும்பினாலும்கூட தன் குழந்தையை தொட்டு உச்சி முகர்ந்து அரவணைக்க முடியாமல், தனி அறையினில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மனரீதியாக மிகுந்த அயற்ச்சிக்கு உண்டாகியுள்ளனர்.

மருத்துவனின் பணி பிணி நீக்குவதே; கொரோனா என்றல்ல, பல வருடங்களாக மருத்துவர்கள் மக்களை கிருமிகளிடமிருந்து காக்க போராடி வருகின்றனர். நோய்வாய்ப்பட்டவரை காக்கும் பணியில் வேலைப்பளு, தூக்கமின்மை, சரிவர உண்ணாமல் போவது போன்ற பல காரணிகளால் உயிரிழந்த மருத்துவர்கள் ஏராளம். இளவயது கொண்டவர்கள் மரணிக்கும் அதிகமுள்ள துறை மருத்துவத்துறையே.

கொரோனா பாதிப்பால் மருத்துவர் மரணம் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இருந்தும் எந்த மருத்துவரும் தன் நலமே முக்கியம் என கருதி பணிக்கு செல்லாமல் இல்லை. 50 வயது மருத்துவர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகளுக்காக மருந்துகளை உட்கொண்டு அடுத்த நொடியே கொரோனா வார்டில் பணிபுரிய ஆயத்தமாகிறார். பணம் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டால் இப்படி உயிரை பணயம் வைத்து செயல்பட முடியுமா?

See Also

மக்கள் பாதுகாப்பான வாழ்வை மேற்கொள்ள, மன அழுத்தம், வேலை பளு, தூக்கமின்மை என அனைத்தையும் தாண்டி மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த வேளையில் நான் பொதுமக்களாகிய உங்களிடத்தில் இரண்டு கோரிக்கையை முன்வைக்கிறேன்.

1.தயவுசெய்து கொரோனா ஒன்றுமே இல்லை என்ற பரப்புரைகளை செய்ய வேண்டாம். இத்தனை மருத்துவர்களின் இறப்பிற்கு பின்பும் நாம் அவற்றை செய்வது அவர்களை கேவலப்படுத்தும் செயல்.

2.தயவுசெய்து வீட்டிலிருங்கள். மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள். சுய ஒழுக்கத்தை பின்பற்றுங்கள்; எத்தனை நோயாளிகள் இருந்தாலும் மருத்துவர் தன் பணியை செய்வார்; பணியில் தன் நலம் பற்றி மருத்துவர் கவலை கொண்டதேயில்லை.

நீங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருந்தால், தீவிர சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு மருத்துவர் சிறந்த சிகிச்சை அளிப்பார். வேலைப்பளு குறையும். மன அழுத்தம் அதிகமாகாது. தீவிர சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கும் சரி; அவர்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவரும் சரி; உங்கள் சுய ஒழுக்கதால் பயன்பெறுவர்; நீங்களும் பாதுகாப்பாக இருப்பீர்கள்.

ஒரு மருத்துவரின் இறப்பு தனி நபர் சார்ந்த இழப்பு அல்ல; ஒரு மருத்துவர் இறந்தால் அவர் தன் வாழ்நாளில் சந்திக்கவிருந்த நோயுற்ற பல மக்களுக்கான இழப்பே; அது சமூக இழப்பாக கருதப்பட வேண்டும்.

அதிக நோய் பரவல் என்பதை பொருட்படுத்தாமல் மக்களை தினமும் சந்தித்து அவர்கள் நலம்பெற உழைக்கும் மருத்துவர்களின் உயிரை கொச்சைப்படுத்தும் படியான செயல்களை செய்ய வேண்டாம்.

விளக்கேற்றி மருத்துவர்களை கவுரப்படுத்த வேண்டாம். மருத்துவர்கள் கடவுள் என்பது போன்ற பிம்பங்களையும் நிறுவ வேண்டாம். நீங்கள் நினைக்கும்படி மருத்துவர்கள் அசாத்திய வல்லமை பொருந்தியவர்கள் அல்ல.

உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை அனுதினமும் எதிர்கொள்ளும் சாமானியன் தாம். அவரும் நம்மைப் போன்ற சக மனிதனே என்பதை உணர்ந்து இதை செய்தால் மட்டுமே போதும்’’ என வேண்டுகோள் வைக்கிறார்.

மகத்தான சேவை!

அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார், “தொற்றின் தீவிரம் பல மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பிற நாடுகளில் பார்த்த நிகழ்வுகள் மெல்ல மெல்ல நம் நாட்டிலும் நடக்கத் தொடங்கிவிட்டன. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தொற்றின் எண்ணிக்கையும் படிப்படியாக முன் நகர்ந்து கொண்டிருக்கிறது. சீனா சந்தித்ததைவிட மிகப்பெரிய அளவில் தொற்றுப் பாதிப்பை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தொற்றின் தீவிரத்துக்கு ஏற்ப மருத்துவத் துறையினரின் பணி அதிகமிருப்பதை பலரும் அறிந்திருக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் மிக அதிகம். நோய் ஏற்பட்டவர்களுடைய தொடர்பை கண்டறியும் பணி அவ்வளவு சாதாரணமானதல்ல.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து பல வாரங்கள் தனித்து இருக்கும் சூழல் மருத்துவ துறையினருக்கு. பல மணி நேரம் பாதுகாப்பு கவச உடையை அணிந்து கொண்டு உள்ளுக்குள் வியர்வை வழிந்தோட, வேனிற்கால வெப்பம் தகிக்க, முகக்கவசத்தை இடைவிடாமல் பல மணி நேரம் அணிந்துகொண்டு மூச்சுமுட்ட சேவை புரியும் தன்னலம்பாரா உழைப்பை பல மருத்துவமனைகளில் பார்க்க முடிகிறது.

மருத்துவ வரலாற்றில் மருத்துவத் துறையினரின் சேவைப் பற்றியோ அல்லது தனித்த ஆளுமையின் சேவைப் பற்றியோ படித்திருப்போம். ஆனால், இப்போது பலரின் சேவை மனப்பான்மையை நேரடியாக பார்க்கக் கூடிய சூழல் வாய்த்திருக்கிறது.

மருத்துவத் துறையினரின் செயலுக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டும் என நினைத்தால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போம். முகக்கவசங்களை அணிந்து தொற்றுப் பரவலைத் தடுப்போம்’’ என்கிறார் அவர்.

– ஜஸ்டின் துரை

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top